(பிரிட்டன் ராணி எலிசபெத் அவர்கள் கமல்ஹாசனின் மருதநாயகம் திரைப்பட படப்பிடிப்பு தொடக்கவிழாக்காக, அய்ம்பதாவது ஆண்டு சுதந்திர பொன் விழாவுக்காக சென்னை வருகை பின்புலமாகக் கொண்டது)

சிங்காரச் சென்னையில் மையம்.

தினமும் இலட்சக்கணக்கான மக்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இந்த இடத்தை அருவருப்புடனும் பயத்துடனும் பார்ப்பர். கூவம் ஆறும், பக்கிங்காம் ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்த பழம்பெரும் மைய சிறைச்சாலை தான் அது! (இப்பொழுது இங்கிருந்து புழலுக்கு மத்திய சிறைச்சாலை மாற்றப்பட்டு உள்ளது)

குடலைப் பிடுங்கி வெளியே தள்ளும் துர்நாற்றம் மனித மலங்கள் பல விதங்களில் அருவருப்பூட்டும் வகையில் மிதந்து ஓரங்களில் ஒதுங்கியும் கிடந்தன. எலி, நாய், பூனை, மாடு என்று பலவும் செத்து, நசித்து துண்டு துண்டாய் சாக்கடையில் ஊதிப் பெருத்து கிடந்தன. காக்கைகளும், பருந்துகளும் அழுகிய இவற்றின் சதைத் துண்டுகளை கிழித்து போட்டு தின்று கொண்டிருந்தன. அனைத்து கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் பிடித்த சாக்கடையாக மாறி ஓடிக் கொண்டிருந்தது. நகரம் முழுவதும் வியாதிகளையும், நாற்றத்தையும் பரப்பி வந்த இந்த ஆறுகள் கலக்கும் இடம் இயற்கையாகவே விரிந்து பரந்து இருந்தது. 

கொசுவைத் தவிர வேறு எந்த உயிரினமும் வாழ இயலாத இடமாக இது இருந்தது ஆனால் கணக்கற்ற கொசுக்களை உருவாக்கும் லார்வாக்கள் மட்டும் வால்களை ஆட்டியபடி உற்சாகமாகத் திரிந்தன. கதிரவன் இந்தக் கூவத்துடன் இரண்டறக் கலந்து இலட்சக்கணக்கில் இளம் கொசுக்களை உற்பத்தி செய்தான். சுவையான மனித இரத்தத்தைத் தேடி அவைகள் அலைந்தன. புதர்களில் மண்டி இருந்த பழைய கொசுக்களிடம் 'அந்த இரத்தம் எங்கு கிடைக்கும்' என்று விசாரித்தன. பழையவர்கள் வழிகாட்ட புதியவர்கள் மனித இரத்தம் தேடி புறப்பட்டனர்!

இந்த சாக்கடை ஆற்றை விட மோசமான கோட்டை! மனித இரத்தத்தை உறிஞ்சும் ஜந்துக்களின் தலைமையிடம்! இவ்வாறு உறிஞ்சுவதை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்காக சனநாயகம், சட்டம் - ஒழுங்கு, அரசியல், சட்டசபை, நீதிமன்றம் போன்ற மேற்பூச்சுக்களைப் பூசிக் கொண்டிருந்தது. இவற்றையும் மீறி கோட்டையின் மூன்றாவது மாடி குளிர்பதனக் கூடத்தில் இருந்து மோசமான வாசனை அதன் கதவு ஒவ்வொரு தடவை திறக்கும். போதும் 'குபீர் குபீர்' என வெளியே வந்தது. 1988 ஆம் ஆண்டில் எலிசபெத் ராணியார் வருகையை சிறப்பிப்பதற்கு ஆட்சியாளர்கள். உயர் அதிகாரிகளின் கூட்டம் அது. ஒவ்வொருவரும் தங்கள் நாற்றத்தை மறைக்க,பூசிக் கொண்ட விதவிதமான செண்ட் வாசனைகள் ஒன்று கலந்து இரசாயன மாற்றமடைந்து விநோதமான நாற்றமாக மாறி இருந்தது. அதோடு ஐம்பது ஆண்டுகளாக தங்கள் அடிமைகள் எப்படி ஆட்சி செய்கிறார்கள் என்பதைப் பார்க்க வரும் ராணிக்கு எப்படி எப்படி கூழைக் கும்பிடு போடுவது என்பது பற்றிய உரையாடல் இறுதிப் பகுதி நடந்து கொண்டிருந்த நேரம் அது

