இஸ்லாமியச் சமூகம் குறித்து எழுதும் இஸ்லாமியரல்லாதோர், சில சமயம் இஸ்லாமியர்களும்கூட ‘அது ஒரு இறுக்கமான வாழ்க்கை முறையைக் கொண்ட சமூகம்’ என்று அடையாளப்படுத்துவர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்தே தனக்கான இருப்பை இம்மண்ணில் அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சிக்கும் இச்சமயம் குறித்தும் இம்மக்கள் பண்பாடு குறித்தும் மிக மேலோட்டமான புரிதலே இருந்து வருகின்றது. மற்ற சமூகத்தவர் எவரும் எளிதில் உள்புக முடியாத அளவிற்கு இஸ்லாமியச் சமூகத்தை வேறுபடுத்திக் காட்டுவது எது என்ற கேள்விக் கான விடையை / தருக்கத்தை அம்மக்கள் பண்பாட்டிற்குள்ளிருந்தே தேட முடியும். இத்தகைய சூழலில் இஸ்லாமியப் புனைகதை வாசிப்பு என்பது அம்மக்கள் பற்றிய புரிதலை ஏற்படுத்த வேண்டும். மாறாக, அச்சமூகத்தின் மீது பல்வேறு கேள்விகளை எழுப்புவதற்கான களமாக இப்புனைகதைகள் விளங்குகின்றன.

1885 ஆம் ஆண்டு சித்தி லெப்பை என்பவரால் எழுதப்பட்ட ‘அசன்பே சரித்திரம்’ என்னும் நாவலிலிருந்தே இஸ்லாமிய நாவல் வரலாறு தொடங்குகிறது. ஆரம்ப கால இஸ்லாமிய நாவல்கள் பிரச்சார தொனியிலானவை. 1940களில் வரலாற்று நாவல்கள் பெரும்பான்மையாக எழுதப்பட்டன. 1980களுக்குப் பிறகு புனைகதைகளில் பொருண்மை சார்ந்து பல மாற்றங்கள் ஏற்பட்டன. தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ (1988) நாவலிலிருந்து இம்மாற்றத்தைக் காண முடியும். இவருடைய முதல் நாவல் கூனன் தோப்பு. இந்நாவல் அவர் எழுதி 25 ஆண்டுகள் கழித்தே (1993) வெளிவந்தது. முகம்மது மீரானின் நான்கு நாவல்களும் இவரின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்ட, தேங்காய்பட்டணம் பகுதியைக் களமாகக் கொண்டவை. ஆளுர் ஜலால், ஜே.எம்.சாலி, கருணை மணாளன், புன்னியாமீன் அப்துல் ஸமது, ஜுனைதா ஷெரீப், சல்மா, மீரான் மைதீன், ஜாகிர் ராஜா, அர்ஷியா என்று புனைகதையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் இனம், மதம், சாதி என்று ஏதோ ஒருவகையில் ‘ஒடுக்குமுறை’ என்பது நிகழ்ந்தேறிக் கொண்டேயிருக்கின்றது. இஸ்லாமியச் சமூகத்திற்குள் உயர்வு  X தாழ்வு மதிப்பீடு என்பது பொருளாதார அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றது என்ற கருத்தைத் தோப்பில் முகம்மது மீரான் முன்வைக்கின்றார். உயர்ந்த அந்தஸ்து உடையவர்களாகக் காட்டப்படும் முதலாளி வர்க்கத்தினர் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடையும்போது அலட்சியப்படுத்தப்படுகின்றனர்; என்றாலும் அவர்கள் மீதான மதிப்பீடு எந்த வகையிலும் தளர்ந்து போவதாகத் தெரியவில்லை. ‘கடலோர கிராமத்தின் கதை’யில் அகமது கண்ணு, ஜாகிர் ராஜாவின் ‘துருக்கித் தொப்பி’யில் (2008) கேபிஷே ஆகியோர் பொருளாதார வீழ்ச்சி அடைந்தாலும் முதலாளிகளாகவே உள்ளனர். தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன் பொருளாதார முன்னேற்றம் காண்பதன் மூலம் உயர் மதிப்பைப் பெறுகிறான் என்று முகம்மது மீரான் நாவல் குறிப்பிடுகின்றது. ஆனால் ஜுனைதா ஷெரீபின் ‘மூன்றாம் பிறை’ நாவலிலும் அப்துல் ஸமதின் ‘பனிமலர்’ நாவலிலும் கல்வி / பதவியில் முன்னேறி வந்தாலும் குடும்பத் தொழிலைச் சொல்லிக் கேவலப்படுத்தும் நடைமுறைகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. எனவே, பொருளாதாரம்தான் இந்த உயர்வு X தாழ்வு மதிப்பீட்டிற்குக் காரணமா என்ற கேள்வி எழுகிறது. எனில் யார் இந்த முதலாளிகள்? அவர்களின் கீழ் வேலை செய்யும் தொழிலாளிகள் யார்? என்பதைக் காணவேண்டும்.

