இன்றைக்கு மட்டும் நான்காவது தடவையாக ஃபோன் செய்திருந்தான் இராஜாராம். இவன் விட மாட்டான் போல் இருக்கே... என்ன செய்வது என்ற சிறிய யோசனைக்குப் பின் எடுத்துப் பேச ஆரம்பித்தேன். சரி இன்று இரவு வீட்டிற்கு வந்துவிடு அங்குப் பேசுவோம் என்றவாறு ஃபோனைத் துண்டித்தேன்.

அன்று இரவு சரியாக ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தான். அவனை வேண்டா வெறுப்பாக வரவேற்று உபசரித்துவிட்டுப் பேசத் தொடங்கினேன்.

"இந்த மாசம் எனக்கும் கொஞ்சம் செலவு இருக்கு அதுனால அடுத்த மாசம் பாத்துக்கலாமே" என்றேன்.

"இது மார்ச் மாசம் இந்த வருசத்தோட டார்கெட்டை முடிச்சே ஆகனும். என்னால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணி பாத்துட்டுக் கடைசியா தான் உங்கிட்ட வந்திருக்கேன். நீயும் எடுக்கலைனா எனக்குக் கண்டிப்பா இந்த வருசம் இன்கிரிமென்ட் கிடைக்காது" என்றான்.

"அதுக்காக..." என்று நான் இழுக்க…

"அதுக்காக மட்டமானதையோ இல்ல உதவாத ஒன்றையோ உன் தலைல கட்டல. இந்த மெடிக்கல் இன்சூரன்ஸ் மூலமா கிட்டத்தட்ட இந்தியாவில் இருக்க எல்லாப் பெரிய ஆஸ்பத்திரிலையும் எல்லா விதமான நோய்களுக்கும் ட்ரீட்மென்ட் இலவசமாக எடுத்துக்கலாம். மருந்துக்கு மட்டும் தான் கட்டணம். வருசத்துக்கு வெறும் பதினைந்தாயிரம் தான் குடும்பம் முழுதும் பயமில்லாம இருக்கலாம்" என்றவாறு ஒரு சில காகிதப் பக்கங்களை அவனுடைய பையிலிருந்து எடுத்துக் காட்டினான்.

"இப்போதைக்கு இப்படித் தான் செல்லுவிங்க ஆனா பிரச்னை என்றால் அலைக்கழிப்பிங்க".

"நிச்சயமாக அப்படி இல்ல. இது இந்தியாவின் முன்னணி இன்சூரன்ஸ் நம்பி எடுக்கலாம். அதையும் தாண்டி எனக்காக இதைச் செய்யுங்கள். எந்தப் பிரச்சனையா இருந்தாலும் என்னைக் கூப்பிடுங்கள் நான் பார்த்துக்கிறேன்" என்றான்.

இப்போதைக்கு இவனை அனுப்பிடலாம் என்று நினைத்து "சரி நாளைக்குப் பணம் தர்றேன்" என்றேன்.

"நாளைக்கு மாசத்தோட கடைசி நாளு இது ப்ராஸஸ் ஆகாம போச்சுனா எல்லாம் வீணாப் போயிடும்".

"இப்போது கையில் அவ்வளவு பணம் இல்லை".

"செக் குடுத்தா கூடப் போதும் மற்ற விசயங்களை நான் பாத்துக்குவேன் ".

என்னிடம் செக் புக் இல்லை என்று பொய் சொல்லியிருக்கலாம். ஆனால் ஏனோ அப்படிச் சொல்லாது அரை மனதோடு சரி என்றேன். பொய் சொல்லத் தயங்கி என்பதை விட, செக் புக் இல்லை என்பதைக் கவுரவக் குறைவாக நினைத்தேன் போலும்.

முதலில் பதினைந்தாயிரம் என்றவன் செக்கை எழுதும் போது அந்தச் சார்ஜ் இந்தச் சார்ஜ் என்று பதினாறாயிரத்துச் சொச்சம் என்றான். வெறுப்பின் விளிம்பில் இருந்த நான் வேறு வழியில்லாமல் எழுதிக் கையெழுத்திட்டு அவனை அனுப்பி வைத்தேன்.

மறுநாள் காலையில் மீண்டும் என்னை ஃபோனில் தொடர்பு கொண்டான் இராஜாராம். இதற்கு முன் உங்கள் வீட்டில் யாருக்காவது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்வியை முன் வைத்தான். குழந்தைப் பிறக்கும் போது என் மனைவிக்குச் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை (சிசெரியன் ஆபரேசன்) மற்றும் அவளுக்குக் குடல் இறக்கத்திற்காக (Hernia) செய்யப்பட்ட மற்றொரு அறுவை சிகிச்சை பற்றிக் கூறினேன். இவை தவிர வேறு எந்த நோயும் எங்களுக்குத் தெரிந்து இல்லை என்று ஒரு சுய ஒப்புதல் கடிதம் (self-declaration) ஒன்றை எழுதி தருமாறு கேட்டான்.

