தா.வேணுகோபால், சென்னை-1

தீண்டாமைச் சுவர்கள் சிபிஎம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் கண்ணில் மட்டும்படுகிறதே வேறு அமைப்புகளின் கண்ணில் படுவதில்லையா?

அந்த வேறு அமைப்புகளின் கண்ணில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. “இது பெரிய எழுத்து” (ஜனவரி 2011) பத்திரிகையில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் அம்பேத்கர் பற்றி நடந்த கருத்தரங்கு பற்றி ஒரு சிறுகட்டுரை வெளிவந் திருக்கிறது. அங்கே பேசிய கிறிஸ்துதாஸ் காந்தி “தலித்துகளும் முதலாளிகள் ஆக வேண்டும், இதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆட்சேபணை இருக்கக் கூடாது” என்றார். நிறைவரங்கில் பேசிய அருணன் “முதலாளித்துவ சமுதாயத்தில் தலித்துகளும் முதலாளிகள் ஆவதில் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆட் சேபணை இல்லை. ஆனால் சகலரும் முதலாளிகள் ஆகிவிட முடியாது. ஒரு முதலாளி உருவாக நூறு தொழிலாளிகள் வேண்டும். ஆகவே, தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களும் தேவை” என்றார். இந்தப் பதிலுரையை அப்படியே அமுக்கிவிட்ட அந்தக் கட்டுரையாளர் கிறிஸ்துதாஸ் காந்தி பேச்சைக் கேட்டு “கம்யூனிஸ்ட்டுகள் பதறிப் போனார்கள்... படபடத்துப் போனார்கள்” என்று கேலி செய்திருக்கிறார். “இந்த நாட்டில் திருடியும், ஏமாற்றியும்தான் முதலாளிகளாக மாற முடியும் என்றால், அதையும்தான் நாங்கள் செய்து பார்க்கி றோமே” என்ற கிறிஸ்துதாஸ் காந்தி பேச்சை மிகப் பெருமையாக மேற்கோள் காட்டியுள்ள அந்தக் கட்டுரையாளரை நினைத்து பரிதாபப்படத்தான் முடியும். ஆ.ராசாவை ஏன் சிலர் நியாயப்படுத்து கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம். இப்படிப் பட்டவர்களின் கண்ணில் தீண்டாமைச் சுவர்கள் எப்படிப் படும்?

த.ரவி, திண்டுக்கல்

புதிய புதிய இளைஞர்கள் இயக்குநர்களாகி புதுமுகங்களை வைத்துப் படம் பண்ணுகிறார் களே இவர்களுக்குத் தங்களின் அறிவுரை அல்லது ஆலோசனை?

அறிவுரை-ஆலோசனை எல்லாம் - விடாமல் இந்த முயற்சியை இவர்கள் தொடர வேண்டும் என்பது தான். ரஜினி, கமல், விஜய், அஜீத் எனும் இந்த நான்கு நட்சத்திரங்களை வைத்து பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்ட அண்மைக்காலப் படம் எதிலும் சினிமா இல்லை, பணம் பண்ணுகிற வியாபாரமே இருந்தது. தமிழ் நட்சத்திரங்களை வைத்து அல்ல, தமிழ் வாழ்க்கைக் கதையை வைத்துப் படம் பண்ணு வதே தமிழ் சினிமா. ஓராண்டில் வருகிற நூறு படங் களில் நல்ல படம் இரண்டுக்காக மற்ற 98 ஐ சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த இரண்டையும் தந்தது புது இயக்குநர்களாக இருக்கிறார்கள். அவர்களது தைரியம் தொடரட்டும், அவர்கள் தரும் படங்களின் எண்ணிக்கை உயரட்டும்.

தி.கதிர்வேல், திருநெல்வேலி

புத்தகம் எழுதுவது, அதைச் சீக்கிரமாகவும் நட்டமில்லாமலும் விற்றுத் தீர்ப்பது - இவற் றில் எது அதிகக் கஷ்டமானது?

புத்தகம் எழுதியவரே வெளியீட்டாளராகவும் இருந்தால் பிந்தியதே மிகக் கஷ்டம் என்று சொல்லு வார். எழுதியதை வேறு ஒரு வெளியீட்டாளரிடம் கொடுத்திருந்தால் எழுது வதே மிகக் கஷ்டம் என்று சொல்லுவார்.

வெ.புகழேந்தி, புதுச்சேரி

31 மாடி ஆதர்ச அடுக்குமாடிக் குடியிருப்பை இடிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதே? இவர்களுக்கு விதிமீறல் இப்போதுதான் தெரிந்ததா?

