00
சாம்பலாகிய வாழ்வையும் மண்ணின் சிதைவு பற்றிய துயருடனும் கலைமுகம் 49ஆவது இதழ் வெளிவந்திருக்கிறது. கடந்த சில இதழ்களில் கலைமுகம் இருப்பின் சிதைவு பற்றி பேசுவதற்கான- நெருக்கடியான வாழ்வுச் சூழலின் பிரதிபலிப்பு பற்றிய- இடைவெளியுடன் வருவதாக எழுதியிருந்தேன். எனினும் 48ஆவது இதழ் ஒடுக்கப்பட்ட முகத்தை பிரதிபலித்திருந்தது. 47, 46 போன்ற இதழ்களில் இந்தப்போதாமை அதிகம் இருந்தது. ஆனால் இப்பொழுது வெளிவந்திருக்கிற 49ஆவது இதழின் முகப்பு ஆட்களை சிதைக்கப்படு சாம்பலாக்கப்பட்ட வாழ்வையும் மண்ணின் சிதைவும் பேசுகிறது. உள்ளடங்கியிருக்கும் எழுத்துக்கள் பல சமகால நெருக்கடிகளினைப் பேசுகிறது.

வேற்றுலகக் கதைகளை சில இதழ்கள் காவி வருகிற போது இங்கொரு நெருக்கடியும் இல்லை என்ற நிலைப்பாட்டை அது முன் வைக்கிறது. மிகுந்த நெருக்கடிகளினால் கொந்தளிப்பில் இருக்கிறவர்களுக்கு அது பெரிய எரிச்சலை ஊட்டக் கூடியது. ஆனால் எந்த நெருக்கடிகளுமற்றவர்களும் இந்தச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்தான். அண்மையில் ஒரு விரிவுரையாளரை நேர்காணல் செய்கிற போது யாழ்ப்பாணத்தில் உங்கள் வாழ்வு கருத்தை வெளிப்படுத்தும் உரிமை என்பன எவ்வாறிருக்கிறது என்று கேட்டதற்கு அவர் எனது வாழ்வு யாழ்ப்பாணத்தில் மிக மிக சந்தோஷமாகவே இருக்கிறது என்றார். அப்படியெனில் அவர் முன்வைக்கிற கருத்து எப்படியானது என்பதையும் அவர் மக்கள் அனுபவிக்கிற நெருக்கடியிலிருந்து எங்கு தள்ளியிருக்கிறார் என்றும் உணரத் தோன்றுகிறது. இப்படி சில இதழ்களும் காலாவதியான கதைகளை அளந்தபடியிருக்கிறது. சில பத்திரிகைள் பரபரப்பையும் வணிகத்தையும் கருதி செய்திகளை வெளியிடுகின்றன.

அப்படியான ஆபத்து பொருந்திய காலத்தில் சூழலில் கலைமுகம் போன்ற இதழ்களின் வருகை மிகவும் முக்கியமானது. ஒரு நிறுவனத்தின் அதிகாரபூர்வமான இதழாக இருக்கும் இந்த இதழ் அதனை தாண்டியே முழுமையான சமூக இதழாக வருகிறது. மல்லிகையில்கூட காலத்தின் துயர் குறித்த எழுத்துக்கள் வருகிறது. அண்மையில் கிடைத்த மல்லிகை இதழ்களின் உள்ளடக்கத்தில் இந்த மாற்றத்தை ஓரளவு காண முடிகிறது.    

00
பெருயுத்தம் ஒன்று முடிவிக்கப்டக் கூடாத வகையில் முடிவு செய்யப்பட்ட பின்னர் வந்த இந்த இதழ் தமிழ் மக்களின் மனிதாபிமானமுள்ளவர்களின் இருதயங்களை கேள்விக்குள்ளாக்கிறது. தலையங்கம் சற்று வித்தியாசமாக ‘முல்லை முகாரி’ என்ற துயர் கவிழ்ந்த சொற்களை கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் யுத்தம் அழித்த கொடுமையை அடிப்படைகளை தகர்த்த குரூரத்தை பேசுகிறது. அழ முடியாத சிலையாகிற அவலத்தின் அவலம் பற்றிய சித்திரத்தை தந்து நெஞ்சை கனக்கும் ஈழத் தமிழரின் வரலாற்றத் துயரின் உறைச்சலை முன் நிறுத்துகிறது. வன்னியுத்தத்தின் எல்லா விதமான விளைவுகளுக்குள்ளம் பாதிக்கப்ட்ட மக்களது நிலமையை இன்னும் நமது களத்தில் பேசவும் அடுத்த கட்டத்திற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவும் கலைமுகம் இடமளிக்க வேண்டியிருக்கிறது.

