நாம் எல்லோரும் வயது வந்தோருக்கான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதில் குழந்தைகளுக்காக எதுவுமே இல்லை.

குழந்தைகளும் நம்முடன் தான் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிட்டோம். வான் நோக்கி இலை விரித்து பெருமிதமாய் நிற்கும் ஒரு வாழையால் ஒரு போதும் குனிந்து கன்றினைப் பார்க்க முடியாது. ஆனால் நம்மால் முடியும். நாம் நம் குழந்தைகளைப் பார்க்க வேண்டும்.

பீடி சுற்றிக்கொண்டிருக்கும் பாத்திமாவை. ஊதுவத்தி உருட்டும் ஆனந்தியை. தேநீர் விற்கும் கந்தனை. பிச்சை எடுக்கும்
டில்லிபாபை. இந்தக் குழந்தைகள் எல்லாம் நம்மை சுற்றித்தான் இருக்கிறார்கள். படிக்கச் சுணக்கப்படும் நம் வீட்டு குழந்தைகள். உடல்திறன் குறைந்த நம் வீட்டு குழந்தைகள். இப்படிப் பலர் நம்முடனேயே இருக்கிறார்கள்.

நமது நாட்டில் குழந்தைகள் விரும்பும் பள்ளிகள் இல்லை. குழந்தைகளுக்கு புத்தகங்கள் இல்லை. குழந்தைகள் விளையாட பொதுப் பூங்காக்கள் இல்லை. குழந்தைகளுக்கென திரைப்படங்கள் இல்லை. குழந்தைகளுக்கென நாளேடுகளோ, வார, மாத இதழ்களோ இல்லை. குழந்தைகளை மதிக்கும் நிலை இல்லை. குழந்தைநேயச் சூழல் இல்லை. இல்லை என்றால் அது யாருடைய தவறோ அலட்சியமோ இல்லை. நம்முடைய பங்களிப்பும் அக்கறையும் தான் இல்லை.

அக்கறை கொள்வதற்கு நேரம் வந்திருப்பதாக “தலித் முரசு” கருதுகிறது. குழந்தைகளை மனதில் கொண்டு, அவர்களுக்கு அவசியமானவற்றை கற்பிக்கவும் அறிமுகம் செய்யவும் வேண்டும் என்ற நோக்கில் சில பக்கங்களை ஒதுக்க முடிவெடுத்திருக்கிறது. இந்தப் பக்கங்களில் குழந்தைகளுக்கு நமது சமூகச் சூழல் புரியும் வண்ணம் சொல்லப்படும் கதைகள், கவிதைகள், புதிர்கள் உண்டு. அறிவியல், அரசியல் இருக்கும். இது குழந்தைகளை நேசித்து, மதித்து அவர்களுடன் பிடித்து நடந்து செல்ல விரும்பும் ஒரு முயற்சி!

மார்ச் மாதத்திலிருந்து தலித் முரசில் குழந்தைகளுக்கென “தளிர்” பகுதியை நீங்கள் எதிர்பார்க்கலாம். நீங்களும் உங்கள் குழந்தைகளும் அதில் பங்களிக்கலாம்!

Pin It