சர்தார் வல்லபாய் பட்டேல், 1932 செப்டம்பர் 6 அன்று, எரவாடா சிறையில் காந்தியை சந்தித்து அவருடன் இப்பிரச்சினை குறித்து விவாதித்தார்.

“இயல்பாகவே காந்தியின் அறிவிப்பு, நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது. பொது மக்களின் வேண்டுகோள்கள் காந்திக்கும் அரசுக்கும் விடுக்கப்பட்டன. பத்திரிகைகளில் அறிக்கைகள் வெளியிடப்பட்டன. பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. டாக்டர் ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் இந்து மதத்திற்கு சோதனைக் காலம் ஏற்பட்டிருக்கிறது என்று கூறினர். எல்லா இந்து வட்டாரங்களிலும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டன. அதற்குக் காரணம், தங்களுடைய கொடூரமான போக்கு குறித்து சாதி இந்துக்களும், அவர்களின் தலைவர்களும் அவமான உணர்ச்சி பெற்றதால் அல்ல; மாறாக, அவர்களுடய அரசியல் கதாநாயகன் மற்றும் அவர்களுடைய அரசியல் விடுதலை வீரரின் உயிர் பணயம் வைக்கப்படுகிறது என்பதைக் கண்டுதான். இந்துக்களின் குணாம்சத்தில் மரபான சோக முடிவுப் போக்கு மேலோங்கி, அவர்கள் பீதியடைந்தனர்.

சிம்லாவிலிருந்து மாளவியா, முட்டுக்கட்டை நிலைமைக்கு தீர்வு காணவும், மகாத்மாவின் உயிரைக் காப்பாற்றவும் செப்டம்பர் 19 அன்று, பம்பாயில் இந்து தலைவர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு தான் எண்ணியுள்ளதாக அறிவித்து, அத்தகவலை டாக்டர் அம்பேத்கருக்கு தந்தி மூலம் தெரிவித்தார். ஏனெனில், மகாத்மாவின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரிட்டிஷ் பிரதமரின் தீர்ப்பை மாற்றுவது அவசியமாயிற்று. அதைத் திருத்துவதற்கு டாக்டர் அம்பேத்கரின் ஒப்புதல் தேவைப்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு இந்த சலுகைகளை டாக்டர் அம்பேத்கர்தான் வென்றெடுத்திருந்தார். இயல்பாகவே, அப்போதைக்கு முக்கியமான தலைவர் அம்பேத்கர்தான் என்ற வகையில் எல்லோருடைய கண்களும் அம்பேத்கரை நோக்கித் திரும்பின. டாக்டர் அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் தலைவர் என்று அங்கீகரிக்க மறுத்த தலைவர்களும் பத்திரிகைகளும் – தாழ்த்தப்பட்ட வர்க்கங்களுக்கு அவருடைய தலைமைப் பொறுப்பையும், அவர்களுக்காகப் பேசக்கூடிய பிரதிநிதி என்றும் அங்கீகரிப்பதற்கு தற்பொழுது நிர்பந்திக்கப்பட்டிருப்பது விதியின் கொடுமையான விளையாட்டேயாகும். அவர் இப்பொழுது நாட்டின் முழு கவனத்தையும் ஈர்க்கும் குவிமய்யமாகி விட்டார்.

காந்தியின் சாகும்வரை உண்ணாவிரத முடிவிலிருந்து தோன்றியுள்ள நெருக்கடியின் முக்கியத்துவத்தையும், அளவையும் டாக்டர் அம்பேத்கர் உணர்ந்தார். மிகவும் ஆபத்தான மற்றும் உயிர்க் கொல்லியான ஆயுதத்தை காந்தி, அவரை நோக்கி எறிந்துள்ளார். அந்த ஆயுதத்தை திருப்பியடிப்பதற்கு, அவர் தன்னை தயார்படுத்திக் கொண்டார். அவர், புனாவில் பம்பாய் ஆளுநரைப் பேட்டி கண்டார்.

