அம்மாவை எங்கள் மூவரோடு சேர்த்து அப்பாவுக்கு நான்கு பேர் என்று வடக்குத்தெரு பேச்சாயி எங்களுக்கு சொல்லிக் கொண்டே இருப்பாள். வீட்டிற்கு நடுவில் வைக்கப்பட்டிருந்த மூன்று குதிர்கள்தான் வீட்டை இரண்டு அறைகளாக பிரித்திருந்தன. இரண்டு அறைகளிலும் பக்கவாட்டுச் சுவற்றை குடைந்து குச்சி ஜன்னல் வைக்கப்பட்டிருந்தன.

நடுக் குதிரில் புளுதிக்காறு நெல்லும், பொலியில் நரிப்பயிற்றுச் செடியோடு பின்னலம் போட்டு விதைத்திருந்த வரகும், இருங்குச்சோளமும் பக்கவாட்டில் இருந்த இரண்டு குதிர்களிலும் கழுத்து ததும்ப நிரம்பி இருந்ததாக அம்மா இரவுச் சாப்பாட்டுக்கு பின் சொல்லிக் கொண்டே இருப்பாள். குதிர்கள் நிறைந்திருந்ததை கதைகளாகவே கேட்டுக் கொண்டிருந்த தங்கை தூங்கி விடுவாள்.

“வெளச்சலும் ஒன்னுமில்லை. எதுக்கு இந்த குதுரு? நொறுக்கித் தள்ளிப்புடலாம் புள்ள. நடுவூட்டுல பூதம் மாதிரி நின்னுக்கிட்டு? புள்ளங்க படுக்க புடிக்ககூட எடம் பத்துல. பூட நாளுல்ல பூச்சிப் புழுவு வேற வந்து அண்டிக்குது ” அப்பா கொஞ்சம் எடுத்தடியாகத்தான் பேசுவார்.

 “தானியம் இருந்த குதுர இடிச்சிப்புட்டா பொலப்புக்கு தத்திரியம் வந்து சேரும் போய்யா. அது என்னாப் பண்ணுது! ஆளோட ஆளா அதுங்களும் நம்பளோட நின்னுட்டுப் போவுது போ! கெடக்குற மண்ணு அப்புடியே கெடந்து பூடுமா?”

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் குதிர்களைப் பற்றின இரவு நேர உரையாடலாக இருந்து கொண்டே இருக்கும். அப்பா சுவற்றில் சுருட்டப்பட்டத் துணி மூட்டையினைத் தலையணையாக சுவற்றில் முட்டுக் கொடுத்து பீடியினை புகைத்துக் கொண்டே இருப்பார்.

படுக்கையில் புகைக்கும் பீடி வாசம் அம்மாவுக்குப் பிடித்திருந்தது. புணர்ச்சிக்குப் பிந்தைய நேரமாக இருந்திருக்கும். விதைப்புக் காலத்திற்கு முன்னதாக நிலத்தின் மீது வீசும் கீழக்காற்றையும் பட்டத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் அப்பாவும் அம்மாவும் கூடிக் கொண்டதாகவே அம்மாவின் பேச்சி இருக்கும்.

அம்மா பக்கத்தில் இரண்டு தங்கைகளும், அப்பா பக்கத்தில் நானும் படுத்துக் கொண்டிருக்கும்போது அம்மாவின் கன்னத்தில் அப்பா மலர்ந்த வெண்சாமரை சோளக் கதிர்களைப் போல விரல்களை விரித்து வைத்திருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அம்மாவின் தலைமாட்டுக்கு அருகில் அப்பா புகைத்திருந்த துண்டுபீடி தரையில் கரிக்கோடுப் போட்டு கசங்கி கிடந்தது. புணர்தலுக்குப் பிறகான சமயமாக இருந்திருக்கும். தூங்கிக் கொண்டிருந்த அப்பாவுக்கு பால் ஈந்து கொண்டிருந்த படியே அம்மாவும் கண் அயர்ந்து கிடந்தாள்.

கிணற்றுத் தண்ணீரில் குதித்து எழுந்ததும், கழுத்தில் நீர்ப்பாம்பு மண்டலம் போட்டு சுற்றிக் கொண்டதை கையில் உருவி வீசியெறிந்து விட்டதாக அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அப்பாவின் கணக்கு தப்பவில்லை.

