அவசியமிலா தாமதங்கள்
அன்றாடம் நிகழ்ந்தாலும்
அணுவும் வினவல் கூடாது.

'காரணம் கூறுதல் ஆண்களுக்கும்
காரணம் கேட்டல் பெண்களுக்கும் அழகல்ல'
என்பது ஒன்றே உன் தத்துவம்

கோவப்படுதலையும் கோவத்தில் சத்தமிடுதலையும்
சத்தத்தில் என் சங்கறுக்க சபதமிடுதலையும்
முற்றுமுதலும் நான் பொறுத்தே ஆகவேண்டும்

எதிர்வினையாற்றுதல்
தேச துரோகம்
சாப்பிடக் கூப்பிடல்
சமூக விரோதம்

எத்தனை உதாசினங்கள்
எத்தனை அவமானங்கள்
எத்தனை கோபதாபங்கள்
எத்தனை தன்மானச் சீண்டல்களோடு
நான் சுணங்கிக் கிடந்தாலும் - உன்
ஒரே ஒரு தூண்டலுக்கு நான்
உடன் துலங்கிவிட வேண்டும்

துலங்காவிடில் நான் விளங்காதவள்
கணவன் இச்சைக்கு இணங்காதவள்

தேறலின் ஊட்டமும்
பரத்தையர் நாட்டமும் வழக்கமில்லாமைதான் நீ எனக்களிக்கும்
ஆகப் பெருங்கொடையென்றால்
உள் வலி மூட்டமும்
தற்கொலை நாட்டமும்
வழக்கமாக்கிக் கொண்டதுதான்
உன் கொடைக்கு நானளிக்கும் விலை

- மாணிக்க முனிராஜ்