“உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைகூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது” என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் வரிகளோடு ‘மீன்கள் உறங்கும் குளம்’ – என்ற கவிதைத் தொகுப்பில் பயணித்தேன். மகாபாரதக் கதையில் பாண்டவர்களின் மூத்தவனான தர்மனிடம் “உறங்கும் போதும் கண்கள் மூடாத உயிரினம் எது?” என்று ஒரு கேள்வியை வைக்க அதற்கு, “மீன்” என்று பதில் சொல்லி அசத்துவான் தர்மன். கவிஞர் பிருந்தா சாரதியின் ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்ற கவிதை நூலின் பெயரை வாசித்தவுடன் இந்தக் கதைதான் நினைவிற்கு வந்தது.

brindha sarathy bookநூலாசிரியர் பிருந்தா சாரதி நூல் முழுமை பெறும் முன் கவிஞர் வண்ணதாசனிடம் கவிதைகளைக் கொடுத்து அணிந்துரை எழுதச் சொன்ன போது வண்ணதாசன் சூட்டிய நான்கு பெயர்களில் ‘மீன்கள் உறங்கும் குளம்’ என்பதும் ஒன்று. காலம் எடுத்துக் கொண்ட கவிதை நண்பன் நா. தென்னலவனின் நினைவுகளைப் போற்று விதத்தில் அமைந்த ஆசிரியரின் முன்னுரை நெகிழ வைக்கிறது. கவிதைகள் நறுக்குத் தெறித்தாற் போல் வடிக்கப்பட்டுள்ளன.

சாலைகள் அகலமாக்கப்படாத ஒரு காலத்தில் கிராமத்தை நோக்கிப் பயணித்தால் சாலைகளின் இரு புறங்களிலும் குடை பிடித்தது போல் மரங்கள் வரவேற்கும். இன்று அந்தக் காட்சியை மனக்கண்களில் மட்டுமே ஓட்டிப் பார்க்க முடிகிறது. அந்த நாளின் கவிதையாக,

“எதிர்புற நாவல் மரத்திற்கு

பூங்கொத்தை நீட்டுகிறது

நெடுஞ்சாலைக் கொன்ற மரம்”

என்ற வரிகளில் மரங்களுக்கு உயிர் உண்டு என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. காதல் என்பது உயிர்ப்பண்பு! அதனால்தான் தன்னால் தோற்றுவிக்கப்பட்ட மலர்க்கொத்து கொடுத்துத் தன் காதலை எதிரில் இருக்கும் நாவல் மரத்திடம் வெளிப்படுத்துகிறது கொன்றை. ஆலமரமும் அவ்வாறே மண்மீது கொண்ட காதலை விழுதாக மாற்றி மண்ணுடன் உறவாடிக் களிக்கிறது.

நவீன யுகத்தில் கிழித்து நெய்யப்பட்ட ஆடைக்குக் கூடுதல் விலை. கிழியாமல் இருக்கும் ஆடை சாதாரணமானது. தலைகீழான வாழ்க்கை வாழும் நம்மை வறுமையைப் பார்க்க வைக்கிறார் கவிஞர். பொது இடங்களில் துண்டை விரித்துக் காசை எதிர்பார்த்து யாசகன் உட்கார்ந்து இருக்கிறான். அதில் விழும் விதவிதமான சில்லறைகளைப் பார்க்கும் போது கிழிசலுக்கும் நாணயங்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறதாம். பொத்தலுக்கும் பொக்கிஷத்துக்கும் கவிதை காட்டும் மதிப்பு சமமாகவே இருக்கிறது. கூரையின் இடுக்குகள் வழியே சூரியக் கதிர்கள் பரவுகின்றன. அதையும் வெளிச்ச காசுகள் என்று பேசுகிறது கவிதை.