கீழக்காற்று விசும்ப தொடங்கியதும், பெருமழை விட்ட பாடில்லை. விடியல் வரை நிலந்தெரியாமல் ச்சோவென கூரையில் பெய்து கொண்டிருந்தது. நடுக்குதிரின் இடுக்கில் இருந்து வெளியே வந்த பாம்பு கடித்தும் அப்பா இறந்து போனார்.

பங்காளிகள் ஓடிவந்தார்கள். லாந்தர் விளக்குகளை வைத்து நடுக்குதிரின் இடுக்கில் இருந்து களைக்கட்டு, வாங்கறுவாள், தொரட்டு என இருந்த அத்தனையும் வெளியே எடுத்துப் போட்டார்கள்.

இடுக்கில் புகுந்து கொண்ட பாம்பை தடிகளை வைத்து அன்று இரவு வரை தேடிப் பார்த்தும், போன இடம் தெரியவில்லை. மட்டைத் திண்ணையில் வைத்து அப்பாவுக்கு சடங்குகள் செய்யப்பட்டன.

பிரம்மதேசம் சங்கரை அழைத்து வந்து மொந்தை வைத்துப் பார்ப்பதற்கு முன்னதாகவே நிகழ்ந்தேறிய அப்பாவின் மரணம், அம்மாவுக்கு பித்து பிடித்துப் போனது.

அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அம்மா எல்லோரும் படுக்கும் இடத்தையெல்லாம் மாற்றி விட்டிருந்தாள். நாட்கள் கடந்து விட்டிருந்தன. கீழக்காற்றையும் அப்பாவை பற்றிய நினைப்பும் அம்மாவை சுழன்று கொண்டே இருந்தது.

அப்பா இரவில் வந்து போவதாகவே நினைத்துக் கொண்டிருப்பாள். அப்பாவுக்கான துணி மூட்டையினை கூடுதலாக தன் தலையனைக்கு அருகில் வைத்துவிடுவாள்.

இரவு பாம்பின் ஊறலாக நகர்ந்து வந்து கூரையில் விழுந்து கிடக்க தொடங்கியதும், அம்மாவுக்குள் அப்பாவின் பீடியின் வாசம் கமழத் தொடங்கிவிடும். வாயை பிளந்து பெருமூச்சுக்கொண்டு இழுப்பாள்.

அப்பாவைக் கடித்த பாம்பு அம்மாவின் கன்னத்தில் தலையினை வைத்தும், எங்களின் மீது உடலினை நீட்டியபடி இரவில் படுத்துக் கொண்டிருந்ததாக அம்மா சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்பாவின் நினைப்போடு இருக்கும் அம்மா சுவாதீனம் இல்லாமல் சொல்லுவதாகவே எல்லோரும் நினைத்துக் கொண்டார்கள்.

அம்மாவுக்கு அப்பாவின் நினைவு இறை விழுங்கி நகரும் பாம்பாகத்தான் இருந்தது. அவரைப் பற்றி நினைவு ஏற்படும் பொழுதெல்லாம் தானியக் குதிர்களுக்கு இடையில் இருந்து வரும் அப்பா வருவதாகவும், அம்மாவின் கன்னத்தில் தலை வைத்துக் படுத்துக் கொள்வதாகவே நினைத்துக் கொள்வாள்.

தங்கை வேலூருக்கு திருமாணாமாகிப் போயிருந்த வருடத்தில் அம்மா படுக்கையாகி விட்டிருந்தாள். மேற்குப் பக்கமாய் இருந்த காலி மனையினை இரண்டாக பாகம் பிரித்து கிழக்குப் பக்கமாக இருந்த தொங்கல் மனையினை தம்பிக்கு பாகம் போட்டு பிரித்துக் கொடுத்திருந்தாள்.