தனித் தொகுதிகளின் உறுதியான ஆதரவாளரான டாக்டர் அம்பேத்கர், தனித் தொகுதிகள் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் மகாத்மா காந்தியின் உயிரைக் காப்பாற்றவும் ‘தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின்' பிரதிநிதியை இணங்கச் செய்வதற்காக பம்பாயில் இன்று நடைபெறவுள்ள மாநாட்டின் தருணத்தில், ஞாயிறு காலையில் பம்பாயிலிருந்து புனாவுக்கு, பம்பாய் ஆளுநரைப் பேட்டி காண அவசரமாகப் புறப்பட்டது, மாநகரத்தில் பெருமளவு ஊகத்தைத் தூண்டிவிட்டது.

காலையில் டாக்டர் அம்பேத்கர் பூனா புறப்பட்டுச் சென்றார். பம்பாய் ஆளுநருடன் நீண்ட உரையாடலுக்குப் பின்னர் மாலை பம்பாய் திரும்பினார். “நாளைய மாநாட்டில் நீங்கள் பங்கேற்பீர்களா?'' என்று நமது பிரதிநிதி அவரிடம் கேட்டார். இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில் டாக்டர் அம்பேத்கர், பண்டிட் மாளவியாவிடமிருந்து தந்தி மூலம் தனக்கு கிடைத்த தகவலைத் தவிர, மாநாட்டுக்கான முறைப்படியான அழைப்பு இதுவரை தனக்கு கிடைக்கவில்லையென்றும், ஆனால் தனக்கு அழைப்பு கிடைத்தால், மாநாட்டில் பங்கேற்பதற்கு எல்லா முயற்சியும் செய்வேன் என்றும் கூறினார்.

1932 செப்டம்பர் 11 அன்று மாலை வெளியிட்ட அறிக்கையில் டாக்டர் அம்பேத்கர், தனித்தொகுதிகள்தான் தாழ்த்தப்பட்ட மக்களின் நலன்களுக்கு ஏற்றது என்ற தனது நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியதோடு, மகாத்மா காந்தி முதலில் தன்னுடைய அறிவிக்கைகளை முன்வைக்க வேண்டும்; அப்பொழுதுதான் தன் சொந்தக் கருத்துக்களை வெளியிடுவதற்கு சாத்தியமேற்படும் என்று மீண்டும் வலியுறுத்தினார்.

“இந்த அரசியல் பகட்டு வித்தைகளைப் பற்றி நான் கவலைப்பட மாட்டேன்'' என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார். அவர் மேலும் கூறினார், “சாகும்வரை உண்ணாவிரதம் என்ற திரு. காந்தியின் இந்த அச்சுறுத்தல், ஒரு தார்மீகப் போராட்டமல்ல. மாறாக ஓர் அரசியல் நடவடிக்கையேயாகும். ஒரு நபர், தனது அரசியல் எதிராளியுடன், சமத்துவ அடிப்படையில், நேர்மையைப் பாராட்டி, பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முயன்றால் நான் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால், இத்தகைய வழிமுறைகளால் ஒருபோதும் என்னை அசைக்க முடியாது.

“என்னுடைய முடிவில் மாற்றமில்லை, ஆனால், இந்து சமூகத்தின் நலன்களுக்காக தனது உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதற்கு திரு. காந்தி விரும்பினால், தாழ்த்தப்பட்ட சாதியினரும், தமது நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், தங்களுடைய உயிர்களைப் பணயம் வைத்துப் போராடும்படி நிர்பந்திக்கப்படுவார்கள்'' என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

“தனித் தொகுதிகளுக்கான தனது கோரிக்கையைக் கைவிடுவதற்கு டாக்டர் அம்பேத்கர் ஒப்புக்கொண்டு, இடஒதுக்கீட்டுடன் கூடிய கூட்டுத் தொகுதிகளை ஏற்றுக் கொள்வாரேயானால், நிலைமை இணக்கமாக முடியும் என்று திரு. எம்.சி. ராஜா தெரிவித்த கருத்துக்கு, நான் உடன்பட மாட்டேன்'' என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்.

