ஒற்றை 

வானத்திற்குக் கீழே 

ஓராயிரம் தேசங்கள்

 

நீயோ வாழும் 

தேசத்தை மட்டுமே 

நேசிப்பேன் என்கிறாய்

 

பிரபஞ்சத்தின் 

பிரதிநிதி நீ

 

கண்ணுக்கு 

எட்டும் தூரம் வரை

கைப்பற்றிய தேசத்தின் காதலைக் கொண்டாடுகிறாய்

தேசபக்தியென்று

 

உன் கால்களில் மிதிபடும் கைப்பிடி மண்ணையே

அகிலம் என்று அறிவிக்கிறாய்

 

மனிதா 

நீ பார்க்காத மலர்கள்

நனையாத நதிகள்

கடக்காத கடல்கள் 

ஏறாத மலைகள் 

ருசிக்காத கனிகள்

 

நீ ரசிக்காத அந்திவானம்

நெருங்காத காதல் 

நேசிக்காத அன்பென்று

நிறைய இருக்கிறது

 

நட்சத்திரங்களை எண்ணி முடிக்காத 

எவரும் இங்கு 

செல்வந்தன் இல்லை

 

பாலை மணலிலும் ஒளிரும்

பௌர்ணமி நிலவாய்

கோடை வெயிலிலும் 

கொட்டும் மழையாய்

 

யாரும் பார்க்காத வனங்களிலும் பூக்கும் 

காட்டு மலர்களாய்

 

சிறுபறவைகளின் 

சிறகில் தெறிக்கும்

அருவிச்சாரல்களாய்

வாழ்க்கையின் வசீகரங்கள்

ஆயிரம் இருக்கிறது

 

பூட்டிய பூட்டையே 

மறுபடியும் 

இழுத்துப்பார்க்கும்

சிறு மதிகொண்டவர்களுக்கு 

புரிவதில்லை

 

வாழ்க்கை என்பது 

அற்புதங்கள் நிகழ்த்தும் 

அதிசய கணங்கள் என்று

- அமீர் அப்பாஸ்