பழைய வீட்டிலேயே இருந்து கொண்ட அம்மா, அப்பா படுத்திருந்த இடத்திலேயே படுத்துக்கொண்டாள். அவள் தனிமையுணர்வதாக தெரியவில்லை. சயங்களில் நடுக்குதிரிலியே அப்பா இரவெல்லாம் படுத்திருப்பதாக அவளை பாரக்கும் பொழுதெல்லாம் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

பெருமழை பெய்து ஊரின் மூன்று ஏரிகளும் நிறைந்து கடை ஓடிக்கொண்டிருந்தது. தரை மண் ஓதங்கண்டு சுவற்று மண் தரையில் உதிர்ந்துகொண்டிருந்த இரவொன்றில் அம்மா நெஞ்சை அடைப்பதாக சொன்னாள்.

மொந்தை வைத்துதான் பார்க்க வேண்டும் என சொல்லிக் கொண்டே இருந்தாள். நாட்டு வைத்தியமே செய்துகொள்ளும் அம்மா, வைத்தியசாலைக்கு கூட வருவதில்லை. மொந்தை வைத்துப் பார்த்தால், அப்பா வந்து வாக்கு சொல்லுவார் என்பது அம்மாவின் நம்பிக்கை.

ஒவ்வொரு வருடத்திற்கும் விதைப்பு, தானிய வெள்ளாமை, அறுவடையை நிறம் பார்த்து சொல்வதற்காக மொந்தை அடித்து சொல்லும் பிரம்மதேசத்து சங்கர்தான் வந்திருந்தான். இரவு நேரத்தில் காட்டில் பெரும்புடி வேலை செய்தவர்கள் தூங்கி விட்டிருந்தனர்.

வேலம்பட்டை போட்டு காய்ச்சப் பட்டிருந்த சாராயத்தினைக் குடித்துக் கொண்டே, அரசம் இலையில் வறுத்து வைத்திருந்த பன்றிக் கறியினை மூக்கு வடிய தின்றான். பின் இரவுவரை மொந்தை அடித்துக்கொண்டே இருந்தான்.

அம்மா மொந்தையின் ஓசையில் முழ்கி போனாள். அப்பாவின் நினைப்பு அவளுக்குள் சட்டை உரித்த பாம்பாக உயிர்பாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. அம்மாவுக்கு “நேருப்பாடு சந்திப்பாடு” நேர்ந்திருப்பதாக சொல்லி விட்டு மந்திரித்த விபூதியினை அடித்து விட்டுப் போனான்.

மறுநாள் அம்மாவுக்கு காய்ச்சலும், வாந்தியுமாகவே இருந்தது. சாப்பிடமுடியாமல் படுக்கையாகி போனாள். அம்மாவுக்கு ரவிக்கை அணிய முடியவில்லை. அப்பாவுக்கும் எங்களுக்கும் பால் ஈந்த முலையில் அம்மைக் கொப்பளம் கண் திறந்திருந்தது.

அப்பாவுக்கு கண் திறந்திருப்பதாக அம்மா சொல்லிக் கொண்டிருந்தாள். மலைக்காட்டுக்குப் போன அம்மா வேலிக் கருவை முள் தீண்டியதில் இடதுகாலில் இடுக்குகளில் ஏற்பட்ட புண் கரைப் போட்டுக் கொண்டது. அம்மாவுக்கு யாரை பற்றியும் நினைவு வைத்திருக்க முடியவில்லை.

புத்தி பேதலித்துப் போனதாக ஒழுங்கற்ற சம்பவங்களை நினைவுப் படுத்தி அதனைப் பேசிக் கொண்டே இருந்தாள். இறந்துபோன அப்பாவுக்கு பிடித்த நெத்திலிக் கருவாட்டுக் குழம்பில் கத்தரிக்காய் போட்டு வைத்திருப்பாதாகவும், “இந்தா நீ ஓருவாய் சாப்புட்டுப்போ” என்பதாகவும் சொல்லுவாள்.

படுத்தே கிடக்கும் அம்மாவின் முதுகெல்லாம் புண்கள் புரையோட்டம் கண்டிருந்தன. புடை கண்டிருந்த இடத்தில் புழுக்கள் கொத்துக் கொத்தாய் கொட்டி மொயமொயவென ஓடின.