பரதக்கலையின் பெருமை பேசும் ‘சலங்கை ஒலி’ – திரைப்படத்தில் காதலைச் சொல்ல வேண்டி அதைச் சொல்ல முடியாமல் தவிக்கும் வேளையில் ஒரு பாடலை அமைத்திருப்பார்கள். மனதுக்குள் சொற்கள் தோரணம் கட்டி நின்றாலும் வெளிப்படுத்த முடியாமல் மௌனம் காக்கும் காதலர்களின் மனப்போராட்டத்தை,

“இது மௌனமான நேரம்

இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்

இதழில் மௌனங்கள்

ஏனென்று கேளுங்கள்”

என்று சொல்லியிருப்பார் கவிப்பேரரசு வைரமுத்து. அந்த வகையில் மௌன விரதம் இருக்கும் பெண்ணின் உள்ளம் ஓயாமல் சத்தம் போடுகிறது என்பது பிருந்தாசாரதியின் பதிவு.

அந்தந்தப் பொழுதுகளை வாழ்ந்து தீர்க்கும் மனிதர்கள் ஓய்வெடுப்பது இயல்பு. அப்பொழுதும் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக்கும் பொருள்களைத் தூக்கிப் பிடிக்கிறார் கவிஞர். நள்ளிரவு நேரத்தில் தெருவில் எரியும் விளக்கு மனிதர்களின் வருகைக்காகக் காத்திருப்பதும், படகோட்டி ஓய்வெடுப்பதால் படகுகள் படித்துறையில் தத்தளித்துக் கொண்டிருப்பதும், வண்டியோட்டி தூங்கியபின் லாந்தர் விளக்கு அந்த வண்டியை வழிநடத்திச் செல்வதுமான கவிதைகளில் இனம் புரியாத சோகத்தைச் சொல்லி விடுகிறது.

இணைந்திருந்தால் மட்டுமே பயன்படக்கூடிய செருப்பில் ஒற்றைச் செருப்பால் ஒருவருக்கும் பயனில்லை. அதனால் யாராலோ தனித்துவிடப்பட்ட ஒற்றைச் செருப்பு பொட்டல் காட்டில் வெறுமையால் வாடுகிறது. சமீபத்தில் வெளிவந்த ‘ஒற்றைச் செருப்பு சைஸ் – 7’ என்ற படத்தின் பெயரைக் கேட்கும் போது ஒற்றைச் செருப்பினாலும் ஏதோ பல கருத்துக்கள் சொல்லப்படும் வித்தை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

நடமாடும் காவல்நிலையம், நீதிமன்றம், ஏ.டி.எம்., மருத்துவம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அவை இடம் பெயர்ந்து செல்வதைப் பார்த்த நமக்கு, ஊர்வலம் போகும் வீடு புதிதாக இருக்கிறது. சொந்த வீடு இல்லாதவர்கள், வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் வாழ வேண்டிய இடத்தை நோக்கி மூட்டை முடிச்சுகளோடு பயணம் செய்யும் காட்சியை,

“நெரிசல் மிகுந்த சாலையில்

ஊர்வலம் போகிறது வீடு

முகவரி மாற்றம்”

என்று பதிவு செய்கிறார் கவிஞர்.

மனிதன் செய்யும் அநியாயங்களை ஒருவேளை கடவுள் காண நேரிட்டால் அழத் தானே செய்வார். கடவுள் போன்று மாறுவேடமிட்ட குழந்தை அழுகிறது. கவிதையோ கடவுள் அழுகிறார் என்று நையாண்டி செய்கிறது. பால் நிலவில் நனையலாம், மலர்களோடு கைகுலுக்கலாம், வனங்களோடு பேசித் திரியலாம், கடலில் கால் நனைக்கலாம் என்று எவ்வளவோ மகிழ்ச்சி இருக்க இது தெரியாமல் செயற்கையோடு குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறான் மனிதன். அவனைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது ஒரு கவிதை.

