இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெருநாட்டைச் சேர்ந்த நாவலாசிரியர் மரியோ வர்காஸ் லோசாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 74 வயதான லோசா ஸ்பானிய மொழியில் மிகப்பெரும் படைப்பாளியாய்த் திகழ்ந்தவர். தென் அமெரிக்க நாடான பெருவில் அதிகார வர்க்கத்துக்கெதிராக கண்டனம் முழங்கிய இலக்கியவாதிகளில் இவர் முதன்மையானவர்.

லோசா தனது எழுத்துப் பணியைத் துவங்கிய ஆரம்ப நாட்களில் விகடக் கதைகள், மர்மக் கொலைகள் பற்றிய கதைகளையும் எழுதிக் கொண்டிருந்தார். 1969ம் ஆண்டில் அவர் எழுதிய “மாதா கோவிலில் உரையாடல்” என்ற நாவல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அது 1950 களில் பெருநாட்டை ஆண்ட மனுவேல் ஒட்ரியாவின் சர்வாதிகார ஆட்சி பற்றியும், அக்கால அட்டூழியங் கள் பற்றியும், அரசியல் பற்றியும் அந்த நாவல் பேசியது. அந்த நாவல் லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. தனது சொந்த வாழ்வின் அனுபவங்கள், நாட்டின் நிகழ்வுகள், சமூகத்தின் உறங்கும் மனச்சாட்சியைத் தட்டி எழுப்புதல் போன்ற எதார்த்தவாத நாவல் களையே லோசா எழுதினார். பெருநாட்டின் அதிபர் பதவிக்கும் போட்டியிட்ட பெருமை இவருக்கு உண்டு.

மாணவப் பருவத்தில் லோசா ராணுவப் பள்ளியில் படித்தார். அந்த அனுபவங்களை அடிப்படையாக வைத்து “வீரனின் நேரம்” என்ற நாவலை எழுதினார். அது ஒரு சர்ச்சைக்குரிய நாவலாகியது. அந்த நாவலின் ஆயிரம் பிரதிகளை அரசு அதிகாரிகள் பகிரங்கமாகத் தீயிட்டு கொளுத்தித் தங்கள் கோபத்தைத் காட்டினர். அவரது “வெள்ளாட்டின் விருந்து” என்ற நாவலும் பெருவின் சர்வதிகாரியான ரபேலையும் அவரது ஆட்சியையும் கடுமையாய் தாக்கி எழுதப்பட்டது. அதைத் தொடர்ந்து “ஜாலியா அத்தை”, “சிறுகதை எழுத்தாளன்”, “உலகை முடிவுக்கு கொண்டு வரும் யுத்தம்” போன்ற அவர் எழுதிய நாவல்கள் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அவர் கடைசியாக 1993ல் எழுதிய நாவல் “ஆன்டெசில் மரணம்” என்பதாகும். அது ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் போராட்டங்களில் கொல்லப்பட்டவர் களைப் பற்றியும் கூறியது. அந்த காலகட்ட வன் முறைகள் பற்றி “பழைய உலகம் கொடூரமானது நவீன உலகின் சமூகத்தால் அதை உணரவே முடியாது” என்கிறார் லோசா.

1974ம் ஆண்டுக்குப் பிறகு அவர் பெரு நாட்டின் அகாடமி உறுப்பினராய்த் தேர்வு செய்யப் பட்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பாவில் எண்ணற்ற பல்கலைக் கழகங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். 1990ல் பெருவின் அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி அணியின் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். சமீப ஆண்டுகளாக அவர் பார்சிலோனா, மாட்ரிட், லிமா, பாரிஸ், லண்டன் போன்ற நகரங்களில் வாழ்ந்தார்.

“மரியோ வர்காஸ் லோசா காட்சிகளை வர்ணிப்பதில் மிகவும் வல்லவர். மிகச்சிறந்த கதை சொல்லி. ஸ்பானிஷ் மொழியில் மிகச்சிறந்த நாவலாசிரியர் இவர்” என்று நோபல் பரிசுக்குழு புகழாரம் சூட்டியுள்ளது. மேலும், அதிகார அமைப்புப்பற்றியும், தனி நபர் பாதுகாப்பு, கிளர்ச்சிகள் மற்றும் தோல்விகள் பற்றியுமான இவரது விளக்கங்களுக்காக லோசாவுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் குழு அறிவித்தது. 

நோபலின் கேலிக் கூத்து

நோபல் பரிசுக் கமிட்டியில் பல ரகமானவர்கள் இருக்கிறார்கள். அதில் ஏகாதிபத்திய எடுபிடி களும் இருக்கிறார்கள் என்பதை நோபல் பரிசுக்குழு அவ்வப்போது வெளிப்படுத்தும். அப்படித்தான், கடந்த ஆண்டு அமெரிக்க அதிபராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஒபாமாவுக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசை வழங்கினர். இதற்கு எந்த அடிப்படைக் காரணமும் இல்லை. தனக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் என்று ஒபாமாவுக்கும் புரியாத புதிராகவே இருந்தது. இது நோபல் பரிசை வாங்கும் போது ஒபாமா பேசிய பேச்சிலேயே வெளிப்பட்டது.

இந்த ஆண்டு சீனாவில் எதிர்ப்புரட்சியைத் தூண்டி விட்டுத் தலைமை தாங்கிய லியூஜியா போவுக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இவர் சீனாவில் மனித உரிமைகள் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்ப்புரட்சியைத் தூண்டியவர். டியன்மின் சதுக்கத்தில் ஏகாதிபத்தியத் தூண்டுதலால் மாணவர் போராட்டத்தை தலைமையேற்று நடத்தி தற்போது சீனாவில் சிறையில் இருக்கும் லியூவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது நோபல் பரிசு வரலாற்றில் ஒரு களங்கமாகும்.

Pin It