ஒரு கடலோர கிராமத்தின் கதையில் முதலாளியாக வரும் அகமது கண்ணு ஊர்த் தலைவராக, பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவராக அதிகாரம் செலுத்துபவர். ‘’துருக்கித் தொப்பி’யில் வரும் கே.பி.ஷே ஊரில் வரும் பிரச்சனைகளுக்குத் தீர்ப்பு சொல்லும் நாட்டாமையாகக் காட்டப்படுகிறார். ‘துறைமுகம்’ (1991) நாவலில் ஒரு பிரச்சினையைப் பேசி முடிவெடுப்பதற்காகப் பள்ளிவாசலில் ஜமாத் கூடுகிறது. ‘குடும்பக்காரெல்லாம் நில்லுங்கோ மத்தவங்க போங்கோ’ என்று அறிக்கை விடப்படுகிறது. அதனைத் தொடர்த்து ‘பொருள் வசதி படைத்தவர்களும் நிலங்களுக்குத் தீர்வை செலுத்துவோருமான வெள்ளை நிறத் தோற்றமுள்ள முதலாளிகள் வலிய பள்ளியின் ஹாலில் எஞ்சினர்’ என்று குறிப்பிடுவதன் மூலம் ஜமாத்தின் அங்கமாக இருப்பவர்களும் தலைமை அதிகாரம் கொண்டவர்களும் யார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. இம்முதலாளிகள் ஜமாத் தலைவர்கள் என்பதால் சமய அடையாளத்தோடு கூடிய அதிகாரத்தில் இயங்குபவர்களாக உள்ளனர். எனவே இவர்களை ஏற்க மறுப்பது / எதிர்ப்பது ஜமாத்தை நிராகரிப்பதாகவும் அதுவே சமயத்தை நிராகரிப்பதாகவும் ஆகிவிடுகிறது. “முதலாளியை மதிக்காதவன் உண்மை முஸ்லிம் அல்ல” என்று கூறி முதலாளியை எதிர்த்ததற்காக மஹ்மூது தண்டிக்கப்படுகிறான். அவனுடைய சந்தோஷ / துக்க காரியங்களில் ஜமாத் கலந்துகொள்ளாது என்று மதரீதியான தண்டனை வழங்கப்படுகின்றது. இவ்வாறு ஜமாத்தை எதிர்த்த காரணத்தால் ஊர் விலக்கம் பெறுவது, சமய விலக்கம் பெறுவது போன்ற பல சம்பவங்கள் இன்றளவும் நடக்காமல் இல்லை.

ஊர்த்தலைவர்களின் அதிகாரத்திற்குச் சமயத் தலைவர்கள் பக்க பலமாக உள்ளனர். நேரடியாகச் செலுத்த முடியாத ஆளுமையைச் சமயத் தலைவர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்கின்றனர். மக்களின் மனநிலையை மதம் சார்ந்த நம்பிக்கையின் மூலம் கட்டுப்படுத்துகின்றனர். வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகை முடிந்து நடக்கும் மத போதனைக் கருத்துக்கள் பெரும்பாலும் நரகத்தைப் பற்றிய பயத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அந்த பயமே சமய நம்பிக்கையை வலுவூட்டக் கூடிய காரணியாக மாற்றப்படுகிறது. சமய நம்பிக்கை வலுப்படும்போது மத போதகர்கள் மீதான மதிப்பீடு உயர்கின்றது. இந்தச் சூழலை முதலாளிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இஸ்லாமியச் சமூகத்தில் காணப்படும் படி நிலைகளைப் பொருளாதார அடிப்படையில் கட்டமைக்கும் தோப்பில் முகம்மது மீரான் ஒருபுறமிருக்க வேறு ஒரு உலகைப் படம்பிடித்துக் காட்டுகின்றார் ஜாகிர் ராஜா. இவரின் ‘மீன்காரத்தெரு’ (2006) நாவலில் வரும் பங்களா தெரு மக்கள், ‘துருக்கித் தொப்பி’ நாவலில் வரும் வடக்குத் தெரு மக்கள் உயர்சாதி இசுலாமியர்களாகவும் அவர்களுக்குப் பணிவிடை செய்பவர்கள் தாழ்ந்த சாதி இஸ்லாமியர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். இதனை, “மீன்காரத் தெருக்காரர்கள், ஆட்டுக்கறி சாப்பிடும் ராவுத்தர்கள், மாட்டுக்கறி சாப்பிடும் லெப்பைகள் அவர்களுக்குள்ளிருக்கும் மேல்-கீழ் மனோபாவம் பற்றி உள்ளார்ந்த வலியுடன் பேசுகிறார்” என்று ஜாகிர் ராஜா நாவல்களின் உயிர் நாடியை விளக்குகிறார் நாஞ்சில் நாடன் (2008:8). இசுலாமியர்களில் ராவுத்தர்கள், மரைக்காயர்கள் அதன் கீழ் லெப்பைகள் அதற்கும் கீழ் ஒசாக்கள் (நாவிதர்), வண்ணார், மீன்பிடி தொழில் செய்வோர், துப்புரவு தொழில், நெசவு, கசாப்புக் கடை வியாபாரம், தர்காக்களில் வாழும் முஸாபர்கள் என்று சாதி வாரியாகப் பிரிந்து கிடக்கின்ற சமூகத்தை அடையாளம் காட்டுகிறார். மேல் வர்க்கத்தினரின் பொருளாதார, பாலியல் சுரண்டல்களையே கதைக்கருவாகக் கொண்டவை இவரது நாவல்கள்.