‘ஈழத்து நவீன கவிதைகயில் தா.இராமலிங்கத்தின் வகிபாகம்’ என்ற கட்டுரையை சி.ரமேஷ் எழுதியிருக்கிறார். தா.இராமலிங்கம் பற்றிய முக்கிமான பதிவாக வந்திருக்கும் இந்தக் கட்டுரை அவரது இடம் குறித்த மதிப்பீடாக இருக்கிறது. அவரது காலம், கவிதை, படைப்புச் சூழல், பணி என்பன குறித்த தகவல்களைத் தருகிறது. அடுத்து ‘சேரித் திரையின் ஓவியம’; என்ற ‘ஸ்லம்டோக் மில்லியனொர்’ என்ற திரைப்ப ரசனை பற்றிய குறிப்பும் இடம்பெறுகிறது. சுழி.சி.கிருஷ்ணனின் ‘கணனிப் பயன்பாட்டில் தமிழ் எழுத்துக்களின் திரிபும் செய்ய வேண்டிய மாற்றமும்’ எழுத்துக்கள் பற்றிய கட்டுரையும் இடம்பெறுகிறது.

அடுத்து ஒரு முக்கிமான பதிவு இடம்பெறுகிறது. ‘எண்பது வருடங்களின் பின ஒரு மழை நாள்’ என்ற 2008 நவம்பர் மாதம் வீசிய நிஷா மழை நாள் பற்றிய சிறந்த ஆவணம் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் பா.துவாரகன். இந்தக் கட்டுரையை வாசிக்கிற போது மனதெங்கும் பெருங் காற்று வீச மழை பெய்து வெள்ளம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. மழையுடன் மழையாக திரிந்து அவை பற்றிய எல்லா தகவல்களையும் விளைவுகளையும் பதிவுளையும் எதிர் வினைகளையும் தருகிறார் இந்தக் கட்டுரையாளர். இந்தப் பதிவு வரலாற்றை, காலத்தை அதன் நிலையை பதிவு செய்கிறது. இந்த இதழின் மிகவும் காத்திரமான பதிவாக இது இடம்பெறுகிறது.

தொடர் கட்டுரைகளாக சௌஜன்யஷாகரின் ‘சுவைத்தேன் 07’ இல் மனுஷ்ய புத்தரனின் ‘உட்புறமாகத் தாழிடப்பட்ட மரணங்கள்’ என்ற கவிதை திறனாய்வு செய்யப்படுகிறது. இந்தக் கட்டுரையை மனுஷ்யபுத்திரனுக்கு அனுப்பி வைத்ததும் அதனை வாசித்து விட்டு இப்படி ஒரு கவிதையை தனியே திறனாய்வு செய்கிற போக்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பினார். எளிமையான தன்னுரையாடலான கவிதையை  உடைத்து துண்டு துண்டாக்கி இரத்தத்தையும் நிணத்தையும் வெளியில் எடுத்து காட்டுகிறது சுவைத்தேன்.

அடுத்து கவிதைகள் முக்கியம் கொள்ளுகின்றன. துவாரகனின் கவிதைகள் நம்பிக்கை தகர்ந்த பொழுதுகளை சித்திரிக்கிறது. ‘மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்..’ ‘சாத்தான்களின் உலகம’; ‘நீரின் மட்டம் உயர்கிறது’ முதலிய கவிதைகள் இடம்பெறுகின்றன. கை நழுவிப்போகிற நம்பிக்கையற்ற பொழுதில்

“உடைந்த கூரைகளும்
விழுந்த மரங்களும்
சதைந்த உடல்களும்
எம் கண் முன்னால்”

என்று இந்தக் காலத்தின் நெருக்கடியை சொல்லுகிறது இந்தக் கவிதைகள். நீரின் மட்டம் உயர்கிறது கவிதை மழை கொட்டிப் பரப்பிய வெள்ளத்தையும் காலம் விழுத்திக்கொண்டிருக்கிற துயர வெள்ளத்தையும் பாய்ச்சுகிறது.

சித்தாந்தனின் இரண்டு கவிதைகள் சூன்யமான மனதின்; அசைவு பற்றியும் வெறுமை பற்றியும் பேசுகிறது. அவரின் ‘தெய்வங்கள் எறிந்த கத்தி’ மற்றும் ‘சொற்களுக்கான வெளி’ எனபன இங்கு இடம்பெறுகிறது.

