இருப்பதிலேயே மோசமான இரவு பிணம் காக்கும் இரவுதான்.

எல்லாம் மியூட் ஆகி... காலத்தைக் கடப்பது சகிக்க இயலாத கசப்பின் நெடி. உடல் நடுங்க உள்ளத்தின் கதவுகள் படீர் படீர் என அடைத்துக் கொள்ளும் நிர்பந்தம் தகித்தது. நிறமற்று நின்றிருந்தேன். நியாயமற்று படுத்திருந்த அத்தை வந்தோர் வராதோர் பற்றிய அக்கறை சிறிதும் இன்றி கிடந்தது.

எல்லாமே மாறி விட்டது போலத் தோன்றியது. ஊர் அசைவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. வீதிகளின் குறுக்கும் நெடுக்கும்.. நேர்மையற்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டிருந்ததை காண இயலாமல் நீல வானம்.. நித்திரைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கலாம். தானாய் மேலேறிய முகத்தில் வானத்தின் துக்கமும்.

சுற்றிலும் பெண்கள்... எல்லாரும் சொந்த பந்தங்கள் தான். நொந்த மனம் கந்தை உடலில்... கிடந்தது போல அத்தையின் கிடைமட்டப் படுக்கை வாய்க் கட்டி கண்கள் மூடி... கால் கட்டி.. கைகள் மூடி... உடல் சுற்றி உலகம் நிறுத்தி விட்டிருந்தது.

நின்று காண சகியாமல் கூனி குறுகி அழுது விட தோன்றியது. படீரென வெடித்துக் கிளம்பிய அழுகையை... பேருண்மை பைத்தியம் என்று சொல்லி விடும். பதறினாலும்.. பாதுகாப்பாய் வெளியே வந்து விட்டேன். வாசலில் ஓரமாய் அமர்கையில்... பாரத்தின் சாரம்... அத்தையின் புன்னகைகளை என் மீது கவிழ்த்தியது.

நண்பர்கள்... சொந்தக்காரர்கள்.... ஊர்க்காரர்கள் என்று மனிதர்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஆளாளுக்கு ஒரு சோக முகம். ஆளாளுக்கு ஒரு ஜோடி அழுகை. சாவு வீட்டில் அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு பின் என்ன செய்வதென்று யாருக்கும் தெரிவதில்லை.

சாவு வீட்டில் நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்துக் கொள்பவர்கள் வேறு வழியின்றி புன்னகைத்து விடுகிறார்கள். புதிர் உடைக்க தேநீர் உதவுகிறது. வயது வந்த பெண் பிள்ளைகள் தேநீர் தந்து... வந்தவர்களை கவனித்துக் கொண்டிருக்க... சாவு வீட்டின் வெளிச்சத்தில்... ஒரு பயங்கரம் இருப்பதாக தோன்றியது.

அதற்கு அவர்கள்... இதற்கு இவர்கள் என்று ஆளாளுக்கு அங்கும் இங்கும் நடந்து கொண்டேயிருந்தார்கள். சாவு வீட்டிலும் ஒரு கல்யாண வீடு இருக்கிறது. வீதியைப் பிளந்து கொண்டு வந்து நின்ற வண்டியில் இருந்து இறங்கிய உறவுகள் அழுதபடியே உள்ளே சென்றார்கள்.

குரல்களின் வழியே மரணம் நெருங்கியதை வாசலில் அமர்ந்திருந்த மனிதர்கள் உணர்ந்தார்கள். சொல்லிச் சொல்லி அழுதார்கள். சிலர் சொல்லாமலே அழுதார்கள். சொக்கி விடும் அழுகை கூட சிலருக்குள் இருந்தது. சிந்திக்க ஒன்றுமே இல்லாத பொழுதுகளை சாவு வீட்டின் இரவு... படிப்படியாய் நிகழ்த்தும். நிகழ்த்தியது. வானத்தில் ஒன்றுமே இல்லை. நீலம் இருந்ததா என்றுகூட எனக்கு தெரியவில்லை. பிறகு வானம் இருந்ததா என்றும்தான்.