"மாட்சிமை தங்கிய ராணியார் வருகையை கோலாகலமாக கொண்டாட வேண்டும். சின்ன சலசலப்பு கூட ஏற்படக் கூடாது"

“சார்.. ராணியார் வருகையை எதிர்த்து தர்ணா நடத்த அனுமதி கொடுக்க பட்டிருக்கே ”

இப்படி சொன்னவரைப் பார்த்து பலரும் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர். அதற்கு அர்த்தம், இந்த அரசியலமைப்பு சட்டத்தின் ஓட்டைகள் இருந்ததை அறிவித்தது. அனுமதி ரத்து செய்யப்பட்டது.

ஜீப்கள் பறந்தன. சில மணிக்குள் கைதாவோர் பெயர்ப் பட்டியலும், எண்ணிக்கையும் தயாராயின. அடுத்த நிமிடமே 'உஷ் உஷ்' என்ற கொசுக் கூட்டத்தின் இரைச்சலாக வயர்லெஸ் அலறின.

"ஹலோ... ஹலோ... ஜே ஒன்… ஜே ஒன்… ராஜன், மோகன், ஆல்பர்ட், குப்பன், உசேன். பத்து பேர் அரெஸ்ட் அரெஸ்ட் 

“ரீஸ்வ்டு... ஜே ஒன்... ஓவர் ரீஸிவ்டு... ஜே ஒன்…. ஓவர்”

சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய வயர்லெஸ் கருவிகள் மூலம் ஆணைகள் பறந்தன. 

“தோழர்.. தோழர்_..”

கனவில் கேட்பது மாதிரி கேட்ட சத்தம் அதிகரிக்கவே ராஜன் மட்டுமல்ல அவரது மனைவியும், குழந்தைகளும் விழித்துக் கொண்டனர். விளக்கைப் போட்டார். நள்ளிரவு ஒரு மணி. பேய்கள் நடமாடும் நேரம். தோழர்கள் இப்படி இவ்வளவு நேரத்திற்கு வரமாட்டார்களே… வரமுடியாதே என்று எண்ணியவாறே கதவைத் திறந்தார்.

திகைத்து விட்டார்!

போலீஸ் பட்டாளமே வீட்டைச் சுற்றி வளைத்திருந்தது. நடுநிசியில் கிடைத்த சுதந்திரத்தை அறிவிக்க நடுநிசியில் அறிவிக்க வந்தவர்கள் போல் காவலர்கள் காத்துக் கொண்டிருந்தனர்! தேவையான கைலி, ஓரிரு உடைகள் போன்றவற்றை முன் எச்சரிக்கை கைது என்பதைப் புரிந்து எடுத்து வைத்துக் கொண்டு ஜீப்பில் ஏறினார். இவருக்குத் துணையாக ஏற்கனவே மூன்று தோழர்கள் அதனுள் இருந்தனர்

ஜீப் ஓடியது. கொசுக்களின், பூச்சிகளின் இறக்கைகளில் ஜீப் முன் வெளிச்சத்தில் பளிச் பளிச் என்று எரிந்தன. வயர்லெஸ் கருவியின் சத்தம் காவல் நிலையத்தில் இவர்களை வரவேற்றது. இவர்கள் நால்வரையும் இன்ஸ்பெக்டர் விசாரித்தார். சாதாரண விசாரிப்புதான்!

