'உயிர் இனிது' நூலை சார்லஸ் டார்வினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் நூலாசிரியர். சிந்தித்தால் பேசலாம்! நெகிழ்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்தால் தான் எழுத முடியும் - அறிஞர் அண்ணாவின் கூற்றுக்கிணங்க பொதிகை தொலைக்காட்சியில் 'வையகமே வானகமே' நிகழ்ச்சியில் ஆசிரியர் பேசியது எழுத்தாகி உயிர் இனிது நூலாகியுள்ளது.

uyir inithu kovai sadasivamமலர்கள், மரங்கள், பறவைகள், ஊர்வன, ஊனுண்ணிகள், விலங்குகள், பூமியின் வரலாறு, நிலம், நீர், காற்று, இயற்கை வேளாண்மை, உயிர்க் கடிகாரம் என அனைத்தையும் அலசி, ஆராய்ந்து, பல்வேறு அரிய பொக்கிசங்களை எளிதாகப் புரியும் வண்ணம் நமக்களித்துள்ளார். பழங்குடிகளின் அன்பின் அடையாளமாக, நற்காலத்தின் விதையாகப் பூக்கும் குறிஞ்சி மலர்கள் அழிவின் விளிம்பிலுள்ளதை கோடிட்டுக் காட்டி குறிஞ்சி மரபணு வங்கி உருவாகக் குரல் கொடுத்துள்ளார்.

மத்திய ஆப்பிரிக்காவில் 80 சென்டிமீட்டருள்ள இரும்புமுனை ஈட்டியை 1822-ல் பழங்குடி மக்கள் நாரைமீது எய்தபோது அந்த ஈட்டியோடு ஜெர்மனி வரை பறந்து சென்று உயிர்நீர்த்த நாரையை பதப்படுத்தி, ரோக் டோக் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இன்றளவும் வைத்துள்ள செய்தியை செங்கால் நாரை பற்றிக் கூறும்போது மனதை உலுக்கும் நிகழ்வை நெஞ்சில் பாய்ச்சியுள்ளார்.

குட்டி யானைகள் ஆமையை கவனிக்காமல் மிதித்திடக் கூடாதென்பதற்காக பிளறி சைகை செய்து பெரிய யானை காப்பாற்றியதை, 'ஆமையை யானை காப்பாற்றி விட்டன, மனிதர்கள்..?' என கேள்விக்குறியோடு முடித்துள்ளார். முத்தில்லாமல் நாம் வாழலாம், மாசுக் கட்டுப்பாட்டை செய்யும் சிப்பி இல்லாமல் கடல் வாழ்ந்திட முடியாதென்பதையும், கொசு மருந்து நம்மைத்தான் அழிக்கும், கொசு முட்டைகளை தட்டான் உண்ணும், புழுக்களை தலைப்பிரட்டை உண்ணும், கூட்டுப் புழுக்கைளை மீன்கள் உண்ணும். இந்த உயிர்ச் சங்கிலியை இயற்கை உருவாக்கியது, மனிதனோ இயற்கையை மீறுவதால் கொள்ளை நோய்க்கு ஆளாகிறான் என்பதையும் உணர்த்தியுள்ளார்.

ஒரு தாவரத்தின் கீழுள்ள வேரின் நுனி விலங்குகளின் மூளையைப் போல் செயல்படக் கூடியது என சார்லஸ் டார்வின் கூறியதை மரங்களை பற்றிக் கூறும்போது அழகாய் கோடிட்டுள்ளார்.

'முருங்கை நட்டவன் வெறுங்கையோடு போவான்' என்பதைப் படித்தவுடன், அதாவது முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் காய், இலை, பூ இவற்றை உண்டு வருபவர்கள் முதுமைக் காலத்தில் கம்பு ஊன்றாமல், கை வீசி நடக்கலாம் என்பதைத் தெரிந்த பின்பு, முருங்கை மரத்தை வளர்க்காமல் கடந்து செல்ல முடியாமலாக்கி விட்டார்.

யாருமில்லா நேரத்தில் வீணாக மின்சாரத்தைப் பயன்படுத்தாமலிருந்தால் ஒரு யூனிட் தயாரிக்க ஆகும் ஒரு கிலோ நிலக்கரி மிச்சமாகும் என்ற சூழலியல் அறத்தைப் புகுத்தியுள்ளார்.

இயற்கையிலிருந்து எல்லாவற்றையும் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் - தாகூரின் கூற்று இக்கால கல்வி முறைக்கு முக்கியமென்பதை உட்புகுத்தியுள்ளார்.

கானக உழவன், ஆமான், வளைகாப்பு நிகழ்வில் வகிடெடுத்தல், திசைகாட்டும் உயிர்க்கருவி, திருவில்லிபுத்தூர் செண்பகத் தோப்பில்தான் உலகிலேயே சாம்பல் நிற அணிலுக்கு சரணாலயம் உள்ளது என்பதையும், ஓங்கில் பற்றியும், இரண்டு கண்களால் இரண்டு காட்சிகளைக் காண்பதையும், ப்ளோவருக்கும் முதலைக்கும் உள்ள நட்பையும், பூமியின் வரலாற்றையும், அரிசி வகைகளையும், காலைப் பிடி காயம் நன்றாக இருக்கும் என்பதையும், இயல்பாகவே மண்ணைச் சாப்பிடுபவர்கள் பற்றியும், பூவின் மலர்ச்சியிலும், பறவைகள் கத்துவதிலும் நேரத்தை கணக்கிட்ட பாங்கைத் தெரிந்து கொள்ளவும், சுயநலத்தால் பூமியை நாசமாக்க வேண்டாம் என்பதையும் 'உயிர் இனிது' புத்தகத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை வாசித்து அறிந்து கொள்வோம், மற்றவர்களுக்கு கடத்திச் செல்வோம்.

நூல்: உயிர் இனிது

ஆசிரியர்: கோவை சதாசிவம்

முதல் பதிப்பு: பிப்ரவரி, 2018

குறிஞ்சி பதிப்பகம்
4/610, குறிஞ்சி நகர்,
வீரபாண்டி அஞ்சல்
திருப்பூர்-641605

விலை: ரூ.140/-

- செல்வக்குமார், இராஜபாளையம்