என் திரண்ட அவயங்களில் கவரப்பட்ட அழகான நேர்த்தியான இளைஞர்கள் என் பின்னால் எனக்காக சுற்றித் திரிகிறார்கள். எடுப்பான உடையணிந்து என் சிரிப்பிற்காக ஒரு பொழுது செலவழித்து சில சேஉக்ஷடைகள் செய்து பார்க்கிறார்கள். லைப்ரரி புத்தகங்களின் சந்துகள் வழியே என் திருமுக தரிசனத்திற்காக நித்தம் தவம் கிடந்து சாகிறார்கள். பேருந்தின் படிகளில் நின்று ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கும் என் புடவையின் முந்தானை ஸ்பரிசத்திற்காக ஏங்கி தொங்கிப் பயணப்படுகிறார்கள். என் அழகைப் பற்றி மிகைப்பாடில்லாமல் எல்லா இளைஞனும் நாட்குறிப்பில் துண்டு துண்டாய் கவிதை எழுதி என் பிறந்தநாள் அன்று வாழ்த்தட்டைகளாக அனுப்பி ‘வந்ததா?’ என்று கேட்கிறார்கள். ‘நான் ஒருத்தனை விரும்புகிறேன். அவனை மணப்பதாய் சம்மதம் சொல்லியிருக்கிறேன்’ என்று நான் சொன்ன பிறகும் ஏதாவது ஒரு குருட்டு சந்தர்ப்பத்தில் நான் வாய் தவறி ஒப்புக் கோள்வேன் என்று தொடர்தலை தொடர்கிறார்கள்.

Beautiful Lady என்னை பார்க்கும் எவரும் என் பின்னால் தொடர்வார்கள் என்று நான் நம்புவது என் அழகின் மீது நான் கொண்ட நம்பிக்கையாலோ இல்லை சிலர் சபலங்களை குறைத்து நான் மதிப்பிட்டதாலோ வந்ததல்ல... வீட்டுக்குள் மனைவிகள் கொண்ட பாக்கியசாலிகளும் என் பின்னால் சுற்றுவது தெறிந்தும் நான் அவர்களின் மனைவியிடம் போட்டுக்கொடுத்து ஒரு குடும்பத்துச் சண்டைக்கு காரணமானவளாக இருப்பதில்லை என்று எல்லோரும் நினைப்பதால் இன்றைக்கு காலையில் நான் பஸ் ஏறும்போதும் ஒரு அரை டஜன் ஆண்கள் எனக்குப் பின்னால் பேருந்தில் ஏறி நின்றார்கள்.

ஏதேச்சையாக நடப்பது போல் நிச்சயமாக தெரிந்தே என்னைத் தொடுவதற்கு ஒருத்தனுக்குத்தான் நான் அனுமதி அளித்திருக்கிறேன். அவன் இப்பொழுது எட்டாம் வகுப்பு பெண்களுக்கு பாடம் நடத்தும் சாக்கில் தொட்டுப்பேசி தன் சந்தோசத்தை ரெட்டிப்பாக்கிக் கொண்டிருப்பான். பாடம் சொல்லித்தந்தபடியே மேலும் மேலும் படித்து ஆசிரியர்களுக்கே ஆசிரியராகும் அவன் கனவு கொஞ்சம் கொஞ்சமாக மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகுந்த திறமைசாலி.

அழ.வள்ளியப்பா பாடல்களை மனப்பாடம் செய்து மாணவிகளிடம் துப்பிக்கொண்டிருக்கும் வேலை செய்பவனை மிகுந்த திறமைசாலி என்று ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவன் திறமையை தப்பாக எடை போட்டு நம்பாமல் அடம் பிடிக்காதீர்கள். புறாக்கள் எந்த சீதோஉக்ஷணத்தில் இனப்பெருக்கத்திற்கு தயாராகின்றன என்பதையும், உத்தேசமாக அவை எத்தனை முட்டை வைக்கும் என்பதையும் அவனிடம் கேட்டுப்பாருங்கள், சரியாகச் சொல்லுவான். அப்படி என்றால் புத்திசாலிதானே?

“புறா வைக்கும் முட்டைகளை எண்ணுபவன்; முட்டை வைப்பதற்கு முன் புறா விளையாடும் விளையாட்டை வேவு பார்ப்பவன் இவனையெல்லம் திறமைசாலி என்று ஒப்புக்கொள்ள வேண்டுமானால் யார் எதைச் சொன்னாலும் ஒப்புக்கொண்டு தலையாட்டும்படியான ஒரு நோய் ஒருத்தனைத் தாக்கியிருக்க வேண்டும். வேறு விதத்தில் இதை ஒப்புக்கொள்ள முடியாது. அதுவுமில்லாமல் அவன் புறாக்கள் வசிக்கும் ரைஸ் மில்லுக்குச் சொந்தக்காரன் அதனால் அவனுக்கு இது தெரிந்ததில் வியப்பில்லை” என்று நீங்கள் சொல்லிச் சிரிப்பீர்கள். அப்படி சிரித்தால் நீங்கள் அரைவேக்காட்டு தீர்க்கதரிசி ஆவீர்கள்.

அவனுக்கு சூரியனின் விட்டம் மட்டுமல்லாமல் என்னைத்தவிர இன்னும் சில பெண்களின் மன ஓட்டமும் தெரிந்திருக்கிறது. இதிலென்ன அபூர்வமான அறிவுத்திறன் இருக்கிறது என்று சலித்தீர்களானால் திபத்திய புத்த பிட்சுக்களின் நதிக்கரையோர தியானத்திற்கும் அந்தர மிதப்பிற்கும் விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்று கேட்டுப் பாருங்கள் அவனிடம் மணிக்கனக்காக பேச பதில் இருக்கும். ஐன்ஸ்டீனுக்கு ஆன விவாகரத்தைப் பற்றியும், அவரின் இரண்டாம் மனைவி பற்றியும் சொல்லும் அவன் போகிற போக்கில் சிலாகின் சின்னவீட்டு செட்டப்புகளைப் பற்றியும் சொல்வான் ஆகையால் அவனைப் பற்றி கொஞ்சம் ஜாக்ரதையாகவே இருங்கள்.

தயிர் கடையும்போழுது திரண்டு வரும் வேண்ணையை வேடிக்கைப் பார்ப்பவன் போல வந்து என் அம்மாவிடம் பேச்சுக் கோடுத்து “நல்ல பிள்ளைடீ...” என்று சகஜமான பிள்ளையாக பெயர் எடுத்த அவன் என்னைத்தான் மனதாறக் காதலிப்பதாக நினைக்கிறாள் அம்மா. என் தங்கைக்கும் அடிக்கடி அவன் ரூட் கொடுப்பான் என்பதை அறிந்தால் வெலவெலத்துப் போவாள் அவள். சுட்டுப் போட்டாலும் ஒரு தோசைச் சுடத்தெரியாது அவனுக்கு, அதனால்தான் அவனை எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் எனக்கும் ஒரு தோசை சுடத்தெரியாது.

