பிணத்தைக்கண்டு பிணமாகிப்போன புத்தர்
வீட்டைவிட்டு
கொற்றத்தைத் துறந்து
கொண்டவளை மறந்து
ஒடினான் துறவியாய்
தெரியாத ஒன்றைத்தேடி.

சவத்தைக் கண்டு
புதிய பிரசவமானது அவர் ஆத்மா.

போதிமரத்தின் கீழ் புத்தரின் வாசம்
யசோதராவுக்கே அரண்மனையில் சிறைவாசம்.
ஆண் ஓடினால் ஞானம்
பெண்ணோடினாலோ பல வியாக்கியாணம்.

ஞானம் நிறைந்து
காலம் கடந்து
அரண்மனைக் கதவுகளை
மீண்டும் தட்டினார் புத்தர்
இன்முகத்துடன்
இளநகையுடன்
புன்முறுவல் பூத்த நரை திரைவிழுத்த யசோதராவிடம்
“என் பல்லொன்றைக் காணவில்லை கண்டாயோ” என்றார்

ஞானத்தில் பார்த்தவள்
“ இலங்கையிலே இருக்கென்றாள்”
மீண்டும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிய புத்தர்
இன்னும் திரும்பி வரவில்லை.
திரும்பி வரவேயில்லை.
காத்திருப்பு
கண்ணகிக்கி மட்டுமல்ல
யசோதராவுக்கும்தான்

ஈழத்துத்தமிழ் பெண்கள் போல்
கணவனின் தேகத்தைத் தேடினாள்
சிங்கள தேசமெங்கும்.

எந்தவித பொலிஸ் அறிக்கையுமின்றி
விகாரை எனும் கல்லறைக்குள்
புத்தர் புதைக்கப்படிருந்தார்.
சமாதி முன் எரிந்து
சாம்பலாகிக் கொண்டிருந்தது திரிபுடகம்

வழிமேல் விழிவைத்து இன்றும்
வானுலகில் காத்திருக்கிறாள் யசோதரா
காத்திருப்பு இன்றும் தொடர்கிறது
எங்கள் ஈழத்துத் தமிழ் பெண்களில் இருந்து
தமிழ்நாடு கரையோரப் பெண்களை வரை.

- நோர்வே நக்கீரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)