சிறுவாச்சூரிலிருந்து வரும் மெடிக்கல் கடை வைத்திருக்கும் கமாலுதீன் துடைத்துக் கட்டுப் போட்டு விட்டுப் போவார். அதற்குகூட அம்மா வேண்டாம் என கூக்கரைக் கட்டுவாள்.

இரவு நேரங்களில் புழுக்கள் அம்மாவைச் சுற்றி மேய்ந்து கொண்டிருப்பதை குதிர் இருக்குகளில் இருந்து வரும் அப்பா பொறுக்கித் தின்று விடுவதாக அம்மா சொல்லிக்கொண்டே இருந்தாள். பக்கத்ததில் படுத்திருந்தால், அப்பாவைப் பற்றி நிறைய கதைகளை அம்மா சொல்லிக் கொண்டே இருப்பாள்.

படுத்தே கிடக்கும் அம்மாவிற்கு நேரத்திற்கு பசி எடுத்துவிடும். “சோறு என்னாடா ஆச்சி” என சத்தம் போடுவாள். “ஏம் பிரிச்சேங் சம்பார்த்தையினையிலதாங் நான் குந்திக்கிட்டுத் திங்கிறேங். நான் எந்த பயிலுக்குங் பயப்புட செலவில்லே. க்கூங்” என தொண்டையை செருமிக் கொண்டே கெம்பரம் கட்டிக் கொண்டு சாப்பிடுவாள்.

நினைவுகள் திரும்பியவாறு வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். உடலெல்லாம் தீப் பற்றி எரிவதாக திண்ணையெங்கும் புரண்டு அழுவாள். அக்குல் இரு பக்கத்திலும் தனது கைகளை வைத்து நெஞ்சிக் கூட்டினை பிய்த்து எரிய வேண்டும் என்பதாக சொல்லுவாள்.

“கோரப்புல்லு குச்சிமாதிரி” நெஞ்சு எலும்புகள் அனைத்தையும் புழுக்கள் குதறிப் புடுங்குவதாக சொல்லுவாள். இரவில் அவளின் அழுகை அகோரமாக இருந்தது. சமயத்தில் வார்த்தைகள் புரண்டு வரும். சுயநினைவில் இருந்து மீண்டு தன் நினைவுக்கு வருவாள்.

“நேத்து ராத்திரிக்கி, ஒங்க ஆயாவுந் கெழவாடியுங் வெள்ள வெளேர்னு குதுரையில வந்து எறங்குனாங்க. பளபளன்னு விடியிற நேர மாதிரிக்கி தெரிஞ்சிச்சி. ஆகாசம் நெறயா கெருடனாப் பறந்துச்சி. வெத்தலப் போட்டுக்கிட்டு, அப்புடி ஒரு சிரிப்பு ஒங்க அப்பனுக்கு. நல்ல வயிசுலப் பாத்தது மாதிரிக்கி இருக்குது ” அம்மாவுக்கு பொழுது கனவோடு கலந்து போனது.

அவள் படுத்திருந்த இடத்தில் நீர் பெருக்கெடுத்த ஓடியதைப் பார்த்து “அடுத்த ஐப்பசிக்கும் ஊர் ஏரி நிறைந்து ஓடும்” என்றாள். மெடிக்கல் கடை வைத்திருக்கும் கமாலுதீன் உடம்பெல்லாம் துடைத்து ஊசி போட்டுவிட்டதும், “புண்ணு பொறக் கண்டுப் பொடப் பொடையாப் பாம்பு புத்து மாதிரிப் போவுது. இனிமேல்டு கட்டுக்கு அடங்காது” கருணாகரன் ஆஸ்பத்திரியில்தான் போய் காட்ட வேண்டுமாய் சொல்லிவிட்டுப் போனார்.

அம்மாவுக்கு கண்பார்வையும் மங்கிக் கொண்டே வந்தது. வெளிச்சத்திற்கும் இரவிற்கும் புதிய நிறத்தினை கண்டுபிடித்த அவள், பகலையும் இரவையும் கண்ணுக்குள்ளே அடைத்துக்கொண்டாள்.

நாங்கள் எல்லோரும் அவளுக்கு பகல் இரவு நிறத்தில்தான் இருந்தோம். எங்களின் நிறம் அவளிடம் பறந்துப்பட்டதாக இருந்தது. இரவு பத்துமணிக்கு வாசல் தெளித்து, கோலம் போடவில்லை என்பதாக குறைப்பட்டுக் கொண்டே படுத்துக் கிடப்பாள்.

