காஷ்மீர் பிரச்சனை மீது டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளரும், மனித உரிமைப் போராளியுமான அருந்ததி ராய் தெரிவித்த கருத்துக்களுக்காக அவரது இல்லத்தின் மீது மதவாத அரசியல் கட்சியான பாரதிய ஜனதாவின் மகிளர் பிரிவினர் நடத்திய தாக்குதல், நாடு தழுவிய அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.

காஷ்மீர் பிரச்சனையை மட்டுமல்ல, இந்த நாட்டை ஆளும் கூட்டணியும் அதனை எதிர்த்து அரசியல் நடத்துவதாகக் கூறிக் கொள்ளும் பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சிகளும், அரசுடன் சேர்ந்து தாங்கள் நடத்தும் கூட்டுக் கொள்ளைகள் இந்த நாட்டு மக்களுக்கு தெரிவிடக் கூடாது என்று மிகப் பிரயாசைப்பட்டுக் காக்கின்றன. எனவே அவர்கள் மறைக்க நினைக்கும் அந்த உண்மைகளை அருந்ததி ராய் தனது வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது கோபமடைவதும், வெறி கொண்டு அறிக்கைத் தாக்குதல் நடத்துவதும், அவர் மீது தேசத் துரோகக் குற்றச்சாட்டு சுமத்துவதும் புதியதல்ல. ஆயினும் இந்த முறை சற்று எல்லைத் தாண்டி ஆங்கில ஊடகங்களின் "ஆத்மார்த்த' ஆதரவுடன் அவரது இல்லத்தைத் தாக்கி தங்கள் வெறியை தீர்த்துக் கொண்டுள்ளன.

அருந்ததி ராய் இல்லத்தைத் தாக்கியதற்கு இந்த "தேசப் பற்றாளர்கள்' கூறிய காரணம் இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராக அருந்ததிராய் பேசிவிட்டார் என்பது. அவர்களுடைய குற்றச்சாட்டுக்கு மிக ஆழமாக பதிலளித்து ஒரு அறிக்கை வெளியிட்ட அருந்ததிராய், “எனது பேச்சை அக்கறையுடன் படிக்கும் எவரும் அது அடிப்படையில் நீதியைக் கேட்டு விடுக்கப்பட்ட குரல் என்பதை புரிந்து கொள்வர்'' என்று கூறினார். மக்களின் பிரச்சனைகளை மானுடத்தின் பிரச்சனைகளாகப் பார்த்து, அதன் ஆழங்களை ஆராய்ந்து எழுதும் உண்மையான எழுத்தாளரின் அற்புதமான விளக்கம் இது.  ஆனால், இந்த மதவாத தேசப் பற்றாளர்களும் தேசத்தின் ஒற்றுமையின் பேரால் தேசத்தின் பல பகுதி மக்களை, முன்னேற்றத்தின் பெயரால் அன்றாடம் கொன்று குவித்துவரும் ஆளும் கூட்டணியின் தலைமை வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் அருந்ததிராய் எழுப்பிய நியாயத்தின் குரல் புரியவில்லை. புரியப் போவதும் இல்லை. எருதின் புண்ணை என்றாவது காக்கை உணர்ந்ததுண்டா? ஆயினும் "தேசத் துரோக' வழக்குப் போடுவது குறித்து பல நாள் ஆலோசித்த காங்கிரஸ் தலைமை. அதுவே காஷ்மீர் பிரச்சனையின் உண்மை அடிப்படையை நாட்டு மக்களுக்கு நன்கு புரிந்து கொள்ள வாய்ப்பாகி விடுமோ என்ற அச்சத்தி னால், வழக்குப் போடுவதில்லை என்ற முடிவிற்கு வந்தது. அந்த முடிவிற்கு கருத்துச் சுதந்திரத்தையே காரணமாகவும் காட்டியதுதான் வினோதம்!

காஷ்மீரிகள் அஜாதி என்று முழங்குவதேன்?