கேள்விகள் கேட்டு மடக்கி மற்ற தோழர்கள் இருப்பிடத்தை அறிய முயன்றார் முடியாது போகவே அங்கிருந்த பெஞ்சுகளில் படுக்கச் சொல்லி விட்டுச் சென்றார்; தாங்கள் எப்படி கைதானோம் என்பதை அவர்கள் பரிமாறிக் கொண்டனர். காவலர்கள் நடமாட்டம் இருந்ததால் பல விசயங்களைப் பேசாமல் மௌனம் காத்தனர். 'ஒயிங் ஒயிங்' என்று கொசுக்கள் காதில் வட்டமடித்து விட்டு உடம்பை பதம் பார்க்கத் தொடங்கின. வேறு வழியின்றி எழுந்து உட்கார்ந்து குசுகுசுவென பேசிக் கொண்டே இருந்தனர்

பொழுது விடிந்தது. காவலர்கள் வந்ததும் போவதுமாக 'பாரா' மாற்றுவதில் தீவிரமாக இருந்தனர். டீ கடை பையன் வந்து தேநீர் கொடுத்துக் கொண்டு இருந்தான். இவர்களுக்கும் 'டீ கொடுப்பா' என்று வெளியே வராண்டாவில் இருந்த இருவரை ஏட்டு காட்டினார். அனைவருக்கும் தேநீர் கிடைத்தது. அந்த இரண்டு பேர் பரிதாபமாக முழித்தபடி குடித்தனர். ஒருவர் ரிக்ஷா ஓட்டுபவர். தன்னுடன் ரிக்‌ஷா வண்டி ஓட்டுபவர்கள் அனைவரும் சினிமா சென்றதால், ரிக்க்ஷாக்களுக்கு காவலாக கொண்டிருந்தவரை, 'பெரிய ஐய்யா கூப்பிடுறாரு வா' என்று உறங்கிக் பட்டென லத்தியால் அடித்ததில் துடித்துக் கொண்டே எழுந்தவரிடம் கூறி, காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

மனைவி, குழந்தைகளுடன் படுத்து இருந்த மற்றொருவரை இரவு 2 மணிக்கு எழுப்பி, “போலீஸ் ஸ்டேசனுக்கு ஒட்டடை அடித்து சுத்தம் பண்ணிட்டு திரும்பி வந்து விடு" என்று பச்சையாக பொய்க் கூறி அழைத்து வந்திருந்தனர்

தங்களை விடுதலை செய்ய வேண்டும் என மேலதிகாரியிடம் மோகன் கேட்டார் அவர், தனக்கு எதுவும் தெரியாது தனக்கு மேல் உள்ள அதிகாரிகள் அனுப்பிய உத்தரவை கியூ உளவுத் துறை ஆணையை நிறைவேற்றுவதாக கூறினார் வயர்லெஸ் அலறிக் கொண்டே இருந்தது.

“எலிசபெத் ராணி.. அரெஸ்ட் 10 பேர்… 5 பேர்… 2 பேர்” என்று கொசுத் தொண்டையில் பேசிக் கொண்டே இருந்தது.

சைதாப்பேட்டை மறைமலை பாலத்தின் அடியில் காலை எட்டு மணிக்கு இவர்கள் ஆறு பேரும் கூடி ராணிக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதாகவும், அதை ரோந்து வந்த காவலர்கள் கேட்டதாகவும், “கதை - வசனம்” ஒன்றை ஏட்டு தயாரித்தார். வழக்கமான காவல் நிலைய சடங்குகளை முடித்துவிட்டு மத்திய சிறைச்சாலை நோக்கிச் செல்ல மாலை 5 மணி ஆகிவிட்டது. வழி நெடுக மோகன், ராஜன் உட்பட அனைவரும் முழக்கங்கள் எழுப்பினர்

சிறை வாசலில் வேன்களும், ஜீப்களும் நின்றிருந்தன. கும்பல் கும்பலாகக் கைதிகள், ராணி வருகையை ஒட்டி முன் எச்சரிக்கை என்று அழைத்து வரப்பட்ட தோழர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொண்டு இருந்தனர். தோழர்களுடன் சேர்த்து வேறு பலரும் கைது செய்திருந்தனர். பல காவல் நிலையக் கைதுகளைக் கூட்டிப் பார்த்ததில் 'மறியல்' எண்ணிக்கை நூற்றை நெருங்கியதாக சிறைக் காவலர் கூறினர். 