பையன்களும், பெண்களும் தங்கள் கொள்ளையழகை மிகைப்படுத்திக்காட்டி ஒருவரை ஒருவர் ஈர்த்துப் பின் ஏமாந்து போகிற இப்படிப்பட்ட நாட்களில் என்னை வசியம் செய்வதற்காக ஒருமுறை கூட சீப்பெடுத்து தலைவாரிக் கொள்ளாத அவன் கலைந்த தலையில் வசீகரமாய் என்னமோ இருக்கிறது என்று நான் திகைத்தது தடுமாறுவேன்.

“பேன்தான் இருக்கும். பிறகு தலையில் வேறென்ன இருக்கும்?” என்று சொல்லி என் தங்கை என்னை சீண்டிப் பார்ப்பாள். அவளுக்கும் அவன் மேல் ஒரு க்ஷட் இருக்கிறது.

சொந்தக்காரப் பையனாகவும் கட்டிக்கொள்ளும் முறைப்பையனாகவும் இருக்கிறானே என்று கொஞ்சமாக இடம் கொடுத்து பேச்சும் கொடுத்தால் காலையில் மார்கழிப் பனியில் பால் வாங்க கடைத்தெருப் பக்கம் போன என்னை இழுத்து முத்தமிட்டானே யாருமற்ற வீட்டின் சந்தில். அந்த திமிர் கொஞ்சம் அதிகமான திமிர்; ஆனாலும் பிடித்திருக்கிறது, நானும் அவன் முத்தத்திற்கு ஏங்கியவள் என்பதால்.

ஒன்று நிச்சயமாகத் தெரியும்; அவன் வேறு ஒருத்திக்கு இதுபோல் முத்தமிட்டதில்லை. கைதேர்ந்த ஐயோக்கியனாக உன்னையும் உன் தங்கையைையும் ஒன்றாக டாவடிக்கும் அவன் உன் தங்கைக்கு முத்தம் தரவில்லை என்று எப்படி நினைக்கிறாய் என்று என்னை கேட்பவர்களுக்கு பதிலிருக்கிறது. என் தங்கை உட்பட எத்தனைப் பெண்களை டாவடித்துத் திரிகிறான் என்பதை அவன் சொல்லித்தான் எனக்குத் தெரியும். என்னிடம் அவன் பொய் பேசுவதில்லை. ஏனென்றால் அவன் என்னை காதலிக்கிறான்.

“சில குழந்தைகளிடம் விளையாடுவது போல் தொடாத ஒரு விளையாட்டை பிடித்த பெண்களிடம் விளையாடுகிறேன். என் வயசுக்கு இதுதான் சரி. என்னை சாமியர் என்று சொல்லி நான் என்றைக்கும் காவி கட்டிக்கொண்டதில்லை. ஆண் நண்பர்களிடம் சேர்ந்து சிகரெட் பிடிக்கிறேன். பெண்களிடம் கௌரவமாய் விளையாட என்ன இருக்கிறது; உசுப்பேற்றி சீண்டிப் பேசி பொழுதைக் கழிப்பதை தவிர...” என்று வியாக்கியானம் பேசுபவனிம் கலாச்சாரம், பண்பாடு என்று வாய்விட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்களிடம் ஒளிந்திருக்கும் பெண் வேட்டையாடும் மிருகத்தை உங்களுக்கே தோலுறித்துக்காட்டி உங்களை அவமானத்தில் தலை குனிய வைத்துவிடுவான்.

அம்மா இக்கட்டில் சிக்கி உதவிக்கு ஆளில்லாமல் தவித்த கணத்தில் எல்லாம் அவன் பூதம்போல வந்து உதவி செய்வதால் என் அம்மாவிற்கு அவனை மிகமிக பிடித்துப்போனது. என் அம்மாவிற்கு மட்டுமல்ல இன்னும் பல அம்மாக்களுக்கும் அவனை அந்த இக்கட்டான காரணத்தால்தான் பிடித்திருக்கிறது.

காய்ச்சல் கண்டு படுத்திருந்த ஒரு பிள்ளைக்காரிக்கு மாத்திரையும் ரொட்டியும் மட்டும் கடையிலிருந்த வாங்கித் தந்திருந்தால் அவனை நீங்கள் ஒரு தம்பட்டமடித்து பெயரெடுக்க விரும்பும் சமூக சேவகனென்று உதாசீனப்படுத்த முடிந்திருக்கும். மாறாக ஒரு மழைக்காலத்தில் நோய் கண்ட அந்த காய்சல்காரியின் பால்குடி பிள்ளை மலத்தோடு கத்தியபோது கழுவி உடை மாற்றி விட்டு வந்திருக்கிறானே... அவன் சீண்டலை அந்த காய்ச்சல்காரி ஒரு சகோதரனின் சீண்டலாக எடுத்துக்கொள்வதில் என்ன தப்பிருக்கிறது.

லுங்கியே சரியாகக் கட்டத்தெரியாத அவன் ஒருநாள் தெரியாத்தனமாக பட்டு வேட்டியை அலங்கோலமாக கட்டிக்கொண்டு தெருவில் வர அந்த வேட்டியை சரி செய்து, கட்டுவதற்கும் நடு வீதியில் சொல்லித் தந்தது ஒரு திருமணமாகத பெண்தான். அந்த கன்னிப் பெண்ணின் அம்மா உட்பட இந்த வேட்டிக்கட்டத் தெரியாதவனின் குருட்டு தைரியத்திற்கு சிரித்தபடி நின்றார்களே... இதை விரசமாக்கிப் ர்க்காமல் நீங்கள் இருக்க வேண்டுமென்றால் அவனிடம் சில நாட்கள் பழகிப் பார்க்க வேண்டும்.

“வேட்டி கட்டிவிடறதுக்காக ஒருத்திய ரெண்டாம் தாரமா கட்டிக்கிடலான்னு இருந்தேன். நான் உன்னையே கட்டிக்கிடறேன்” என்று அந்த பெண்ணிடம் சொன்னானே... அந்த வார்த்தையில் வஞ்சகமும் கொஞ்சமாக உள்ளர்த்தமும் இல்லாமல் இருந்ததால்தான் அவனை அண்டவிடுகிறார்கள் கன்னிப்பெண்களை பேற்றெடுத்த அம்மாக்கள்.

அவனைப் பார்க்கத்தான் இன்று போகிறேன் நான். அவனிடம் சொல்வதற்கு என்னிடம் ஒரு மனவருத்தம் தரும் கனமான விசயம் உண்டு. அதை சோல்வதில் எனக்கு சங்கடம் இருப்பதால் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி எடுத்துச் செல்கிறேன். ‘என் தங்கையை பிடித்திருக்கிறதா...? நீ அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்’ என்று எழுதியிருக்கும் அந்த காகிதத்திற்கு அவன் என்னவித எதிர்வினை செய்வானோ தெரியாது.

