ஏறத்தாழ முப்பதாண்டுக் காலம் கட்டுக்கோப்புடன் இயங்கி மக்கள் தந்த செயலூக்கம் மிக்க ஆதரவினாலும், ஆயிரக்கணக்கான மாவீரர்களின் ஈகத்தினாலும், தலைமையின் உறுதிமிக்க திறமான வழிகாட்டுதலாலும் அரும்பெரும் வெற்றிகளை ஈட்டி, வரலாற்றில் அழியா முத்திரை பதித்து, உலகம் வியக்க ஓங்கித் திகழ்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம் திடீரென மாயமாய் மறைந்து விட்டது போன்ற நிலை ஏற்பட்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏன் இப்படி ஆயிற்று? இதற்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்குத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் விடை சொல்வதற்குப் போதிய தரவுகள் நம்மிடமில்லை....”

முள்ளிவாய்க்கால் முன்னும் பின்னும் (2010) நூலில் நான் எழுதிய வரிகளே இவை. ஒரு கூர்வாளின் நிழலில் என்ற தமிழினியின் நூலைப் படிக்க முற்பட்ட போது, புலிகளின் பெருந்தோல்விக்கான அகக் காரணிகள் என்ன? என்ற வினாவிற்கு விடை தேடும் முயற்சியாக இது இருக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏன் தோற்றீர்கள்? என்ற வினாவிற்கு விடை சொல்லும் முயற்சியே இந்நூல் என்பதைத் தமிழினியே சொல்கிறார்.   

tamilini bookவிடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிரணித் தலைவியாக இருந்து, முள்ளிவாய்க்கால் வரை போராளிகளோடும் மக்களோடும் சேர்ந்து சென்று, இறுதிப் போரின் இறுதி நாளில் மக்களில் ஒருவராகச் சரணடைந்தவர் என்ற முறையில் தோல்விக்குக் காரணம் சொல்லத் தமிழினி தகுதிப் பொருத்தம் உடையவர் என்பதில் ஐயமில்லை.

இந்த நூல் தமிழினி உயிர்வாழ்ந்த போதே வெளிவந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இயற்கை அதற்கு வாய்ப்பில்லாமல் செய்து விட்டது என்ற நிலையில்... பல சர்ச்சைகளுக்கு வழியமைந்து விட்டது. இவற்றுள் முதன்மையானது: இது தமிழினி எழுதிய நூல்தானா? அடுத்த நிலையில், தமிழினி எழுதிய நூலை அவர் கணவர் திரு ம.ஜெயக்குமரன் திருத்திப் புரட்டி இடைச் செருகல்கள் சேர்த்துக் கெடுத்து விட்டாரா? அல்லது காலச் சுவடு பதிப்பகத்தின் திட்டமிட்ட புரட்டு வேலைதானா இது?

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைமை மீது இந்நூல் சில கடுமையான குற்றாய்வுகளைக் கொண்டிருப்பதே மேற்சொன்ன ஐயப்பாடுகளுக்குத் தூண்டுதலாக அமைந்து விட்டது. இந்த ஐயப்பாடுகளை எழுப்புவோர் தங்கள் தரப்புச் சான்றாக எடுத்துக் காட்டியிருப்பவற்றுள் ஒன்று நூலின் பின்னட்டையில் இடம் பெற்றுள்ள தமிழினியின் மேற்கோள் (?) ஆகும். “புலிகளின் வீர வரலாறு, துரோக வரலாறு...” என்று இம்மேற்கோள் தொடங்குகிறது. இது இந்நூலில் எங்கும் இடம்பெறாத ஒன்று. புலிகளின் வீர வரலாற்றுக்குத் தமிழினியின் இந்நூலும் ஒரு வகையில் சான்றுதான். அவர் வாழ்ந்த வாழ்வும் செய்த ஈகமும் கூட அப்படித்தான். ‘புலிகளின் துரோக வரலாறு’ என்ற சொற்றொடர் கனவிலும் அவர் வாயிலிருந்தோ விரல்களிருந்தோ புறப்படவே புறப்பட்டிருக்காது.   