தோழர்களைத் தவிர மற்றவர்களை கணக்கு காட்டவும், மேலதிகாரிகளின் மேல் உள்ள விசுவாசத்தைக் காட்டவும் கைது செய்து இருந்தனர். இரவு சினிமா பார்த்து விட்டு வந்தவர்கள், டீ குடிக்க இரவு கடைக்கு வந்தவர்கள், குடித்து விட்டு காரமான கறி சாப்பிட தள்ளுவண்டி கடையை நாடியவர்கள், சாலையோர ஜோசியர், குடுகுடுப்பை மந்திரவாதி, ஏன் மாமா வேலை செய்பவர் உட்பட உடனடியாகத் தங்களுக்குத் தட்டுப்படும். எதிர்த்து கேள்வி கேட்க முடியாத ஏழைகளை அதட்டி மிரட்டி கைது செய்து கொண்டு வந்திருந்தனர். 

‘மறியல்” என்ற வகையினர் தவிர மற்ற கைதிகளின் சட்டையைக் கழட்டச் சொல்லி விட்டிருந்தனர். வெளிச்சம் மங்க, மங்க கொசுக்கள் அணி அணியாகப் படையெடுத்தன. ஒவ்வொருவர் தலை மீதும் ஸ்பிரிங் போல வட்டமடித்தன. மேல் சட்டை போடாதவர்களை நன்றாக பதம் பார்த்தன. அரசை எதிர்க்க முடியாதவர்களை தான் போலீஸ் துறை மட்டுமல்ல கொசுக்களும் கூட முதலில் தாக்குகின்றன. தோழர்களையும் கொசுக்கள் விட்டு விடவில்லை. புதிய மனிதர்களின் இரத்தம் கொசுக்களுக்கு உற்சாகம் ஊட்டின. இறுதியாக ராஜன் மோகன் உட்பட அனைவரும் திரட்டி வாசல் வழியே சிறைக்குள் காலடி வைத்தனர்.

அலுமினிய தட்டு, குவளை, கருப்பு போர்வையை 'மறியல்' கைதிகளுக்கு கொடுத்து சி.பி. பிளாக் மூன்றில் உள்ள செல்களில் ஐந்து ஐந்து பேராக அடைந்தனர். மோகன், ராஜன், காமராஜ். ஆல்பர்ட் ஆகியோர் ஒரு செல்லில் அடைக்கப்பட்டனர். நுழைந்த சில நிமிடங்களுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க முடியாத அளவிற்கு கண்கள் இருளடைந்து விட்டிருந்தன. சில நிமிடங்களுக்குப் பிறகு இருட்டில் கண்கள் பழகியது 10 அடி அகலம் 30 அடி நீளமுள்ள அந்த செல் 160 ஆண்டுகளுக்கு முன்பிருந்த பழைமையை பறைசாற்றியது. ஒரு ஆள் படுக்கும் கருங்கல் திண்டு, 15 அடி உயரத்திற்கு மேல் மிகவும் சிறிய சன்னல், புதிதாக கட்டப்பட்டு பாழடைந்து விட்டிருந்த கக்கூஸ், சுண்ணாம்பு பார்க்காத சுவர். தனது முப்பாட்டி போராடும் இந்திய மக்களை அடக்க கட்டின ஜெயில் இன்று அவரது பேத்தி எலிசபெத்திற்கு உதவுகிறது! 

