ஒவ்வொரு வருடமும்
யாரேனும் ஒருவராவது
தவறாது
நாட்குறிப்பேட்டினை
கையளித்துச் செல்கிறார்கள்

என் கனவை
என் மகிழ்வை
என் துக்கத்தை
என் அந்தரங்கத்தை
உனக்குச் சொல்லித் தீரா
என் சொற்களை
வாய் வரை வந்து வெளியேறாது
உள்ளடங்கிப் போன வார்த்தைகளை
உன்னோடு பகிர்ந்த காதலை
பகிர விரும்பிய காமத்தை
நினைவு கூரவேண்டிய நிகழ்வுகளை
மறக்க வேண்டிய சம்பவங்களை
மறைக்க விரும்புகிற தடயங்ளை

என ஏதேதோ
எழுதும் படி சொல்கிறார்கள்

ஒரு கையேட்டிற்குள்ளா
என் காலத்தை நிரப்புவது?

நான் காற்று
கட்டுக்கடங்கா காற்று!

நான் நெருப்பு
பேழைக்குள் அடைய விரும்பா
பெரும் நெருப்பு!

நான் கடல்
கால் கொண்டு நடந்தலைந்து
கடக்கவியலா பெருங்கடல்!

யாருமற்ற
தனியறையில்
வெற்றுக்காகிதமாய்
படபடக்கிறது நாட்குறிப்பேடு.

நான் விரும்பும்
என் மனதைப் போல!

- இசைமலர்