“தெங்வங்களின் புகைப்படங்களுக்குள்ளும்
புத்தகங்களுள்ளும் புதையுண்டிருக்கிறது
எமது வாழ்வு பற்றிய இரண்ரொரு சொற்களும்”                                

நிஷாங்கனின் ‘கருகிக் போன என் உணர்வுகள்’ மற்றும் ‘கோரங்களின் வடிவங்கள்’ என்ற இரண்டு கவிதைகள் இடம்பெறுகிறது. தனிமையும் எட்டாமையும் கொண்ட மனதின் உள் தெறிப்பாக அவரின்; சொற்கள் வருகின்றன. புலோலியூர் வேல்நந்தனின் நான்கு கவிதைகள் “..அடுத்து இடம்பெறுகிறது.

“சுருண்டு படுத்த அட்டைபோல்
மனம் விரிந்து நகர
மறுக்கிறது
புழுவைப்போல் துடித்த காலமும்
அழுகைகளும் ஓயவில்லை
திசைமாறிப்போகும் அவலங்கள்..”

என்று முடிவற்ற துயரத்தையும் புழுத்த காலத்தையும் இவரது இந்தக் கவிதைகள் பேசுகின்றன. ‘ஏக்கங்கள்’, ‘எப்போது முடியும் எப்போது விடியும்’, ‘மூவிடம்’, ‘ஒரு பௌர்ணமியின் ஞாபகங்கள்’ என்ற நான்கு கவிதைகள் இடம்பெறுகின்றன. அனாரின் ‘அதிசயத்தை ஒளியால் பேசி;கொள்ளுதல்’ என்ற கவிதை பனியுறைந்த நினைவுகளையும் மலையில் தவழுகிற புன்னகைகயையும் காண்பித்து சலனமற்ற பொழுதில் சிக்கலான தெருவில் விடுகிறது. அத்துடன் ரிஷான்ஷெரிப்பின் ‘ஒலி மிகைத்த மழை’ ‘கனிவுமதி கவிதைகள்’, எஸ்.புஸ்பானந்தனின் ‘நெடும் பிரித்தல்’ பஹீமா ஜஹானின் ‘அம்மா’, தீபச்செல்வனின் ‘சாபத்தின் நிழல’;, ‘கத்தி’, ‘பிழைத்த கோடுகள்’ முதலிய கவிதைகளும் இடம்பெறுகின்றன.

சிறுகதைகளை மருதம் கேதீஸ் ‘ஹெல்மரும் நானும் + மட்டைத்தேளும் நோறாவும் ஸ்ரீஒன்றுமேயில்லை’ , ந.வினோதரன்- ‘கள்ளி மரத்து எழுத்துக்கள்’ முதலியவையும் இடம்பெறுகின்றன. நூல் மதிப்பீடுகளை தபின்- ஓர் எழுது வினைஞனின் டயரி, நல்லை சபா- செல்லையா தாத்தாவும் செல்லக் குழந்தைகளும், தீபச்செல்வன்- மூச்சுக் காற்றால் நிறையும் வெளிகள், அ.அனுஷானி- நூனக்கண் முதலியவர்களும் எழுதியுள்ளனர். இவற்றுடன் தலையங்கம், கடிதங்கள், பதிவுகள், நூல் அறி முகங்கள் என்பனவும் இதழில் உள்ளடங்கி விரிகின்றன. இதழின் வடிவமைப்பு, உள் பக்கங்களின் வடிவமைப்பு என்பன நேர்த்தி கொண்டிருக்கிறது. இதழ் முகப்பு ஓவியத்தை வே.சுமன்ராஜ் வரைந்திருக்கிறார். யுத்தத்தினால் தின்னப்பட்ட எல்லாவற்றையும் அது பிரதிலிக்கிறது. இந்த ஓவியம் சம்பலாகிய வாழ்வும் மண்ணின் சிதைவையும் முக்கியமாக பிரதிபலிக்கிறது.

நம்பிக்கை ஊட்டுகிற சமூகத்திற்கான எழுச்சி கொண்ட வடிவமைப்புடன் வந்திருக்கும் இந்த இதழ் களத்தை திறந்து விடும் என்ற எண்ணத்தை தருகிறது. காலம் பற்றிய பிரக்ஞை, துயரம் என்பனவும் அதன் மீளெழுச்சிக்கான புதிய சொற்கள் என்பனவும் இந்த இதழில் இருக்கின்றன. கலைமுகம் காலம் தாழ்த்தி வருகிறபோதும் மிகவும் நேர்த்தியாக வருகிறது. அவசியமான விடயங்களை பேசுகிறது. அதனை பதிவு செய்கிறது.

- தீபச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)