ஆக தங்களின் போலியான தேச பற்றின் பேரால் வன் செயல்களில் முழு நம்பிக்கைக் கொண்ட மதவாத கட்சியான பாரதிய ஜனதாவும், கருத்துரிமையைக் காப்பதற்காக வழக்குத் தொடரவில்லை என்று காரணம் கூறிய மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கும் காங்கிரசும் ஒரு விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன. அது காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக அருந்ததி ராய் பேசிய உண்மை நாட்டு மக்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதில்.

அருந்ததி கூறிய அந்த உண்மை இதுதான். காஷ்மீர் இன்றைக்கல்ல, என்றைக்குமே இந்தியாவின் ஒருஅங்கமாக இருந்ததில்லை என்பதே 60 ஆண்டுக் காலமாக மறைக்கப்பட்டு வந்த அந்த உண்மையே இந்த போலிகளை அச்சுறுத்தியுள்ளது.

"காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றே' என்ற ஒவ்வொரு சுதந்திர, குடியரசு நாட்களில் வீர உரையாற்றும் இந்த அரசியல் கொள்ளை கும்பல்களுக்கு காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீர் அல்லாத வேறு எந்த ஒரு இந்தியன் பேசினாலும் ஜன்னி  வந்து விடுகிறது. காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதி என்றும், "காஷ்மீரை ஒருபோதும் விட்டுத் தரமாட்டோம்' என்றும் முழங்கித் திரியும் இந்தக் கொள்ளையர்களுக்கு, காஷ்மீர் பிரச்சனை தொடர்பான உண்மைகள் இந்த நாட்டின் மற்ற மக்களுக்கும் புரிய ஆரம்பித்து விட்டால், அது தங்களின் கொள்ளை அடித்தளத்தையே அசைத்து விடும் என்று புரிந்துள்ளது. அதனால்தான் காஷ்மீர் பிரச்சனையின் அடிப்படையை அருந்ததி பேசியதும் அவர்கள் தேசப் பற்றாயுதத்தை எடுக்கிறார்கள். தேசத் துரோகச் சட்டப் பிரிவைக் காட்டி மிரட்டுகிறார்கள்.

இந்த அரசமைப்புச் சட்டத்தை அடி முதல் நுனி வரை கரைத்துக் குடித்த இந்த தேசாபிமானிகளில் யாராவது உள்துறை அமைச்சராக இருக்கும் சட்டத் தரணி ப. சிதம்பரமோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் பெரும் பேர் எடுத்த பா.ஜ.க.வின் மாநிலங்களவைத் தலைவராக இருக் கும் அருண் ஜேட்லியோ அல்லது உச்ச நீதிமன்றத்தில் ரெப்யூட்டட் வழக்கறி ஞராகத் திகழ்ந்து தற்போது ஊழல் இராசா வகித்த தொலைத் தொடர்பு அமைச்சரவைப் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுள்ள மனித வள மேம்பாட்டு அமைச்சராக இருக்கும் கபில் சிபில் ஆகியோரில் யாராவது காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக ஒரு நாளும் இருந்தது இல்லை என்று அருந்ததி பேசியதற்கு மறுப்பு தெரிவித் திருந்தால் இவர்களை குறைந்த பட்ச தேசாபிமானிகளாக கருதியிருக்கலாம். ஆனால் அரசோ அல்லது எதிர்க்கட்சியின் தலைமையோ அல்லது இப்பிரச்சனையில் மௌன விரதம் அனுஷ் டிக்கும் அதி நவீன மார்க்சியவாதிகளான சி.பி.எம்.மோ காஷ்மீரின் நிலை குறித்து விளக்கியிருந் தால் நாமும் புளங்காகிதமடைந்திருப்போம். ஆனால் ஒருவரும் அவர் வெளியிட்ட உண்மையை மறுக்கவில்லை.