இப்போது நான் அலுவலகத்தில் இருப்பதால் மாலை தருவதாகக் கூறினேன். இன்றே முடிக்க வேண்டும் என்றும், எழுதி அந்தக் கடிதத்தை வாட்ஸ்அப் மூலமாக அனுப்புமாறு கேட்க, என் மனைவியின் சில திட்டுகளை நான் வாங்கிக் கொண்டு அவளிடம் இருந்து வந்த வாட்ஸ் அப் செய்தியை இராஜாராமுக்கு அனுப்பினேன். அவனுக்கு மட்டுமே வருடக் கடைசி டார்கெட் என்பது போல், எனது அலுவலக நேரத்தில் மீண்டும் மீண்டும் ஃபோன் செய்து சில பல கேள்விகளைக் கேட்டு பாடாய் படுத்தி ஒரு வழியாக அந்த இன்சூரன்ஸ் எடுக்கப்பட்டது.

அதற்குச் சமீபத்தில் எனது அலுவலகத்தின் வருடாந்திர மருத்துவச் சோதனையில் புதிதாக இதய எஃகோ ரிப்போட்டும் (echo) கேட்கப்பட்டது. மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டபோது அவர்கள் கூறிய செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். எனக்குப் பிறவியிலிருந்தே இதயத்தில் ஓர் ஓட்டை இருப்பதாகக் கூறினர். அதை மருத்துவ மொழியில் ASD (Atrial Septal Defect) என்றனர். அதாவது இதயத்தின் நான்கு அறைகளில் மேலறைகளான ஆரிக்கில்களுக்கு இடையேயான சிறிய பிளவு. இதற்கு ஒரே தீர்வு அறுவை சிகிச்சை (open heart) தான் என்றும், எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் செய்திடுங்கள் இல்லாவிடில் காலப்போக்கில் அது பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்றனர்.

வயதான தாய் தந்தை, மனைவி மற்றும் விபரம் தெரியாத குழந்தை... நினைக்கும் போதே இதயம் கனத்தது. வீடு இடிவிழுந்தது போல் ஆனது. எது நடந்தாலும் வாழ்க்கை நகர்ந்தாக வேண்டுமே. பலவாறான சிந்தனைக்குப் பிறகு வீட்டில் அனைவரும் மனதளவில் சிகிச்சைக்காகத் தயாரானோம். மூன்று மாதம் கழித்து அறுவை சிகிச்சை செய்வதாக முடிவு செய்தோம். தற்போதைய பிரச்சினை அதற்கு ஆகும் செலவு. மூன்று இலட்சம் வரை செலவாகும் என்றனர்.

இராஜாராமை போனில் தொடர்பு கொண்டு விசயத்தைத் தெரியப்படுத்தினேன். கேட்ட மறு நிமிடமே " ASD closer என்பது பிறவியிலே வரக்கூடிய ஒரு குறை (defect). அது இடையில் வர வாய்பு இல்லை. ஏன் இவ்வளவு நாளா உனக்குத் தெரியாதா? " என்றான்.

"இல்லை தெரியாது" என்றேன்.

"அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. என் கம்பெனில இத ஏத்துக்க மாட்டாங்க. நீ தெரிஞ்சே மறச்சு இன்சூரன்ஸ் எடுத்து ஏமாத்திட்டதா நினைப்பாங்க".

" என் மனைவியோட சிசேரியன் வரை அனைத்தையும் தெரியப்படுத்திருக்கேன். இத பத்தி முன்னமே தெரிஞ்சா ஏன் மறைக்கப் போறேன். பொய் செல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இப்போது தான் தெரியும்" என்றேன்.

"இல்லை... இன்சூரன்ஸ் எடுப்பதற்கு முன்பே இருந்த வியாதிக்குத் தர மாட்டார்கள்" என்றான்.

கேன்சராகட்டும், இதய அடைப்பு ஆகட்டும் (Heart block) அல்லது வேறு எந்தப் பெரிய நோய்களாகட்டும் முதல் நாள் தோன்றி மறுநாள் வெளிப்படுமா என்ன? வருடக் கணக்காக வளர்ந்து தானே வெளிப்படும். அதனால் எந்த வியாதிக்கும் இதைக் காரணம் காட்டி இன்சூரன்ஸ் தரமாட்டார்கள் போல… என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

ஆனால் நான் இருந்த நிலையில் மேற்கொண்டு வாக்குவாதம் செய்யத் தயாராக இல்லை. " உங்களால் என்னதான் செய்யமுடியும்" என்றேன்.