அம்மை கொப்புளங்களால் அப்பாவுக்கு பால் ஈந்து கொண்டிருந்த அம்மாவின் முலையில், மேலும் மூன்று அம்மை கொப்புளங்கள் வந்திருந்தன. தானியங்கள் நிறைத்து வைத்திருந்த குதிர்களை எலிகள் கடித்து குதறி வலை வைத்துக் கொண்டதாக அம்மாவுக்கு ஆற்றாமை தாங்கவில்லை.

அம்மா நினைப்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் முலைகள்தான் தானியங்கள் நிறைத்து வைத்திருக்கும் குதிர்கள். கொப்புளங்களாக வெடித்து அம்மாவின் முலையிலிருந்து வெளியேறும் தண்ணீர்தான் குதிர்களை குதறி சிந்தும் விதை தானியங்கள்.

பெரும் நிலமாக இருக்கும் அம்மாவின் முலைகள், மண்ணில் விதைகளை ஊன்றிக் கொண்டே இருந்தது. இறக்கும்வரை அப்பா அதை தான் தனக்குள் வைத்திருந்த விதைகள் முளைக் கட்டி வளர தண்ணீராய் பருகிகொண்டார்.

குதிர்களில் கொஞ்சமாய் விதைக்காக வைத்துவிட்டுப் போயிருந்த அப்பாவின் தானியங்களுக்குதான் அம்மாவின் முலைகளிலிருந்து தண்ணீர் பெருக்கெடுத்துப் வழிந்து கொண்டிருந்தது.

அம்மாவுக்கு குற்றம் தலைக்கேறி போனது. குதிரில் போடப் பட்டிருந்த தானியங்களின் நினைப்பாகவே இருந்தாள். அவள் கண்களுக்குள் அடைத்து வைத்திருக்கும் பகல் எப்பொழுதாவது வெளியே கண்ணீரோடு இரவாய் வழிந்தோடும்.

எங்களுக்கு புடைத்து இடித்துப் போட்டதையெல்லாம் நினைத்துக் குமைந்து போனாள். தோளில் இணைக்கப்பட்டிருந்த அகப்பையாக தனது கைகளை நினைத்துக்கொண்டு “பெரியவனே சின்னவனே” என்று கூப்பாடு போட்டுவிட்டு எங்க இந்த “ பொட்டக்குட்டியையுங் காணோங் ” என தனது பால் வற்றிய முலையினை தொட்டுப் பார்க்க வேண்டும்போல அவளுக்கு இருந்தது.

விரல்களை கூட அசைக்க முடியவில்லை. கொப்புளங்கள் உடைந்து தண்ணீர் வெளியேறிக் கொண்டிருந்ததை கூட அம்மா, எல்லோருக்கும் பால் ஈந்து கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தாள். அம்மா எதையாவது கொடுத்துக் கொண்டே இருப்பது அவளுக்கு வாடிக்கையாகவே வைத்திருந்தாள்.

அப்பாவினை கிடத்தி வைத்திருந்த தென்னங்கீற்று மட்டை மறைவாக கட்டப்பட்டிருந்த திண்ணையிலேயே அம்மா படுத்துக்கொண்டாள். மட்டை திண்ணை சிங்கப்பல் முளைத்து விளைந்த சலவன்குட்டியின் உயரம்தான் இருக்கும்.

இரவுக்கும் பகலுக்குமான அப்பாற்பட்ட பொழுது காற்றுக்கு அண்டையாக அம்மாவோடு உலும்பிக் கொண்டே இருக்கும். அம்மாவுக்கு சலவன் குட்டிகளோடு ஐப்பசி மாதம் வரை கடந்து வந்திருந்தது.

யானைத் தந்தமாக மேல் உதட்டில் மீசையினை அள்ளி வைத்துக் கொண்டு நரிக்கொம்பு விற்றுக்கொண்டு வந்திருந்தவனிடம் அம்மா “தேவாங்கு புனிக்கயிறு ” வாங்கி கட்டிக் கொண்டதும், அப்பா, அம்மாவைப் பார்த்துவிட்டு போனதாக சொன்னாள்.