மீன்காரத் தெரு நாவல் பற்றிக் கூறும்போது, “அடித்தள முஸ்லிம்களைக் கலாச்சார ரீதியாக ஒடுக்குமுறை செய்யும் வைதீக மனோபாவம் கொண்ட முஸ்லிம் குடும்பங்கள் கதைப் பிரதிக்குள் நடமாடும் அதே வேளையில் நாசுவர், பறையர், சக்கிலியர், குறவர் சமுதாயங்களைக் கீழானதாகப் பார்க்கும் நைனாவின் கதாபாத்திர அணுகுமுறையும் தனது பாலியல் அதிகாரச் செயல்பாட்டிற்கு இப்பெண்களைப் பயன்படுத்த முனையும் வேகம் கொண்டதாகவும் இக்கதைப் பிரதிகளின் இரண்டாம் அர்த்த உருவாக்கம் நிகழ்ந்துள்ளது.” (2007:305) என்று ஹெச்.ஜி.ரசூல் குறிப்பிடுவதன் மூலம் ஒடுக்கப்படும் சாதிகளும் வேறு சூழலில் ஒடுக்கும் சாதியாக விளங்குகின்றது என்பதை விளக்குகின்றார்.

ஜாகிர் ராஜா அடையாளப்படுத்தும் இச்சாதியக் கட்டமைப்பு இஸ்லாமியச் சமூகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது என்ற கேள்வி எழக் கூடும். இந்தியாவில் உள்ள மதத் தலைவர்கள் பலர் சாதிய அமைப்பிற்குத் தவறாக இஸ்லாமியத்தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மத ரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்துகின்றனர் என்கிறார் மசூது ஆலம் பலாஹி (2007:5). இந்திய அரசவைகளில் இருந்த மதத் தலைவர்கள் கீழ்சாதி மக்களின் குழந்தைகள், தன் முன்னோரின் பரம்பரைத் தொழிலையே பார்க்க வேண்டும் என்று கூறினர். தம் பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க முயன்றால் தண்டனை வழங்கப்படும் என்று வலியுறுத்தினர். குர் ஆன், தொழுகை, நோன்பு ஆகிய அடிப்படைகளைத் தவிர அம்மக்கள் வேறு எதையும் பெற்று விடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர்.

“சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூபி மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல் சாதி முஸ்லிம்கள் உணவருந்தக் கூடாது என்று வலியுறுத்தினார்” (2007:8-9). தீண்டத்தகாத சாதிகளிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறியவர்கள் பள்ளி வாசலுக்குள் நுழையவோ, பொது மையவாடியைப் (இடுகாடு) பயன்படுத்தவோ முடியாதபடிக்குத் தடை செய்யப்பட்டனர். கடலோர கிராமத்தின் கதையில் இதைப் பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதியை மற்ற மக்களின் குடியிருப்புகளில் இருந்து பிரிக்கக் குத்துக்கல் நாட்டப்பட்டிருந்தது. இக்கல்லுக்குக் கிழக்கே உள்ளவர்களுக்கான குளத்துப் பள்ளி வாசலில் மேட்டுக்குடி மக்கள் கால்வைப்பதில்லை. எனவே தங்களுக்கெனத் தனி பள்ளிவாசல் கட்டியிருந்தனர். ஆனால் இவர்கள் பொதுப் பள்ளிவாசலில் தொழுவதை யாராலும் தடுக்க முடியவில்லை என்பதாக நாவல் சித்திரிக்கின்றது. வட இந்தியப் பகுதியில் உள்ள ஒடுக்குமுறை குறித்து மசூது ஆலம் பலாஹி விரிவாகப் பேசியுள்ளார். தென் பகுதியில் தமிழகத்தில் காணப்படும் ஒடுக்குமுறை குறித்து மீரான் மைதீன், ஜாகிர் ராஜா நாவல்கள் விளக்குகின்றன.

இஸ்லாமியச் சமூகத்தில் காணப்படும் இந்தப் படிநிலைகளுக்கு இந்தியச் சாதி மனோபாவமே காரணம் என்று கூற நிறையவே இடம் உள்ளது. ஆனால் இந்திய முஸ்லிம் பண்பாட்டு ஆய்வாளர் யோகிந்தர் சிக்கந்த் தெற்காசிய முஸ்லிம் சமூகங்களில் இந்தியா மட்டுமின்றி பாகிஸ்தான், வங்காள நாடுகளிலும் சாதீயக் கட்டமைப்பு உள்ளதாகக் குறிப்பிடுகிறார். (2008:2) அரபு நாடுகளிலும் இன அடிப்படையிலான படிநிலைகள் காணப்படுகின்றன. எனவே, ஏற்கனவே உள்ள படிநிலை அமைப்பு இந்தியப் பகுதியில் நுழையும் போது இங்குள்ள சாதியச் சூழலுடன் எளிதில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது.

கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் அரபு நாட்டில் வாழ்ந்த முகம்மது இப்னு அப்துல் வகாபின் பெயரால் உருவானது ‘வகாபிசம்’. வகாபியக் கொள்கை திருக்குர்ஆன் மற்றும் நபி மொழி தொகுப்பான ஹதீதுகளையும் மட்டும் அடிப்படையாகக் கொண்டது. சவுதி அரேபியாவில் இஸ்லாமிய சமயம் வேறு கலாச்சார உள்வாங்கல்களாலும் சூபியச் சிந்தனைகளாலும் தீட்டுப்பட்டுவிட்டது என்று கூறி அதற்கெதிரான செயல்களில் இவ்வியக்கம் ஈடுபட்டது. தூய்மைவாதம் பேசும் இவர்கள் தர்கா பண்பாட்டிற்கு எதிரானவர்கள். அடக்கத்தலங்களை மையப்படுத்தி வழிபாடு செய்வது அல்லாவுக்கு இணை வைப்பது என்று கூறி நபிகளாரின் மகளுடைய அடக்கத்தலத்தையும் வேறு பலருடைய அடக்கத் தலங்களையும் இடித்துத் தகர்த்தனர். இந்தியாவிற்குள்ளும் இவ்வியக்கம் பரவியது. தூய்மைவாதக் கொள்கையான வகாபியம் இங்குள்ள பிராமணீயத்தோடு சேர்த்து அடையாளம் காணப்பட்டது.

இஸ்லாமிய அடித்தள மக்களின் பண்பாட்டுச் சின்னமாகத் தர்காக்கள் தோற்றம் பெறுவதை ஜாகிர் ராஜாவின் மீன்காரத்தெரு விளக்குகின்றது. இங்குள்ள சிறுதெய்வ வழிபாட்டிற்கான மதிப்பீட்டைத் தர்கா கலாச்சாரத்தோடு சேர்த்துக் காணமுடியும். இந்த அடக்கத் தலங்களைப் புனிதச் சின்னங்களாக ஒரு சிலர் கருதுவதும் வேறு சிலர் அதற்கு முரண்படுவதும் ஒருபுறமிருக்க இவை இரண்டிற்கும் இடையில் அடக்கத் தலங்களை/தர்காக்களை வியாபார தலங்களாக மாற்றுவோரும் உள்ளனர். மீன்காரத் தெருவில் மேல் சாதியினரால் மறுக்கப்பட்ட வள்ளி என்கிற ஒடுக்கப்பட்ட பெண்ணின் அடக்கத்தலம், வள்ளிபீவியின் கபுறாக உருவாகும் சூழலும் ஒரு கடலோர கிராமத்தின் கதையில் ‘ஸையிதினி முகம்மது முஸ்தபா இம்பிச்சி கோயா தங்ஙன்’ பள்ளிவாசல் உருவாக்கப் படும் சூழலும் முற்றிலும் வேறானவை. அஸனார் லெப்பை என்பவர் தன்னுடைய பிழைப்புக்காக ஸையதினா முகம்மது தங்ஙள் மீது அதீத சக்திகளைப் புனைந்து அவர் பேரில் பள்ளிவாசலையும் கூடவே பச்சைத் துணி போர்த்தப்பட்ட உண்டியலையும் உருவாக்குகிறார். இஸ்லாமிய நாவல்கள் தர்காக்களின் உருவாக்கத்தை இந்த இரண்டு அடிப்படைகளிலும் படம் பிடித்துக் காட்டுகின்றன.

வாழ்க்கை முறையை வடிவமைப்பதில் பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. பெரும்பாலான இஸ்லாமியர்களின் பொருளாதாரச் சூழல் வெளிநாட்டு வேலைகளை நம்பியுள்ளன. ஆரம்ப காலத்தில் பொருளாதாரத் தேவையாகக் கருதப்பட்ட நிலைமாறிப் பின்பு தகுதியாகக் கருதப்பட்டது. ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்பது இன்றளவும் பெரிய அந்தஸ்தாகக் கூறப்படுகின்றது. மீரான் மைதீனின் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ (2003) இந்த வெளிநாட்டு மோகத்தின் முகத்திரையைக் கிழித்தெறிகின்றது. அரபு நாட்டு விசாவிற்காக வாழ்வை அடமானம் வைத்தும் மனதிற்கு ஒவ்வாத செயல்களில் ஈடுபட்டும் வாழ்வில் ஏமாற்றங்களும் அவமானங்களும் மட்டுமே மிஞ்சிப் போவதாகக் குறிப்பிடுகின்றார். ஊர் அமைப்புகளைப் பற்றிப் பேசும்போது சாதிவாரிக் குடியிருப்புகளை விளக்குகின்றார். வெளியூர் வேலைகளுக்குச் செல்வது குடும்ப விரிசல்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஜாகிர் ராஜாவின் துருக்கி தொப்பி நாவல் குறிப்பிடுகின்றது. வெளிநாடுகளுக்குச் சென்று வேலைசெய்பவர்கள் பணம் விளைவிக்கும் இயந்திரமாகக் கருதப்படுகின்றனர். விடுமுறைக் காலத்து வாழும் அவசர வாழ்க்கை ஏற்படுத்துக்கின்ற அதிருப்தியும் நாவல்களில் பேசப்படுகின்றது. வெளிநாட்டு வாழ்க்கைக் குறித்து நாகூர் ரூமியின் கப்பலுக்குப் போன மச்சான் (2002) நாவலும் விளக்குகின்றது.

