கவிஜி
பிரிவு: கவிதைகள்

நான் கவனிப்பதை
அவள் கண்டு கொண்டாள்
நெற்றிச் சுழிப்பு கூடியிருந்தது
பேச்சில் கூட ஹக்சி கொஞ்சம்
கூடுதல் தான்
இடையே பெருந்தலையொன்று
பரஸ்பரம் மறைக்க
நான் நினைப்பதற்குள்
என் முகம் தெரிய
அவள் நகர்ந்திருந்தாள்
அமலா பாலின் சிரிப்பு
கன்னக்குருத்தின் புஷ்டி
பூத்து விரிந்த இதழ்களின் கணமும்
அடுத்த வரியாய் இணைந்திருந்தது
வெறிக்கப் பார்த்து
கேவலத்தை விட்டொழிந்திருந்தேன்
கடும் வெயிலின் கரகர சத்தம்
குறுக்கும் நெடுக்குமாக
பேரன்ட்ஸ் கும்பல்
எல்லாம் மறக்கடிக்கப்பட்டு
ஒரு பதின் பருவத்தன் ஆகி இருந்தேன்
மெய்மறத்தலில்
வெயில் தேவதையென
இறங்கியிருந்த அவளை
கண நேரக் கூட்டத்தில்
தவறவும் விட்டிருந்தேன்
அழகின் சூட்டிலிருந்து
தப்பித்துக் கொள்ள
அந்த தலைமறைவு
தேவையாய் இருந்தது
இருந்தும் வீடு வரை
ரோடெல்லாம் AC போட்டது யாரோ...!

- கவிஜி