இதிலிருந்து இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இன்றுவரை காஷ்மீர் இல்லையென்றாகி றதல்லவா? அப்படியானால் நாம் இந்தநாட்டிற்குள் இருந்து பாகிஸ்தானின் பிடியில் உள்ள பகுதியை எவ்வாறு பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (கச்டுடிண்tச்ண ணிஞிஞிதணீடிஞுஞீ ஓச்ண்டட்டிணூ கணிஓ) என்று குறிப்பிடு கிறோமோ அதேபோல், இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் (ஐணஞீடிச் Oஞிஞிதணீடிஞுஞீ ஓச்ண்டட்டிணூ ஐணிஓ) என்று கூறுவதற்கு இடமுள்ளதல்லவா? இதனை மறுப்பதற்கு டெல்லி அரசிடம் ஏதேனும் ஆதாரமோ, அடிப்படையோ இருக்கிறதா?

இருந்திருந்தால், காஷ்மீர் மக்களில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் பெண்கள் என்று சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் சாலைக்கு வந்து அங்கு தங்களை ஆயுதங்கள் துணை கொண்டு அடக்கமுறைக்கு உட்படுத்தி வரும் ஆட்சியாளர் களைக் கண்டித்து ஆயுதப் படையினர் மீது கல்வீசி தாக்குவார்களா? "வெளியேறு இந்தியாவே வெளியேறு' (கிதடிt ஐணஞீடிச் கிதடிt) என்ற பதாகைகளுடன் எங்களுக்குத் தேவை சுதந்திரமே என்று முழங்கு வார்களா? இந்த முழக்கம் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பத்து மாவட்டங்களிலும் எதிரொலிக்கிறதே?

இதைத்தானோ, அருந்ததிராய், “காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள் பல ஆண்டுகளா, ஒவ்வொரு நாளும் என்னகூறிக் கொண்டிருக் கின்றனரோ அதைத்தானே நான் பேசினேன்? அவர்களின் மனதைத்தானே நான் பேசினேன்' என்று கூறினார்.

அருந்ததி இவ்வாறு கூறியதற்கு, தேசப் பற்றாளர்கள் என்று தங்களை பறைசாற்றிக் கொள்ளும் அரசியல் கொள்ளையர்களின் பதிலென்ன? ஒன்றும் இல்லை. ஆனால் "அருந்ததிராயை உள்ளே தூக்கிப் போடு' என்ற முழக்கத்திற்கு மட்டும் குறைவில்லை. அதனை ஒங்கி ஒலிக்கிறார்கள். இன்று வரை ஓயவில்லை.

இப்படிப்பட்டபோலிகளைக் கண்டும், புரிந்தும், உணர்ந்தும் உள்ள இந்த தேசத்தின் மீது பச்சாதாபம் காட்டுங்கள் என்று அருந்ததி கூறினார். ஏனென்றால், "இந்த நாட்டில் சமூகப் படுகொலை நடத்துபவர்களும், கொலைகாரர்களும், பெரு நிறுவன ஊழல் முதலைகளும் கொள்ளைக்காரர்களும் கற்பழிப்பவர்களும், ஏழை எளியவர்களை இரையாகக் கொள்வோரும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஆனால், நீதி கேட்போரை “சிறையில் அடையுங்கள் என்கிறார்கள்'' என்று கூறினார்.

