எல்லா பொம்பளைய போல தா என்னையு பெத்தா
எல்லா தாய்மார போல தா எனக்கு பாலூட்டுனா
எல்லார போல தா பள்ளிகூடத்துக்கு அனுப்புனா
காதலிச்சு ஓடியாந்ததால
ஊரவுட்டு ஒதுக்கி வச்சுட்டாலு
காக்கா கழுகு நாயெல்லா இவ சொந்தமாக்கிகிட்டா
இட்டிலி சுட்டா மட்டு இல்ல எத சுட்டாலு
இலைல வக்கிறதுக்கு முன்னால
நாயி காக்கா கழுகுக்கு தா மொதல்ல வப்பா
ஒரு நாள் மாட்டீரல சுட்டவ வழக்கம் போல
நாலுதுண்டத்த சேத்து காலேசுக்கு வச்சுட்டு
தாந்திண்ணிபயலே பாக்கவச்சுட்டு திங்காம
பக்கத்துலருக்கவனுகளுக்கு
ரெண்டு துண்டத்த குடுத்துட்டு
திண்ணுன்னு சொல்றா...
அவகிட்ட எப்டி சொல்றது
காதலிச்சு கூட்டியாந்தா மட்டு இல்ல
மாட்டுக்கறி திண்ணாலு
ஒதுக்கி தா வைப்பாங்கனு

- அ.ஜோதிமணி