அதில் நடந்த ஊழல் இப்போதுதானே உலகத்திற்குத் தெரிந்தது! தங்களுக்கு கிடைக்காதது யாருக்குமே கிடைக்க வேண்டாம் என்கிற “நல்லெண் ணத்தில்” இடிக்கச் சொல்லுகிறார்கள் போலும்! அதுசரி, விதியை மீறிக் கட்டியதை இடித்தால் ஏகப்பட்ட பணம் பாழாகுமே, இதை விதியை மீறியவர்களிடம் வசூலிப்பார்களா?

எஸ்.மகேஸ்வரி, தஞ்சை

அண்மையில் நீங்கள் படித்த கட்டுரை நூல்களில் மிகவும் பிடித்த ஒன்றைச் சொல்லுங்கள்?

மொரார்ஜி தேசாயின் சுயசரிதை படித்தேன். அதில் “துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர்” என்றொரு அத்தியாயம். 1967ல் துணைப் பிரதமர் பதவிக்காகத் தான் பட்டபாட்டைக் கூச்சமே இல்லாமலே விவரித்திருக்கிறார் மனிதர். இவரது அதிகார ஆசையை அறிந்திருந்த இந்திரா, ஜெகஜீவன் ராம், சவாண் ஆகியோர் துணைப் பிரதமர் பதவி பற்றி இவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். அதையும் சொல்லி யிருக்கிறார். சின்னப் பிள்ளை போல இந்திரா புறம் பேசியதும், அது கண்டு இவர் கொந்தளித்ததும் படிக்கப் படிக்க கதை போல இருக்கிறது. வெகு மக்கள் மிக உயர்வாக மதிக்கிற காங்கிரசின் பெருந்தலைகள் எல்லாம் பதவி விஷயத்தைப் பொறுத்தவரை மிகச் சாதாரணமானவர்கள் என்பது புரிகிறது. மூட நம்பிக்கை விஷயத்திலும் அப்படித்தான். ஜோசியர் களைக் கேட்டுக் கொண்டு பிரதமர் இந்திரா தனது மந்திரிசபை பதவி ஏற்புக்கு நல்ல நேரம் குறித்தது வருகிறது. “(தஞ்சை) பெரிய கோவிலுக்கு இப்போது வேண்டாம், சட்டப் பேரவைத் தேர்தல் முடிந்த பின்னர் போகலாம் என்று அன்பாகத் தடுத்தார் அமைச்சர் ஜி.கே.வாசன் என்றார் ஜெய்ராம் ரமேஷ்” என்று “தினமணி” (22-1-11) யில் செய்தி வந்திருப்பதில் ஆச்சரியம் என்ன?

நா.இராமசாமி, சென்னை-10

இப்போதெல்லாம் நீதிமன்றங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக்கள் தெரிவிப்பது வரவேற்கத்தக்கது தானே?

வரவேற்கத்தக்கதுதான். குறிப்பாக 2 ஜி அலைக் கற்றை ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் அரசைக் கச்சிதமாகக் கண்காணித்து வருகிறார்கள், கண்டித்து வருகிறார்கள். ஆனால் சில தீர்ப்புகள் ஒரு ஆழ்ந்த சந்தேகத்தைக் கிளப்புகின்றன. அலகாபாத் உயர்நீதி மன்றத்தின் அயோத்தி தீர்ப்பு அதிருப்தி அலையை உருவாக்கியுள்ளது. அங்கே கோவில் இருந்தது என்று மத்திய அரசின் தொல்லியல் துறை சொல்லிவிட்டது என நீதிபதிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அது பி.ஜே.பி. அரசாட்சி காலத்து அதிகாரிகள் தயாரித்த அறிக்கை என்பதையும், புகழ்மிக்க எத்தனையோ வரலாற்றாளர்கள் அதை மறுத்திருக்கிறார்கள் என்பதையும் நீதிபதிகள் கணக்கிலேயே எடுக்க வில்லை. அப்புறம், நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு என்றார்கள். 450 ஆண்டுகளாக ஒரு மசூதி அங்கே இருந்தது. அது சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது என்பதையும் மறந்தார்கள். அனுபோக, அடிப் படையில் பார்த்தால்கூட அது முஸ்லிம்களுக்கே சொந்தம். இப்போது உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பு தந்திருக்கிறது. ஒரிசாவில் கிரஹாம் ஸ்டேன்ஸ் பாதிரியாரையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் உயிரோடு எரித்துக் கொன்றானே இந்துமத வெறியன் தாராசிங் அவனுக்கு மரண தண்டனை தர மறுத்து விட்டது. கேட்டால் இது “அபூர்வத்திலும் அபூர்வ மான குற்றமல்ல” என்று சொல்லி விட்டது! இதனினும் கொடுமை “ஏழை ஆதிவாசிகளைத் கிறிஸ்தவத்திற்கு மாற்றுகிற ஸ்டேன்சின் மத நடவடிக்கைகளுக்கு ஒரு பாடம் கற்பிப்பதே நோக்கமாக இருந்தது” என்று அந்தக் கொடூரக் கொலை யை நியாயப்படுத்துவது போலக்குறிப்பிட்டிருக் கிறார்கள். அதுமட்டு மல்ல, “ஒரு மதத்தை விட இன்னொரு மதம் உயர்ந்தது” எனச் சொல் வதே தவறு என்றும் கூறி யிருக்கிறார்கள். இந்துத் துவா சிந்தனை அரசிய லில் மட்டுமல்ல அரசின் ஓர் அங்கமாகிய நீதி பீடங்களிலும் ஊடுவியிருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கா.அழகர்சாமி, திண்டிவனம்