வெளிநாடுகளுக்குச் சென்று வேலை செய்யப் பொருளாதாரம் ஒரு காரணமாக இருந்தாலும் அதற்குள் கல்வி குறித்த உரையாடலும் உள்ளது. கல்வி என்பது அறிவு சார்ந்த தேவையாக இருந்தாலும் பொருளாதாரத் தேவையை நிறைவு செய்வதில் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகின்றது. இந்தத் தேவை இஸ்லாமியர்கள் வாழ்வில் வேறு வகையில் நிறைவு செய்யப்பட்டது. உயர்கல்வி கற்பதற்கு முன்பாகவே வெளிநாட்டு வேலைகளில் அமர்த்தப்படுகின்றனர். பத்தாம் வகுப்பு வரை படித்த இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த சதவிகிதத்திலேயே காணப்பட்டதாகச் சிறுபான்மைக் குழு 1990களில் அறிக்கை வெளியிட்டது. ஆங்கிலக் கல்வியை இஸ்லாமியர்கள் மறுத்ததற்கு வேறு பல காரணங்களும் உள்ளன.

1857இல் சிப்பாய் புரட்சியில் முஸ்லிம்கள் பங்கேற்றதற்காய் வட இந்திய முஸ்லிம்களின் பொருளாதாரம் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. 1857இல் டில்லியிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 1859 வரை அனுமதிக்கப்படவில்லை. சிப்பாய் கலகத்திற்கு உதவிய காரணத்திற்காகத் தன் சொத்தில் 35% தண்டமாகப் பெற்ற பின்பே பிரிடிஷ் அரசாங்கம் அவர்களை அனுமதித்தது. கிலாபத் கிளர்ச்சியின்போது நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். இதில் கைது செய்யப்பட்டவர்கள் திருச்சூரிலிருந்து கோயம்புத்துருக்குச் சரக்கு இரயிலில் காற்று புக முடியாத பெட்டியில் அடைக்கப்பட்டு மூச்சுத் திணறி 55 இஸ்லாமியர்கள் இறந்ததாக தி. இண்டிபெண்டன்ட் பத்திரிக்கை 1921 செப்டம்பர் ஒன்றாம் தேதியில் அறிக்கை வெளியிட்டது. இவை போன்ற அடக்குமுறைகள் பிரிடிஷ் மீதான வெறுப்பிற்குக் காரணமாகியது. அவை மொழி மீதும் ஆங்கில கலாச்சாரத்தின் மீதும் பிரதிபலித்தன. இவைதான் காரணம் என்பதைவிட இஸ்லாமிய கிறித்தவர் முரண்பாடு ஆரம்பகால வரலாறுகளிலேயே காணப்பட்டவைதான். நேரடியான பாதிப்புகள் அதன் வீரியத்தை அதிகரிக்கச் செய்தன. எனவே ஆங்கிலேயர் சமயமும் அவர் மொழியும் ஹராம் (விலக்கப்பட்டது) என்று கருதப்பட்டது. ஆங்கிலேயக் கல்விக்கு எதிராக இஸ்லாமியர்கள் செயல்பட்டதை ஒரு கடலோர கிராமத்தின் கதையும் துறைமுகம் நாவலும் விளக்குகின்றன. ஆங்கிலக் கல்வியை எதிர்த்த இஸ்லாமியர்கள் யார் என்பதைக் காணும் போது அதற்குள் நிகழ்ந்த வேறு ஒரு அரசியல் பிடிபடுகின்றது.

