Man in loveநாம் அருகருகே
சந்தித்துக் கொள்வது
இது இரண்டாவது முறை

முன்பு பேருந்துக்கும்
இப்போது மழைக்கும்
ஒதுங்கியுள்ளோம்

வேறு பெண்களும்
வானம் வெளுக்கக்
காத்திருந்தாலும்
எனதன்பின் வசீகரம் குவிவது
உனை நோக்கி மட்டுமே

குளிருக்கு அடக்கமாகவும்
குறுகுறுத்த பார்வை
தவிர்க்கவும்
இழுத்துப் போர்த்துகிறாய் சேலையை

முகத்திலேந்தும்
சாரலை விடவும்
ரசனைமிக்கதாய் இருக்கிறது
உன் கையுதறலில்
தெறித்த நீர்த்துளி

மெல்ல மொட்டவிழ்ந்த
என் கட்டுப்பாடுகள்
மையமாக வைத்துச்
சுற்ற ஆரம்பித்தன உன்னை

நேசிக்கலாமென
நினைத்தபோதுதான்
நிகழ்ந்தது
யாரோ ஒருவன்
வாகனமெடுத்து வந்ததும்
உரசியபடி நீ
உட்கார்ந்து போனதும்

அதன்பின்
மழை விட்டிருந்தது
தூவானம்தான் விடவில்லை. 

மாறன் ('இரண்டாவது சந்திப்பு' தொகுப்பிலிருந்து)