செயல்பாடாத உடலை இத்தனை அருகில் காண்பது பித்து நிலைக்கு தள்ளியது. நேற்று வரை சாதாரணமாக நடை போட்டுக் கொண்டிருந்த அத்தை இன்று மாலை நான்கு மணிக்கு நெஞ்சை பிடித்துக் கொண்டு சரிந்ததை மரணம் என்று எப்படி உணர்ந்து கொள்ள. மிகச் சிறிய வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட வாழ்க்கை எப்போது முற்று பெரும் என்று எந்த பயணத்துக்கும் தெரிவதில்லை.

உள்ளூர் அரசியல் தெளிவோ... உலக அரசியல் தெளிவோ... துளி கூட இல்லாத மனிதர்கள் மத்தியில் தான் வாழவும் வேண்டி இருக்கிறது. சாகவும் வேண்டி இருக்கிறது. சுடுகாடு இல்லாத ஊரில்.. வீட்டுக்கு வீடு குடிமகன்கள்.

மானங்கெட்ட ஒரு வாழ்வை செத்த பிறகு தான் உணர முடிகிறது. இதே ஆண்டில் ஊருக்குள் ஏற்கனவே மூன்று மரணங்கள் நிகழ்ந்து விட்டதால்... புதிய மரணத்தைப் புதைக்க சுடுகாட்டில் போதிய இடமில்லை. ஆகவே.... எரித்து விடுவது என்று முடிவானது.

எரித்தல் ஆகாது என்ற மதத்தை இத்தனை பேர் மத்தியில் தூக்கிப் போட்டு மிதிக்க இயலவில்லை. ஊரோடு ஒத்து வாழ் என்று எவனோ ஒத்தூதியதை தூவென துப்பி சகித்திருந்தேன்.

என்ன செய்வதென தேடி அலைகையில்.... பக்கத்தூரில் உள்ள ஒரு நல்ல மனம் எங்கள் கல்லறைத் தோட்டத்தில் புதைத்துக் கொள்ளுங்கள். ஆனால்... ட்ரஸ்ட்க்கு மட்டும் இத்தனை தந்து விடுங்கள் என்றார்கள்.

குடிமகன்களோடு போராடுவதற்கு நீதிமான்களோடு பணப்புழக்கம் செய்து கொள்வது சுலபம் என்று... பேச்சு வார்த்தை முடிந்து அக்ரிமெண்ட்டும் போடப்பட்டது. பெரும் சுமை சவப்பெட்டியில் பத்திரமானது.

குழிக்கு வசதி செய்து விட்டு வீடு திரும்புகையில்... மீண்டும் மரண வாசம் மிக அருகில். பக்கத்து வீட்டுக்காரர்களில் கூட சிலர் சாவுக்கு சொல்லி விட்டால் தான் வருவேன் என்று வராமல் வாசலில் நின்று எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது மானுட அருவருப்பு.

சாவில் ஈகோ பார்க்கும் மானங்கெட்ட மனிதர்கள் மீது என்ன வகையான வன்மத்தை உபயோகிப்பது. நெருக்கி நீட்டி பார்த்தால்... எல்லா டாக்- களும்... சொந்த பந்தங்கள் தான். குடிக்கு சாகும் இடியட்களின் நிழலில் கூட வஞ்சத்தின் நெடி.

"அட... அவுங்கள்லாம் சிலுவைச்சாமி கும்புடறவங்கப்பா... நாங்க எப்படி உள்ள வந்து..." என்று எட்டி நின்று மீசை முறுக்கி பார்த்து போன கிழட்டு ஜென்மங்களை செருப்பால் அடித்தால் என்ன என்று தோன்றியது. ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று மதம் மாறிய மனிதர்களின் கதையை நினைத்தால்... இப்படி கண்றாவி திரைக்கதை தான் எழுத முடியும்.

மத்தளம் அடிப்பதா.... மௌனம் வெடிப்பதா என்று ஒரு கூறுகெட்டக் கூட்டம் விவாதித்துக் கொண்டிருந்தது.