ஆங்கிலக் கல்வி அனைவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டது. இதனால் தொழிலாளியாக இருப்பவர்கள் விழிப்படைகின்றனர் என்று முதலாளிகள் கருதினர். எனவே ஆங்கிலக் கல்விக்கு எதிராகக் கொடி பிடிப்பது என்பதைவிட முதலாளிகளின் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக இதனைப் பார்க்கலாம். “இங்கிலீசு படிச்சா ஜஹன்னம் என்கிற நரகத்திலே போவோம்” (ஒரு கடலோர கிராமத்தின் கதை: ப:87 ) என்று மதத்தை இதற்கு ஆயுதமாகப் பயன்படுத்தினர். ஆனால் ஆங்கிலக் கல்வி தனக்கான விடுதலைக்கு வழி வகுக்கும் என்று அடித்தள மக்கள் பிரதிநிதியாக மஹ்மூது சித்திரிக்கப்படுகிறான். துறைமுகம் நாவலும் இச்சிக்கல்களை விளக்குகின்றது. நவீனக்கல்வி ஒடுக்குமுறைக்கு எதிரான ஆயுதம் என்பதை, புன்னியாமீனின் அடி வானத்து ஒளிர்வுகள், ஜுனைதா ஷெரீபின் சரித்திரம் தொடர்கிறது, மூன்றாம் பிறை, அப்துல் ஸமதுவின் பனிமலர் ஆகிய நாவல்களும் குறிப்பிடுகின்றன.

இறுக்கமான வாழ்வைக் கொண்டுள்ள இஸ்லாமியச் சமூகத்திற்குள் ‘பெண்கள்’ பற்றிய மிக நீண்ட உரையாடலை வெளிப்படையாகப் பதிவு செய்ததில் சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் (2004) முக்கியப் பங்கு வகிக்கின்றது. அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது விசையுடன் வெளிப்படும் என்பதை நாவல் முழுவதும் காணலாம். ‘பேச்சு சுதந்திரம்’ என்பது பாலியல் பேச்சுக்களை வெளிப்படையாகப் பேசுவதாகவும் அதிலும் ஆண்களின் உடல் உறுப்புக்களைக் கேலி செய்வதன்மூலம் திருப்தி அடைவதாகவும் காட்டப்பட்டுள்ளது.

(வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரனே! வேலிக்கு அடியில் நழுவும் என்வேர்களை என்ன செய்வாய்?)

என்னும் அப்துல் ரகுமானின் கவிதையை இந்நாவல் நினைவு கூர்கிறது. பெண் சுதந்திரம் என்பது பாலியல் தாண்டிப் பல்வேறு தளங்களைக் கடக்க வேண்டியுள்ளது.

பெண்களின் மீதான உழைப்புச் சுரண்டலையும் பாலியல் ரீதியான உடல் சுரண்டலையும் குறித்துப் பல நாவல்கள் பேசுகின்றன. அதற்குப் பெண்களே உறுதுணையாக உள்ளனர் என்பதை ‘மீன்காரத் தெரு’ நாவல் சுட்டிக்காட்டுகின்றது. பங்களாத் தெருவிற்குப் பெண்களை ஏற்பாடு செய்யும் ரமீஜா என்னும் கதை மாந்தர் வழி இதனை விளக்குகின்றார்.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று தனது சொத்தைச் சமமாகப் பிரித்து ஒரு பங்கைத் தன் மகளுக்கும் மற்ற பங்கை ஏழாகப் பிரித்து 7 ஆண்களுக்கும் கொடுப்பதாக உருவாகும் ‘ஏழரைப் பங்காளி’ (7+ஙூ பங்காளி) வகையறா நாவல் உருது முஸ்லிம்கள் பற்றிய முதல் நாவலாகக் கூறப்படுகின்றது.

பெண் சொத்துரிமை அடிப்படையில் உருவான ஏழரைப் பங்காளி வகையறாவில் பிந்தைய தலைமுறையில் அதைப் பற்றிய குரல் எழுப்பவே இல்லை. ஆணின் ஊதாரித்தனத்திற்குப் பலியாகும் பெண்கள், கைவிடப்பட்ட பெண்கள், அனாதைகள் முதலியோருக்கு ‘தர்கா’ அடைக்கலம் தரும் இடமாக உள்ளதைக் குறிப்பிட்டுள்ளார் எஸ்.அர்ஷியா. இஸ்லாமியச் சமூகத்திலிருந்து வெளி உலகில் சுதந்திரமாக, சஞ்சரிக்கும் ‘அலிமா’ என்னும் கதை மாந்தரை மையமாகக் கொண்டது ஜாகிர் ராஜாவின் வடக்கே முறி அலிமா. விளிம்பு நிலைப் பாத்திரங்களை மையமாக்கும் ஜாகிர் ராஜாவின் நாவலில் மனநிலை பிறழ்ந்த பெண்ணாக அலிமா உலவி வருகிறாள். ‘வாழ்க்கை உன்னை ஏன் இப்படி அலைக்கழிக்கின்றது, அல்லது வாழ்க்கையை நீ பழிவாங்குகிறாயா’ என்று அலிமாவை நோக்கி கேட்கப்படும் ஒரே கேள்வியில் கதையைக் கூறிவிட முடியும். அலிமாவை மனநிலை பிறழ்ந்தவளாகக் கொள்வதைவிடக் கட்டுப்பாடுகளை மீறித் தான் நினைப்பதை மிக எதார்த்தமாக வெளிப்படுத்தும் தன்மைகொண்டவளாகப் புரிந்துகொள்ளலாம்.

