அவதூறுகள்
உச்சந்தலையில் கனன்று கொண்டிருக்கும்
தீச்சட்டிகள்

நெடுந்தூரம்
சுமந்து செல்லும் பரவசம்
பக்தர்களுக்கும் வாய்ப்பது இல்லை.

பொய்கள் வண்ணமயிலாக
தன்னை வர்ணித்துக் கொண்டாலும்
இரவில் தீர்ந்துபோகும்
ஈசல்களாக முடிந்து போகின்றன.

முதன்மை அதிகாரிகள் முழங்குவது எல்லாம்
முக்கிய செய்திகளாகின்றன
ஒருபோதும்
உண்மைகள் ஆவதில்லை

வதந்திகள்
வாழையடி வாழையாக
வளர்ந்து வந்தாலும்
இறுதியில்
எச்சில் இலைகளாகவே
முடிந்து போகின்றன

சொன்ன சொல்
தவறுபவர்கள்
சொர்க்கத்திற்கே சென்றாலும்
அவர்களால் அதை
அனுபவிக்க முடிவதில்லை
நரகத்தின் வாசலில்
கட்டிக் கிடக்கும் நாயாகவே
மனதளவில் மாறிப் போகிறார்கள்

எரியூட்டப்பட்ட
மயானத்தின் சாம்பல்
எப்போதும் சொல்கிறது
பூமிப்பந்து நெடுகிலும்
பயணிக்கும் சர்வாதிகாரிகளின்
சரித்திரத்தை

எல்லாமே மாறிப் போகும் உலகத்தில்
மாறாது இருக்கின்றன
மனதின் வேர்களில்
கசியும் நீர்ச்சுனைகள்

- அமீர் அப்பாஸ்