களைப்பில் தூங்க ஒவ்வொருவரும் முயன்றனர். அங்கு பாருங்கள்' என்று அலறினார் காமராஜ்! சன்னல் வழியே வரும் மின் வெளிச்சத்தில் அடை அடையாய் கொசுக்கள் செல்லுக்குள் வந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் அவர்களைச் சூழ்ந்து கொண்டன. கொசுக்களுடனான நீண்ட யுத்தம் துவங்கியது.

ராஜன் கையோடு கொண்டு வந்த தினசரி பேப்பரைக் கொண்டு விரட்ட முயன்றார். உடம்பின் மேல் பகுதியில் விசிறினார். கீழ்ப் பகுதியில் கடித்தது. கீழ்ப்பக்கம் விசிறினால் மேல்பக்கம் கடித்தது. காதில் வந்து 'கோயிங் கொயிங்' என்று கூவி அனுமதி வாங்கிக் கொண்டு கடித்தன. சிறிய கொசுக்கள் முதல் இதுவரை. பார்க்காத அளவு பெரிய கொசுக்கள் வரை இரத்தத்தை உறிஞ்சின. தூக்கம் காணாமல் போனது.

காமராஜ் துண்டை மின்விசிறி போல சுழற்றினார். கை ஓய்ந்தது தான் தாமதம் கொசுக்கள் பாய்ந்து பிராண்டின. ஜெயக்கொடி லுங்கியை வைத்து சண்டை போட்டார். இரவு முழுக்க இந்தப் போர் தொடர்ந்தது. மோகன் தான் அணிந்திருந்த வேட்டியைக் கொண்டு சிறிது இடம் கூட இல்லாமல் தனது உடலை மூடிக் கொண்டார். பத்து நிமிடம் கொசுத் தொல்லையில் இருந்து தப்பித்தார். ஆனால் வியர்வை உடல் முழுவதும் ஆறுபோல் ஓடியது. எல்லா செல்லிலும் இதே கதிதான். அதிகாலை இருக்கும். ஒவ்வொருவரும் அசதியில் தூங்கி விட்டனர். கொசுக்கள் அவர்களை மொய்த்து இரத்தம் குடித்து மகிழ்ந்தன. சில கொசுக்கள் அதிக இரத்தம் குடித்த போதையில் பறக்க முடியாமல் திண்டாடின. இப்படியாக ‘மாமியார்’ வீட்டில் முதல் இரவு கழிந்தது.

மூன்று மூன்று பேராக 'பைலில்' உட்கார வைத்து மறுநாள் காலையில் ஏட்டு எண்ணிக்கையை முடித்தார். அனைவரும் விவாதிக்க அமர்ந்தனர். மோகன் தலைமை தாங்கினார். பலரின் கண்கள் தூக்கம் இல்லாமல் சிவந்து சோர்ந்து போயிருந்தன. மூன்று பேர் கொண்ட சிறைக்குழு அமைக்கப்பட்டது. தோழர்களுடன் சிறைக்கு வந்த அப்பாவி மக்களும் இக்குழுவிற்கு கட்டுப்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது. கொசு மருந்து அடித்து கொசுக்களை ஒழிப்பது உட்பட சில கோரிக்கைகளை அதிகாரியிடம் வைக்க இக்குழு முடிவு செய்தது.

அந்த பிளாக் ஏட்டு காவலரிடம் இது கூறப்பட்டது. அந்த ஏட்டு அப்படி இப்படி என்று நேரம் கடத்தும் செயல் யுக்தியை கையாண்டார் .உண்ணாவிரதம் இருப்போம் எனத் தோழர்கள் கூற உடனடியாக 'டவரில்' இருந்த உதவி ஜெயிலரிடம் அழைத்துச் சென்றார். போகும் பொழுது தங்களையும் கொசுக் கடிப்பதாகவும், அவைகளை ஒன்றும் செய்ய இயலாது என்றும் புலம்பினார்.