இந்தமுறை வந்த அப்பா, அம்மாவையும் குதிர்களையும் பார்த்துவிட்டு அழுவதாக சொன்னதோடு, தனது ஆண்குறி விரைக்க தெரு விளக்கு மரத்திற்கு அடியில் அமர்ந்திருப்பதாக சொன்னாள்.

“ஐப்பசியில் கொள்ளிக் கருவாடு வறுத்து வைத்து காடாத்துணியோடு நாட்டுக்கோழி முட்டை முகத்தினை கீறி வைத்துப் படைக்கினும் ” என்றதோடு, அப்பாவின் நினைவாக சர்க்கரை வள்ளிக் கிழங்கு அவித்து திண்ண வேண்டும் என்று சொன்னாள்.

அம்மாவுக்கு அப்பா அருகில் படுத்துக் கொண்டு பீடியினை புகைத்துக் கொண்டிருக்கும் வாசனை பிடிக்கவேண்டும் போல் இருப்பதாக தெரிந்தது.

 “என்னை நடுக்குதிரின் பக்கத்தில் போய் போடுங்கடா” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். அப்பாவுடனான புணர்ச்சியின்போது அப்பாவிடமிருந்து எழும்பிவரும் பீடியின் வாசனையினை அம்மா நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. அன்றாடம் புதியக்கதை ஒன்றை சொல்வதற்காகவே வந்து கொண்டிருந்தது அவளுக்கான பொழுது.

பச்சை தென்னம்மட்டையில் கிடத்தப்பட்டிருந்த அம்மாவின் பால் ஈந்திய முலைகள் அதங்கி தண்ணீரக் குழம்பாய் பெருக்கெடுத்து ஓடியது. தன்மீது மூடாக்காக எதையும் போடவேண்டாம் என சொல்லிவிட்டாள்.

அதன் பிறகு அவள் எதையும் பேசவில்லை. அம்மா அப்பொழுதுதான் பிறந்த குழந்தையாக திண்ணையில் கிடந்தாள். அந்தி பொழுதில் மழை தொசங்கட்டி அடித்தது.

அம்மா படுத்துக்கொண்டிருந்த திண்ணையில் கட்டப் பட்டிருந்த தென்னம் மட்டையில் சாரல் தொங்தொங்கென விட்டு விட்டு அடித்தது. அம்மாவை நடுக்குதிருக்கு அண்டையாகப் போடப் பட்டதும், அம்மா அகண்டு திறந்து குதிர்களைப் பார்த்ததும் கண்களை மூடிக்கொண்டாள். மீண்டும் திறக்கவே இல்லை.

மழை நின்றபாடாக இருந்தது. பளபளவென விடிந்துக் கொண்டிருந்த பொழுதில் அம்மாவிடமிருந்து எந்த சப்தமும் வரவில்லை. இரவில் அப்பா தன்னுடனே படுத்துக் கொண்டு மலர்ந்து விரிந்த வெண்சாமரை சோளக் கதிரைப் போல தனது கன்னத்தில் விரல்களை வைத்து வருடிக் கொண்டிருப்பதாகவே அம்மாவின் முகச்சாயல் பூரிப்பாய் இருந்தது.

அம்மாவின் தலைமாட்டுக்கு அருகில் தீக்கரிக்கோடுப் போடப்பட்ட பீடித்துண்டும் கிடந்தது. நடுக்குதிரின் இடுக்கிலிருந்து பாம்பு மேற்குப் பக்கமாய் வெளியேறிப் போனது.

மேலக்காட்டில் புழுதிக்காறு, நெல் விதைக்கும் காட்டின் வரப்புகளில் தண்ணீர் காற்றுக்கு தொங் தொங் என முட்டிக் கொண்டு நின்றது. நடுக்குதிரில் அப்பா வைத்துவிட்டுப் போயிருந்த புழுதிக்காறு விதைகளை அம்மாவுடன் சேர்த்து மேலக் காட்டில் விதைப்பதாக இருந்தார்கள் அசுணக்குடிகள்.

- க.மூர்த்தி

.