மேல் சட்டை இல்லை
கொட்டும் மழையில்
கழுத்து மட்டும் நடுங்குதல்
இவ்விரவைக் கடக்கும் உத்தி
மானம் விட்டு வீடும் விட்டு
வந்தவனுக்கு
பொத்தான்களற்ற கீழ் ட்ரவுசரே துணை
புலம் பெயர தடுமாறும் நடை
வீதி முனையில் கூனி கிடக்க
ஊசி குத்தும் மழை கால குளிர்
கொலை செய்தும் பழகும்
நேரம் கூட சுற்றிலும் பார்க்கிறான்
ஒவ்வொரு வீட்டு கதவும் மூடப்படுகிறது
பிறகு வீதி கதவும் அடை படுகிறது
உலகத்தை மூடி விட்ட கொண்டியென
அவன் உடல் தளர்ந்து நிற்கிறான்
மழையை விரட்டி அடிக்க
வானம் இல்லை
நிலத்தை விரட்டி பிடிக்க பூமி இல்லை
கண்கள் மூடி தேட
நினைவுகளில் கூட நித்திரை இல்லை
வெடுவெடுவென நடுங்கிய நிழலென
அவனுள் கொப்பளிக்கிறது கைவிடப்பட்ட
வீதி வெளிச்சம்
பொதுவாக பார்த்து
ஈ என சிரிப்பது போல
செய்து கொண்டவனின் நினைவுக்கு
நல்லவேளை
எப்போதோ எவனோ சொன்ன
யாதும் ஊரே யாவரும் கேளீர்
எத்தனை யோசித்தும் வரவே இல்லை

- கவிஜி