அப்படியானால் எப்படி வந்தது இந்த மேற்கோள்? காலச்சுவடு திங்களேட்டில் 2009ஆம் ஆண்டு பிரேமா ரேவதி எழுதிய ஒரு கட்டுரையில் அப்படியே இந்த வரிகள் இடம்பெற்றிருப்பதை தோழர் தீபச்செல்வன் எடுத்துக்காட்டியுள்ளார். காலச்சுவடு இதற்கு என்ன சொல்கிறது? தமிழினியின் கணவர் ஜெயக்குமரன் கொடுத்ததை அப்படியே அச்சிட்டோம் என்கிறது. ஜெயக்குமரன் என்ன சொல்கிறார்? இவை தமிழினியின் எழுத்துக்கள் என்று நம்பி விட்டதாகச் சொல்கிறார். இது அறியாமற்செய்த பிழை என்றே வைத்துக் கொண்டாலும், நூலின் உண்மைத் தன்மை மீதே ஐய நிழல் படரச் செய்து விட்டது. ஆனால் இந்தப் பிழை அல்லது குற்றத்துக்கு யார் பொறுப்பென்றாலும் தமிழினி பொறுப்பாக மாட்டார் என்பதால், நியாயமான ஐயப்பாடுகளின் பேரிலும் கூட இந்நூலை அலட்சியமாகத் தூக்கி வீசி விடுவதற்கில்லை.

ஒரு கூர்வாளின் நிழலில் என்ற இந்த நூலை ஒரு முறைக்கு மேல் கூர்த்த கவனத்துடன் ஆழ்ந்து படித்துள்ளேன். ஓரளவு படிப்புப் பயிற்சியும் எழுத்துப் பயிற்சியும் உடையேன் என்ற முறையில் இந்நூலில் முன்னுரைகள் முடிந்து 15 முதல் 255 முடியவுள்ள பக்கங்களில் தமிழினியின் அழகிய, எளிய நீரோடை போன்ற தடங்கலற்ற தமிழ் நடையையே கண்டுணர்கிறேன். இரண்டாவதாக, அவர் பதிவு செய்துள்ள முக்கியச் செய்திகள் அவர் மட்டுமே அறிந்து சொல்லக் கூடியவை. இந்த இரு கோணத்திலும் பார்க்க, தமிழினியின் பெயரால் வேறொருவர் இப்படி எழுதியிருக்கவோ, அல்லது அவர் எழுத்தில் இடைச் செருகல் செய்திருக்கவோ கூடும் என்பதற்கான அகச் சான்று ஏதும் எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வகையில், இது தமிழினியின் நூல் என்பதை என்னால் ஐயுற முடியவில்லை.

ஆனால் எனக்குள்ள நியாயமான ஐயப்பாடு தமிழினி எழுதியது முழுமையாக இடம்பெற்றதா என்பதுதான். கூர்வாள் சிங்களச் சிங்கத்தின் கையில் இருப்பது என்பதறிவோம். தமிழ்ப் புலியைத் தலைப்பில் சொல்ல நினைத்திருந்தால் துவக்கின் நிழலில் என்று எழுதியிருக்கக் கூடும். இந்நூல் தாம் சார்ந்த இயக்கம் தொடர்பான ஒரு தன்னாய்வு (ஆத்ம பரிசோதனை) என்றே வைத்துக் கொண்டாலும் சிங்களப் படையினர் நிகழ்த்திய கொடுமைகள், பேரினவாத அரசியல் பற்றியெல்லாம் பேசாமல் இத்தலைப்புக்கு நீதி செய்வதெப்படி?

சிங்களக் கூர்வாளின் நிழலில் தமிழர்தம் உயிரும் மானமும் குதறப்பட்ட கொடுமைகள் தெரிந்தும் தமிழினி அவற்றைச் சுட்டாமல் கூட விட்டிருப்பார் என்பதை நம்ப முடியவில்லை. நடந்திருப்பது செருகல் அல்ல, உருவலே எனத் தோன்றுகிறது. நூல் அச்சேறி வெளிவர வேண்டும் என்ற கவலையில் நூலாசிரியர் அரசைக் கடுமையாகக் குறை சொல்லாமல் விட்டு விட்டார் எனக் கொண்டாலும், மக்கள், குறிப்பாகப் பெண்கள் அடைந்த துயரத்தையாவது ஏடேற்றியிருக்கலாமே? இயக்க நடைமுறைகள் பற்றிய குற்றாய்வுக்கே கூட இது இன்றியமையா உள்ளீடு ஆகுமே?

விளக்கமளிக்கத் தமிழினி இல்லாமற்போய் விட்ட நிலையில் நூலின் உண்மைத் தன்மை குறித்து முடிந்த முடிவாக எதுவும் சொல்வதற்கில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். அடியேனும் இந்தச் சிக்கலில் நிகழ்தகவு என்ற முறையில் எனக்குத் தோன்றியதைப் பதிகிறேனே தவிர முடிந்த முடிவாக எதுவும் சொல்ல விரும்பவில்லை. எவர் மீது என்ன குற்றம் சுமத்துவதென்றாலும் உறுதியான சான்றுகள் வேண்டும். என்னிடம் அப்படி எதுவும் இல்லை.

