kashmir_250எப்போதும் மயான அமைதி!
நடு இரவில் தட்டி எலுப்பும்
பூட்ஸ் கால்களின் சப்தம்,
பல நாட்களுக்கு எதற்கென்றே
தெரியாத பள்ளி விடுமுறை,
வெண்பனியில் ஏரிக்கரையில்
கிரிக்கெட் விளையாடும் காலமும் போய்விட்டதே,
நான் தினமும் ஒன்றாக விளையாடும்
ஹரிசிங்கும், மதன் மோகனையும்
நாங்கள் அடித்தோம் என்று அத்வானி பொய் பேசுகிறாரே,
அன்றொரு நாள் காய்கறி விற்க சென்ற
என் அப்பாவை
சுட்டு கொன்று விட்டார்களே
இந்த இந்திய சிப்பாய்கள்,
அடுத்த நாள் எனது தந்தையைப் பற்றி செய்தி
“அல் உம்மாவின் லடாக் பிரிவு தலைவர்
சுட்டு கொல்லப்பட்டார்” என்று வருகிறது

கிரிக்கெட் விளையாட சென்ற
என் அண்ணன் வீடு திரும்பவில்லை
விசாரித்த போது இளம் தீவிரவாதி ஒருவன்
சுட்டு கொல்லப்பட்டதாக அங்கு பேசிக்கொண்டார்கள்,
எங்கள் குடும்பத்தைப் போல
பல குடும்பங்கள் அழிக்கப்பட்டது,
மண்ணோடு மண்ணாக சிதைக்கப்பட்டது,
என் அன்னை வெளியே சென்று உள்ளாள்
அவளுக்கு இப்போது எல்லாம்
மிகவும் பிடித்த வேலை
இந்தியப் படையின் மீது கல் எறிய
கற்களைப் பொறுக்கித் தருவது தான்
என் அன்னை இன்று இரவு
வீடு திரும்பாவிட்டால்
நான் முடிவு செய்து கொள்வேன்
என் அன்னையும் இந்தப் போராட்டத்தில்
சுட்டுக் கொல்லபட்டார் என்று,
ஆனாலும் நானும் செல்வேன் நாளைக்கு!
இந்திய ராணுவத்தின் மீது கல் எறிய,

எங்கள் காஷ்மீரிகள் கல் எறிகிறார்கள்
இந்திய ஏகாதிபத்திய வெறியின்மீது கல் எறிகிறார்கள்,
இந்திய அரசுக்கு சலாம் போடும் காஷ்மீர் எட்டப்பன்கள் மீதும்,
இதை மனித உரிமை என்ற அடிப்படையிலும் கூட
புரிந்து கொள்ளாத இந்திய மனித உரிமை ஆர்வலர்கள் மீதும்,
மதவாதத்தை துண்டிவிடும் பி.ஜே.பியே
உன் மதவாத நாக்கை சுருட்டு என்றும்,
பொய்ப் பிரசாரம் செய்யும் பாகிஸ்தானிய ஊழல்வாதிகள் மீதும்,
இந்தியாவைக் கண்டிக்காத ஐ.நா. சபையைக் கண்டித்தும்,
எங்கள் போராட்டத்தை தவறாகக் காட்டும் ஊடக உலகின் மீதும்,
சுதந்திர காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்றும்,
சுதந்தரத்திற்காக போராடுவது எங்கள் உரிமை என்றும்,
வீரம் நிரம்பிய எங்கள் காஷ்மீரிகள் கல் எறிகிறார்கள்

எங்களுக்கு வேண்டும்! எங்களுக்கு வேண்டும்!
சுதந்தர காஷ்மீர்!
ஊழலற்ற காஷ்மீர்!
மனிதாபிமானமுள்ள மக்களைக் கொண்ட காஷ்மீர்!
வர்க்க பேதமற்ற காஷ்மீர்!
மனிதரை மனிதராக மதிக்கும் காஷ்மீர்!
துப்பாக்கி சத்தம் கேட்காத காஷ்மீர்!
எழுத்துச் சுதந்திரம் நிரம்பிய காஷ்மீர்!
மதபேதம், சாதிபேதமற்ற காஷ்மீர்
காஷ்மீர் காஷ்மீரிகளுக்கே என்ற காஷ்மீர்!
எங்களுக்கு வேண்டும்! எங்களுக்கு வேண்டும்!
எங்களுக்கே எங்களுக்கான காஷ்மீர்!

- புதிய பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)