பம்பாய் அரசுக்கு திரு. காந்தி, 1932 செப்டம்பர் 15 அன்று எழுதிய ஒரு கடிதத்தில், சாகும்வரை உண்ணாவிரதமிருக்கப் போகும் முடிவை ஏன் எடுத்தேன் என்பதற்கான காரணங்களை எடுத்துக் காட்டியிருந்தார். இக்கடிதம் 1932 மார்ச் 21 அன்று, பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அக்கடிதத்தில் அவர் இவ்வாறு கூறியிருந்தார் : “ஒரு குறுகிய காரணத்தையே என்னுடைய உண்ணாவிரதம் நோக்கமாகக் கொண்டது. தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை பெருமளவு மதம் தொடர்பான பிரச்சினையாக உள்ள நிலையில், வாழ்நாள் முழுவதும் அதில் கவனம் செலுத்தி வந்த காரணத்தால், குறிப்பாக அதை என்னுடைய சொந்தப் பிரச்சினையாகவே நான் கருதுகிறேன். இது ஒரு புனிதமான தனிப்பட்ட நம்பிக்கை. இதை நான் கைவிட மாட்டேன்.''

இந்து தலைவர்களின் மாநாடு நடைபெறவிருந்த தருணத்தில், டாக்டர் அம்பேத்கர் பத்திரிகைகளுக்கு வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் பின்வருமாறு கூறியிருந்தார் : “என்னைப் பொருத்தமட்டிலும், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகள் எந்த விதத்திலும் பறிக்கப்படுவதை அனுமதிப்பதற்கு நான் தயாராக இல்லை என்ற போதிலும், அனைத்தையும் விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். வெற்றிடத்தில் ஒரு மாநாடு நடத்துவதிலோ, எத்தகைய திட்டவட்டமான புள்ளிவிவரங்களின்றி விவாதிப்பதிலோ எத்தகைய பயனுமில்லை.'' ஆமதாபாத்திலிருந்து வந்திருந்த தாழ்த்தப்பட்ட மக்களின் ஒரு தூதுக் குழுவினரிடமும் மற்றும் இந்தியக் கோடீஸ்வரர் சேத் வால்சந்த் ஹீராசந்துக்கு அளித்த பேட்டியிலும் அவர் வெளிப்படையாக இதைக் கூறினார். காந்தி தனது அறிவிக்கையை பிரிட்டிஷ் பிரதமருடன் விவாதித்திருக்க முடியும்; அவர் எந்த அறிவிக்கையையும் அளிக்காததால், இந்த நிலைமைக்கு அவரே பொறுப்பாளியாவார் என்று அவர்களிடம் அம்பேத்கர் கூறினார்.

பார்வையாளர்கள், தலைவர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரைக் கண்டு பேசுவதற்கு வந்து கொண்டேயிருந்தனர். முன்னதாக அவ்வாறு பேட்டி காண வந்தவர்களில் ஒருவர் தக்கர். அரசுக் குழுவில் அம்பேத்கருடன் அவர் பணி புரிந்துள்ளார். இப்பிரச்சினை பற்றி பேசி முடிவு காண்பதற்கு அவர் வந்திருந்தார். காலத்தை அறிவாகவும், விலைமதிப்பற்ற ஒன்றாகவும் கருதி வந்த டாக்டர் அம்பேத்கர், ஒரு முக்கிய கிரிமினல் வழக்கை ஆய்வு செய்வதில் தான் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், எனவே தக்கருக்கு எவ்வளவு அவகாசம் வேண்டும் என்றும் கேட்டார். தனக்கு ஏறத்தாழ ஒரு மணி நேரம் தேவைப்படும் என்று தக்கர் கூறினார். அய்ந்து நிமிடங்கள்தான் தன்னால் கொடுக்க முடியும் என்று அம்பேத்கர் கூறினார். கூடுதல் நேரம் வேண்டும் என்று தக்கர் கேட்டார். பேட்டி சுருக்கமான நேரத்தில் முடிந்தது. டாக்டர் அம்பேத்கர் எழுந்து உள்ளே போனார். இருப்பினும் தக்கர் மீண்டும் மறுநாளும் அம்பேத்கரை சந்தித்தார். டாக்டர் அம்பேத்கரை அவர் காரசாரமாகப் பேசினார்.

