வெகு நுட்பமாக உனை விட்டகல்கிறேன்
பகிரங்கமாகவும் தான்
எனது வரையறை உனை
கை விடுகிறது

பெருங்கடல் இவன்
என்றதையெல்லாம் சிற்றோடைக்கும்
பொருந்தா சமநிலையில்
எங்கனம் பொருத்திக் கொண்டாய்

மொத்தமாய் அணைத்து விடத்தான்
சிறுக சிறுக ஏற்றினாயோ
ஆயிரம் மெழுகுவர்த்திகள்

பேரன்பை அடியோடு நொறுக்கி விட்டு
எதிர்தரப்பில் நின்று சிரிப்பது
கடவுள் கைமாறிய பொழுதா
கயமை உடன் கூடிய பொழுதா

கால பொக்கிஷம் நீ ஞால புத்தகம் நீ
என பூரித்த நாட்களை
எங்கு புதைத்திருக்கிறாய்

துளி துளியாய் வெறுக்க செய்யும்
லாவகத்தை
உன் துரோகத்தில் ஏற்றுகிறேன்

அடிமரம் காய்வதற்குள்
நகர்ந்து கொண்ட குளக்கரை என
சிறு நிம்மதி ஏனோ

இறுதியிலும் உறுதியாக
சொல்ல வந்தது இதுதான்

சிறகுகள் உனை மறந்து விட்டன
சிலுவைகள் ஒருபோதும்
துரோகங்களை மறப்பதில்லை

- கவிஜி