ஆனால் இந்த ஒரு சர்ச்சையைக் காரணமாக வைத்து நூலின் உள்ளடக்கத்துக்குரிய மதிப்பைக் குறைத்து எண்ணி விட வேண்டாம். கடைசியாக நடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் மிக அதிகமாக விற்பனையான புத்தகங்களில் இந்நூலும் ஒன்று என்பது கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி. தமிழீழம், விடுதலைப் புலிகள், தலைவர் பிரபாகரன், நடந்து முடிந்த போர், தொடரும் போராட்டமும் விவாதமும்... இவை குறித்து இப்போதும் பொதுத் தமிழர் கவலை கொள்கிறார், தெரிந்து கொள்ள விரும்புகிறார்.

இது தமிழினி எழுதிய நூலே அன்று, வேறு யாரோ எழுதி அவர் பெயரில் வெளியிட்டிருப்பது என்றே வைத்துக் கொண்டாலும், எழுதியிருக்கும் செய்திகள், தெரிவித்திருக்கும் கருத்துகள், கிளப்பியிருக்கும் விவாதங்கள்... இவை யாவும் காய்தல் உவத்தலின்றி ஆய்ந்து பார்க்கப்பட வேண்டும். இந்தப் பார்வை இல்லாமல், ஈழப் போர் குறித்தும் புலிகளின் தோல்வி குறித்தும் நமது ஆய்வு உண்மையானதாக, புறஞ்சார்ந்ததாக இருக்காது என்பதில் ஐயமில்லை.

தமிழினி சொல்வதெல்லாம் உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவரைப் போலவே இனவழிப்புப் போர்க் காலத்தில் மக்களோடும் போராளிகளோடும் இறுதி வரை உடனிருந்து முள்ளிவாய்க்கால் வரை வந்தவர்களில் முக்கியமான ஒருசிலராவது இப்போதும் எங்கோ உயிருடனிருப்பார்கள். அவர்களில் முடிந்தவர்கள் தமிழினி செய்தது போல் எழுதட்டும், சொல்லட்டும். நாம் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

முழுமையாகவோ பகுதியாகவோ தமிழினி எழுதியதாகக் கொண்டாலும், இல்லையென்றாலும், ஒரு கூர்வாளின் நிழலில் நம் மீள்பார்வைக்கு ஒரு சிறந்த நோக்காடி. எனக்குத் தெரிந்து இந்நூலுடன் ஒப்பிடும் படியாக வேறு நூல் ஏதும் நம்மிடமில்லை. வரலாற்றுப் புதினங்கள் என்ற வடிவில் ஒருசில வந்திருப்பினும் வரலாற்று நூல் என்ற முறையில் தமிழினியினுடையது தனித்தே நிற்கிறது. குணா கவியழகன் எழுதியிருப்பவை போன்ற நூல்கள் அக்கால நிகழ்வுகள் பற்றி நமக்கு ஓரளவு வெளிச்சம் தந்த போதிலும், உண்மையை உள்ளடக்கமாகக் கொண்ட புனைவு வடிவம் கொண்ட கதையாடல்களே! இவையும் மதிப்புக்குரிய பங்களிப்புகளே என்றாலும் தமிழினியின் பதிவுகளோடு ஒப்பிடத்தக்கவை அல்ல.

தமிழினியின் பார்வைகள் உங்களுக்கும் எனக்கும் உவப்பானவையா? கசப்பானவையா? என்பதன்று, அவை ஒரு வரலாற்று ஆய்வின் முற்கோள்களாகப் பயன்படுகின்றனவா? இல்லையா? என்பதே மையக் கேள்வி. பெரிதும் பயன்படுகின்றன என்பதே என் விடை. இவை உண்மையில் தமிழினியின் பதிவுகளே அல்ல என்றாலும் கூட என் விடையில் மாற்றமில்லை.

இந்நூலை எழுதுவதில் தமிழினியின் நோக்கமென்ன? வெளியிடுவதில் ஜெயக்குமரனின் நோக்கம் என்ன? காலச்சுவட்டின் நோக்கம் என்ன? இந்தக் கேள்விகளுக்குள் நுழைந்தால் வெளியே வருவது கடினம். நோக்கங்களைக் காட்டிலும் விளைவுகளைக் கொண்டு மதிப்பிடுவதே என் ஆய்வுமுறை.