அருந்ததி ராய் கூறிய சமூக படுகொலை யாளர்கள்தான் பாபர் மசூதியை இடித்து மதக் கலவரத்தை ஏற்படுத்தி இந்த நாட்டில் குருதியாற்றை ஓட விட்டு குளிர் காய்ந்தவர்கள். கொலைகாரர்கள் என்று அவர் கூறியவர்கள்தான் சல்வா ஜூடும் எனும் அடியாள் படையை உருவாக்கி ஏதுமறியாத பழங்குடியினரை இன்றுவரை படுகொலை செய்துவருபவர்கள். பெரு நிறுவன ஊழல் முதலைகள் என்று அவர் கூறுவது, சாதாரண மக்களைஅவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தி விட்டு, இந்த நாட்டின் கனிம வளத்தைக் கொள்ளையடித்து தங்களை செழிப்பாக்கிக் கொண்டிருப்பவர்கள். கற்பழிப்பவர்கள் என்று அருந்ததி கூறியது வட கிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் ஆயுதப் படைகளை ஏவி, இந்த நாட்டு பெண்கள் மானத்தை சூறையாடிக் கொண்டிருப்பவர்களை, இந்நாட்டின்  ஏழை எளிய மக்களை இரையாக்கக் கொள்வோர் என்று அவர்கூறியவர்களே ஒரே ஒரு முறைகேட்டின் மூலம் ரூ.175 இலட்சம் கோடி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, தங்களை வளப்படுத்திக் கொண்ட அரசியல்வாதி களும், அவர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்த அதிகாரிகளுமாவர். இவர்களில் எவரும் நீதியைக் கேட்கவில்லை. உண்மையைப் பேசுவதில்லை. எனவே சுதந்திரமாக நடமாடுகிறார்கள். ஏனெனில் இந்தியாவின் சுதந்திரம் அவர்களுக்கான சுதந்திர மாகவே உள்ளது. அதனால்தான் இந்நாட்டின் ஒரு பகுதி மக்கள் 60ஆண்டுக் காலமாக ஆஜாதிக்குப் போராடுகின்றனர். அதனால்தான் இந்தப் பாவப்பட்ட தேசத்திற்காக அனுதாபப்படுங்கள்  என்கிறார் அருந்ததி.

தண்ட காரண்யக் காடுகளில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் பழங்குடி மக்களோடு 17 ஆண்டுக் காலம் வாழ்ந்துவரும், அவர்களோடு இணைந்து, இந்தநாட்டின் மத்திய மாநில அரசுகள் இழைத்துவரும் கொடுமைகளை பகிர்ந்து சுமந்து வரும் காந்தியவாதி ஹிமான்சு குமார் சென்னையில் நடந்த ஒரு நிகழ்வில் பேசுகையில் இவ்வாறு கூறினார்: “இந்த நாடு விடுதலைப் பெற்ற  நிலையில், தன்னைச் சந்தித்த வினோபா பாவேயிடம் மகாத்மா காந்தி கூறினார். நம்முடைய மக்களை ஜனநாயகப்படுத்தவேண்டும். அதைச் செய்யத் தவறினால், எதிர்காலத்தில் இந்தியாவில் ஒன்று பெரு நிறுவன ஜனநாயகம்  இருக்கும் அல்லது அடியாட்கள் ஜனநாயகம் நிலவும் என்றார்''. ஆனால் மகாத்மா காந்தி கூட எதிர்பார்க்கவில்லை. அவர் அஞ்சிய அந்த இரண்டும் சேர்ந்த ஜனநயகமே இந்தியாவில் நிலவப் போகிறது என்பதை தேசத்தின் ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை என்ற பெயரில் மக்கள் கொல்லப்படுகின்றனர். அதனைத் தட்டிக் கேட்கும் மனிதாபிமானிகள் தண்டிக்கப்படுகின்றனர் அல்லது சட்டத்தைக் காட்டி அச்சுறுத்தப்படுகின்றனர்.

இந்த நாட்டின் அரசியல் கட்சிகளோ அல்லது அவைகளை தங்களின் கைக்குள் போட்டுக் கொண்டு நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்துக் கொண்டி ருக்கும் பெரு நிறுவனங்களோ இவைகளின் கைப்பாவையாகவே செயல்பட்டு இந்த நாட்டை, அதன்வளத்தை கொள்ளையடிக்க வழி செய்யும் அதிகார அமைப்புகளோ நம்மை ஆச்சரியப் படுத்தவில்லை.