உதவி ஜெயிலரைப் பார்த்ததும் கூழைக் கும்பிடு போட்டு ஏட்டு நின்றார். கொசு மருந்து அடிப்பது, குளியல் தொட்டியைச் சுத்தம் செய்வது, கக்கூசை சுத்தம் செய்வது, உணவை துணியால் மூடி அனுப்புவது என்று அவரிடம் மோகன் பேசினார்.

அந்த ஜெயிலர் விவரமான ஆள்! புரட்சிக்காரர்கள் 'மறியலில்' வந்துள்ளனர். என்பதைப் புரிந்து கொண்டு மரியாதையுடன் பேசினார். சிலவற்றை நிறைவேற்றுவதாக கூறியவர்,

"யோவ் ஏட்டு, சாப்பாட்டை துணியை மூடிக் கொடுக்கக் கூடாதா? இவர்கள் கேட்பதை செய்து கொடு"

என்று சத்தம் போட்டார். பின்பு தோழர்களை பார்த்து,

"முடிந்த அளவிற்கு செய்கிறோம். இன்னும் இரண்டு மூணு நாளிலே ரிலீஸ் ஆயிடுவீங்க. கொஞ்சம் 'அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க கொசுத் தொல்லையை ஒண்ணும் செய்ய முடியாது. கொசு மருந்து கேட்டுச் சொல்றேன்" என்றார்.

அதிகார சாதுரியமாக ஒன்றுமில்லாத கோரிக்கையை நிறைவேற்றி விட்டு, முக்கிய கோரிக்கையைப் பற்றி வழவழா என்று பேசினார்.

கொசு மருந்து அடிக்காமல் ஏமாற்றினார்கள். இரவும் வந்தது. செல்லில் அடைக்கப்பட்ட சிறிது நேரத்தில் கொசுக்கள் படையெடுத்தன. ராஜன் கருப்பு போர்வையின் ஒரு முனையை வாலாக கிழித்தார். அக்கந்தலை சுக்கூஸ் அருகே வைத்து தீ மூட்டினார். எரியும் நேரத்தில் தீயை அணைத்து புகையை உண்டாக்கினார். புகை மூச்சு முட்டினாலும், கொசுக்களிடம் இருந்து தப்பிக்க இதைத் தவிர தற்போது வேறு வழி கிடையாது. சில மணிகளாவது அயர்ந்து தூங்கினார்கள். பாரா வந்த காவலர் நாலாவது செல்லில் தீ எரிவது கண்டு சத்தம் போட்டு கத்தத் தொடங்கினார். மோகன் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அவர்களுக்கு எதிரே உள்ள செல்களில் மைனர் (18 வயதிற்கும் குறைவானவர்களை) குற்றவாளிகளை அடைத்து வைத்திருந்தனர். அவர்கள் தட்டு, குவளை, குச்சி ஆகியவற்றைக் கொண்டு தாளம் போட்டுப் பாடினர் மூன்றாவது செல்லில் இருந்த தோழர்களும் புரட்சிகரப் பாடல்களை அதே தட்டு, குவளை, குச்சி ஆகியவற்றைக் கொண்டு பாடினர். இந்த இனிய கச்சேரியைக் கேட்டுக் கொண்டே தோழர்கள் உறங்கிப் போனார்கள். ஆனாலும் புகை குறையத் தொடங்கியதும் கொசுக்கள் தோழர்களைப் பதம் பார்த்தன. அதையும் மீறி இரண்டு நாள் அசதி, தூக்கத்தைக் கொடுத்தது.

மறுநாளும் சிறைக்குழு உதவி ஜெயிலரிடம் படையெடுத்தது. கொசுத்தொல்லை பற்றிச் சொன்னதும், அங்கேயே கிடங்கு அதிகாரிக்கு போன் செய்து கொசு மருந்து இருக்கிறதா என்று கேட்டார். மாலைக்குள் மருந்து அடிப்பதாக அதிகாரி கூறி இருக்கிறார் என்றார். வழக்கம்போல் மருந்து அடிக்காமல் ஏமாற்றினார். தோழர்கள் கொசுக்களை எதிர்கொள்ள அங்கிருந்த மரங்களின் சுள்ளிகளை பட்டைகளைச் சேகரித்து வைத்துக் கொண்டனர்.

