தலைகீழாய் பூமி கொட்டும் நிகழ்வை
காணும் கால்களில் பத்து கண்கள்
பின்னிரவைத் திருத்தி ஆழமாய் காண்கிறேன்
நிலவில் ஒரு குளம் இருக்கிறது..

*

கடலை சுமந்தலையும் உடலில்
அலைகளாகும் ஆசை
மெல்ல நீந்திச் செல்லும்
மீன்களிலெல்லாம்
மினுமினுக்கும் நீ
நீரில் சிதறும் ஒளியிலெல்லாம் நான்
ஆழ்கடல் மௌனத்தை
அசையாமல் திருப்பு
கடல் விழிக்க காட்டிக்
கொடுத்தாலும் கொடுக்கும்
கட்டில்

*

தொங்கிக் கொண்டிருக்கும்
மொட்டைமாடியில்
படுத்திருப்பவனை
நிலவுப்பாட்டி நிமிர்ந்து
பார்த்துக் கொண்டிருந்தாள்
பின்னிரவுக்குப் பிறகு
வானம் பூமியில் இருக்கிறது

- கவிஜி