நான் தம்பியை அழைத்து... "ஊருக்கு கோயில் எவ்ளோ முக்கியமோ... அதே மாதிரி சுடுகாடு ரெம்ப முக்கியம். எல்லாரையும் ஒன்னு திரட்டு. சேர்ந்து பேசு. கூட்டிட்டுப் போய் போராடு. உரிமையை நின்னு கேளு. உண்மையை உரக்க சொல்லு. முருகனா ஏசுவான்னு இன்னும் உங்களுக்குள்ளயே சண்டை போட்டுக்கிட்டு இருந்தீங்கன்னா... சுடுகாடு மட்டும் இல்ல... தெரு பாதை கூட இல்லாம போகும். பூசாரிக்கு பாஸ்டர்க்கும் பயப்படறத முதல்ல நிறுத்துங்கடா... எதிர்கால சந்ததிக்கு பயப்படுங்க..." என்றேன். அவன் பின்னால் நின்ற இளைஞர் கூட்டம் காது கொடுத்து கேட்டது. கண்கள் விழித்துக் கொண்டதாகவே நம்பினேன்.

இரவு கூட கூட சிறகு உடையும் சாவு வீடு. எட்டி பார்த்தவர்கள் எல்லாம் எஸ்கேப். கிட்ட பார்த்தவர்கள் சிலர்... கால் நீட்டி அமர்ந்து... சுவரோரம் சரிந்து... கால் மேட்டில் அமர்ந்து... சோர்ந்து போன அழுகையின் மிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பேச சொற்கள் இல்லாத இரவு இது. நடு வீட்டில் கால் நீட்டி படுத்திருக்கும் அத்தைக்கு இது கொஞ்சம்கூட பிடிக்காது. நடுவில் அமர்ந்து ஒரு மூத்த தலைவியாய் நடந்து கொள்ளும் அத்தையை இப்படி சுற்றிலும் நின்றும் அமர்ந்தும் வேடிக்கை பார்ப்பது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை.

"அத்தை எந்திரிங்க... நாம வாசல்ல உக்காந்து எப்பவும் போல பேசுவோம்..." - என் முனங்கல் எனக்கு கேட்டது. அத்தைக்கு கேட்டதா.

மூச்சு விடாம பேசற அத்தை இப்டி மூச்சை விட்டுட்டு பேசாம படுத்திருக்கறது... கொஞ்சம் கூட நியாயம் இல்லை. என்ன மாதிரி காட்சி பிழை இது. நான் கண்களைத் தேய்த்துக் கொண்டு கவனமாக அத்தையின் அருகே செல்வதைத் தவிர்த்தேன்.

வாய் கட்டி படுத்திருக்கும் அத்தையை இந்த காலம் இன்னும் கொஞ்ச நாள் இங்கே அனுமதித்திருக்கலாம். அத்தையின் பிள்ளை- என் அண்ணி - அழுகையை மாலையாக்கிக் கொண்டே இருந்தார். வெடித்த குரலில்... விதி உடைந்து கசிவதை கேட்க முடியவில்லை. கேட்டாலும்... முடியவில்லை.

சொல்லி சொல்லி அழுகையில்... சொல்லாத எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு வந்தது. நானெல்லாம் அழுதால் எங்க அத்தைக்கு பிடிக்கவே பிடிக்காது. வீட்டின் சூரியன் எப்படி அழ முடியும் என்று வியாக்கியானம் பேசும். நான் வாசலில்... தெருவில்.. தம்பி வீட்டில் என்று மாறி மீறி மரணத்தை சுமந்துக் கொண்டே அலைந்தேன். இரவு இன்னும் இறுக்கமானது.

திடும்மென சுவற்றை உடைத்துக் கொண்டு வெளி வந்த சிற்பம் போல தாடி....குடுமியில் இருந்த இருள் மனிதன் ஒருவன் அத்தைக்கு முன் நின்று....