நான் அவனிடம் பொழுது போக்கிற்காகவோ நகைச்சுவையாகவோ பேசுவதற்காக போகவில்லை. என் தங்கையை அவன் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று நிஜமாகவே விரும்புகிறேன். இது என் விருப்பம்தான்; நிஜமான விருப்பம். அவனிடம் வற்புறுத்திக் கேட்டு இன்று எப்படியாவது சம்மதம் பெற்றுவிட வேண்டும். என்னைவிடவும் அவனுக்கு அவள்தான் சரியான ஜோடியாக இருப்பாள். அவனை நான் திருமணம் செய்துகொள்வதில் சில சங்கடங்களும், தர்ம நியாய தர்க்கப்பூர்வமான விவகாரங்களும் எனக்குள் இருக்கிறது.

இந்த திருமண மறுப்பிற்கு பின் நிச்சயமாக ஒரே ஒரு காரணம் தான் இருக்கும் என்று தங்களின் சொந்த அனுமானக் கதைகளை கடைசி அத்தியாயத்தில் எழுதிவிடத் துடிப்பவர்களுக்கு வீண் வதந்திகளுக்கு இடம் தராமல் நான் இந்த இடத்திலேயே காரணத்தை சொல்லிவிடுகிறேன். நான் இந்த நிமிடம் வரையிலும் தேக ஆரோக்கியமுள்ள ரத்தப் புற்றுநோயோ, அல்லது எயிட்சோ அல்லது காதலித்தவனை தியாகம் செய்து தங்கைக்கு கட்டிவைக்கும்படியான ஒரு கொடிய மரண நோயோ வராத ‘கன்னிப் பெண்’ணாகவே இருக்கிறேன்.

கன்னிப் பெண் என்று நான் அழுத்திச் சொல்வதிலும் ஒரு காரணம் இருக்கிறது. உயிருக்குயிராய் காதலிக்கும் பெண்கள் காதலனை தியாகம் செய்வதற்கு, எதிர்ப்பாராத விதமாக வேரொரு ஆடவனுடனான விபத்தில் கர்ப்பம் அடைந்து கண்ணீர் விடும் சூழ்நிலைகளை சிலர் அனுமானம் செய்வார்கள் என்பதால் இந்த கன்னித்தன்மையை எனக்கு நானாக கூறிக்கொள்ளும்படி ஆயிற்று.

பிறகு ஏன் அவனை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாய் என்று கேட்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ளும் ஒரே இறுதியான பதில், அவனுக்கு என்னைவிடவும் என் தங்கை தகுதி வாய்ந்தவளாக இருப்பாள் என்பதுதான். என் தங்கையும் இந்த நிமிடம் வரை அவனால் ஏமாற்றப்படாமல் கன்னியாகத்தான் இருக்கிறாள் என்பதையும் நான் மிக்க ஜாக்ரதையாக இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது.

எனக்கு வேறு ஒரு இளைஞனை திருமணம் செய்து கொள்ளும் விருப்பம் வந்திருப்பது தெரிந்தால் மிக்க வேதனை கொள்வான் அவன். அதையும் அவனின் பிறந்தநாள் அன்று அவனுக்குச் சொன்னால் உடைந்து போய்விடுவான். நல்லவனை, திறமைசாலியை அவனின் பிறந்தநாள் அன்றைக்கே திக்குமுக்காடச் செய்ய வேண்டியிருப்பது துரதிருஷ்டமானதுதான் என்றாலும் இந்த விசயத்தை சொல்ல வேறு நல்ல சந்தர்ப்பமும் நாளும் வாய்க்காது எனக்கு.

நான் கல்யாணம் செய்து கொள்ளப்போகும் அந்த இன்னொரு இளைஞன் நான் இதுவரை பார்க்காத புதியவனாகவும் இருக்கலாம், பார்த்தவனாகவும் இருக்கலாம். இனிதான் நான் மணக்கப்போகும் அந்த மான்புமிகு கணவனை தேர்ந்தெடுக்க வேண்டும். அவன் உங்களில் ஒருவனாக, ஏன் நீங்களாகக்கூட இருக்கலாம். முயற்சிப்பவர்களுக்கு என் முன் வாழ்த்துக்கள். (நீங்கள் பெண்ணில்லாத பட்சத்தில் இந்த வர்த்தை பலிக்கும்)

எனக்கு வயது திருமண வயது. தொழில் ஆசிரியை. உயரம் உங்களைவிட கொஞ்சம் குள்ளம். நிறம் உங்களைவிட சிவப்பு. வருமானம் உங்களைவிட அதிகம். விருப்பம் நூலகத்தில் புத்தகம் படிப்பது. தெரிந்தது பகலில் நிலா. தெரியாதது இரவில் சூரியன். இன்ன பிற விபரங்களும் சில கனவுகளும், கொள்கைகளும், சில அளவுகளும் திருமணத்திற்குப் பின் சொல்வதாய் உத்தேசித்திருக்கிறேன்.

உங்களில் யாருக்காவது கை சுட்டுக்கொள்ளாமல் ஒரு வீட்டிற்கு தேவையான முழு சமையலையும் சுவையாக செய்யத்தெரியுமா? கவனமாக இருங்கள். இது ஆண்களுக்கான கேள்வி. ‘இல்லை தெரியாது. சமையல் என்பது பெண்களின் சங்கதி. எனக்கு சுடுதண்ணீர்கூட வைக்கத்தெரியாது. அடுப்பங்கரை எந்தப் பக்கம் என்று கூடத் தெரியாது’ என்று பீத்திக்கொள்ளும் ஆண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு ஒரு அறிவுரை. நீங்கள் நன்றாக சமைக்கத்தெரிந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டிலாக வேண்டியது. நன்றாக சமைக்கத்தெரிந்த ஆண்தான் நான் திருமணம் செய்யப்போகும் ஆணின் முதல் தகுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நன்றாக சமைக்கத் தெரிந்த அதேசமயம் கல்யாணம் ஆன அல்லது வயதான ஆண்களுக்கு என் மனமுவந்த பரிதாபங்கள். அவர்கள் இந்த ஆட்டத்தில் கிடையாது.)

