நான் இந்த வீட்டுக்கு குடி வந்து ஒரு மாசம் இருக்கும்.

எங்கள் வீதியில்... ரகசியம் சுமந்துக் கொண்டு நிற்கும்... ஓர் அரண்மனையின் அதர பழசான ஒப்பனையில்... மஞ்சள் வண்ணம் பூசப்பட்ட அந்த வீட்டின் மீது... வந்த இரண்டாவது நாளில் இருந்தே கவனம் குவிய ஆரம்பித்திருந்தது. போகும் போது வரும் போது... எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம்... பட்டும் படாமல்... தொட்டும் தொடாமல்... எட்டியும் எட்டாமலும்... கடைக்கண்ணில் ஓரமாய்... ரகசியமாய் அந்த வீட்டு வாசலை மேயத் தோன்றியது.

நின்று கடக்கையில் எல்லாம் கடக்காமல் நின்று கொண்டே இருக்கும் அந்த வீட்டு வாசலில்... வகை வகையான ஈர்ப்புகள். வறண்ட நாக்கின் கோரம் வகை வகையான வண்ணத்தில்.

ரசனை... விருப்பம்... பொறாமை... வஞ்சம் இவையெல்லாம் தாண்டிய ஒரு வித கிளர்ச்சியை உணர்கிறேன். ஓர் உந்துதல் அந்த வீட்டின் வாசலுக்குத் தள்ளுகிறது. அந்த வீட்டில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடிய போதெல்லாம் புது புது மனிதர்களாக காண நேரிடுகிறது.

பளபளவென மின்னும் ஆடையில்... தினம் ஒரு மனிதனைக் காண்கிறேன். அவர்கள் புத்தம் புதிதாக இவ்வுலகைக் காண்பது போல இருக்கிறது. ஒவ்வொரு கண்ணிலும்... வாழ்தலின் உயிர்ப்பு. விடுதலையின் வேட்கை உணர்ந்து திருந்தியது போன்ற உவகை புன்னகை. அதில் இன்னும் ஆர்வம் மேலோங்குகிறது. அதுவும் ஒவ்வொரு நாளும் வேறு வேறு வயதுடைய பெண்கள். பார்க்கவே ஒரு ஹாஹ் உள்ளே விரிகிறது. ஒவ்வொரு நாளும் புத்தம் புது காலை தான் போல.

அது வீடா இல்லை எதுவும் அலுவலகமா இல்லை விடுதியா.

நான் கிழக்கும் மேற்குமாக வீதியில் அலைந்து திரிந்து அந்த வாசலில் வண்ணம் சேர்க்கப் பார்ப்பேன். உள்ளிருந்து ஒரு வயதான மனிதன்... இவர் வெளியே வந்து தான் வானத்தை திறப்பது போன்ற பாவனையில் வருவார். பேச தோன்றும். என்ன பேசுவது பக்கத்து வீட்டில்... அடுத்தடுத்த வீட்டில்... யார் யார் இருக்கிறார்கள் என்று யாருக்குத்தான் தெரிகிறது. எனக்குத் தெரிய.

"வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்... அட... வாசல் இல்லா வீடும்..." அடுத்த வரியை மறக்கடிப்பது போல செம கிக்காக ஒரு பெண் அந்த வீட்டில் இருந்து வருவாள். எதிரே இளமை ததும்ப வளைந்து நிற்கும் புன்னை மரத்தின் பின்னே பதுங்குவேன். உள்ள ஏதும் பதுங்கு குழி வைத்திருக்கிறார்களா.. தினம் தினம் ஒருத்தன் வந்துக் கொண்டிருக்கிறான்.

வாரத்தில் ஓரிரு நாட்கள் வந்தவர்களே திரும்ப வந்திருக்கிறார்கள். இன்னதென தெரியாவிடின் என்னதென தெரியாமலே போகும். நான் குட்டி போடவே நடக்கும் பூனையைப் போல அந்த வாசலில் நடந்தேன். அந்த வாசலில் கிடந்தேன். முன்னும் பின்னுமாக.. சென்று வந்து... வந்துப் போய் அது சுகமான சுமையாக இருந்தது.

தூக்கம் முதுகில் விழித்துக் கிடந்தது. என்ன ஆனாலும் சரி... என்று சாமியை கும்பிட்டு விட்டு... திருட்டு நடையில் இன்று அந்த வீட்டின் பின் கட்டை அடைந்து விட்டேன். அதிகாலை நேரம்... அந்திமாலை கொஞ்சத்தை அணைத்துக் கொண்டிருந்தது.

