தமிழர்களின் பழம் பெருமைகளை எடுத்துக் காட்டும் எண்ணற்ற நூல்களில் புறநானூறும் ஒன்று. புறநானூற்று நடையிலேயே இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் விளக்கும் விதமாக, புதுநானூறு எழுதலாமே என்று எண்ணினேன். பழைய நூல்கள் அனைத்திலும் முதல் பாடலாக அமைவது கடவுள் வாழ்த்து. புறநானூறும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் புதுநானூறு அவ்வாறு இருக்க முடியாது. ஆகவே உழைக்கும் மக்களை வாழ்த்தி இதைத் தொடங்குகிறேன்.
 
1. உழைப்போர் வாழ்த்து

எண்ணமெலாம் வர்க்கப் போராட்டமே வினைஞர்
வண்ண மார்பில் மனித நேயமே நிலவ
ஊர்தியாய் இருக்கப் பொருள்முதல் வாதமே
சீர்கெழு கொடியுஞ் செங்கொடியே யென்ப
மனிதனை வாட்டும் பசிப்பிணி மனநோய்
முனியா திருக்கும் அறிஞர் கூட்டம்
வினைஞரே முடிப்பர் அறிஞர் அல்லரென
முனைந்து கூறினர் மார்க்சும் லெனினும்
அத்தகை வினைஞரைப் போற்றி யழைக்கிறோம்
வித்தைகள் பயின்றுப் புரட்சியை நடத்தவே
 
(வினைஞர் - வினை புரிபவர் அதாவது உழைக்கும் மக்கள், முனியாது - சினங் கொள்ளாது, முனைந்து - ஆராய்ந்து)
 
உழைக்கும் மக்கள் சிந்தனையில் வர்க்கர் போராட்ட நினைவும் மனித நேய நினைவும் ஒருங்கே இருக்கும். அவர்களைப் பொருள் முதல்வாத மெய்ஞ்ஞானம் ஊர்தியாய் இருந்து வழி நடத்திச் செல்லும். அவர்கள் செங்கொடியை என்றும் தளர விடமாட்டார்கள். மனித இனத்தின் ஒரு பகுதி மக்களைப் பசிப்பிணி வாட்டுகிறது. செல்வம் உடையவர்களிலும் பலரை (முக்கியமாக கணினி வல்லுநர்களை) மனநோய் வாட்டுகிறது. ஆனால் இந்நிலை மாற வேண்டும் என்று அறிஞர் கூட்டம் கொதித்து எழவில்லை. அறிஞர் கூட்டம் புரட்சிக்கான உந்து விசையல்ல, உழைக்கும் மக்களே புரட்சியை நடத்த முடியும் என்று மார்க்சும் லெனினும் ஆராய்ந்து கூறினார்கள். அத்தகைய உழைக்கும் மக்கள் சுரண்டல் வர்க்கத்தினரை ஒழித்து சமதர்ம (சோஷலிச) அரசை அமைக்கும் சரியான வழிகளைக் கற்றுக் கொண்டு அவ்வழியில் புரட்சியை நடத்த வேண்டும் என வேண்டுகிறோம்.

Pin It