கண்ணுறக்கம் கலைந்தவுடன்
ரியானாவின் குட்டிக்கால்கள்
அடியெடுத்து வைப்பது
தொலைக்காட்சி அறையை
நோக்கியதாய்த்தான் இருக்கும்.
மோட்டுவும் பத்தலுவும் அவளின்
ஆதர்ச நண்பர்கள்.
உறக்கத்தின் நடுவே
மோட்டுவின் சமோசா வேண்டுமென்பாள்
சில சமயங்களில்
பத்தலுவின் மூக்குக் கண்ணாடி
அழகாயிருப்பதாய்க் கூறி,
தனக்கும் அதேபோல் வேண்டும் என அடம் பிடிப்பாள்
இவர்களோடு ஒப்பிடுகையில்
டோராவும் புஜ்ஜியும்
இரண்டாம் பட்சம்தான் இவளுக்கு.
செய்தி பார்ப்பதற்காய்
அலைவரிசை மாற்றினாலும்
அவள் கெஞ்சுதல் மொழிகள்
என் மனதை மாற்றி விடும்
தான் பத்தலு போல் மெலிந்த தேகம் எனத் தெரிந்ததும்
பால் குடிக்கப் பழகிக் கொண்டாள் ரியானா.
மோட்டோவின் இரசிகை
என்பதால் அவரைப்போல ஆகவேண்டி
பாலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
ஒருநாள்
தன் அழகிய பிஞ்சுக் கரங்களால்
என்னை நிமிண்டியவள்
அவர்கள் இருவரையும் வீட்டிற்கு
அழைத்து வருமாறு பணித்தாள்.
தொழில்நுட்பங்களின் கைவண்ணத்தால்
தொடுதிரையில் வரையப்பட்ட
மாய பிம்பங்கள் இவை என எப்படி
நான் புரிய வைப்பது?
இன்று நாளை என ஒவ்வொரு நாளும் கடத்தி வருகிறேன்
இதோ
தன் அழகிய புன்னகையைக் கழற்றி
நுழைவாயிலில் மாட்டியிருக்கிறாள் ரியானா
என்றோ ஒருநாள் மோட்டுவும் பத்தலுவும் வருவார்கள் என்ற
நம்பிக்கையில்...

- எஸ்தர்