1.
நாமிருவரும் ஒன்றாய் அமர்ந்து படிக்கும் சமயங்களில்
தெரியாமல் புத்தகத்தை மிதித்து விடும் என்னிடம்
Female'டேய் அது சரஸ்வதிடா தொட்டு கும்பிடுடா என்கிறாய்'

தெரிந்தே உன் கால்களை உரசி விட்டு
'டீ நீ தேவதைடி' என்று தொட்டு கும்பிட வந்தாலோ
முறைத்து விட்டு பின் துரத்த ஆரம்பிக்கிறாய்.

2.

ஏதாவதொரு அடர்ந்த காட்டின் உயர்ந்த மரத்தில்
ஒரு இதயம் செதுக்கி ஒரு புறம் உன் பெயரையும் ,
மறு புறம் என் பெயரையும் எழுதுவதை விட
உன்னிடமே என் காதலை சொல்லிவிட எத்தனித்த
அந்த நாளில் நீ கல்லூரிக்கு வரவில்லை

அந்த நாளில் உன் குடும்பத்துடன் கொடைக்கானல்
சென்ற நீ மரத்தில் நம் பெயர்களை செதுக்கினாய்
என்பதை நாம் காதலை பரிமாறிய பின்
நடந்த கதையாடலின் போது சொன்னாயே நினைவிருக்கிறதா?

3.

சிறுவயதில் விடுமுறையில் உன் வீட்டிற்கு
வந்த நான் உன்னை அடித்தாலோ உன்
விளையாட்டு பொருட்களை உடைத்து விட்டாலோ
அழுது புரண்டு ஊரைக் கூட்டி
உன் அப்பாவிடமும் சொல்லி விடுவாய்

இப்போதெல்லாம் கல்லூரி விடுமுறையில்
உன் வீட்டுக்கு வரும் சமயங்களில் உன்
இதழ் முத்தங்களை நான் திருடினாலோ
எனை தவிர்த்து விட்டு ஓடிப் போகும்
சமயங்களில் உனை பிடிக்க முயன்று
என் நகம் கீரி ரத்தம் வந்தாலோ சத்தம் போடாமல்
உன் நாட்குறிப்பில் எழுதுகிறாய் நடந்ததையெல்லாம்

4.

நம் வீட்டில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிகளின்
இறுதியில் எடுக்கபட்ட புகைப் படங்களிலும்
என்னை பார்த்துக் கொண்டே நிற்கிறாய் நீ.

5.


ஒன்றாய் அமர்ந்து தொலைக்காட்சி நோக்குகையில்
தொலைக்காட்சியில் வரும் முத்தக்காட்சிகளுக்கு
யாருக்கும் தெரியாமல் ஒருவரை ஒருவர்
திரும்பி பார்த்து சிரித்து கொள்கிறோம்


6.

சிறு வயதில் நம்மிருவருக்கும் மொட்டையடித்து
கோவிலில் சாமி முன்னே 'இவனுக்கு இவள் தான்'
என என் அப்பாவும் உன் அப்பாவும் சத்தியம் செய்த
ஒரே காரணத்திற்க்காக மட்டும் தான் என்னை
கல்யாணம் செய்து கொள்ள போவதாக சொல்கிறாய்

அதற்காக மட்டும் தானா?....
என நான் இருமுறை அழுத்திக் கேட்டால்
'ச்சி போடா' என்று முகத்தை பொத்திக் கொள்கிறாய்



7.

நான் சிகரெட் பிடிப்பதை என் அம்மாவிடம்
சொல்லி விடுவாய் என்று சொன்னாய்
பரவாயில்லை சொல் அப்படியே உனக்கு
என்னை பிடிப்பதையும் சொல் என்றால்
வெட்கப் பட்டு ஓடி விடுகிறாய்
இப்படித்தான் தப்பித்துக் கொள்கிறேன் ஒவ்வொரு முறையும்..!!


8.


சிறுவயதில் விடுமுறையில் உன் வீட்டுக்கு
நான் வரும் சமயங்களில் நாம்
நிறைய சண்டை போட்டுக் கொள்வோம்
ஆனாலும் இரவில் நம்மிருவரையும்
பக்கத்தில் தான் படுக்க வைப்பார்கள்.

இப்போது நாம் சண்டை போட்டுக் கொள்வதில்லை
அதிகம் பார்த்துக் கொள்கிறோம் சிரித்துக் கொள்கிறோம்
ஆனாலும் இரவில் உனக்கும் எனக்குமிடையில்
உன் தம்பியை படுக்க வைக்கிறார்கள்..!!!

9.


பள்ளிக்கு என்னுடன் தான் உன்னை அனுப்புவார்கள்
உன் மீது கோபமிருக்கும் சயங்களில் வேண்டுமென்றே
கல்பாதையில் சைக்கிள் ஒட்டி உன்னை பழித்தீர்ப்பேன்

உன் அப்பாவிற்க்கு மாற்றலாகிப் போனதால்
வேரூர் சென்ற நீ எனக்கு
'நான் இப்போது சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டேன்
ஆனால் உன் பின்னால் உட்கார்ந்து செல்லத்தான் ஆசையாயிருக்கிறதென' எழுதிய கடிதத்தை அப்போது படித்த போது ஒன்றும் தோன்றவில்லை இப்போது மீண்டும் படிக்கும் போது தான் சிலிர்க்கிறது

10.

கடன் அன்பை முறிக்குமாம்
எங்கே திருப்பிக் கொடு பார்க்கலாம்
நான் கொடுத்த முத்தத்தை

11.

நெடு நாளுக்கு பின்னர் என்னை
பார்த்த போது உன்னகேற் பட்ட வெட்கம்

இளம் வயதில் உன் அம்மா
என்னையும் உன்னையும்
ஆடைகளின்றி ஒன்றாய் குளிப்பாட்டிய போது
நீ வெட்கப் பட்டதை நினைவூட்டியதை
நான் எப்படி சொல்வேன் உன்னிடம்..!!

12.

எல்லாருடம் சேர்ந்து ஆடும்
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
நானும் நீயும் மட்டும் எப்போதும்
ஒன்றாய் ஒளிந்து கொள்ளும்
அந்த நெற்குதிரின் மறைவில்
இன்று என் அக்கா குழந்தைகள் ஒளிந்து
விளையாடும் போது நின்று ரசிக்காமல்
போக முடியவில்லை என்னால்

13.

நீ வயதுக்கு வந்த போது
உன்னை எல்லாரும் மாய்ந்து மாய்ந்து
கவனித்ததை கண்டு எரிச்சலுற்ற என்னிடம்

'எல்லாம் உனக்காக' தாண்டா என
உன் அம்மா சொல்லியதற்க்கு
அர்த்தம் புரிந்திருக்கவில்லை
எனக்கு அப்போது....

14.

சிறு வயதில் நீ என் வீட்டிற்க்கு
விடுமுறைகளில் வந்து தங்கி விட்டு
கிளம்பும் போது வருத்தம் கொண்டு
உன்னை வழியனுப்ப வராமல்
அறைக்குள்ளே நான் முடங்கி கிடந்ததை
சொல்லி பளிப்பு காட்டுகிறாய்

பேருந்தில் ஊருக்கு போகும் வழியெல்லாம்
என்னை நினைத்து நீ தேம்பியழுது தூங்கி
போவது தெரிந்திருந்தும் பேசாமலிருக்கிறேன் நான்.


கார்த்திக் பிரபு இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.