உங்களுக்கெல்லாம் வரப்பு வெளி ஒன்றினை அறிமுகப்படுத்த விழைகிறேன்..வரப்புவெளியறியாதார் வயல்வெளி அறிவரோ...இதுவொரு குறுநாவல்...வயல்வெளிகளைப் பரப்பிப் போட்டிருக்கிறார் கட்டாரி என்கிற சரவணன்... நாம் வரப்பினைக் கட்டியே தீரவேண்டும் அமர...ஒவ்வொரு அத்தியாயத்தையும் நாட்டார்வழக்குக் கவிதையோடு பிசைந்தூட்டகதை கேட்க வேண்டாமா பின்னே...

பித்தள வளையலோட
நண்டு வளையில்
ஒங்கை... !
வெரலு வாசத்துல பித்தேறி
வளையல் பிடிச்சி
தொங்கிருச்சி...
கடிக்க மறந்த பால்நண்டு... !

வெத்தல வாசத்தோட
நீ
வெறகு பொறுக்கப்
போனாக்கா
காட்டு மொட்டெல்லாம்
போட்டிபோடும்
பூத்துநின்னு ஒங்கூட வர... !

இப்படி அறுப்பிற்கு விதைப்பவன் வைப்பதுதான் கூலி என்கிற நியதி போல ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் இவருடைய கவிதைகள்..

அதோ வரப்பிலிருந்து நாற்றோடு வருகிறான் முதுகெலும்பி.அவன் கையிலிருக்கும் நாற்று அவன் ஊருக்குள் விரிந்திருக்கும் உறவுகளுக்குள் எவ்விதம் நடப்படுகிறது காண்போமா....

"ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்ற பழமொழியுண்டு.தம் மண்ணிலுள்ள உறவுகள் ஒவ்வொரு நல்லது கெட்டதிலும் கூடும் அழுத்தமான கால்த்தடங்களைப் பதிந்து கொண்டே போகிறது முதுகெலும்பியின் கதை சொல்லும் பாங்கு... உதாரணமாக ஓடு நண்டு என்கிற கதாபாத்திரம் ஓட்டப் பந்தயம் இன்னதென்று அறியாத வயதிலும்,அறிந்து பின் அதன் பின்னே ஓடிய போதும் பிறகு பட்டணத்திற்கு பெரிய படிப்புப் படிக்கச் செல்வதற்குமான அனைத்து ஓட்டங்களிலும் கிராமமே தத்தமது பங்களிப்பினை வலுவூட்டி அனுப்பியிருக்கிறது... இந்த ஓடு நண்டு என்பது கூட பட்டப் பெயர் தான்... பட்டணத்து மனிதர்களின் வாழ்க்கை முறை இவன் மூலமாக சலனப்பட்டு ஊர் திரும்புவது இயல்பு...

விவசாய வாழ்வு என்பதெல்லாம் நெடுஞ்சாலையோரத்தில் நானும் பசுந்தாள் பூத்த வயலினைக் கண்டேன் என ரசிப்பதல்ல... அது சேறும் நீரும் பிணைந்த விவசாயிகளின் ஆன்மா...ஒரு நெல் விளைகிறதென்றால் ஒரு பசி அங்கு தீர்கிறதென்று பொருள்... இவனே பெரும்பசிக்காரன் எத்தனை எத்தனை பசிகளுக்காய் நெல் மணிகளை விளைக்கிறான்... விலைக்கு வாங்கிவிட்டுப் பொங்கித் தின்றோ, குக்கரில் வெந்தோமே என்ற விதி விசில் சத்தத்திற்குக் காத்திருந்தோ நெல் மணியின் அருமையும் ருசியும் விளங்கப் போவதில்லை..ஒரு நெல்லுக்கு உயிர் கொடுப்பதென்பது அதனை நீங்களோ நானோ உண்ட பிறகு தான்... இத்தகு ஜீவித கலையைக் கண்டவன் விவசாயி் மட்டுமே...இதில் முதுகெலும்பி விவசாயி கூட..காலங்காலமாய் கட்டுண்டு கிடக்கும் விளைநெல்லுக்கு முதலாளி வர்க்கம் நிர்ணயிக்கும் விலையை உடைத்தெறியும் சத்தம் கேட்கிறது... சத்தம் சத்தத்தை உடைத்தே விடுகிறது... இதுவும் ஒரு விதமாக “முள்ளை முள்ளால் எடுப்பது போன்றதே”

சேத்துக்குள்ள சோறெடுத்தும்
சிப்பிக்குள்ள
முத்தெடுக்கும்... !
பரம்பரை பெருமை சொல்ல
மிச்சமானதுங்க... !
இடுப்புக்கயிறு கோவணமும்
அடுப்பங்கரை கருவாடும்... !

வெள்ளச்சேதம் பாக்கவந்த
வெள்ளத்தோலு அதிகாரிகள்...
வயலெறங்க மறுக்கையில
வெதும்பலும் வெசனமுமா...
கேட்டுக்குறேம் ஒரு கேள்வி... !
தட்டு நிறைய சோறு வச்சி
மோந்து பாத்தா
பசியாறுவீக... ?

கேட்கிறான் பாருங்கள் கேள்வி..நம்மில் எத்தனை பேருக்கு இதற்குச் சரியான தீர்வு காண முடியும்... வெள்ளச் சேத காலம் மலையேறி மழையேயற்ற வறட்சிக்கு,”வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவனாக “ இன்னுயிரை இறுதியாக வடித்துவிட்டுப் போகிறான் விவசாயி... விவசாயத்தின் கடைசி நம்பிக்கையும் விவசாயியாகவே இருக்க முடியும்...இதில் எதை நிறைவேற்றுவோம் நாம்...