" அக்கா... சிவநேசா... சிவநேசான்னு போகும் போதும் வரும் போதும் கூப்பிடுவியே. மனசார... சாப்டியா சிவனேசான்னு அன்பா கேப்பியே... இனி யார் கேப்பா.. இனி யார் என்னை கூப்டுவாக்கா..." என்று தலையில் அடித்துக் கொண்டு அழுததைக் கண்டு நான் திகிலுற்றேன்.

இந்த மனிதன் ரெம்ப நேரமாக வாசல் ஓரத்தில் அமர்ந்து வானத்தையே வெறித்திருந்ததை நினைவு கூர்ந்தேன். எல்லாரும் களைந்த பிறகு மிக நிதானமாக உள் சென்று தன் துக்கத்தை பகிர்ந்து கொண்ட பாங்கு மேன்மையாய் இருந்தது. ஒரு தனித்த சிற்பத்து குமுறல் அது.

"அட சிவனேசா... போதும் வா.." என்று அழைத்த ஊர்க்காரன்கள்... முகத்தில்... சிவநேசன் யார் என்று தெரிந்தது. ஒவ்வொரு துளி கண்ணீரிலும் உண்மை சிந்தும் இந்த மனிதனையா...
'அவன் ஒரு மாதிரி..!' என்கிறார்கள். எனக்கு ஒரு முறை என்னையே பார்த்துக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

வாசல் காலியாகி.. வராண்டாவும் காலியானது. அருகே அமர்ந்திருந்தவர்களும் மெல்ல சரிந்தார்கள். நாங்கள் நாலைந்து பேர் வெளியே தீ மூட்டி சாவின் இரவை விரட்டிக் கொண்டிருந்தோம். தீயின் அருகாமை தூக்கத்தை தள்ளி போட்டது.

ஆனாலும் உள்ளம் தூங்கும் பின்னிரவை ஒன்றுமே செய்ய முடியவில்லை. கவலை அறுந்து விடும் நொடிகளில் சிறு மரணம் இந்த மானங்கெட்ட தூக்கம். தூங்காமலும் முடியவில்லை. துக்கமும் முடியவில்லை. உயிர் இருப்பதற்கும் இல்லாததற்கும் தூக்கமே இடைவெளி செய்கிறது. இந்த உடல்... பாதிக்குப் பாதி தூக்கத்தால் நிரப்பப்பட்டிருக்கிறது. பின்னிரவு அழுத்தம் இன்னும் துக்கம் கூட்டியது.

நேற்று வந்ததில் இருந்தே ஒரு இளைஞன் புதிதாக இருந்ததை கவனிக்க முடிந்தது. அங்கும் இங்கும் நடப்பதும்.. நிற்பதும்... எங்களோடு சேர்ந்து சிறு சிறு வேலைகள் செய்வதுமாகவே இருந்தான். விசாரித்ததில்...தூரத்து அண்ணன் மகள் ஜெனட் -ன் காதல் கணவன் என்றும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு முன் ரகசிய திருமணம் செய்து கொண்டு வந்து மன்னிப்புக் கேட்டு அழுது காதலை வாழ வைத்தவர்கள் என்றும்... ஆறே மாதத்தில்... வர வர காதல் கசக்குதையா என்று இப்போது ஏதோ சண்டையில் பிரிந்திருக்கிறார்கள் என்றும் தெரிந்தது. இந்த சாவை சாக்காட்டி எப்படியாவது அவளை சமாதானப்படுத்தி அழைத்து சென்று விடவும் அவன் வந்திருக்கலாம் என்றும் குறிப்புகள் வந்தவண்ணம் இருந்தன.

அந்தப் பையனை அவனுக்குத் தெரியாமல் கவனித்தேன். இயலாமை முகம். செய்வதறியாத தவிப்பு. சற்று முன்பு கூட யாரிடமோ இறந்தது எங்க பாட்டிம்மா என்று அலைபேசியில் சொல்லிக் கொண்டிருந்தான்.

