sj sivasankar book“திராட்சை பிஞ்சில் புளிக்கும் பின் இனிக்கும்
அதுவே ஊறிப் புளித்து மதுவானால் துவர்க்கும்"

"ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு சுவை"

"யா ஓ" (The Hidden cult)

மெய்யியலின் முதுகெலும்பாய் இருக்கும் எதார்த்தம். மூன்று நான்கு வரிக்குள் கதைகளின் ஆழத்தை எல்லாம் வெறுமையாக்கவும் முழுமையாக்கவும் செய்யும் ரஸவாதத்தைக் கொண்ட கதைகள்.

"ஒரு துளிக்குள் கடலை அடக்கும் ஆக்கம்"

திருச்சாணரத்து மலையில் சமணப் பள்ளி பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரையில் தாக்குப்பிடித்து பின் அதில் பயின்று வெளியேறிய யா/ ஓ ஆசான் தனக்கென ஒரு மார்க்கத்தைத் தொடங்கினார். யா ஓவின் பிரதான சிஷ்யபிள்ளையான யா/அ வுக்கும் இடையே நடந்த கதையாடலே இந்த "யா ஓ"

இந்த உரையாடல்கள் வாய்மொழியாகவே காலம் கடந்து யா அ வழிவந்த பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த வள்ளுவநாத நயினார் பனையோலை ஏட்டில் பதிவு செய்த குறிப்புகளின்படிக் கிடைத்த 1% உரையாடல்களே இந்த யா ஓ.

தூய ஆதி மொழி வடிவத்திலிருந்தும் சித்தர் பாடல்களைப் போல பதியப்பட்டிருந்த இந்தக் கதை ஜென் கதைகள், சூஃபிக் கதைகள் தன்மையும் பாரசீகம், ஜப்பானிய, கொரியா கடைக்கோடி தொன்மை வரையில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் உருக்கொண்டு மார்க்கத்தின் ஆன்மா பரவிக் கிடந்திருக்கிறது.

யா ஓ ஆசானை heretic தன்மையை மறுத்து hedonic தன்மை கொண்டவராக அடையாளப்படுத்தலாம்.

ஆசீவக பௌத்த கருத்துகள் கொண்ட இந்தப் பிறதி மிக எளிய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ஒருபக்கத்தில் ஒரு உரையாடல் என ஒவ்வொரு பக்கமும் ஒரு உரையாடலும் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்களும் நம்மை இயல்பாய் மெய்யியல் கடலுக்குள் இழுக்கிறது.

சுண்டக் காய்ச்சிய மொழி தேனாய் ஒழுகியிருக்கிறது. அத்தேனை சுவைக்கும் எறும்பு உணரும் சுவையாய் வாசிப்பு இருக்கிறது. எல்லா உரையாடல்களையும் கடந்தபின், நூலின் பின் குறிப்பில் ஆசீவகவாதிகள் வெகுண்டு சைவத்திற்கு மாறிட்ட கட்டுக்கதைகளையும் கள ஆய்வின் விஸ்திரத்தையும் நுணுக்கத்தையும் எழுதிக் கொட்டிய அம்பிகா வள்ளிநாயகம்.

வெற்றிமொழி வெளியீட்டகம், வெளியீட்டிருக்கும் இந்த நூலின் விலை 150 ரூபாய், பதிப்பகத்தாருக்கு ஒரு வேண்டுகோள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

இப்படி ஒரு பழஞ்சுவடியை ஆய்ந்து எளிமையாக கொண்டு வந்திருக்கும் எழுத்தாளர் ஆய்வாளர் எஸ்.ஜே.சிவசங்கருக்கும், செம்பள்ளி ஆய்வுக் குழுவிற்கும் எனது வாழ்த்துகளும்.

நூலின் பெயர்: யா ஓ
நூலின் ஆசிரியர் : எஸ்.ஜே.சிவசங்கர்
பதிப்பகம்: வெற்றிமொழி வெளியீட்டகம்.

- கு.ஜெயபிரகாஷ், திருவண்ணாமலை