"கவிஞனின் சுயத்தன்மை என்பது தனக்கு முன்னாலிருந்த கவிஞர்களிடமிருந்து சற்றே மாறுபட்டு விடுவதனாலேயே கிடைத்து விடுவதல்ல. சொந்தமான தன் கவிதைக்கான விதையைத் தேடி கண்டுபிடித்து, அதைத் தனக்குள்ளேயே விதைத்து, துளிர்க்கும் அதை படிப்பு எனும் ஆடு வந்து மேய்ந்துவிடாமல் காப்பாற்றி வளர்த்தால் மட்டுமே கிடைக்கக் கூடிய அபூர்வ மலர்தான்" – (கவிஞர் இந்திரன் - சனங்களின் கதை - முன்னுரையில்)

iyarkai"ஆடி
அசைந்து /
மிதந்து/
பூமிசேர்ந்து/
அத்தனையழகாய் /
மரணத்தை வாழ்கிறது சருகொன்று. –

என சருகொன்றுக்கும் கவிதையில் வாழ்வு தருகிற மனம் வாய்த்திருக்கிற யியற்கையின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான "கடைசி தூர தேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை" சமகால வாசகனுக்கு உவப்பளிக்க ஏதுவான அத்துணை அம்சங்களையும் கொண்டுள்ள நூலாக உள்ளது.

நூலின் தலைப்பும் வறண்ட பிரதேசத்தில் வாழும் படைப்பாளியின் இருப்பும் கவிஞன் எதன் பக்கம், யார் பக்கம் நிற்கவேண்டும் என்று சுட்டிவிடுகிறது.

எளிய நீர்நிலைக்கும் அது… கடலோ, நதியோ, குளமோ, ஏரியோ அல்ல குட்டையோ.. தன்னை நம்பி தன்னுள் வாழும் உயிரினங்களைக் காக்க வேண்டிய சமூகக் கடமை இருக்கிறது. அக்கடமைக்காக எளிய பறவையின் கால்களையும் கெட்டியாகப் பிடித்து மன்றாடி உயிர்பிச்சைக் கேட்கிறது நீர்நிலை. ஆழமான அர்த்தங்களைப் பொதித்து வைத்திருக்கும் சின்னதொரு குறியீட்டுக் கவிதைக்குள் கவிஞன் வாழ்கிறான். ம்ஹூம்… கவிஞனாகப் பரிணாமிக்கிறான்.

யியற்கை-யின் கவிதை உத்தியாக நான் அவதானிப்பது, இருவேறு காட்சிகளின் இணைப்பில் புதியதொரு பொருளை வாசகனுக்கும் புலப்படுத்தும் ஒளிஓவிய உத்தி. பல கவிதைகளில் இந்த உத்தியின் மூலம் சொல்லப்படாத பல சேதிகளைச் சொல்லி விடுகிறார்.

'சாவுக்கான பெரிய மனுஷி' கவிதை தொடங்குவது இப்படித்தான் :

மிகுந்த சிரத்தையோடு /
காத்திருந்தவளுக்கு ஒரு வழியாக /
அனுமதி கிடைத்துவிட்டது…

பிறகு அப்பெண்மணியின் பால்யம் முதல் மரணம் வரை விரியும் கவிதை இப்படி முடிகிறது :

'வங்கியிருப்பு சொத்துக்களைப் பற்றி /
பேசிக் கொள்கிறார்கள் /
யாரோ நேரம் பார்க்கிறார்கள் /
ஆக வேண்டியதைப் பாருங்கப்பா என்கிறார்கள் /
வீட்டில் சலசலப்பு கூடுகிறது.

'மின்விசிறி வார்த்தைகள்' கவிதையில் , ஒரு கைம்பெண்ணின் தவிப்பு தொடங்குவதிப்படி :

பின்புற வீட்டில் அவள் தனியாக இருக்கிறாள் /
துயரின் தனிமையை இரவெங்கும் முனகி வருகிறது /
அவள் வீட்டு மின்விசிறி… -
அழைப்பு மணிக்குப் பிறகு /
காணாமல் போவது யாரென /
இவள் யூகித்திருக்கக் கூடாது.
– திகைப்பூட்டும் திருப்பங்கள்.
இருக்கலாம் , இல்லாமலிருக்கலாம்
உவப்பானதாக…
மரணம் என்கிற நிகழ்வு

யியற்கை-யின் சமகால வாழ்வில் புள்ளியாய் நுழைந்து கோலமாய் படர்ந்து பல்வேறு கவிதைகளில் பல்வேறு விதமாக வெளிப்படுகிறது. மரணத்தை இப்படியெல்லாம் காட்சிப்படுத்தக் கூடுமா… சோக சிம்பொனியின் இசைத் துணுக்குகள் வாசகனுக்குள் நெடுநாள் மீட்டிக் கொண்டிருக்கும்.