இவைகளோடு, ஒரு புதிய பலமான கூட்டாளி உருவாகிவருகின்றான். மக்கள் நலனைக் காக்க, ஜனநாயக மாண்புகளைக் காக்க அஞ்சாமல், துஞ்சாமல், உண்மையைப் பேசுவேன் என்று கூறிக் கொண்டு இந்த மக்களிடையே உலா வருகின்றான். அவனே இன்றைய ஊடகங்கள். இவனை அடை யாளம் காண வேண்டியதே மிக முக்கியமானதாகும்.

கருத்துச் சுதந்திரம் போர்வையைப் போர்த்திக் கொண்டு திரியும் இந்தநாட்டின் முதன்மை ஊடகங்கள், இந்த நாட்டை கொள்ளையடிக்கும் இந்த மக்களை ஒடுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் நிறுவன கூட்டணியின் ஒரு கூட்டாளியாகிவிட்டது.

அதனால்தான் காஷ்மீர் பிரச்சனையின் உண்மைகளை வெளிக் கொணர்ந்த அருந்ததியைத் தாக்க மதவாத குண்டர் படை புறப்பட்டபோது, அவர்களுக்கு முன்னர் அருந்ததி வீட்டின் முன் வந்து புகைப்படக் கருவிகளுடன் தயாராக நின்றுக் கொண்டிருந்தது. இதுவே நாட்டின் மிகப் பெரிய சாபக்கேடாகும். இந்த ஊடகங்களின் கைங்கர்யத் தால்தானே விடுதலை கேட்டுப் போராடிய ஈழத்தமிழினத்தை இனப் படுகொலை செய்து முடிக்க டெல்லி துணிவாக உதவியது. வெட்கமற்ற அந்த நடவடிக்கையை பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி, சொந்த நாட்டு மக்கள் மீதே முப்படை களையும் ஏவி விட்ட ஒரு மதவாத அரச பயங்கர வாதத்திற்கு உதவச் செய்தது. அதன் தொடர்ச்சிதானே, தண்டகாரண்யத்தில் இன்றளவும் நிகழ்கிறது.

எனவே இப்படிப்பட்டஊடகங்கள், காஷ்மீர் பிரச்சனையின் உண்மை முகத்தை அருந்ததிராய் வெளிப்படுத்தும் போது, இயல்பாகவே அஞ்சுகின்றன.

இந்தியா ஒரு விடுதலைப் பெற்ற நாடு. அதுவிடுதலைப் பெற்று 63 ஆண்டுகள் ஆகிவிட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று தன்னை மற்ற நாடுகள் குறிப்பிடும்போது பெருமையுடன் சிலிர்க்கிறது. அது உண்மையானால் இந்த நாட்டோடு இருக்க காஷ்மீர் மக்களுக்கு ஏன் கசக்கிறது?

இந்தக் கேள்விக்குப் பதில் தேடியிருந்தால் இந்த நாட்டின் முதன்மை ஊடகங்களுக்கு இது அதிகார பணப் பித்து பிடித்திருக்காது. அது மக்களின் சுதந்திரத்திற்கா அல்ல தனது சுகத்திற்காக வாழ்கிறது. அதற்கு அரசியலின் ஆதரவும் நிழலும் தேவை. எனவே அது மக்களின் வலியை உணர மறுக்கிறது. அதனால் தான் அருந்ததியின் அரும் பணியை எதிர்க்கிறது. அவரை எதிர்ப்பவர்களுடன் கைக்கோர்க்கிறது.

ஆனால், எத்தனை சக்திகள் எதிர்த்துநின்றாலும் விடியலை மறைத்துவிட முடியாது. அந்த பேரொளி  வெளிப்படும்போது இந்த காரிருள் மறைந்தே தீரும். அப்போது சுதந்திரக் காற்று சூறாவளியாகி, தங்களை சக்திகளாகக் கருதிக் கொண்டிருக்கும் இந்த சக்திகளை அடித்து சென்று குப்பையில் சேர்த்துவிடும்.

Pin It