இரவில் உறக்கம் நிலைப்பதாயில்லை.
கனவுகள் கணமெங்கும் அலைக்கழிக்கின்றன.
தறிகெட்டோடும் ஒரு குதிரையென
கண்மண் தெரியாது ஓடுகிறது இரவு.
குளம்பின் குழியில் சிக்காமல் இருக்க
அங்குமிங்கும் பதறிப் புரள்கிறேன்;
உடலெங்கும் உதிரத்தின் கோடுகள்.
எழுந்து நடந்தால் காற்றெங்கும்
உப்பு அம்புகள் உரத்துப் பாய்கின்றன
உயிரின் விளிம்பு வரை;
ஊன்றிப் பரவுகிறது வலிகளின் வேர்கள்
இதயத்தின் பாத நரம்புகளில்.
தழையும் வேதனையைக் கொடியை அறுக்க
உன் நினைப்புக் கத்தியை எடுத்தேன்
என்னிதயம் அறுத்து குருதியை
கொடியின் வேருக்கூற்றிப் போனது அது.
வளர்ந்த கொடியில்
வாடாத பூவாய்ப் பூத்துக் கிடக்கின்றன
வடிவான கண்ணீர்ப் பூக்கள்;
தேனீக்களே! வண்டுகளே!
இங்கு வாராதீர்.
இந்தப் பூவில் தேன் இல்லை
மகரந்தமெங்கும் மரணம் ததும்பும்
வெந்நீர் அமிலம்!

- ஆடானை குமரன்