பலியிடும் சடங்குகள் இன்னும் கிராமங்களிலுண்டு மறுப்பதற்கில்லை.இதோ இவர்கள் கிராமத்திலும் பலியிடும் படலம் நெருங்கும் சமயத்தில் நீலாவின் மனம் தழும்புவதைக் காண முடிகிறது.விலங்குகள் மீதான கருணைக்கு நீலாவைக் காட்சிப்படுத்தியிருக்கும் அருமை லாவகமானது... அவளுக்கொரு ஆட்டுக் குட்டி்போல வாசிப்போரின் மனமும் அச்சிறுமடி தேடும்...

வெட்கம் யாருக்குரியது... இயற்கையேயுருவான பெண்ணுக்குப் பூப்பது..ஒரு ஆணின் வெட்கத்தை மெய் சிலிர்த்ததுண்டா என்றால் முதுகெலும்பி நல்ல உவமை சொல்லிப் போகிறான் “வெக்கம் வாய்க்கா தண்ணியா ஓடுச்சு”என்று..

முத்தாயி அம்மாச்சி ஆரம்பத்திலேயே கதை சொல்லியாய் வந்து போனவள் கடைசியில் அவளுக்கென்றும் ஒரு சொந்தம் கிடைத்துவிட்டதான விசேடத்தில் தான் முதுகெலும்பியின் திருமணம் சுப மங்களமாய் முடிகிறது..இல்லை இல்லை தீட்டு, ஆரம்பமாகிறது... அம்மாச்சி கதையை நான் சொல்வதைக் காட்டிலும் முதுகெலும்பி நாவலில் தேடிப் பெறுதல் நலம்....அது கதைக்குள் கதை...அதோடு சாமித் தாத்தாவின் டீக்கடையில் நடக்கும் முடிவு வாதங்கள் அவர் கடையில் விற்கப்படும் டீ, காபி போல சூடு பறப்பது... சுவையோ அவரான கண்ணிய குணம் போல....இதே சுவை முத்தாயி அம்மாச்சி கடையில் விற்கப்படும் தேன் மிட்டாய்,கல்கோனா,நெய்யுருண்ட,பட்டாணி,வெத்தல சீவலு இன்ன பிற நாட்டார் திண்பண்டங்களிலும் கிடைக்கக் கூடும்...

சமீபத்தில் சுழலி என்கிற பாடல் எப்படியும் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கக் கூடிய ஒன்றாகவே இருந்திருக்கும்... இங்கு குழலி வருகிறாள்... நீர்க்குழலி... நீர் போல வஞ்சனையற்ற பெண்... ஊருக்கும் உழைத்து தன் வீட்டு நலமும் பேணும் மகராசி... இவளின் காதல் தெம்மாங்குத் தென்றலாய் வருடுகிறது...நாயகன் வேறு யார் நம்ம முதுகெலும்பி தான்...

காதல்... காதல்... காதலுக்குப் பல முகங்களுண்டு... ஆனால் காதலுக்கென்ற முகம் ஒன்றே ஒன்று தான்...அந்தக் காதல் முதுகெலும்பியையும் நீர்க்குழலியையும் சேர்த்து வைத்திருக்கிறது..அப்படியென்ன பெரிய காதல்... இந்தக் காதலின் பின்னணி சுவாரசியமானதல்ல... இன்று பலரும் காதல் திருமணமாயினும் பெற்றோர்கள் நிச்சயித்த திருமணமாயினும் குறை கண்டு குற்றம் கண்டு பிரிந்துவிடவே தன் முனைகின்றனர்... அப்படியிருக்க இவர்களுக்குள்ளான அன்யோன்யம் நாவலின் உச்சகட்டம்...தெறி படத்தில் இப்படியொரு வசனம் வரும்,

“காதலச் சொல்ல வெட்கப்படறவன் வாழவே வெட்கப்படனும்”

முதுகெலும்பியும் நீர்க்குழலியும் சேர்ந்தேயிருப்பது,பிரிவது மீண்டும் இணைவதான காதலின் தத்ரூபச் சிந்தனையை உள்ளடக்கிய களம் ஊரார் கொண்டாடும் வைபவமாகத் திகழ்வது இத்தொடரின் வெற்றி...
இந்நூல் கட்டாரியாகிய சரவணாவிற்கு முதல் நூல்... முதல் குழந்தை போல... முதல் குழந்தையின் மீதான அத்தனை எதிர்பார்ப்புகளும் இதற்குள் அடங்கிப் போகிறதென்பது குறிப்பிடத் தக்கது...

ஆகச் சிறந்த குறையாகக் கருதப்படுவது யாதெனின் “முதுகெலும்பி” வாழ்வியல்த் தொடரானது சற்று பருத்த புதின கிராமத்து இலக்கியமாக உருப் பெற்றிருக்கலாம் என்பது தான்...மற்றபடி பசுமை சூழக் குளிர்கிறது வாசிப்பானுபவம்...

நூல் விவரம்:
“முதுகெலும்பி”
ஆசிரியர்:ஜெ.சரவணா(கட்டாரி)
அன்னை முத்தமிழ்ப் பதிப்பகம்

- புலமி