உண்டு கொழுத்தவன் பசிக்கும்
உயிர் வாழத் துடிப்பவன் பசிக்கும்
அநேக வேற்றுமைகள் உண்டு
பசியென பொதுமைப்படுத்த முடியாமல்.
வீடற்றவனின் இடம் பெயர்விற்கும்
வீடு மாறும் இடம் பெயர்விற்கும்
வேற்றுமைகள் உண்டு
இடப்பெயர்வென
பொதுமைப்படுத்த முடியாமல்.
துயரத்தின் கண்ணீருக்கும்
தூசி விழுந்த கண்ணிருக்கும்
வேற்றுமைகள் உண்டு
கண்ணீரென
பொதுமைப்படுத்த முடியாமல்.
இழந்தவரின் அலறலுக்கும்
ஏய்த்து எடுத்தவனின்
இழப்பு அலறலுக்கும்
அநேக வேற்றுமைகள் உண்டு
இழப்பென பொதுமைப்படுத்த முடியாமல்.
பார்வைகளின் புறத்தோற்ற
ஒப்பீட்டில் வாழ்கிறது நீதி
வலியவனிடத்தில் ஏற்குமாறு
எப்பொழுதும்.
அநீதியென சொல்ல முடியாமல்
எளியவனின் நீதி
தகிக்கிறது மௌனமாக
அயோக்கிய கூடாரங்களில்
நம்பிக்கையை விடாமல்
எப்பொழுதும்.

- ரவி அல்லது