விரிந்தே கிடக்கிறது
என் நேசப் பெருவெளி.,
நீங்கள்தாம் அது
குறுகிக் கிடப்பதாய்
குறைகூறிப் போகிறீர்...

திறந்தே கிடக்கின்றன
என் வரவேற்பின் வாசல்கள்.,
நீங்கள்தாம் அவை
பூட்டிக் கிடப்பதாய்
புன்னகை புரிய மறுக்கிறீர்.

அகன்று கிடக்கிறது
என் அன்புப் பேராழி.,
நீங்கள்தாம் அது
வற்றிக் கிடப்பதாய்
வாதம் தொடுக்கிறீர்.

நிற்க.

எம் அன்பினை அளவிட
உம் அறிவினால் அல்ல
அன்பினால் மட்டுமே
இயலும் என்பதை
அறிந்து கொள்க.

அந்த அன்பின் பரிசுத்தம்...
விசும்புவிடும்
மழையின்துளி போலோ...
பூமிதொடும் பிள்ளையின்
நுதல் போலோ...
இருக்க வேண்டுமெனும்
அவசியமில்லை.

உங்களுக்காகத் தொடங்கி...
உங்களுக்குள்ளாகவே
முடிய நினைக்கும்
இக்கவிதையைப் போலும்
இருந்து விட்டிருக்கலாம்.

- இனியவன் காளிதாஸ்