அவன் தன்னுடைய மேலதிகாரியிடம் பேசிவிட்டுக் கூப்பிடுவதாகச் சொன்னான். அவனிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சிறிது நேரத்தில் மீண்டும் நானே கூப்பிட்டேன். அதற்கு "இதுக்கு ஆகும் செலவ நீங்களே செஞ்சுட்டு அந்தச் செலவு கணக்கை குடுங்க. நாங்க ஒரு எக்ஸ்பர்ட் டீம் வச்சு, நீங்க சொல்ற மாதிரி உண்மையிலேயே உங்களுக்கு இப்பதான் இந்த நோய் பத்தி தெரிஞ்சுதா… இல்லை தெரிந்தே எங்களை ஏமாத்தப் பாக்குறீங்களா என்று விசாரித்துப் பிறகு சொல்லுகிறோம்" என்றான்.

எனக்குத் தலைக்கு ஏறிய கோபத்தை அடக்கிக் கொண்டு " இன்னமும் மூனு மாசத்துல அறுவை சிகிச்சை செய்றதா இருக்கோம். அந்த டீம் கிட்ட இப்பவே அத விசாரிக்கச் சொல்லு. அறுவை சிகிச்சையின்போது உங்க இன்சூரன்ஸ் கார்டைப் பயன்படுத்துற மாதிரி ஏற்பாடு செய்" என்றேன்.

"அப்படியெல்லாம் இந்தக் காலத்துக்குள் இத செய், அத செய்னு எல்லாம் சொல்ல முடியாது. இதுக்கு மேல ஏதாவது டீடெய்ல் வேணுமுனா எங்க ஹட் ஆப்பீஸ்ல கேளு இது தான் அவுங்க நம்பர் " என்று நம்பரைக் கொடுத்தான்.

அவன் கொடுத்த நம்பரிலும் தெளிவான வழிகாட்டல் இல்லை.

மீண்டும் இரண்டு முறை இராஜாராமைத் தொடர்பு கொண்ட போது "நான் தான் என்ன நடமுறைனு சொல்லிட்டேன்ல இதுக்கு மேல் நான் என்ன பண்ண முடியும்" என்றான்.

"பணம் கட்டி எங்களால பாக்க முடிஞ்சா நாங்க ஏன் உங்ககிட்ட இன்சூரன்ஸ் எடுக்கப் போறோம். கொஞ்சம் ஏதாவது வழி இருக்கானு பாரு" என்றவாறு கிட்டத்தட்ட கெஞ்சினேன். கடன் வாங்கிச் செலவு செய்துவிட்டு ஏதேனும் விபரீதம் என்றால் குடும்பத்தைக் கடனோடு விட்டுச் செல்ல மனமில்லாமல் மீண்டும் மீண்டும் அவனைத் தொடர்பு கொண்டபோது ஒரே பதிலே வந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு என்னோட ஃபோன் கால் எல்லாம் எதிர் முனையில் எடுக்கப்படவே இல்லை. வேறு எந்த எதிர் வினையும் செய்யக்கூடிய நிலையில் நான் இல்லை. நடுத்தரக் குடும்பங்களுக்கே உரிய முறையில் கடன் வாங்கி அறுவை சிகிச்சைக்குத் தயாரானோம்.

நோயாளிகளுக்கான உடையில் ஸ்டெக்சரில் வைத்து ஆபரேசன் தியேட்டருக்கு கூட்டிச் செல்லும் முன் சொந்தங்களைப் பார்க்கும் அந்த நிமிடம், உலகின் தலைசிறந்த ஆசான்கள் அனைவரும் ஒன்று கூடி ஆயுள் முழுவதும் கற்பித்தாலும் கற்பிக்க முடியாத உலகின் பாடத்தை அந்த ஒரு நிமிடம் கற்பிக்கும். ஆறு மணிநேரங்களுக்கும் மேலாக நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

பழக்கத்திற்காக நலம் விசாரிப்பதற்குக் கூட இராஜாராம் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.

ஆபரேசன் முடிந்த சில மாதங்களுக்குப் பின் இராஜாராமிடம் இருந்து என்னுடைய ஃபோனுக்கு ஓர் அழைப்பு வந்தது... அந்த இன்சூரன்ஸ் பாலிஸியை புதுப்பிக்கச் சொல்லி...

- பா.ஏகரசி தினேஷ்