அற்புதமாகப் பாடுவார். குழந்தைகளோடு விளையாடி மகிழ்விப்பார். அருமையாக மார்க்சீய வகுப்பெடுப்பார். துல்லியமாக சரளமாக மொழி பெயர்ப்பார். இப்படி ஒவ்வொரு நண்பரும் ஒவ்வொரு வகையில் நினைவுகூர்ந்து வருந்தி அழுது கொண்டிருக்கிறார்கள். திடீரென்று மறைந்துவிட்டார் எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான சிங்கராயர் (வயது 53). அவ்வப்போது அவர் வலிப்பு நோயினால் பாதிக்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஜனவரி 23 அன்று வலிப்பு வந்தபிறகு அவருக்கு நினைவு தப்பிப்போய் விட்டது. இரண்டு நாட்கள் நினைவே திரும்பாமல் மருத்துவமனையில் கடந்த 25 அன்று அதிகாலை 3 மணிக்கு அவர் மரணமடைந்தார். மருத்துவ நண்பரான திருமதி. ராணி அவர்கள் உடனிருந்து கவனித்துக் கொண்டார். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் கால்கள் செயலிழந்து போனதையும் பேச முடியாமல் போனதையும் அவர் அறிவித்த போது நண்பர்கள் அனைவரும் கலங்கிப் போனார்கள். இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் அவர் உயிரும் பிரிந்து விட்டது.

சிங்கராயர் என்றதும் பளிச்சென்று நினைவில் தோன்றுவது ஜெனரல் கியாப் எழுதிய புரட்சிகர மக்களை ஆயுதபாணியாக்குவது எவ்வாறு? என்ற புத்தகம் தான். எளிய தமிழில் அதே சமயம் துல்லியமான மொழிபெயர்ப்பாக வந்த இந்த புத்தகம் சிங்கராயரின் மொழிபெயர்ப்புத் திறனுக்கு ஒரு சான்று. அடுத்து சிலுவையில் தொங்கும் சாத்தான். கூர்மையான அரசியல் உண்மைகளை விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டே படிக்கும் வகையில் கென்ய எழுத்தாளர் கூகி - வா - தியாங்கோ எழுதிய இந்த நாவலை, தமிழ் வாசர்களிடையே நினைவில் என்றும் நிழலாட வைத்தது சிங்கராயரின் கண்ணாடி போன்ற நறுக்கான மொழிபெயர்ப்புத் திறனே.

மூத்த எழுத்தாளரும், முன்றில் இதழாசிரியருமான திரு. மா. அரங்கநாதன் மொழிபெயர்ப்பதாக இருந்த இந்நாவலை, அவரே மனமுவந்து என்னிடம் அளித்தார். நானும் நூலை முழுமையாக மொழிபெயர்த்து விட்டேன். கைப்பிரதியை முழுமையாக வாசித்துப் பார்த்த சிங்கராயரின் நண்பர் நடராஜன், உரையாடல்களை இன்னமும் பளிச்சென்று அமைத்தால் சிறப்பாக இருக்கும் என்றும், அதற்கு நண்பர் சிங்கராயரை கேட்கலாமென்றும் கூறினார்.

விருப்பத்தோடு ஒப்புக்கொண்டு மனைவி ராஜத்துடன் பதினைந்து நாட்கள் தங்கியிருந்தார். மொழிபெயர்ப்பை சீவிச் செதுக்கிப் பட்டை தீட்டி வைரம் போல ஜொலிக்கச் செய்தார். நான் மறக்க முடியாத பதினைந்து நாட்கள் அவை. காலையில் எழுந்து சமைத்துக் குளித்து அலுவலகம் செல்வது போல் சரியாக ஒன்பது மணிக்கு உணவை முடித்து மொழிபெயர்ப்பை செழுமைப்படுத்த உட்காருவோம். காலை பதினோரு மணி, பிற்பகல் மூன்றுமணி, ஐந்து மணிக்கு தேனீர் இடைவேளை, மதியம் ஒரு மணி, இரவு ஒன்பது மணி உணவு இடைவேளை. இந்த இடைவேளைகளில் செய்த திருத்தங்களைப் பற்றிய பேச்சுத்தான். ஒரு சில சொற்களை சுட்டி இதனை ஏன் பயன்படுத்தினீர்கள் என்று கேட்பார்.

