முதல் உணர்வே
தாயின் பாதுகாப்புக்கூட்டினை
உடைத்து வெளியேற
வேண்டுமென்பது

பறக்கும் விழைவே ...
சிறகினை விரியச் செய்து
நோக்கினை கூராக்கி
வானை அருகணைக்கிறது

அறியும் விழைவே ...
பறக்க எத்தனிக்கையில்,
பேரெதிரிகள் உலவும் வெளியென உற்றார்
உலைத்தபோதும்
உதறி எழுந்தது

இரைக்காக அல்ல ...
பறப்பது பறப்பதற்காகவே
என்பதை
எப்படியும் விளக்கவியலாது ,
பொருளை மட்டுமே பொருட்டாய் கொள்ளும்
மானிடரிடம்

பறத்தலின் முதற்பேறு
ஓரறிவிற்கும் ஆறறிவிற்கும்
ஏதுமில்லை ஏற்றத்தாழ்வென அறிதல் ...
பூமியும் ஒரு சிற்றுயிர்தானென
உணர்தலே முழுப் பேறு

இது பறவைகளின் சுயசரிதை மட்டுமல்ல ..
ஒவ்வொரு கலைஞனுடையதும்தான்

- கா.சிவா