அப்பாவிற்கு கைகள் நடுங்குகின்றன..
வட்டியை ஈன்று கொண்டிருக்கும்
கடனில் ஈ மொய்க்கிறது.
வாசலில் கேட்கும் செருப்பு சத்தம்
இப்போது கதவைத் தட்டுகிறது.
முதலை எட்டி விட்ட கடனை
நோட்டில் கிறுக்கிக் கொண்டிருக்கிறது
முதலையின் விரல்கள்.
அடுப்படி திட்டின் விறகுகளுக்குப் பின்
தோதான இடமுண்டு அப்பாவுக்கு.
மாராப்பை தோள்வரை ஏற்றி விட்ட
அம்மாவின் கைகள்
தாழ்ப்பாளை பாதி உயிரில் திறக்கின்றன.

~~

தலை குனிதல் தீரவில்லை
கடனை அடைத்தும்
தலை குனிதல் தீரவில்லை
ஊர் விட்டு போய் பிழைத்தும்
பொரணிகள் ஆறவில்லை
மஞ்சள் நோட்டீஸ் அடித்தும்
வலையில் சிக்கிய எலியை
முறைக்கும் ஏளனப் பார்வை
அப்பாவின் முதுகை இன்னும்
துளைத்துக் கொண்டிருக்கிறது..

~~

கடன்காரர்களுக்கு
மானம் தான் காமம்
அதைச் சீண்டுவதில் தான்
காமுகர்களாகிறார்கள் முதலாளிகள்..

~~

இஸ்லாத்துக்கு
காபீர்கள் என்றால்
ஊருக்கு கடனாளிகள்.

- சிபி சரவணன்