ஒரு கோடை விடுமுறை முடிந்து
பள்ளிக்குத் திரும்பிய நாளொன்றில்
காற்றோட்டமான வகுப்பறைகள் வெட்டப்பட்டு
நீளக்கட்டடம் ஒன்று புடைத்திருந்தது.

பின்னும் சில மாதங்களில் பலவகை
காரைப் பட்டைகளால், கண்ணாடிகளால்
அலங்காரமேற்றி,விழியிழுக்கும் விதமாய்
வண்ணஞ் சாற்றினார்கள்.
அத்தனைக்குப் பிறகும் அழகென்பது
அழிந்து கிடந்தது அதில்.

இலையெல்லாம் கொட்டி குச்சியும், கொம்புமாய்
நிழல் சிதறக் கிடந்த மரங்களின் அழகில்
இம்மி அளவும் இல்லை அவ்வலங்காரம்.

- ஆடானை குமரன்