இரண்டாம் தகுதி மிகமிக எளிமையானது. வேலைக்குப் போகாத, சுமாராக படித்த இளைஞனாக இருக்க வேண்டும் என்பது. இரண்டு தகுதிகளும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் உடனடியாக ஆசையோடு என்னைப் பார்க்க கிளம்பிவிடாதீர்கள், அவர்களுக்கும் கூட என் உள்ளங்கனிந்த பரிதாபங்கள். காரணம் நான் ஏற்கனவே மேற்படி தகுதி உள்ள இளைஞனை தேர்வு செய்து பாஸ்போர்ட் சைஸ் போட்டோவெல்லாம் பாசில் வைத்திருக்கிறேன், என் காதலனிடம் காண்பிப்பதற்காக. (இன்று மாலை 6 மணிவரையிலும் அவனை காதலன் என்று சோல்லிக்கொள்ள அனுமதிக்க உங்கள் பண்பாடுகளை வேண்டிக்கொள்கிறேன்,)

மணிபர்சில் நீ கட்டிக்கொள்ளப்போகும் மாங்காய் மடையனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு பிறகு எதற்கு ‘முகம் தெரியாத ஒருத்தனாகவும் என் புருசன் இருக்கலாம்’ என்று சொன்னாய் என்று சிலர் பெரும் கோபத்தில் கேட்கலாம். அது சும்மா தமாசுக்கு என்று நான் சொல்லமாட்டேன். நான் என்ன தகுதிக்காக அவனை புருசனாக தேர்ந்தெடுத்தேன் என்ற அளவுகோல்களை எல்லோருக்கம் தெளிவாகச் சொல்வதற்காக அப்படிச் சொன்னேன்.

நான் அதிர்ச்சி கொடுக்கப்போகும் அவன் வந்துவிட்டான். இன்றைக்கு அவனுக்கு பிறந்தநாள். ஆனால் பாருங்கள், இரண்டு நாள் தாடியோடு சரியாக வாராத தலையோடு நேற்று போட்டிருந்த அதே உடையோடு என்னைப் பார்க்க வருகிறான். உண்மையில் இவன்தான் சரியான மாங்காய் மடையன்.

காதலிக்கிற பையன்களுக்குப் பிறந்தநாள் என்றால் முடிவெட்டி, சவரம் செய்து, ஷாம்ப்பு போட்டு குளித்து புது உடை போட்டு ஒரு கலக்கலாக வரவேண்டாமா, அவன்தானே காதலன் என்பவன்? இத்தனை அசட்டையாகவா இருப்பான். என்னை மயக்குவதற்காக ஒரு சிறு முயற்சிகூட எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறான். எனக்காக ஓராயிரம் இளைர்கள் பஸ் படிக்கட்டுகளிலும் பள்ளி முன்பாகவும் நூலகத்திலும் காத்திருக்கிறார்கள் என்று அவனுக்கு தெரியும். அவர்களில் ஒருவனிடம் நான் மயங்கி Yes சொல்லிவிட்டால் என்ன செய்வது என்ற படபடப்பே அவனிடம் கிடையாது. அவனுக்கு இருப்பது நம்பிக்கை, கனவிலும் கூட நான் துரோகம் செய்யமாட்டேன் என்று நம்பினான். அந்த நம்பிக்கையைத்தான் நான் இன்று உடைக்கப் போகிறேன்.

பக்கத்தில் வந்தவனிடம் நான் பிறந்தநாள் வாழ்த்து சொல்லவில்லை. அவனுக்கு பிடிக்காது. “என்னத்தை பிறந்து பொகிசா சாதிச்சிட்டோம்னு நமக்கு நாமே பிறந்தநாள் கொண்டாடிக்கிறது. ஏதாவது சாதிக்கணும், அடுத்தவன் நம்ம பிறந்த நாளை கொண்டாடனும். இது என்ன கேனத்தனமான ஒரு விளையாட்டு” என்று ஒரு லெக்சர் குடுப்பான்.

அதனால் அவனிடம் நான் கேட்ட முதல் கேள்வி...்குளிச்சியா, இல்லையா...?்

“குளிச்சிட்டேன். பல் விளக்கிட்டேன். பாத்ரூம் போனேன். அம்மா சாப்பிடச் சொன்னாங்க, சாப்பிடலை. அப்பா எங்க போறேன்னு கேட்டாங்க, காகிபியன் கடலுக்கு காத்து வாங்க போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். வழியில ஒருத்தன் நான் பொறந்ததுக்கு வாழ்த்துச் சொன்னான், அவனை நேம்பர் எட்டுக்கு அடுத்து வர்ற ஒரு நேம்பர் கெட்ட வார்த்தையில திட்டிட்டு வந்திருக்கேன். என் தங்கச்சி ஒரு பேனா வாங்கி பரிசா தந்தா, அதை ஏழாவது படிக்கிற டெய்சி ராணிகிட்டே குடுத்திட்டேன். நீ அறுக்காம இருந்தா வண்டி எடுத்துகிட்டு வரேன். போயி பீட்சா சாப்பிடலாம். வாழ்த்துச் சொல்லி அறுக்கிறதா இருந்தா சொல்லு, போயி கோயில்ல அர்ச்சனை பண்ணிகிட்டு விபூதி வெச்சிகிட்டு வீட்டுக்கு போயிடலாம்.” கடகடவேன பேசினான், அவன் எப்பொழுதும் மூச்சு விடாமல் பேசி அடுத்தவர் மூச்சை திணறடிப்பவன்தான், இப்போது கோஞ்சம் கூடுதலாக தெரிகிகிறது,

“இல்ல, இல்ல... நான் அறுக்க மாட்டேன். போயி வண்டிய எடுத்துகிட்டு வா....” எனக்கு சிரிப்பு வந்தது.

இவனுக்கு படபடப்பு குறைத்து பேச வருமா வராதா... எதற்காக விடாமல் நான் கேட்ட கேட்காத, கேட்கப்போகும் அத்தனை கேள்விக்கும் இத்தனை பதில் சொல்லவேண்டும். என்னிடம் மணிக்கணக்காக பேசுவதில் விருப்பமிருக்கிறது அவனுக்கு. அவன் கையில் ஒரு மலர்ச்செண்டை நான் வைத்துவிடக் கூடாது என்பது அவன் விருப்பம்.

நான் எதற்கு அவன் கையில் வாழ்த்துச் சொல்லி மலர்ச்செண்டு வைக்கப்போகிறேன். மீண்டுமொருமுறை முட்டாள் பெண் ஆக நான் விரும்புவேனா? போன வருடம் பிறந்தநாள் பரிசாக நான் வாங்கித் தந்த ஒரு அழகான சட்டையை அவன் என் கண் முன்னாலேயே யாருக்குத் தந்தான் என்று நன்றாக நினைவிருக்கிறது. ஒரு பிச்சைக்காரனுக்குத் தந்தான். அந்த சட்டையை நைந்து கிழிந்து போகும்வரை பிச்சைக்காரன் எப்படிப் போட்டு என் கண் முன்னால் நாறடித்தான் என்பது எனக்குத்தான் தெரியும்.

“பார்த்டே பிரசன்ட் எதுவும் வேணாம்னு உன்கிட்ட சொன்னேன். ஒரு சாதா டேவுக்காக நீ ஒரு டை வாங்கித்தந்தாலும் கட்டிக்கிறேன். என்னோட பார்த்டே கொண்டாடறதில எனக்கு விருப்பமில்ல.” என்று அன்று சொன்னான். அதனால்தான் நான் வெறும் கையோடும், வெறும் வாயோடும் வந்தேன்.