துக்ளக் சோ ராமசாமியின் பேச்சைக் கேட்டீர்களா?

ஜெயா டி.வி.யில் அந்த “உபன்யாசம்” முழுசாகப் போடப்பட்டது. அடேங்கப்பா என்னா கிண்டல் என்னா கேலி! திமுகவையும் காங்கிர சையும் உலுக்கி எடுத்து விட் டார். ஆனால் பி.ஜே.பி. யின் எடியூரப்பா விஷயத்தில் மட்டும் செல்லமாகக் கோபித்துக் கொண்டார். அதையும் ஈடுகட்ட “அத் வானி போன்ற தேசியத் தலை வர் யாருண்டு? அவரும் மோடியும் சேர்ந்துதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகி றார்கள். அடுத்து ஆட்சிக்கு வரவேண்டியது பி.ஜே.பி.தான்” என்று முத்தாய்ப்பு வைத்தார். பாபர் மசூதியை இடித்த வஞ்சகரும், குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்று குவித்த கொடூரனும் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியும் என்று சொல்கிறார் என்றால் சோ போன்ற “அரசியல் ஞானி” வேறு யாருண்டு? அதனால் தான் ஆங்கிலத் தொலைக் காட்சியில் இவரைக் கூப்பிட்டு கூப்பிட்டுப் பேச வைக்கிறார்கள்! 

கே.ராஜாங்கம், கரூர்

டி.வி.யில் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்த்தீர்களா?

வெகு நாளாகப் பார்க்க வேண்டும் என நினைத் திருந்த “மதராசப் பட்டணம்” பார்த்தேன். நம்மவர் களாலும் சரித்திரப்படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்திருந்தார்கள், பெரிய குறை என்னவென்றால் சென்னையின் வெள்ளைக்கார உயர் அதிகாரி மகளும் சலவைத் தொழிலாளியும் காதலிப்பதாக வருவது. அதீத கற்பனை இது. ஆங்கிலம் படித்த ஒரு மத்திய தர வர்க்கம் வெள்ளைக்காரக் குடும்பத்துடன் பழகி ஆங்கிலோ-இந்திய வம்சாவளி உருவானது. காதல் அங்கே பிரமாதமாக வேலை செய்தது. அதிலும் ஏகப்பட்ட முரண்களும், மனக்காயங்களும் எழுந்தன. அதை மையமாக வைத்திருந்தால் கதையில் யதார்த் தம் இருந்திருக்கும். இப்போது காட்சிதான் மனதில் நிற்கிறதே தவிர கதை அல்ல. அப்புறம் கலைஞர் டி.வி.யில் ஒரு பட்டிமன்றம் கேட்டேன். பேச்சாளர் ஒருவர் கலைஞரை ஆண்டவனுக்கு இணையாக வைத்துப் பேசுகிறார், அதையும் அவர் ரசிப்பதைக் குளோசப்பில் காட்டுகிறார்கள். இப்படிப் புகழ்ச்சியைக் கேட்க கூச்சமாக இருக்காதா? இப்படிச் சிலவற்றைப் பார்ப்பதற்குள் ஏகப்பட்ட முறை அலைவரிசைகளை மாற்ற வேண்டியிருந்தது. அவ்வளவு விளம்பரமடா சாமி!

Pin It