அதுதானே சரியான பொருள் தருகிறது? என்பேன். ஏன் இந்தச் சொல் பொருந்தாதா? என்று அவர் ஒரு சொல்லைச் சொல்வார். இதுவும் பொருந்தும் என்பேன். இல்லை, நான் சொன்ன சொல்தான் பொருந்தும் ஏனென்றால் இது தமிழ்ச்சொல். நீங்கள் வடமொழிச் சொல்லை மிக இயல்பாகப் பயன்படுத்துகிறீர்கள் என்று குற்றம் சொன்னார். அதுவரை இது குறித்த பிரக்ஞையின்றி புழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்களை பயன்படுத்தி வந்திருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன். இதனை இனி நினைவில் கொள்வேன் என்று அவருக்கு நான் உறுதியளித்தேன்.

மொழிபெயர்ப்பில் மாற்றங்களைச் செய்துவிட்டு வாக்கியத்தை சிங்கராயர் படித்துக் காட்டுவார். குபீரென்று சிரிப்பு வரும். சிரமப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு வேலையைத் தொடங்குவோம். பிறகு மறுநாள் சமையலுக்கு காய்கறி நறுக்கி எடுத்து வைத்து விட்டு தூங்கச் செல்வோம். ஒன்றிரண்டு நாட்கள் சிங்கராயர் எங்களுக்காக பாடினார். சிங்கராயருடன் கழித்த அந்நாட்களை மறக்க முடியாது. ஒரு கடினமாக வேலையை அவ்வளவு இலகுவாக செய்தது ஒன்று. என் வாழ்நாளில் அதுவரை இல்லாத அளவு மனம்விட்டு சிரித்து மகிழ்ந்தது மற்றொன்று.

அப்படி பேசிச் சிரித்து மகிழ்வுடன் மொழிபெயர்ப்பைச் செய்தவர்தான் சிங்கராயர். ஆனால் அதுவே பிழைப்புக்கான வேலை என்றான போது அது அவருக்கு மகிழ்வாக இருந்ததாகச் சொல்ல முடியாததுதான். அதற்குப் பிறகு பல நூல்களை அவர் மொழிபெயர்த்துள்ளார். உலகாயுதம், இஸ்லாம், இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சியும் (பகுதி -1) ரத்த இதழ்கள் (அச்சில்) ஆகிய நூல்களை வாசித்தவர்கள் சிங்கராயரின் மொழிபெயர்ப்புத் திறனையும், மார்க்சீய அறிவையும், வாசிப்பு அனுபவத்தையும் நன்கறிவார்கள்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, சீரிய இலக்கியம் சோறு போடாது என்பது பாரதியார் காலந்தொட்டு நாம் அறிந்ததுதான். பொருளோ புகழோ பெறுவதற்காக ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களையோ, பிற தனியார் நிறுவனங்களையோ ஒருபோதும் அணுகியதில்லை சிங்கராயர். உழைப்புக்கும், திறனுக்கும் தகுந்த அங்கீகாரமும் பொருள் ஆதாயமும் அவர் பெறவில்லை. தமிழ் மொழிப்பெயர்ப்பாளர் சங்கம் 2004 ஆகஸ்ட் 15 அன்று சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்று அவரை கெளரவித்தது. உழைப்பையும், திறமையையும் போற்றிப் பாதுகாக்கும் கடமையை அரசு மேற்கொள்ளாத போது, எழுத்தாளரை, மொழி பெயர்ப்பாளரை இழந்து இன்னலுறும் குடும்பத்தாரை காக்கும் கடமை இலக்கிய ஆர்வலர்களுடையதாகி விடுகிறது.

சிங்கராயரின் மனைவி ராஜம் படிப்பறிவில்லாதவர். வேறு வருமானமும், துணைக்கு குழந்தைகளும் கிடையாது. அவரை கெளரவமாக வாழச் செய்ய வேண்டும் என்று ராயரின் நண்பர்கள் கருதுவதால், நிதி திரட்டி வைப்பு நிதியில் போட்டு அவர் மனைவி மாத வருவாய் பெறும்படி செய்வதென முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து முடிவெடுத்து அறிவிப்பு வெளியிடப்படும். இது குறித்து மேலும் விவரமறிய தோழர் நடராஜனை 94451 25379 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Pin It