வண்டியில் பின்புறம் அவனோடு உட்கார்ந்து கொண்டேன். தேவையில்லாமல் அவன் பிரேக் போடுவதில்லை. அதனால் அவன் நல்லவனும் இல்லை. இந்த பூ நல்லா இருக்கே என்று புடவையில் இருக்கும் ஒரு டிசைனை தொடுவது போல் குறும்பான சிரிப்பில் தொடுவான். மெதுவாக வண்டி ஓட்டினால் அவன் சந்தோசமாக இருப்பதாய் அர்த்தம். இப்பொழுது மெதுவாக ஓட்டட்டும், திரும்பி வரும்பொழுது வேகமாக வண்டி ஓட்டுவதற்கு நான் பொறுப்பு.

இரட்டிப்பு விலையும், துய்மையான இருக்கையும், கனிவான உபசரிப்பும் கொண்ட கூட்டம் குறைந்த ரெஸ்டாரென்டில் வண்டியை நிறுத்தி உள்ளே போனோம், ஒரு சிவந்த வெளுத்த பேரர் காகிதம் பென்சிலோடு வந்து நின்றான். இரண்டு கோபி மஞ்சூரியன், இரண்டு மஸ்க்ஷம் நூடுல்ஸ், இரண்டு நாண், இரண்டு சாலட்... அதில்லாமல் சப்பாத்தி, சில்லி மற்றும் கோத்து பரோட்டா, மசால் உள்ள மற்றும் இல்லாத தோசை, ஆனியன் எல்லாவற்றிலும் இரண்டிரண்டு சொல்லிவிட்டு “உனக்கு ஏதாவது வேணுமா?” என்று என்னைக் கேட்டான்.

“எனக்கும் எல்லாத்திலேயும் ரெண்டு ரெண்டு சொல்லிடு” என்றேன் நான். பேரர் பென்சிலில் நெற்றியை சொறிந்தபடி சிரித்தான். சொன்னதுல பாதி எடுத்துகிட்டு வா என்று அவனை அனுப்பிவிட்டு என்னை உற்றுப் பார்த்தான்.

“என்னோட பார்த்டேவுக்கு ஏதும் குடுக்க மாட்டியா நீ....”

“உனக்குத்தான் பிடிக்காதே... அன்னைக்கு பிச்சைக்காரனை என் புருசன் ஆக்கினது போதும்ப்பா. நான் வரலை இந்த விளையாட்டுக்கு”

“நீ என்னா ஜவுளி கடையில வேலை பாக்கற பொம்பளையா... காதலிக்கிறவனுக்கு பிறந்தநாள் வந்தா போயும் போயும் துணியில தெச்ச சர்ட் எடுத்து தருவியா? எனக்கு எடுத்துக்க தெரியாதா?”

“அதுக்கு முன்ன வருசம் புத்தகம் வாங்கி வாழ்த்தெழுதித் தந்தேன். மோத பக்கத்தை கிழிச்சிட்டு என்கிட்டயே தந்த...”

“பழைய புத்தக கடை போனா கிலோ மூணு ரூபாய்க்கு தருவான், என்னால வாங்கவே முடியாத, யாராலேயும் தரவே முடியாத ஒரு பரிசுப் பொருள் தரணும்.”

“அசிங்கமா பேசறியா நீ...?”

“ஏய்... உன் புத்தி அப்படி போகக்கூடாது, அது மாதிரி பேசறதா இருந்தா விசயத்தை இத்தோட விடு”

“ஏன் அலட்டிக்கிறே, எது வேணும் நேரடியா கேட்டுக்கோயேன்.”

“சரி விடு சும்மா கேட்டேன்.”

“என்ன வேணும், முத்தமா? எதுக்கு குனியறே... வெக்கமா... அசிங்கமா இல்ல. ஒரு பொண்ண ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து கூல்டிரிங்க்ஸ் கேட்கலாம் இப்படி கேட்டா பாக்கறவங்க என்ன நினைப்பாங்க”

“லவ்வர்ஸ்னு”

“சரி, அதைவிட அற்புதமான ஒரு கிப்ட் உனக்கு இந்த பார்த்டேயில நான் தறேன். எந்த கேர்ள் பிரண்டும் தரமுடியாத ஒண்ணு”

“என்னது?”

“பொறு, பொறு. அவசரப்படாதே... மதிப்பு மிக்க பொருளுங்க உடனே கிடைக்காது, காக்க வைக்கும். கதற வைக்கும்”

“என்னது?”

“அமைதி, சோல்லறேன். உனக்கு நல்லா சமைக்கத் தெரியுமா?”

“தெரியாதே.... இதென்ன கேள்வி.. காப்பர் பாட்டம் தோசைச் சட்டி எதாவது பரிசா தரப்போறீயா?” நூடுல்ஸை முள் கரண்டியில் கிளறியபடி என்னைப் பார்த்து புதிராகக் கேட்டான்.

இளைஞனே... உன் பிறந்தநாள், நீ கொண்டாட விரும்பாத உன் பிறந்தநாள், எதையாவது சாதித்து அடுத்தவரை கொண்டாடச் செய்யலாம் என்று நீ பாதுகாத்திருக்கும் பிறந்தநாள் இன்று பாழ்படப்போகிறது. இந்த அதிர்ச்சியை தாங்கும் பக்குவம் உனக்கிருக்கிறது என்று நான் அறிவேன். ஆனால் எத்தனை நாள் கழித்து இந்த வேதனையில் இருந்து நீ மீண்டு வருவாய் தெரியவில்லை... சாப்பிடு, சாப்பிடு. ஒரு வேளை இது இந்த ரெஸ்டாரெண்டில் நீ என்னோடு சாப்பிடும் கடைசி மஞ்சுரூரியனாக இருக்கலாம்.

அவனைப் பார்க்காமல் பேசினேன், “உனக்கும் சமைக்கத் தெரியாது, எனக்கும் சமைக்கத் தெரியாது...”

அவன் நூடுல்ஸ் புழு ஒன்றை நாக்கால் நாசுக்கில்லாமல் உள்ளிளுத்தபடி “இது ஜோக்கா இல்ல நியூசா.... சிரிக்கணுமா இல்ல சீரியசா கேக்கணுமா? எதை செஞ்சாலும் சொல்லிட்டு செய்.... நான் இந்த நூடுல்ஸ் சிக்கலெடுப்பனா இல்ல நீ பேசற பேச்சில சிக்கலெடுப்பவளா...?” அலுத்துக்கொண்டான்

பொறு இளைஞனே கொஞ்சம் நேரத்தில் உன் வாழ்க்கையும் அதன் அர்த்தங்களும் சிக்கலாகப்போகிறது. நீ எப்படி அதை விடுவித்து நூலாக்கி தறி நெய்யப் போகிறாய் என்று பார்க்கிறேன். நான் தோடர்ந்தேன்,

“நீயும் டீச்சர், நானும் டீச்சர்...”

“அறுக்காத விசயத்தை சொல்லு...”