சலனமில்லாத அமைதியான குளத்தில் பௌர்ணமியன்று சந்திரன் உடைபடாமல் முழுமையாகக் காட்சியளிக்கிறது. குழப்பமான உள்ளத்தில் எப்படித் தெளிவு பிறக்காதோ அது போல நீர்த்திவலை இருக்கும் நீரிலும் வெட்டுப்பட்ட நிலவைத் தானே பார்க்க முடியும்! எனவே தெளிந்த நீரோடையில் முழுநிலவைக் காண நமக்கு அழைப்பு விடுக்கிறார் கவிஞர்.

சமீபத்தில் 2016-ஆம் ஆண்டு சென்னையில் பெரிய வெள்ளம் வந்தபோது உயிர்களையும் உடைமைகளையும் கண்ணெதிரிலேயே பறிகொடுத்த மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி விட்டதை நினைவு படுத்துகிறது மணல்வீடு கட்டி விளையாடும் குழந்தை. அகதியாக வந்த அந்தக் குழந்தை மணலில் வீடு கட்டி விளையாடும் போது கவிஞருக்கு ஏக்கம் பிறக்கிறது.

அவரவருக்கு என்று தனித்த அடையாளங்கள் உண்டு. அதை எவராலும், எதனாலும் மாற்றமுடியாது. வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி தாய்க்குப் பிறக்கும் குழந்தைக்கும் தாய்மொழி இருக்கிறது என்று கம்பீரமான கர்வத்துடன் மயானத்து மரத்துக்கும் வாழ்க்கை உண்டு என்ற தத்துவமும் இதேதொகுப்பில்.

இன்று தேசியம் என்ற பெயரில் ஜனநாயகம் கழுத்து அறுபட்டுக் கிடக்கிறது. தேசப்பற்று என்றாலே தன் நாட்டு எல்லைக்கு அப்பால் இருக்கும் நாட்டவரைத் தீவிரவாதிகளாகப் பார்க்கவேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது. ஆதிக்க மனிதனுக்குத் தான் பேதமிருக்கிறதே தவிர காற்றுக்கோ, கடல்நீருக்கோ, காலத்திற்கோ எந்தப் பேதமும் இல்லை. அவை அனைத்தையும் ஒன்று போலவே பாவிக்கிறது.

“இரு நாட்டுக் கொடிகளையும்

ஒரே மாதிரி அசைக்கிறது

எல்லையில் வீசும் காற்று”

என்ற வரிகள் எத்தனையோ கருத்துக்களைப் பேசாமல் பேசுகின்றன.

சாதாரண கிலுகிலுப்பையிலும் மகிழும் குழந்தை மனம் கொண்டவர்களுக்குப் படைப்பு இயல்பாகவே வெளிப்படும் என்ற சூட்சுமத்தை இந்தத் தொகுப்பில் காணமுடிகிறது. ஒரு சிறுமி பலூன் ஊதிக் கொண்டிருக்கிறாள். அவள் கன்னங்களில் காற்று நிரம்பியிருக்க இரண்டு குட்டி பலூன்களைக் காண்கிறார் கவிஞர். கிளைகளில் இலைகள் காற்றில் அசைகின்றன. அதை நடனம் என்று பேசும் இடத்தில் அவற்றின் திறமையைக் கண்டு கீழே கைதட்டி மகிழ்கின்றனவாம் இலைகளின் நிழல்கள். ஏரியில் விழும் பறவையின் நிழலையும் வானில் பறந்தபடி தண்ணீரில் நீந்துகின்றன பறவைகள் என்ற கண்ணோட்டம் அழகு வாய்ந்தது. இந்தப் பார்வைதான் கவிஞருக்குக் கவிதையைச் சாத்தியப் படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன். கவிதையை வாசித்தால் உங்களையும் இந்தக் கருத்து தொற்றிக் கொள்ளும்.

நூல்: மீன்கள் உறங்கும் குளம்
ஆசிரியர்: பிருந்தா சாரதி
விலை: ரூ.100 மட்டும்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்

- முனைவர் சி.ஆர். மஞ்சுளா, தமிழ்ப் பேராசிரியர், சென்னை சமூகப்பணி கல்லூரி, எழும்பூர், சென்னை