'பாதி திறந்திருக்கும் இமைகள் /
ஒரேயொருக் காட்சிக்கான /
வழிபோலத் தெரிகிறது.
பிரேதத்தின் இடதுகாது மடலில் /
ஒட்டியிருந்தது ஒரு இதழ்
கண்ணீர் தீர்ந்த வீட்டில் /
கதைகளாகப் பெருகும் /
மரணத்தின் ஓவியங்கள்
சிறுமியை அறைந்து /
இறப்பின் துகத்தைப் பூசி விடுகிறார் /
அவளது அப்பா'

எனப் பல்கவிதைகளில் மௌனமாய் ஒலிக்கின்றன மரணத்தின் சிம்பொனித் துளிகள்.

மழைத்துளியை 'மழைக்குட்டி' என்றும் 'மழைக்குஞ்சு' என்றும் படிமமாய்ப் பார்க்கிற குழந்தை மனம் வாய்த்திருக்கிற கவிஞருக்கு சருகும், தக்கையும், எறும்பும், கம்பளிப் பூச்சியும் கூட பாடுபொருள்களாகி விடுகின்றன.

"மொழி இயங்கவே இடமும் காலமும் தேவை. ஓர் எழுத்து எப்படி பிறக்கிறது என்றுஆராயும்போது இடம் புலனாகிறது. அது வெளிப்பட இடமும், நீடிக்கக் காலமும் தேவைப்படுகிறது. ஒரு கருத்தும் கூறாத நிலையிலேயே மொழிக்கு இடமும் காலமும் இருக்கிறபோது, மொழியால் இயங்கும் இலக்கியம் இடம், காலம், என்கிற பரிமாணங்களுக்குஉட்பட்டதுதான்" என்பார் ஞானக்கூத்தன் (நவீன தமிழ்க் கவிதைகளில் நாடகக் கூறுகள் – தமிழ் மணவாளன்)

அப்படியொரு கால நீட்சியின் பதிவாக இவ்வரிகள் :

'கம்பளிப் பூச்சியைப் /
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் /
சின்னதாக /
றெக்கைகள் முளைத்திருக்கலாம்'

யியற்கையிடம் ஒரு கதைசொல்லும் பாணி இருக்கிறது. பலகதைகளும்கூட. பல கவிதைகள் குறுங்கதைகளாக பளிச்சிடுவதை வாசகன் உணர முடியும் எனில் அடுத்து வருவது யியற்கையின் சிறுகதைத் தொகுப்பாகவும் இருக்கலாமெனக் கட்டியம் கூற விழைகிறேன்.

'நட்சத்திரா கடலிலேயே இருந்திருக்கலாம்' என்கிற க(தை)விதை இதை உணர்த்தும்.

சக மனிதனின் மேல் காட்டுகிற அக்கறையைக் காட்டிலும் பெரிதாக என்ன இருந்துவிடப் போகிறது இங்கே? கவிதை சொல்லி ஒருபடிமேல்… சகஅனைத்து உயிர்களின்மீதும் பிரியம் பொங்கி விடுகிறது என முன்னுரைத்திருக்கும் கணேசகுமாரனின் வார்த்தைகளில் வெளிப்பட்டிருப்பது யியற்கையின் ரத்தமும் மாம்சமும்.

'தொடும் போதே ஒட்டிக்குதே /
வேகமா பறக்கும்போது /
கலர்லாம் கொட்டிக்காதாப்பா…' எனக் கவிதையொன்றில் கேட்கிறாள் ஒரு சிறுமி. இந்நூலை வாசிப்பவருக்குள் பல கேள்விகளை எழுப்பக் கூடியதாய் இருக்கின்றன யியற்கையின் கவிதைகள். முகப்புக்காக ஒரு பூச்செண்டு… ஒற்றெழுத்துப் பிழைகளுக்காக சில குட்டுகள். ஜனநாயகத்தை அதிகமாக நம்பிவிட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளுக்கு சமர்ப்பித்திருக்கும் இந்நூலை பதிமூன்று பேரைச் சுட்டுக் கொன்ற மஞ்சள் பனியன்காரனும் வாசிக்க வேண்டும்! ஏனெனில் சகஉயிர்கள் மிக முக்கியமானவை.

- அன்பாதவன்