‘பத்து வயசு சென்டா பறையண்ட கைலயாலும் பிடிச்சு குடு, ஏனென்டா பருவமான பெண்ணை வச்சிக்கிறது அவ்வளவு பாவம்’ (பனிமலர் : 62-63) என்று சாதியைக் காட்டிலும் பெண்ணின் கற்பு பாதுகாக்கப்படக் கூடிய ஒன்றாகக் காட்டப்பட்டுள்ளது. மீன்காரத் தெரு நாவலில் வேறு சாதி ஆண்களைவிட இஸ்லாமானவன்கிட்ட போயிக்கலாம் என்கிற தொனி மேலிடுகிறது.

இஸ்லாமியத்தில் இல்லாத வரதட்சணைப் பழக்கம் குறித்துப் பெரும்பாலான நாவல்கள் பேசுகின்றன. ஜுனைதா ஷெரீபின் காட்டில் எரிந்த நிலா, சாணைக் கூறை, அவளுக்கும் ஓர் இதயம், மூன்றாம் பிறை, ஜே.எம்.சாலியின் பணவிலங்கு, ஹிமானா சையதின் புயலில் ஒரு பூ, பசுமைப் பூக்கள், கருணை மணாளனின் வெள்ளை ரோஜா, மாமியார் முதலிய நாவல்கள் குறிப்பிடத்தக்கன.

இஸ்லாமியச் சமூகத்துப் பெண்கள் என்னும் போதே நினைவுக்கு வருவது ‘பர்தா’. முகத்திரையிடுதல் மற்றும் பர்தா முறை குறித்து எந்தவித குறிப்பையும் திருக்குர்ஆனில் காணமுடிவதில்லை (ஹெச். ஜி. ரசூல்: 2006:17) இதைக் குறித்து குர்ஆனில் கூறப்பட்டதாவது, “நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும். அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக்கட்டும். தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும். அதிலிருந்து தாமாக தெரிகின்றவற்றைத் தவிர மேலும் தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முந்தானையைப் போட்டுக் கொள்ளட்டும். (அந்நூர் அத்தியாயம் 24: வசனம் 31)” (மேலது). அரபு நாட்டில் பழங்குடி இன மக்கள் மேலாடை அணியும் வழக்கமற்றிருந்தனர். இந்நிலையில் உடல் முழுவதும் ஆடை அணிதல் ஒழுக்க விதியாகவும் உரிமை குறித்த பிரச்சனையாகவும் பேசப்பட்டதாக “இஸ்லாமியப் பெண்ணியம்” என்னும் நூலில் ஹெச். ஜி. ரசூல் குறிப்பிடுகின்றார். எனவே எந்த ஒரு விதியும் / ஒழுக்கமும் எத்தகைய சூழலில் உருவாக்கப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்த புரிதலின்றிச் சடங்காகச் சிலவற்றைப் பின்பற்றுகின்ற சூழல் உள்ளது. இஸ்லாமியப் புனைகதைகளில் பெண் ஆடைக் கலாச்சாரம் குறித்து விரிவாகப் பேசப்படவில்லையெனினும் ஆங்காங்கே காணமுடிகிறது. பெரும்பாலான பெண் கதைமாந்தர்கள் பர்தாக்கள் இல்லாமலேயே உலவி வருகின்றனர்.

பெண்குறித்த அடிப்படைச் சட்டங்கள் ஒன்றாக இருக்க அவை நடைமுறையில் ஆணாதிக்க/அதிகார மையத்திற்குள் வரும்போது வேறு வகையாக அர்த்தப்படுகின்றன. ஆண் சமூகத்திற்கேற்றவாறு நெகிழ்த்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வெளியுலகில் மற்ற ஆண்களிடமிருந்து முழுமையாக விலக்கப்படும் பெண்கள் தன்னுடைய சமூகத்து ஆண்களுக்குள் எவ்வாறு சஞ்சரிக்கிறாள் என்பதை இரண்டாம் ஜாமங்களின் கதை நாவல் சித்திரிக்கின்றது. திருமண விலக்கு பெற்ற பெண்கள் குறித்தும் அவர்களின் வாழ்க்கை ஒழுக்க விதிகளால் சுருக்கப்படுவதையும் விளக்குகின்றது. மேலும் இஸ்லாமியச் சமூகத்தில் ஆண்கள் வெளிநாடு செல்வதும் அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற ஆடவரோடு உறவு கொள்வது குறித்தும் இரண்டாம் ஜாமங்களின் கதையும் துருக்கி தொப்பி நாவலும் பேசுகின்றன.