மோகன் கடைசி நேரத்தில் அதிகாரிகள் மேல் உள்ள எரிச்சலில் குப்பை சேகரிக்க வைத்திருந்த கோணியை எடுத்து வந்து எரித்தார். இன்று பல செல்களில் இருந்தும் புரட்சிகரப் பாடல்கள் வந்தன. கொசுக்களை எதிர்த்த போராட்டத்தில் புகையும் பாடலும் அவர்களுக்கு உதவியது.

விடிந்ததும் ஜெயிலரைப் பார்த்து இரண்டில் ஒன்றைக் கேட்பது என விறைப்புடன் சிறை குழு சென்றது அவரோ மிகவும் நிதானமாக

“கொசுவை நாங்க ஒழிச்சு முடியாதுங்க. கார்ப்பரேஷன் தான் செய்யணும் அவர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்புறேன். நீங்க பாருங்க நாங்க எவ்வளவு மருந்து அடிச்சாலும், கொசு போகாது. கூவத்தில் இருந்து புதுசு புதுசா வரும்." என்று நயமாகவும் பின்பு அதிகாரத்துடனும் பேசிக் கொண்டே போனார்.

சுற்றி வளைத்துக் கொசுவை ஒழிக்க முடியாது என்று அவர் சொன்னது சிறைக் கமிட்டிக்கு எரிச்சலையும் ஆச்சரியத்தையும் தந்தது. எழில்மிகு 2000, சிங்காரச் சென்னை, கம்ப்யூட்டர் கனவுலகம். எல்லாம் வெறும் வாய்ப்பந்தல் தானா என ராஜன் வியந்தார்.

"கொசுவை இவனுங்களால ஒழிக்க முடியாது. கொசு உற்பத்திக்கே காரணம் இந்த அதிகார வர்க்கமும், முதலாளிய வர்க்கமும்தான்” என்று சத்யா கோபத்தில் திட்டிக் கொண்டே வந்தார்.

விவாதம் சூடானது “வசதி படைத்தவன் தான் அதிகாரத்தில் இருக்கான் கொசுத்தொல்லை அவனுக்குக் கிடையாது. நமக்குதான் இந்தப் பிரச்சனை... கொசுவை வராமல் தடுக்கணும்னா கூவமே இருக்கக் கூடாது" என்றார் ராஜன். செல்லில் அடைக்கப்பட்ட பின்பும் விவாதம் தொடர்ந்தது. புரட்சியா, சீர்திருத்தமா என்பது போல் அந்த விவாதம் இருந்தது.

இன்று பக்கத்து செல் தோழரின் ஆலோசனையை நடைமுறைப்படுத்தினார். எந்த சன்னல் வழியாக கொசு வருகிறதோ அதைப் போர்வையைக் கொண்டு அடைத்து விட தீர்மானித்தனர். ஆல்பர்ட் குனித்து கொள்ள அவர் மீது ஜெயக்கொடி ஏறி கொசு வரும் பாதையை அடைந்தார். பெருமளவு கொசு வரத்து குறைந்தது . வாசல் வழியாக இப்பொழுது கொசுக்கள் வந்தன. ஏற்கனவே சிறையில் இருந்த கைதிகளை நண்பர்களாக்கிக் கொண்டு அவர்களிடம் இருந்து பெற்ற கொசு வர்த்திச் சுருள் இந்தக் கொசுக்களை விரட்ட உதவியது

மறுநாள் அனைவரும் கூடிப் பேசினர். ஒவ்வொரும் கொசுவிலிருந்து தப்பிக்க எடுத்த நடவடிக்கைகளை விவரித்தனர். இறுதியில் கொசு மருந்தை வாங்கவும், எலிசபெத் ராணிக்காக தங்களை அநியாயமாக கைது செய்த அரசை எதிர்த்தும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனத் தீர்மானித்தனர்.