இந்த மாதிரி கியூரியாசிட்டி எனக்கு மட்டும் தானா... இது என்ன மாதிரி மனநிலை. என்ன மாதிரி மனநிலையாக இருந்தாலும்... அது என்ன மாதிரி என்று பார்த்து விட வேண்டும். தீர்க்கமான மனதோடு மஞ்சள் வீடு நுழைந்திருந்தேன்.

பெட்ரூமுக்கும் சேராத ஹாலுக்கும் சேராத ஒரு நீள அகல அறை அந்த வீட்டின் நடுவே உடல் திறந்து கிடந்தது. அறை முழுக்க அழகாய் அடுக்கி வைத்தாற் போல மடங்கி நீளும் வரிசையில்... முன்னும் பின்னுமாக பல பெட்டிகள் இருக்க.... குவிந்த நெற்றியில் கோடுகள் விழுந்தது. யோசனையை அதில் கோலமாய் இட்டு... இன்னும் கொஞ்சம் முன்னேறினேன்.
கண்களில் குளறுபடி காதுகளில் இனம் புரியாத பேரிரைச்சல். இன்னும் கொஞ்சம் அருகே செல்ல முயற்சிக்க.. அதே நேரம்... ஒரு மாநிற மனிதன்.. குளித்து விட்டு வேகமாய் குளியலறைக்குள்ளிருந்து வெளியேறி அந்த பெட்டிகளின் அருகே நின்றான். பட்டென்று பின்னால் இருந்த தூண் மறைவில் குனிந்தபடியே பதுங்கினேன்.

ஒவ்வொரு பெட்டியாக கூர்ந்து பார்த்தான். நானும் அவனை கூர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவன்... நேற்று வெளியேறிய மனிதன். என்ன பார்க்கிறான். என்ன பெட்டி இது... கவனம் மீண்டும் பெட்டிக்கு வர... வரவே... அவன் யோசித்து முடித்திருந்தான். பட்டென்று ஒரு பெட்டியை திறந்தான். குப்பென்று பெட்டிக்குள் இருந்து புகை கிளம்பியது.

அப்போதுதான் என் கவனம் அது குளிர்சாதன பெட்டி என்று உள் வாங்க தயாரானது. திறந்த குளிர்சாதன பெட்டிக்குள் இருந்து எதையோ வெளியே இழுத்தான். திக்கு தெரியாத காட்டில்... தினங்கள் எங்கே முளைக்கும். நான் தூணில் சரிந்துக் கீழே குனிந்து அமர்ந்தேன். என் காதுகள் தனியாக நடுங்குவதை உணர முடிந்தது. அந்த வீட்டில் உள்ளே படந்திருந்த நிறம் மெல்ல மாறிக் கொண்டிருந்தது. காதுக்குள் இரைந்த சத்தம் இன்னும் அதிகமானது.

அவன் இழுத்தத்தில் வெளியே வந்து விழுந்தது... துணியால் மூடி இருந்த ஒரு பிணம். டெட் பாடி. நான் வாய் பொத்தி கண்களால் முனங்கினேன். அந்த பிணத்தை பக்குவமாய் இழுத்து சென்று ஹாலில் கிடத்தி அருகே அமர்ந்து கண்களை மூடி எதையோ முணுமுணுத்தான். அந்த முணுமுணுப்பு அந்த அறையில் சுழலுவதை என்னால் உணர முடிந்தது. ஊதா நிறத்தில் அந்த சத்தம் உறுமிக் கொண்டலைந்ததை உணர உணர உடல் முழுக்க உடும்பேறியது போல. முதுகில் சம்மட்டி கொண்டு யாரோ அடிப்பது போல.

தினமும் ஒவ்வொரு மனிதனாக இந்த வீட்டு வாசலில் இருந்து வருவோர் ஒரு கணம் படபடவென நினைவில் வந்து போனார்கள். புகைகளின் நடுவே... உருவத்தின் கூடு தன்னை தானே வரைந்து வரைந்து அழிவது போல உணர்ந்தேன். வேகமாய் தோன்றிய யோசனையோடு... வெறிக் கொண்ட பூனை நடையில் அடுத்தடுத்து பிரிட்ஜைத் திறந்து திறந்து பார்த்தேன்.

ஒவ்வொன்றிலும் அழகழகாய் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு பிணம். நான் தினம் தினம் பார்த்த... அந்த ஒவ்வொரு மனுஷனும் மனுஷியும் பிணமாக உள்ளே சுருண்டிருந்தார்கள். தொண்டைக்குள் ஒவ்வொரு பிணமும் கத்துவது போல எதுவோ உளர... அனிச்சையாய் தரையோடு தரையாக ஊர்ந்துக் கொண்டே ஹாலின் முகப்புக்கு சென்றேன்.

அந்த மனிதன்... துணி விலக்கி கீழே கிடத்தியிருந்த என் பிணத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்துக் கொண்டிருந்தான்.

- கவிஜி