பலதார மணம் என்பது போர்க் காலத்து விதவைகளாகவும் அநாதைகளாகவும் ஆக்கப்படும் பெண்களின் வாழ்க்கை நலன் கருதி உருவாக்கப்பட்ட சட்டமாகும். ஆனால் பிற்காலத்தும் அது தொடர்ந்து நடைமுறையாக்கப்பட்டது. பலதார மணமுறையும் வெளிநாட்டு வாழ்க்கையும் பெண்களை, தனிமைக் காலத்தில் சிக்கவைக்கும் சூழலை உருவாக்கின. இத்தனிமைக் காலம் இவர்களை மீறல்களுக்கு உள்ளாக்கும் என்பதாலேயே இறுக்கமான விதிகளும் மிகுந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகளும் பெண்களின் மீது சுமத்துவதற்குக் காரணமாயின என்று எண்ணத் தோன்றுகிறது. பெண்ணுக்கான சுதந்திரத்தை இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள் வழங்கினாலும் எதார்த்த வாழ்க்கை முறையில் அவை பேணப்படுவதில்லை. எனவே பெண் சுதந்திரம் என்பது குர்ஆனின் மேற்கோள்களால் மட்டுமே சாத்தியமாகிவிட முடியாது.

இஸ்லாமிய நாவல்களில் நாட்டார் வழக்காற்றுக் கூறுகள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. தொன்மக் கதைகள், வட்டார வழக்குகள், சடங்குசார் நிகழ்வுகள் என்று பலவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. உருது முஸ்லிம்களின் சடங்குகளை விரிவாகப் பேசுவதாக அர்ஷியாவின் ‘ஏழரைப் பங்காளி வகையறா’ நாவல் உள்ளது. தொன்மக் கதைகள், பேய் பற்றிய நம்பிக்கைகள் குறித்து மீரான் மைதீன் ‘ஓதி எறியப்படாத முட்டைகள்’ நாவலில் காணலாம். சமயங்களின் மீயியற்கை நிகழ்வுகள் எதை நோக்கியதாக உள்ளன? அவற்றை யார் அதிகம் பேசுகின்றனர்? என்று காணும் போது சமய போதகர்கள் கதை உருவாக்கத்திலும் (கடலோர கிராமத்தின் கதையில்) அடித்தள மக்கள் அதன் பரவலாக்கத்திலும் ஈடுபடுகின்றனர். ஜாகிர் ராஜாவின் கருத்த லெப்பை நாவலில் நாட்டார் வழக்காற்றுப் பாடல்களைப் பதிவு செய்துள்ளார்.

இத்தகைய உள்ளூர்க் கலாச்சாரங்கள் இஸ்லாமியத்தின் மைய நீரோட்டத்திலிருந்து விலகியவையாக இருந்தாலும் இஸ்லாமியப் பண்பாடாகவே இவை அடையாளப்படுத்தப் படுகின்றன / பதிவு செய்யப்படுகின்றன. இஸ்லாமிய நாவல்கள் சித்திரிக்கும் இஸ்லாமியப் பண்பாடு தூய்மைவாதத்திற்கு எதிரான பிரதேச கலாச்சார உள்வாங்குதலைக் கொண்ட மிக எதார்த்தமான மக்களின் வாழ்க்கை முறையைச் சித்திரிக்கின்றன. இவர்களின் பண்பாட்டிற்கான வேர்களைச் சுற்றியுள்ள மற்ற பண்பாட்டிலும் சேர்த்துக் கண்டடைய வேண்டியுள்ளது.

துணை நூற்பட்டியல்:

1.     பின் நவீனத்துவ வாசிப்பில் இஸ்லாம் பிரதிகள், ஹெச் ஜி. ரசூல், மருதா வெளியீடு, 2009.

2.     இஸ்லாத்தில் மனுவாதிகள், மசூது ஆலம்ஃபலாஹி அளித்த நேர்காணல், கீழைக்காற்று, 2006.

3.     இஸ்லாமியத் தமிழ்ப் புதினங்கள் சித்திரிக்கும் அறியப்படாத வாழ்வும் பண்பாடும், மு. அப்துல் சமது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004.

4.     பின் காலனிய சூழலில் அடித்தள முஸ்லிம்கள் குறித்த உரையாடல், ஹெச்.ஜி.ரசூல், puthuvisai.com/ja08/rasool.php

5.     அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய ஏழாம் மாநாடு, ஆய்வுக் கோவை, அப்துல் ரகுமான் (தொகு), இஸ்லாமிய இலக்கியக் கழகம், 2007.

6.     கருத்த லெப்பை, ஜாகிர் ராஜா, மருதா வெளியீடு, 2007.

7.     வடக்கே முறி அலிமா, ஜாகிர் ராஜா, மருதா வெளியீடு,2009.

8.     ஒரு கடலோர கிராமத்தின் கதை, தோப்பில் முகம்மது மீரான், காலச்சுவடு பதிப்பகம், 1988.

9.     இஸ்லாமியப் பெண்ணியம், ஹெக். ஜி.ரசூல், பாரதி புத்தகாலயம், 2006. 

(கட்டுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறை முனைவர் பட்ட ஆய்வாளர். மானுடவியல் கோட்பாட்டுப் பின்னணியில் சங்க இலக்கிய ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.)

Pin It