இந்து தலைவர்களின் மாநாட்டுத் தருணத்தில், அதாவது, 1932 செப்டம்பர் 19 அன்று டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பத்திரிகைகளுக்கு மற்றொரு அறிக்கையை வெளியிட்டார். அந்த முழு அறிக்கை கீழே தரப்படுகிறது :

“அண்மையில் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டிருந்த மகாத்மா காந்தி, சர். சாமுவேல் ஹோர், பிரதமர் ஆகியோரிடையிலான கடிதப் போக்குவரத்தைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன், அதில் மகாத்மா காந்தி சாகின்ற வரையிலும் பட்டினி கிடக்கப் போவதாகத் தனது உறுதியைத் தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் அரசு தானாகவோ, பொதுமக்கள் கருத்தினால் எற்பட்ட நிர்பந்தத்தின் விளைவாகவோ, தமது கருத்தை மாற்றிக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கும் தமது திட்டத்தை திரும்பப் பெறும் வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் அதில் காந்தி கூறியிருந்தார். தனது வாழ்வை முடித்துக் கொள்ளப் போவதாக மகாத்மா உறுதியேற்றிருப்பதானது, எவ்வளவு இக்கட்டான நிலையில் என்னை வைத்திருக்கிறது என்பதை எளிதில் ஊகித்துக் கொள்ளலாம்.

“ஒப்புநோக்கினால், வகுப்புவாரிப் பிரச்சினை, சிறிய முக்கியத்துவமுடைய பிரச்சினைதான் என்று வட்டமேசை மாநாட்டில் கூறிய திரு. காந்தி, அதிலிருந்து எழும் ஒரு பிரச்சினைக்காக அவர் ஏன் தனது உயிரைப் பணயம் வைக்க வேண்டுமென்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் திரு. காந்தியின் வழியில் சிந்திப்போரின் மொழியைக் கடைப்பிடிப்பதெனில், வகுப்புவாரிப் பிரச்சினையானது இந்திய அரசமைப்புச் சட்டம் எனும் புத்தகத்தின் ஒரு பிற்குறிப்பேயாகும்; முக்கியமான அத்தியாயமல்ல. வட்டமேசை மாநாட்டின் விவாதங்கள் அனைத்தின் ஊடேயும் திரு. காந்தி மிகவும் வலியுறுத்தி வந்த, நாட்டின் சுதந்திரத்தைப் பெறுவதற்காக அவர் இந்த மிகமிக தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தாரேயானால், அது நியாயமாக இருந்திருக்கும்.

“வகுப்புவாரித் தீர்ப்பில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சிறப்புப் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை தனது வாழ்க்கைக்கு முடிவுகட்டுவதற்கான ஒரு காரணமாக தனிமைப்படுத்தி திரு. காந்தி தேர்வு செய்ததும் ஒரு வேதனையளிக்கும் ஆச்சரியமான விஷயமாகும். தனித்தொகுதிகள் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமின்றி, இந்தியக் கிறித்துவர்கள், ஆங்கிலோ – இந்தியர்கள், அய்ரோப்பியர்கள் மற்றும் முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக்கும்கூட வழங்கப்பட்டுள்ளன. முகமதியர்களையும், சீக்கியர்களையும் தவிர, பிற ஒவ்வொரு சாதியினருக்கும், மதப் பிரிவுக்கும் சிறப்பு பிரதிநிதித்துவத்திற்கு காந்தி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், திரு. காந்தி, இப்பொழுது தாழ்த்தப்பட்டவரையும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளையும் வைத்துக் கொள்வதற்கு அனுமதிக்கிறார்.