அவன் எதற்கோ வாசல் வந்த ஜெனட்டிடம் "ஒரு டீ போட்டு தரய்யா..." என்று ஜாடையில் கேட்டான். அவள் போடா என்பது போல எதோ சொல்லி விட்டு நகர்ந்து விட்டாள். சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே... குளிருக்குள் நடுங்கியபடி தீயை சுற்றி ஒரு குளம் போல தேங்கி இருந்தான். நான் அவனைப் பார்த்தேன். அவன் இன்னும் தலையை குனிந்து கொண்டான்.

நான் திரும்பி அக்காவிடம் "எல்லாருக்கும் டீ தாங்க.." என்று ஜாடை செய்தேன். சற்று நேரத்தில் டீ வந்தது. டீயை வாங்கிக் கொண்டு 'தேங்க்ஸ்ங்க' என்று தலையை ஆட்டிக் கொண்டே உடல் குறுக அவன் சொன்னது ஐயோவென இருந்தது.

'என்னடா நடக்குது....!' என்று தம்பியிடம் கேட்க.. காதல் மர்மங்களால் ஆனது என்று உதடு பிதுக்கினான்.

"போய் கை நிறைய சம்பாதிச்சுட்டு வந்தா தான்... ஏத்துக்குவாளாம். மற்றவங்க முன்னால காசு பணம்னு கொண்டு வந்தா தான்.....கூட போய் வாழ்வாளாம்" என்றது ஒரு பெருசு.

அத்தை மரணம் பாடாய் படுத்த... அந்த பையன் டீ வாங்கிய உடல் மொழி சூடாய் கொதித்தது.

'எழுந்து இங்க வா' என்று அவனை அழைத்துக் கொண்டு தம்பி வீட்டு மொட்டை மாடிக்கு சென்றேன். சற்று நேரத்தில் ஜெனெட் -ம் சொல்லி விட்டபடி வந்து விட..."என்ன சித்தப்பா" என்ற மறுகணம் பளார் என்று அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டேன். கூட இருந்தோர் பதற.. அந்த பையனும் தடுமாறினான். திரும்பி ஒரு கனத்த பார்வை. எல்லாரும் கண்களைத் தாழ்த்திக் கொண்டு.... அடுத்து என்ன என்பது போல பார்த்தார்கள். அடி வாங்கிய ஜெனெட்டின் உடல் நடுங்க...... சித்தப்பா என்று வாயெடுத்தாள்...

"ஆக்டிங்கு... ம்ம்ம்... லவ் பண்ணி ஓடி போய்தான கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க... அப்ப தெர்லயா.....அவனுக்கு வேலை இல்லன்னு. இப்ப ஊருக்குள்ள மானம் போன பின்னால தான் வேலை இல்லை வெங்காயம் இல்லன்னு தெரியுதா. உன் பாட்டி செத்ததுக்கு ஊர்ல இருந்து இங்க வந்து இந்த குளுருக்குள்ள... வெட வெடத்து நிக்கனுன்னு அவனுக்கு என்ன தலை எழுத்தா. எல்லாம் காதல் ஜெனெட்.... காதல். இந்த உலகத்துல மரணத்தை விட பெரிய வலி காதல் பிரிவு தான். உங்க காதலை நீங்க பிரிஞ்சிருந்தப்பவும் அவன் உணர்ந்திருக்கான். அதான்... சாவை சாக்காட்டிட்டு இங்க வந்து சுத்திட்டுருக்கான். நீ அவமானப்படுத்தி அவனை விரட்டி விட்ட பின்னாடியும் இப்டி வந்து ஒரு கப் டீக்கு உங்கிட்ட கெஞ்சிட்டு இருக்கான்னா... அதுதான் காதல்..."

எல்லாரும் என்னையே வெறித்து பார்த்தார்கள்.

"காசு பணம் சம்பாதிச்சுட்டு வந்து உன்ன கூட்டிட்டு போகனும்மா.... அதுவரை நீ அப்பா அம்மா வீட்டுல வெட்டியா உக்காந்து டிவி பார்த்துட்டு இருப்பியா..."

இன்னொரு அறை...கன்னம் பழுக்க வைத்தது. குனிய வெச்சி முதுகில் நாலு சாத்து.