“நீ அடிக்கடி ஒரு தியாகி சொல்லுவியே... அந்த தியாகியைத்தான் நான் இப்ப சொல்ல வரேன். இரண்டு முரண்பட்ட விசயங்கள்தான் ஒண்ணாகும்; ஈர்த்துக்கும். ஒரே துருவ காந்தம் விலகிப் போகும், இரண்டு பேனா மூடிய டைட்டா மூட முடியாது. ஒரு பேனாவும் ஒரு மூடியும்தான் மூடும், சரியா?”

“அதுக்கு இப்ப என்ன?”

“நீயும் நானும் டீச்சரும் சமைக்கத் தெரியாதவங்களுமா இருக்கிறதினால நாம ஒரே துருவ காந்தங்களா தெரியல உனக்கு...?”

“அப்டியா...ஒரு லூசுப்பொண்ணத்தான் நீ கட்டிக்கப் போறேன்னு என் நண்பன் விட்ட சாபம் பலிச்சிடிச்சே.. அவன் உண்மையிலே கற்பில் சிறந்தவனா தான் இருக்கணும்.” அவன் முள் கரண்டிகளை கிண்ணிகளில் தட்டியபடி சிரித்தான். நான் எழுதி வைத்திருந்த துண்டுச் சீட்டை அவனிடம் தந்தேன்.

“இதுல நான் எழுதியிருக்கிற பொருள் உனக்கான என்னுடைய விலைமதிப்பற்ற பிறந்த நாள் பரிசு. இதையும் நீ பிச்சைக்காரனுக்கு தரமாட்டேன்னு நம்பறேன்.”

அவன் படித்தான். அதிர்ந்து நிமிர்ந்து கேட்டான், “உன் தங்கச்சியவா? எதில விளையாடறதுன்னு விவஸ்த்தை இல்லாம போச்சி உனக்கு... இப்ப என் விளையாட்டை கொஞ்சம் பாரு...” கோபத்தில் முகம் சிவந்திருக்கிறது. கண் நிலைகுத்தி நிற்கின்றன. நான் சும்மா அவனை சீண்டி விளையாடுவதாக நினைத்துக் கொண்டானா?

வேறு ஆர்டர் எடுக்க வந்த பேரரிடம் அந்த துண்டு சீட்டை தந்து “படிச்சிப் பாத்து இதுக்கொரு பதில் சொல்லு” என்றான்.

நான் தலையில் கை வைத்துக் கொண்டேன்.

பேரர் படித்தான். ்என் தங்கையை பிடித்திருக்கிறதா...? நீ அவளை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்் எங்கள் இருவரையும் பார்த்தான்.

“தைர்யமா உங்க முடிவ இவகிட்ட சொல்லுங்க” என்று இவன் தூண்டினான்.

“இல்லைங்க, எனக்கு கல்யாணமாயிடுச்சி” என்ற பேரருக்கு கன்னம் சிவந்துவிட்டது. இது ஒரு தினுசான விளையாட்டாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்தவன் போல் “வேற என்ன சார் வேண்டும்?” என்று கேட்டான்,

“ம், ரெண்டு பிளேட் பச்சை மிளகாய் எடுத்துட்டு வா...”

“சார்...?”

“ரெண்டு பிளேட்... கிரின் சில்லி... புரியுதா? பச்சையா இருக்கும், முனையில காம்புகூட வளைஞ்சி இருக்கும். கடிச்சா காரமா இருக்கும். தொண்டை நாக்கு எல்லாம் எரியும்; தண்ணி வரும். பச்சை மிளகாய் பாத்ததில்லையா நீ. என்ன ஆளுய்யா..”

நான் அவனை கடிந்து அடக்கினேன். பில் கோண்டுவரும்படி பேரரை அனுப்பினேன், “எதுக்கு அவன்கிட்ட கோபப்படுற? மூணாம் மனுசங்ககிட்ட எப்படி நடக்கறதுன்னு தெரியாதா?”

“உனக்கு ரெண்டாம் மனுசங்ககிட்ட எப்படி நடக்கணுன்னு தெரியாதா? அவன்கிட்ட கத்தாம பின்ன உன்கிட்ட இத்தனை கத்த முடியுமா.. அவன்கிட்ட என் கோபத்தை காண்பிச்சா இந்த ஓட்டல் பக்கம் வராம ஒரு வருசம் இருப்பேன். உன்கிட்ட கோபப்பட்டா ஒரு நிமிசம்கூட இருக்க முடியாதே... சொல்லு எதுக்காக இந்த விளையாட்டு. சொந்த தங்கச்சி கூட உனக்கு விளையாட்டு பொருளா...? வெக்கமாயில்ல?”

“நானாவது தங்கச்சிய கட்டிக்கச் சொல்லி உன்கிட்டதான் கேட்டேன். நீ அந்த பேரர்கிட்ட உன் தங்கச்சிய கட்டிக்கிறியான்னு கேட்டியே வெக்கமாயில்ல”

“அந்த சீட்டுல உன் தங்கச்சி பத்திதானே எழுதியிருந்தே...”

“எழுதினது யாருன்னு பேரருக்கு எப்படி தெரியும்? நீதானே அவன்கிட்ட தந்து படிக்கச் சொன்னே... அவன் என்னை உன்னோட தங்கச்சியா நெனைச்சிருப்பான். என்ன பாத்து எப்படி வெக்கப்பட்டான் தெரியுமா?”

“அடப் பாவி, எனக்கே வெடி வெக்கப் பாத்தானா.. நல்லவேளை தப்பிச்சேன்” என்று சொல்லி சிரி சிரி என்று சிரித்தான். கடுகடுவென்று நின்ற பேரருக்கு அதிக டிப்ஸ் வைத்தான். ஆனாலும் அவன் ஒரு குரங்கை பார்ப்பது போல வெறுப்போடுதான் எங்களைப் பார்த்தான்.

போகும்போது “அண்ணனை பத்திரமா பாத்துக்கங்க” என்று பேரர் என்னிடம் சொன்னதும் தலையை பிடித்துக்கொண்டு இவன் வெளியே வந்தான்.

சீட்டில் நேரடியாக எழுதித் தந்து என் விருப்பத்தை சொல்லியாயிற்று. ஒன்று விளையாட்டாக எடுத்துக்கொள்கிறான். இல்லையென்றால் பொசுக்கென்று கோபப்படுகிறான், இவனிடம் பக்குவமாக சொல்லி புரியவைப்பது எப்படி என்று புரியாமல் நான் தவித்தேன். வண்டியை கதறும் வேகத்தில் ஓட்டுகிறான். கோபமாக இருக்கிறான். அவன் கோபமாக இருக்கும்போது எதைச் சொன்னாலும் சரியாக வராது. ஆனால் இன்றைக்கு அவனுக்கு திருத்தமாக சொல்லித்தான் ஆகவேண்டும். சமாதானம் செய்வதற்காக அவனிடம் பேச்சு கொடுத்தேன், “வண்டியில ஜோடியா போறமே... உங்க அப்பா பாத்தா என்ன செய்வே...”

