யாதுமாகி நின்றாயாமே காளி
எப்பொழுது எங்களுடன் வந்து
நின்றிருக்கிறாய் நீ.
நீ கைவிட்டதைப்போல
நாங்கள் உன்னை கைவிடுவதில்லை
வா பாலத்திற்கு அடியில்
ஒண்டி குடித்தனத்தில் கலந்திடு
அடைமழை, பெருமழை
சாரல் மழை யாவற்றிலும்
தலையில் உரசாக்கு கொங்காணி
போட்டுக்கொண்டு விடிய விடிய
ஈரத்தில் ஊறி உறக்கமற்று
நடுங்கிக்கொண்டே நிற்கலாம்.
'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்'
சொல்லும் ஊருக்குள்
வீதிக்கு ரெண்டு பொக்கலின் இருக்கிறது.
பொக்கலின் உறுமல் கேளாயோ எம்பாவாய்.

- சதீஷ் குமரன்