"செல்லம்... மயிருன்னு... காதலிச்சு கல்யாணம் பண்ணி அவனை ஏமாத்துனதுக்கே உன்ன வெட்டி போட்ருக்கனும். கேக்க ஆளில்லை... இல்ல... ரெண்டு பேரும் சேர்ந்துதான.. காதலிச்சீங்க. கல்யாணம் பண்ணீங்க. இப்ப ரெண்டு பேரும் சேர்ந்தே வேலைக்கு போங்க. காசு சம்பாதீங்க. அதென்ன ஆம்பளைங்க மட்டும் தான் காசு பணம் சம்பாதிக்க போகணுமா... நீ தண்டத்துக்கு வீட்ல உக்காந்துகிட்டு ஊர் புறணி பேசிட்டு இருப்பியா..." மறு படியும் குனிய வைத்து முதுகில் கையை மடக்கி போடு போடென்று போட்டேன்.
முடியைப் பற்றி இழுத்து சுவரோரம் சரித்து கழுத்தை உள்ளங்கையோடு கவிழ்த்துப் பிடித்து....." நாளைக்கு காரியம் முடிஞ்சதும் உன் புருஷன் கூட கிளம்பி போற... இல்ல...... விஷம் வெச்சு கொன்னே போட்ருவேன். வெளிய யார்கிட்டயாவது சொன்ன.. இவனை கொன்னு கல்லாங்குழில குழி தோண்டி புதைச்சிடுவேன்.... புரியுதா...?" -கண்கள் சிமிட்டாமல் முறைத்தேன்.

தொண்டை நடுங்கிய ஜெனட் இதையெல்லாம் துளியும் எதிர்பார்த்திருக்க மாட்டாள். மானம் போச்சே என்பது போல பார்த்தாள். மற்ற விரலை மடக்கி ஒற்றை விரலை ஆட்டி.... ஜாக்கிரதை என்பது போல ஜாடை செய்தேன். "சரிங்க சித்தப்பா... அப்டியே பண்ணிடறேன்" என்று வடிவேலு சொல்வதை போலவே சத்தம் வராமல் சொல்லி விட்டு..." எதுவும் நடக்காதது போலவே தலையை சரி செய்தபடியே..... முணுக் முணுக்கென்று வேக வேகமாய் சென்று விட்டாள். காதலின் சீரியஸ்னெஸ் இந்த மாதிரி இடியட்ஸ்களால் தான் நாசமாய் போகிறது.

அவன் முகத்தில்... ஆசுவாசம். கண்களில் நன்றிகள்.

"ரெம்ப தேங்க்ஸ் மாமா" என்றவனை காதோடு சேர்த்து பளார் பளார் என்று நான்கு அறைகள் விட்டேன். லவ் பண்ணி வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ண தெரியுதில்ல. அப்புறம் அதே மாதிரி குடும்பத்தையும் நடத்தணும்ல.... போ.. நாளைக்கே கூட்டிட்டு உங்க வீட்டுக்கு போய்டு. போய் வீட்ல உக்காந்துட்டிருந்த... இந்த அறை அங்க வந்து விழும். புரியுதா. காதலிச்சா மட்டும் போதாதுடா... வாழ்ந்து காட்டணும்... போ..." என்று அனுப்பி விட்டு மொட்டைமாடி சுவற்றில் அமர்ந்தேன்.

போதாமை பனியாய் உதிர்ந்து கொண்டிருந்தது. அப்படியே தரையில் சரிந்த நான் ஒரு வழிப்போக்கன் போல மூன்று மணி நேரம் தூங்கி இருந்தேன். எழுந்த போது என்னையே செருப்பால் அடித்துக் கொள்ள தோன்றியது. அந்த விடியல் நிறமற்று நிகழ்ந்து கொண்டிருந்தது. மெல்ல எழுந்து நின்று சோம்பல் முறித்து கண்கள் தேய்த்தேன்.

