Telephone அந்த வீடு நிசப்தமாக இருந்த நேரத்தில் தொலைபேசி மணி அடிக்க ஆரம்பித்தது. யாரும் வந்து எடுக்காததால் தொலைபேசியும் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது.

குழந்தையின் அழுகுரலாக இருக்குமோ என்று தோன்றியது, கொஞ்ச ரேநத்தில் நிசப்பதமாயிற்று! நா வறண்டிருக்க வேண்டும். மீண்டும் தொலைபேசி வீறிடத் தொடங்கியது அந்த வீட்டில் யாரும் இல்லைபோல அதான் தொடர்ந்து கத்திக் கொண்டேயிருந்தது.

தொலைபேசியால் என் நிம்மதி கெட்டுவிட்டதா? ஆமா, என்பது போல வீட்டின் பின் இருந்து பூனை ஒன்று கத்தியது. என்னை நானே பார்த்துக் கொண்டிருந்த அந்த அறையிலிருந்து வெளியேறினேன்.

எதிர்த்த வீட்டில் யாரோ பெண்ணொருத்தி புத்தகம் படிப்பதாகவோ, இல்லை அதுபோல் பாவனை செய்துகொண்டு என்னை பார்ப்பதாகவோ தோன்றியது. மாடிப்படிகளில் இறங்கி தெருவிற்குச் சென்றேன்.

அலோ யாரு மச்சானா! ம், நான் நல்லா இருக்கேண்டா! நீ எப்டி இருக்க..,

அலோ! அலோ..,!

டேய் எனக்கு சிக்னல் கிடைக்கவில்லை, அப்புறம் பண்ணுடா?

அலோ அலோ..,

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்.

பாவம் இவனுக்கு தெரியாது, இந்த வீட்டில் தொலைபேசியை எடுக்க ஆள் இல்லாமல் அடித்துக்கொண்டே இருக்கிறது என்று.

எப்போதும் போலவே அந்த தெரு இருந்ததில் ஆச்சர்யம் இல்லை.கூடுதலாக ஒரு நாய் அந்த பக்கம் சென்றதில் எனக்கு வருத்தம் இல்லை.

டீக்கடை பாபு ஆர்வமாக டிவியை பார்த்துக் கொண்டிருந்தான்.

பாபு ஒரு காபி,

அந்தாண்ட குந்து அண்ணாத்த சத்த பால் காயட்டும்,

டீ வியில் பெப்சி உமா! பெப்சி உமா சிரிப்பது தொலைபேசி மணியைப்போலவே இருந்தது

அப்புறம்,

ரொம்ப நன்றி
உங்களுக்கு எந்த பாட்டு வேண்டும்

நினைத்துக் கொண்டேன் அந்த வீட்டில் மணியடித்து கொண்டேயிருந்திருக்கும் எடுக்க ஆள் இல்லாமல் என்று

கொஞ்சநேரம் பெப்சி உமாவின் நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தேன்

பல்லே லக்கா பல்லே லக்கா பாடல் காட்சியில் நடனம் தாளம் போடத் தோன்றியது

என்ன பாபு டீ?

மன்னுச்சுக்க அண்ணாத்த நம்ம உமா குட்டியை பார்த்கிட்டிருந்தேனா அதான் என சொல்லிச் சிரித்தது என்னவோபோல் இருந்தது.

சுகமாக தலையைச் சொரிந்து கொண்டிருந்தான்.

அடுத்து டீ கேட்பவன் குடுத்துவைச்சவன் என நினத்துக்கொண்டே எழுந்து நடக்க ஆரம்பித்தேன் எனக்கு வழிகாட்டுவதாக என் நிழல் முன்னே சென்றுகொண்டிருந்தது. தெருவில் அந்த நாயைக் காணவில்லை . அந்த நாய் என்று இல்லை எந்த நாயையும்….

சிக்னல் கிடைக்காமல் ஓடிக்கொண்டிருந்தவன் தொலைவில் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதாகப்பட்டது

மாடிப்படிகளில் ஏறும் போதும் நான் கவனிக்கவில்லை அவ்வாசனை என்னை திரும்பிப் பார்க்க வைத்தது. வாழை மரத்தில் தார் பழுத்திருந்தது. வீட்டு ஓனர் இன்னும் வரவில்லை நினைவிற்கு வந்தது. இரண்டு நாளைக்கு சாப்பாட்டிற்கு எங்கும் செல்ல வேண்டாம்.

இப்பொழுது எதிர் வீட்டு பெண்ணையும் அவள் படிப்பதாகப் பிடித்திருந்த புத்தகத்தையும் காணவில்லை. ஒரு வேளை அடுத்த வீட்டிற்கு சென்றிருக்கக் கூடும். என் அறை உள்ளே சென்று கதவை மூடிக்கொண்டேன்.

தொலைபேசி சப்தம் இப்பொழுது இல்லை. ஒருவேளை அந்த வீட்டில் யாரும் வந்து பேசிக்கொண்டிருக்கலாம்.

என் சிந்தனையையும் மீறி என் எதிரே தொங்கிகொண்டிருந்த கடிகாரம் என்னை அழைப்பதாகப்பட்டது.

டிக். டிக். டிக். டிக்,

எனக்கு தொலைபேசியின் சிணுங்கல் போலத்தோன்றியது அந்த வீட்டின் தொலைபேசி அழைப்பிற்காகக் காத்திருக்கத் தொடங்கினேன்.

காத்திருக்கிறேன்:

- பாண்டித்துரை
(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)