“தாழ்த்தப்பட்ட சாதியினரின் பிரதிநிதித்துவத்திற்கான ஏற்பாடுகளின் விளைவுகள் குறித்து திரு. காந்தி வெளிப்படுத்திய அச்சங்கள் முற்றிலும் கற்பனையானவை என்று நான் கருதுகிறேன். முகமதியர்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனித் தொகுதிகள் வழங்கப்படும் எற்பாடுகளினால் அவருடைய மனசாட்சி எழுச்சியடையவில்லை. சுயராஜ்ய அரசியல் சாசனத்தின் கீழ் பெரும்பான்மையோரின் கொடுங்கோன்மைக்கு எதிராகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, சிறப்பு தகுதியுள்ள எந்த சாதியினராவது இருக்கிறார்களென்றால், அது தாழ்த்தப்பட்ட சாதியினர்தான் என்று பலரும் உணர்ந்திருப்பார்கள் என்று நான் நிச்சயமாகக் கருதுகிறேன். உயிர் வாழ்வதற்கான போராட்டத்தில் அய்யத்திற்கிடமின்றி தன்னை நிலைத்திருக்கச் செய்ய முடியாத நிலையில் இந்த சாதியினர் இருக்கின்றனர். அவர்கள் பிணைக்கப்பட்டுள்ள மதம், அவர்களுக்கு ஒரு கவுரவமான இடத்தை வழங்குவதற்கு பதிலாக, சாதாரண சமூக உறவுகளுக்கு தகுதியற்ற தொழுநோயாளிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்குகிறது. இது பொருளாதார ரீதியில் தமது அன்றாட உணவை சம்பாதிப்பதற்கு முற்றிலும் சாதி இந்துக்களைச் சார்ந்துள்ள வர்க்கமாகும். அதற்கு சுதந்திரமான வாழ்க்கை முறை எதுவும் திறந்திருக்கவில்லை.

இந்துக்களின் சமூக வெறுப்புணர்ச்சியின் காரணமாக, ஒவ்வொரு முன்னேற்றப் பாதையும் அவர்களுக்கு மூடப்பட்டுள்ளது என்பது மட்டுமின்றி, இந்து சமூகம் முழுவதிலும், அவர்களுக்கு சாத்தியமான ஒவ்வொரு கதவையும் மூடுவதற்கு ஒரு திட்டவட்டமான முயற்சி இருந்து வருகிறது, இதன் மூலம் தாழ்த்தப்பட்ட சாதியினர் வாழ்க்கைத் தராசில் உயர்வதற்கான எந்த வாய்ப்பையும் அனுமதிக்காமல் இருப்பதற்கு இவ்வாறு செய்யப்படுகிறது. உண்மையில், ஒவ்வொரு கிராமத்திலும் சாதி இந்துக்கள் – அவர்களுக்குள்ளேயே எவ்வளவு பிளவுபட்டிருந்தாலும், ஒரு சாதாரண இந்தியக் குடிமகனின் ஒரு சிறிய மற்றும் சிதறிய அமைப்பாக அமைந்துள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் பாலான எந்த முயற்சியையும் ஈவிரக்கமற்ற முறையில் அழுத்தி ஒடுக்குவதற்கு எப்போதும் நிலையான சதியில் ஈடுபடுகின்றனர்!

இந்தச் சூழ்நிலைகளில், மிகவும் ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு சட்டப்படியான அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்கு தலையாய அவசியமாகும். அப்பொழுதுதான் வாழ்க்கைக்கான போராட்டத்திலும், ஒழுங்கமைந்த கொடுங்கோன்மைக்கு எதிராக தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குமான போராட்டத்தில் வெற்றியடைய முடியும் என்பதை ஒத்துக் கொள்வது, சரியாக சிந்திக்கும் எல்லா நபர்களுக்கும் நியாயமானதாகும்.

– வளரும்

ஆதாரம் : பாபாசாகேப் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(1)

Pin It