“ச்சீ..
பொம்பளைங்க
நிம்மதியா வெளியே
போயிட்டு வரமுடியுதா?
குறுக்க வந்த
ஆபாசமா பேசுறான்.
பின்னால வந்து
துணிய புடிச்சு இழுக்கிறான்.
கூட்டத்துல உரசுறான்
ஆம்பிளைக்கு
இதுதான் அழகுன்னு நினைப்புப் போல
ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு”

பெண்களுக்கு எதிரான
வன்கொடுமைகளைக் கண்டித்து
காலையில் பக்கத்து விட்டு
பாபு அம்மாவிடம்
ஆவேசப்பட்ட
அம்பிகா அத்தைதான்
மாலை வீட்டில்
டீ.வியின் முன்
பவ்யமாக அமர்ந்து
குகி. கூவமின்
ஆன்மீக அருளுரை
கேட்டுக் கொண்டிருந்தாள்

“என்ன பண்ணார் தெரியுமோ
நம்ம கிருஷ்ணர்,
பெண்கள் குளிச்சிண்டுருந்த
குளத்துக்குப் போய்
அவா துணியெல்லாம்
தூக்கிண்டு ஓடியாந்துட்டார்.

அதேபோல் நம்ம கந்தனும்
மாறுவேஷம் போட்டுண்டு
அவா அண்ணா
விநாயகர் உதவியோட
வள்ளியை
ஓட, ஓட
விரட்டி, விரட்டி
காதல் பண்ணார்.

நம்ம பகவான்களுக்கு
மானிட பெண்களோடு
விளையாடுறதுல தனி குஷி”

கேட்டுக் கொண்டிருந்த
மாதர் சங்க பொறுப்பாளர்
அம்பிகா அத்தை முகத்தில்
பக்தி கலந்த பூரிப்பிருந்தது.