அனிச்சையாய் மேலிருந்து எதிரே செத்துக் கிடந்த அத்தை வீட்டைப் பார்த்தேன். ஆங்காங்கே சிலர் நின்றும் அமர்ந்தும் இருந்தார்கள். காலை பனி.... மரணத்தில் மிதந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் தனித்த சுவரோரம் ஜெனட் கொடுத்த தேநீரை கைகள் நடுங்க வாங்கிக் கொண்டிருந்த அவன் முகத்தில் பாட்டிம்மாவின் சாவைத் தாண்டிய தெளிவு.

நெடு நெடுவென நேரம் மதியம் 12 ஆகி விட்டது. சொல்லி வைத்தபடி அமரர் ஊர்தி வந்திருந்தது. அத்தையை தூக்கிக் கொண்டு துக்கம் வீதியை விட்டு வெளியேறியது. கத்திய மனிதர்கள்.... சுற்றிலும்... பூக்களாய் உதிர்ந்தார்கள். அந்த வீடு சூனியமானது. அந்த வாசல்... வெற்றிடமானது. நல்லவேளை ஒரு பயலும் அத்தையை பாடி என்று சொல்லவில்லை. கொன்றுருப்பேன்.

காடு போன பின் அத்தையின் அருகே 2 நிமிடங்கள் தனியாக இருக்கும் சூழல் அமைந்தது. அத்தையின் தலை பக்கத்தில்... செயலற்று நின்றேன். நெற்றி தொட மனம் எழும்பியது. புத்தியற்ற கை நடுங்கியது. நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். செயலற்ற உடல் அத்தைக்கு மட்டுமல்ல. அப்போது எனக்கும் தான். உள்ளம் முழுக்க இருள் சூழ்ந்த பயத்தை அமைதியில்... கடத்தினேன்.

நாங்கள் சுற்றி நிற்க... குழிக்குள் இறக்கப்பட்ட மூடிய பெட்டிக்குள் இருந்த அத்தையை இனி ஒருபோதும் காண முடியாது. எல்லாரும் அத்தை இருந்த பெட்டி மீது மண் அள்ளி போட்டார்கள். நான் மனம் அள்ளி போட்டேன்.

இரண்டு தெய்வங்கள்... மண்வெட்டியில் மண்ணை இழுத்து இழுத்து வேர்த்து ஒழுக... குழியை மூடினார்கள். குழி மூட மூட மனதுக்குள் இருள் சூழ்ந்தது எனக்கு. மொழி அற்ற... சொல் அற்ற..... வார்த்தை அற்ற... மௌனம் அற்ற...புலம்பல் அற்ற... அழுகை அற்ற... வெற்றிடம் அங்கே என்னிடமிருந்து என்னையே அற்றுக் கொண்டிருந்தது.

நான் மிக பெரிய பாறாங்கல்லை இறக்கி வைக்க முயன்றேன். பாராங்கல்லுக்குள் இருந்து முட்டி முட்டி வெளியேறும் என்னை நானே பார்க்கும் அந்த நொடிகளை வார்த்தைகளில் வடித்தெடுக்க இயலவில்லை. நான் இலகுவாக விரும்பவில்லை.

வீடு வந்ததும்.... வெளிர் நிற வெளிச்சத்தில் நடு வீடு அசைந்து கொண்டிருந்தது. அன்று முழுக்க அடக்கி வைத்திருந்த துக்கத்தை அத்தை அமரும் சேரில் சரிந்து அழுகையாக்கினேன்.

வெற்றுச் சேரைப் பிடித்தபடி இப்படி அழறானே என்று பார்த்துக் கொண்டிருந்த குடும்பத்தார்க்கு இது வெற்று சேர் இல்லை... நாற்காலியில் அமர்ந்து அத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது என்பதை அழுகையினூடாக சொல்ல எனக்கு தோன்றவில்லை.

எங்களுக்கு மேலே சுவற்று புகைப்படத்தில்... எல்லாம் வல்ல இறைவன் இன்றும் கழுத்து சரிந்தே எனக்கென்ன என்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்.

- கவிஜி