தலைவர் பிரபாகரனின் வீரம், ஈகம், தலைமைத் திறம், வரலாற்றுப் பங்களிப்பு இவற்றைப் போற்றுவதிலும், அவரை ஆழமாக நேசிப்பதிலும் குறையொன்றுமில்லை. இந்நூலும் கூட இவ்வகையில் குறை சொல்லத்தக்கதன்று. தலைவர் மீது தமிழினியின் மதிப்பார்ந்த நம்பிக்கை இந்நூல் முழுக்க இழையோடி நிற்கிறது. ஆனால் இந்த அறிவார்ந்த நம்பிக்கை தலைவரைக் குற்றாய்வு செய்வதே கூடாது என்ற குருட்டு நம்பிக்கையாக மாறுவதை பிரபாகரனே ஏற்க மாட்டார். தமிழினி அப்போதே இல்லா விட்டாலும் இப்போது திரும்பிப் பார்த்து மீளாய்வு செய்வதால் விடுதலைப் போராட்டத்திற்கு நன்மைதானே தவிர தீமையில்லை. பெரியோரை வியத்தல் இலமே என்ற பூங்குன்றன் வழி நம்மை எப்போதும் ஆற்றுப்படுத்தும்.

தலைவருடனும் விதூசாவுடனும் தமிழினி குறிப்பிடும் உரையாடல்களை உறுதி செய்யவோ மறுக்கவோ அவர்கள் யாரும் உயிருடனில்லை. பேசியிருப்பார்களா, பேசியிருக்க மாட்டார்களா என்ற ஊக விளையாட்டில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக இந்த உரையாடல்களின் ஊடாகத் தமிழினி முன்வைக்கும் கொள்கைவழிக் குற்றாய்வுகளைக் கருதிப் பார்ப்பதே அறிவுடைமை.

மாத்தையா, கருணா போன்றவர்களைப் பற்றிய தமிழினியின் மதிப்பீடு சரியாகவோ தவறாகவோ இருக்கலாம். அது இறுதித் தீர்ப்பாக இருக்க வேண்டுமென்ற தேவையும் இல்லை. தலைவர்கள் ஆயினும் இரண்டகர்கள் ஆயினும், நண்பர்கள் ஆயினும் பகைவர்கள் ஆயினும், அனைவரும் இறுதி நோக்கில் வரலாற்றின் கருவிகளே.

போரின் போக்கை உணர்த்தும் பொருட்டுப் பொட்டு அம்மான் 2009 மூன்றாம் மாத அளவில் புதுக்குடியிருப்பில் அனைத்துப் பொறுப்பாளர்களுக்குமான சந்திப்பு ஒன்றில் இப்படிச் சொன்னாராம்:

ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியம் இல்லை... மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள்... யுத்தத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்துவதற்குத் தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுவது சாத்தியமில்லை. நான் உங்களைக் குழப்புவதற்காக இப்படிச் சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்கிறேன்.”

கிட்டத்தட்ட அதே காலத்தில் பொட்டு அம்மான் தமிழ்நாட்டுச் செயற்பாட்டாளர்களிடம் ஒருவரை அனுப்பி இதே கணிப்பை அறியத் தந்தார் என்பதற்கு நானே சான்று! அந்நேரம் எனக்குக் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் முல்லைத் தீவில் நிகழப்போகும் முழுப்பேரழிவு என்று தினப் புலரி நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.   

நோயாளியின் சாவுக்கு நோய்தான் காரணம். ஆனால் மருத்துவர் என்ன பிழை செய்தார், என்ன பிழை விட்டார் என்று ஆராய்வதில் தவறில்லை. அதுதான் அறிவு, அதுதான் அறம்.

தமிழினி முன்வைக்கும் செய்திகளை ஒவ்வொன்றாக எடுத்து, இப்படி நடந்திருக்குமா? அப்படி நடந்திருக்குமா? என்று ஆராய்ந்து கொண்டிருப்பதால் பயனில்லை. சில விவரப் பிழைகள் இருக்கலாம், நினைவுப் பிழைகளும் கூட இருக்கலாம். சரிபிழைகளுக்கு நடுவில் மறைந்துள்ள பொது இழைதான் நாம் பற்றிக் கொள்ள வேண்டியது.

நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்: கடந்த 1990 செப்டம்பர் 15ஆம் நாள் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த திலீபன் மன்ற அறிமுகக் கூட்டத்தில், விடுதலைப் புலிகளை ஆதரிக்க வேண்டிய தேவையை வலியுறுத்திப் பேசிய போதே அவர்களின் நடைமுறையில் வெளிப்படும் இராணுவவாதப் போக்குகளையும், அவற்றுக்குரிய வரலாற்றுக் காரணிகளையும் எடுத்துக்காட்டினேன். படைமுதற்கொள்கை (இராணுவவாதம்) புலிகளிடம் மட்டுமல்ல, உலகெங்கும் அநேகமாய் ஒவ்வொரு ஆயுதப் போராட்டத்திலும் கூடக் குறைய தலையெடுக்கும் படியான போக்குதான். உரிய நேரத்தில் சரி செய்யா விட்டால், கட்டுப்படுத்தத் தவறினால் பெருந்தீங்காகி விடலாம்.   