“கண்ண மூடிக்கிட்டு வண்டி ஓட்டுவேன்,”

“ஆனா அவர் பாப்பாரே...”

“இனி கடைவீதி பக்கம் வந்தா கண்ண முடிகிட்டு வாங்கன்னு வீட்டுக்குப் போயி அப்பாகிட்ட சோல்லுவேன்,”

“திட்டமாட்டாரா?”

“மாட்டார், அவருக்கு தெரியும். அம்மா பேசிட்டாங்களாம். அடுத்த ஜுன் மாசம் பொண்ணு பாக்க போகலான்னு சொன்னாராம்.”

“ஒருமுறை, உன்கிட்ட பேசினா என்னை செருப்பால அடிப்பேன்னு சொல்லியிருக்காரு,”

“இப்ப அவரு சமாதானமாயிட்டாரு”

“எதனால... நான் டீச்சராகி காசு சம்காதிக்கிறதுனாலயா?”

“இருக்கலாம். மருமக உத்தியோகக்காரியா இருக்கணுன்னு அப்பா நேனைக்கிறதில தப்பிருக்கா?”

“ஒருவேளை நான் டீச்சராகாம இருந்திருந்தா...? வேற டீச்சர் பாத்திருப்பாரா?”

“இருந்திருந்தா என்ன? அதான் டீச்சர் ஆயிட்டியே, இனி நடக்கிறத பாரு,”

“சரி கோபப்படாம கேளு, ரேண்டு பேர் சம்பளம் ஒரு குடும்பத்தைத்தான் காப்பாத்தனுமா. ரெண்டு குடும்பத்தை காப்பாத்தலாமே. என்னோட சம்பளம் ஒரு ஏழை குடும்பத்துக்கு உபயோகப்படட்டுமே.”

அவன் வண்டியை நிறுத்தி? “என்ன சொல்ற நீ?” என்றான்

“மைத்ரேயனை உனக்கு தெரியுமில்லையா?”

“கல்யாண வீட்டுல உன் இடுப்பை கிள்ளினான்னு சொன்னியே அவனா...?”

“அவன்தான்.... பத்தாவது படிச்சிருக்கான். சின்னதா ஒரு வொர்க்ஷாப்பில வேலை பாக்கறான். ரெண்டாயிரம் கூட அவனுக்கு சம்பளம் வராது. ஆனா நல்லா சமைக்கத் தெரியும். அப்பா இல்லாதவன். அவங்க குடும்பம் கஷ்டத்தில இருக்கு. என்னோட சம்பளம் அவங்க குடும்பத்துக்கு உதவியா இருக்கட்டுமே...”

“அதனால.... மொத்த சம்பளத்தையும் மாசம் மாசம் அவனுக்கு மணியார்டர் பண்ணப் போறீயா?”

“இல்ல அவனை கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அம்மாகிட்டே பேசிட்டேன், உன்னிஷ்டம்னு சொல்லிட்டா...”

“இன்னைக்கு ஏப்ரல் ஒண்ணு இல்ல... மார்ச் இரு...”

“இல்ல உன்னை முட்டாளாக்கி விளையாடல, சீரியசாதான் சொல்லறேன்”

“பயித்தியக்காரி... வெளையாட்டுக்கு ஒரு அளவிருக்கு”

“இல்ல சத்தியமா சோல்லறேன், நீ என் தங்கச்சிய...”

“அவள என் குழந்தை மாதிரி பாக்கறேன். பொண்டாட்டியா கட்டிக்க முடியாது,”

“அப்ப வேலைக்கு போகாத இன்னொரு அழகான ஏழைப் பொண்ணை... ஆணோ? பொண்ணோ வேலைக்குப் போறவங்க வேலைக்குப் போகாதவங்களை கல்யாணம் பண்ணிக்கணும், ஒவ்வொரு சம்பளமும் ஒவ்வொரு குடும்பத்தை காப்பாத்தனும்.”

“எதுக்கு இப்ப உலகத்த காப்பாத்தப் பொறந்தவளாட்டம் பேசறே, எனக்குத் தெரியும். எதுனால இப்படின்னு. உனக்கு அந்த மைத்ரேயனை பிடிச்சிருக்கு. கிள்ளினதும் உனக்கு பிடிச்சதுதான். முறைப்பையன்தானே... என்னோட பேருக்கு பழகியிருக்கே. கடைசியில நீயும் ஒரு பொண்ணுதான்”

அவன் பேசியதும் எனக்குள் குழப்பம் வந்துவிட்டது. நான் எடுத்த தீர்மானத்தின் விளைவுகள் அபத்தங்களாக வந்து என்னை துன்புறுத்தியது. அடுத்தவர் புரிந்துகோள்ளாத சிலாகின் கோட்பாடுகள் அவர்களையே கொல்லும் வலியோடு வதைக்கிறது. எப்படி பேசுகிறான் அவன். அவனுக்கு தெரியுமாம், நானும் ஒரு பெண்தானாம். உன்னதாண்டா நான் எப்பவும் மனசில நெனைச்சிட்டு இருக்கேன். உன் மேல என் மனசு எப்பவும் கிடந்து அலையுண்டா... என்று என் மனம் ஒரு கணத்தின் மயிரிழை அளவுக்கு அலறிய அலறல் அவனுக்கு கேட்டிருக்குமா?

அவன் கோபத்தில் நியாயமிருக்கிறது. என்னால் அவனுக்குள் நிறைய கனவுகள் உண்டு. கல்யாணத்திற்குப் பின் வாழ்க்கையை திட்டமிட்டிருக்கிறான். தேனிலவு போகுமிடத்தை உலகப்படத்தில் வட்டமிட்டு வைத்திருக்கிறான். பிள்ளைகளுக்கான பேர்கூட யோசித்து வைத்திருக்கிறான். நான் இந்த முடிவு எடுத்தால், எடுத்த முடிவை அவனிடமே சொன்னால் அவனுக்கு கோபமும் துக்கமும், ஏமாற்றமும் வாயில் முறைகெட்ட வார்த்தைகளும் வரத்தான் செய்யும். நான் விசயத்தை அடுத்தவர் வாய் வழியாக சொல்லியிருக்கலாம். அவர்கள் என்னைப் பற்றிய தப்பான கற்பிதங்களைச் சேர்த்துச் சொல்லி என் மேல் அவனுக்கிருந்த கனவுகளை உடைத்திருப்பார்களோ என்னவோ.

எனக்கு அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல் போனது. சரியாக அவனுக்கு புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கையும் போய் தைர்யமற்று நின்றேன். அப்பொழுது என் தலைமை ஆசிரியரின் திடமான முகம் நினைவுக்கு வந்து எனக்கு நம்பிக்கை தந்தது. என் வாழ்வின் புது அர்த்தத்திற்கும், என் இந்த முடிவுக்கும் அவர்தான் காரணம். அவர்தான் என்னை யோசிக்கும்படியான ஒரு கேள்வியை ஒருநாள் கேட்டார்.