சிறைக்குள் உண்ணாவிரத போராட்டம் உச்சபட்சமான போராட்டமாகும்!

இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது வானில் சுரு மேகங்கள் சூழ்ந்தன. பகல் கூட இருட்டாகி போனது. போர்க்கால சூழல் வானில் உருவானது. காது செவிடாகும் தொடர் இடி முழக்கங்கள், 'பளீர் பளீர்' என நீண்ட மின்னல் கொடிகள் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது.. மரம் பேயாட்டம் போட்டது. இலை கிளைகள் முறிந்து விழுந்தன. சேதாரம் நிறைய இருக்குமென்று ராஜன் நினைத்தார்.

சிறை செல் மிகவும் கதகதப்பாக இதமாக இப்பொழுது இருந்தது.

அருமையான தூக்கம்!

இரவும் வந்தது. கொசுக்களின் வரவை எதிர்பார்த்தனர். வெளியே தொடர்ந்து மழை, மின்னல்கள் தீப்பிழம்பாக வானுக்கும் பூமிக்கும் இடையே ஜொலித்தது. ஒரு கொசு கூட வரவில்லை. சூறாவளி காற்றும், பெரு மழையும் கொசுக்கள் அனைத்தையும் கொன்றுவிட்டு சென்றது.

இதனால் அந்த மழை சத்தத்தையும் மீறி பல சிறை செல்களில் உற்சாகமான பாடல்கள் கிளம்பின. எதிர் பிளாக்கில் பாட்டுக்குப் பாட்டு என்று மைனர் கைதிகள் தூள் கிளப்பினர். மழையின், மின்னலின் ஊடாக தூரத்து செல் தோழர் பாடிய சர்வ தேசிய கீதத்தின் போர்ப்பரணி இசை அனைவரையும் கிளர்ந்தெழச் செய்தது. எல்லாரும் அக்குரலுடன் இணைந்து மின்னல், மழை, சூறைக்காற்று இசையுடன் பாடினர். பின்பு அயர்ந்து தூங்கிப் போனார்கள்

சூரியனின் செங்கதிர்கள் ஏட்டு வருவதற்கு முன்பே மோகன் முகத்தில் அடித்தது. ராஜன் அதை ரசித்தவாறு எழுந்தார். விடுதலை செய்தியும் வந்தது.

புயல் மழை கைதிகளுக்கு புத்துணர்ச்சி தந்திருந்தது. அதிகாரிகளே அசந்து போய் விட்டிருந்தனர். சிறைச் சடங்குகளை முடித்துக் கொண்டு நிறைவாசலைத் தாண்டினர். பக்கிங்காம்- கூவம் சங்கமத்தின் துர்நாற்றத்தை தோழர்கள் எதிர்பார்த்து வெளியே வந்தனர். குளிர்ந்த மண்ணின் வாசனையும், சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தன புத்தாடை மனிதர் களின் வாசனையும் அவர்களின் இதயங்களை ஊடுருவி உற்சாகப்படுத்தின.

முழக்கங்கள் முழங்க சிறை சென்ற தோழர்களை மற்ற தோழர்கள், உறவினர்கள் வரவேற்றனர். மலம் அப்பி, கழிவுகளின் இருப்பிட மாக இருந்த கூவம் காணவில்லை.

சாக்கடையும், துர்நாற்றமும் சூறாவளியில் காணாமல் போயிருந்தது. தோழர்களின் ஆர்ப்பாட்ட முழக்கத்திற்கும், பட்டொளி வீசிய செம்பாதகைகளுக்கும் இசைவாக செம்மண் கலந்த வெள்ளம் தானும் சுழி போட்டு கொண்டு இரைச்சலுடன் பாய்ந்து சென்று கொண்டிருந்தது. 

- கி.நடராசன்