விடுதலைப் புலிகளின் தலைமை குறித்தும், அது போராட்டத்தை வழிநடத்திய விதம் குறித்தும் தமிழினி காணும் குறைகள் இது வரை யாருமே சொல்லாதவை அல்ல. மற்றவர்கள் வெளியிலிருந்து சொன்னார்கள். அல்லது வெளியேறி வந்து சொன்னார்கள். தமிழினி உள்ளிருந்து சொல்கிறார், செறிவான பட்டறிவுடன் சொல்கிறார். தனிமனித வழிபாடு, உள்ளியக்க சனநாயகமின்மை, படைவலிமை மீது மிகைநம்பிக்கை இவற்றை வெறும்  கோட்பாட்டளவில் சொல்லாமல், குறிப்பான நேர்வுகளின் அடிப்படையில் சொல்கிறார். இந்தக் குறைகளை ஆழ்ந்த வருத்தத்துடன் பதிவு செய்கிறார். இயக்கத்தின்பால் நேசத்தையும் தலைமையின்பால் மதிப்பையும் குறைத்துக் கொள்ளாமல் சொல்கிறார்.

ஏன் இதையெல்லாம் இப்போது சொல்ல வேண்டும்? என்ற கேள்விக்குத் தமிழினியிடமிருந்து கிடைக்கும் விளக்கம் நெஞ்சைத் தொடுகிறது:

நான் உயிராக நேசிக்கும் மக்களிடம் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். ஓர் இனத்தின் அரசியல் அபிலாசைகளை மீட்டெடுப்பதற்காகக் கருக்கொண்ட போராட்டம் இலட்சோப இலட்சம் உயிர்களின் மீது கட்டியெழுப்பப்பட்டது. இறுதியில் அதன் போக்கிடம் ஏன் இப்படி பூச்சியமானது? போராட்டத்தை முழுவதுமாகத் தன்னகப்படுத்திக்கொண்ட விடுதலிப் புலிகள் இயக்கத்தில் நானும் ஓர் உறுப்பினராக இருந்துள்ளேன். போராட்டத்தின் இறுதி இருபது வருடங்கள் நானும் ஒரு சாட்சியாகப் போருக்குள் வாழ்ந்திருக்கிறேன். நாங்கள் எமது மக்களைக் காப்பாற்றத் தவறி விட்டோம். ஆயுதங்களைப்பதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசியல் இலட்சியத்தைத் தோற்கடித்து விட்டோம்.”

தமிழினி இயக்கத் தலைமைக்கு உண்மையாக இருந்தார், அதை விடவும் மக்களுக்கு உண்மையாக இருந்தார் என்பதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் உணர்த்தி நிற்கிறது. கொள்கைப் பற்று, இயக்கப் பாசம், கட்சிக் கட்டுப்பாடு, தலைமை விசுவாசம் எல்லாவற்றை விடவும் பெரியதொன்று உண்டென்றால் அது மக்கள் மீதான மாறா அன்புதான். நாம் செய்கிற, செய்யத் தவறுகிற ஒவ்வொன்றுக்கும் மக்களிடம் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்கள் என்ற கவலைதான்!

இந்த ஒரு பாடத்திற்காகவே ஒரு கூர்வாளின் நிழலில் நாம் ஒவ்வொருவரும் படித்து உணர்வேற்றவும் அறிவேற்றவும் வேண்டிய நூல்.

தமிழினியக்கா! என்னிலும் இருபது வயது குறைந்த உங்களை இப்படி விளிக்கத்தான் ஆசைப்படுகிறேன். புற்று நோய் உங்களை அரித்துத் தின்று கொண்டிருந்த நிலையிலும் உங்கள் மக்களுக்கு நீங்கள் வழங்கிய அருங்கொடை ஒரு கூர்வாளின் நிழலில்! நெஞ்சைத் துளைக்கும் வினாக்களுக்கு விடை தந்து அதையே உங்கள் பிரியாவிடை ஆக்கிக்கொண்டு விட்டீர்கள். உங்களுக்கென் செவ்வணக்கம்!

- தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆசிரியர், தமிழ்த் தேசம்