“எதுக்காகம்மா... ஒவ்வொரு சம்பாதிக்கிற பொண்ணுங்களும் சம்பாதிக்கற பையனையே கல்யாணம் செஞ்சிக்கிடறீங்க... உன்னோட வேலை ஒரு பையனுக்கு கிடைச்சிருந்தா அவன் வேலைக்கு போகாத பொண்ணை கல்யாணம் செஞ்சிருக்க சந்தர்ப்பம் உண்டு. ஆனா, நீ எக்காரணத்தை கொண்டும் வேலைக்குப் போகாத உன்னைவிட படிப்புல கொறைஞ்சவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டே.” என் தலைமை ஆசிரியர் கேட்ட அந்தக் கேள்வி... அப்போது உரைக்காமல் பிறகு நாள் ஆக ஆக என்னுள் பெரும் வேதனை தந்தது.

அவர் சொல்வதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. மைத்ரேயன் என் இடுப்பை கிள்ளி விளையாடியது அவனின் முறைப்பெண் என்பதால்;. அவன் படிக்காமல் சுமாரான நிச்சயமற்ற வேலையுடையவன் என்பதால் எனக்கு கோபம் வந்தது. அவன் பெரிய உத்யோகஸ்தனாக இருந்திருந்தால், என்னைவிட எட்டாத உயரத்திற்கு படித்தவனாக கோடீஸ்வரனாக இருந்திருந்தால்? வெட்கப்பட்டு, இரவில் கனவு கண்டிருக்க மாட்டேனா?

தலைமை ஆசிரியர் இன்னும் சொன்னார், “வேலைக்குப் போகாத பசங்கள ஒரு சம்பாதிக்கிற பொண்ணு ஏன் கல்யாணம் பண்ணிக்கிறதில்ல? கட்டிகிட்டா பிற்காலத்தில் ஈகோ பிரச்சினை தாழ்வு மனப்பாண்மையில புருசன் எரிஞ்சி விழுந்து குடும்பம் பிரிஞ்சிடுன்னு நொண்டி சாக்கு வச்சிருக்காங்க.”

அதுவும் உண்மைதான். ரைஸ் மில் வைத்திருக்கும் வாத்தியார் மாப்பிள்ளை என்றதும் சந்தோசப்பட்டு கல்யாணத்திற்கு சம்மதம் சொன்ன என் அம்மா நான் மைத்ரேயன் விசயம் சொன்னதும் மாசக்கணக்கா யோசிச்சாளே. ‘சரிவருமா? அவன் உன்னைவிட படிப்புல, சம்பாத்தியத்தில கொறைஞ்சவன், பின்னாடி பிரச்சினை வராதா?’ என்று துருவி துருவிக் கேட்டாளே, அது ஏன்?

எனக்கு மைத்ரேயன் மேல ஒரு இது இருக்குன்னு கண்டுபிடிச்சதா சொல்லறானே. மைத்ரேயனையும் இவனையும் ஒன்றாகப் பார்ப்பவர்களுக்குத்தான் விவரம் தெரியும். மைத்ரேயன் சுமார் அழகு கூட கிடையாது. கறுப்புப் பையன். கண்கூட கொஞ்சம் பொகிசுதான். ஒல்லியாக இருப்பான். எப்படி ஒரு இது வரும்?

அவனை நான் கல்யாணம் செய்துகொள்ளாவிட்டால் உலகம் ஒன்றும் தண்ணீருக்கடியில் ுழ்கிப்போய் கரைந்து போய்விடாது. மைத்ரேயனுக்கு கல்யாணம் ஆகாமல் பொகிய காவிகட்டிய பரதேசியாக போய்விடமாட்டான். அவனுக்கும் நிச்சயமாக கல்யாணம் ஆகும். அவனுக்கு கடன் சுமை அதிகமுள்ள கடன்கார மாமனார்தான் பெண் கொடுப்பான். மைத்ரேயனுக்கு கல்யாணக் கடன் ஏறும். அதற்காக வட்டி கட்டுவான். குடும்பத்தை பராமாகிக்க அவனுக்கு வருமானம் போதாது. மீண்டும் கடன் படுவான். குடும்பம் நடத்த குட்டிக்கரணம் போடுவான். அவன் பிள்ளைகள் அவனைப் போலவே நல்ல துணி இல்லாமல், நல்ல உணவு இல்லாமல், செல்வம் சம்மந்தப்பட்ட எந்தவிதமான சந்தோசமும் இல்லாமல் ஏழைகளாக வாடிப் போகும்.

என் தலைமையாசிரியர் சொன்னதை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஒரு வேலை நான் வேலை கிடைக்காமல் பரம தரித்திரத்தில் இருந்திருந்தால், மைத்ரேயனுக்கு என் வாத்தியார் வேலை கிடைத்திருந்தால்? மைத்ரேயன் என்னை நிச்சயம் பெண் கேட்டு வீடு வந்திருப்பான். அதனால் ஒரு குடும்பம் தரித்திரத்தில் இருந்து மீண்டிருக்கும். ஆனால் வேலை எனக்கு கிடைத்ததால், மைத்ரேயன் தரித்திரனாகவேத்தான் இருப்பான், காரணம் மைத்ரேயனை நான் மட்டுமல்ல எந்த உத்யோகத்தில் உள்ள பெண்ணும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டாள்.

என்னால தடுக்க முடியும். ஒரு குடும்பம் என்னால கொஞ்சம் வசதி ஆகும். இதைத்தானே என் ஆசான் சொன்னது. உன்மையில் மைத்ரேயனை மனசில் வைத்துத்தான் ஆசான் சொன்னார் என்பது எனக்குத் தெரியும். அவர் எனக்கு மட்டுமல்ல மைத்ரேயனுக்கும் படிக்கிற காலத்தில் ஆசிரியராக இருந்திருக்கிறார். அவன் வறுமையை, அவன் அம்மாவின் உணவுப் பஞ்ச அலங்கோலத்தை கண்ணால் கண்ட வேதனையில்தான் அவர் என்னிடம் பேசியது.

“மைத்ரேயனை நீ யாரோ ஒருத்தன் என்று நினைத்துக்கொண்டாலும் சரி, இல்லை உன் அப்பாவின் தங்கை மகன் என்று நினைத்தாலும் சரி. அவனை கல்யாணம் செய்து கொள்வது நல்லது. சம்பாதிக்க ஒரு ஆள், வீட்டை பராமாகிக்க ஒரு ஆள். இதுதான் குடும்பத்தின் லட்சணம். யார் சம்பாதிப்பது யார் குடும்பத்தை பராமரிப்பது என்பதில் ஆண் பெண் பேதங்கள் கிடையாது” என்று ஆசான் சொன்னார்.

எனக்கு நம்பிக்கை இருக்கிறது. மைத்ரேயனுக்கு சமைக்க மட்டுமல்ல குழந்தைகளை உருப்படியாக வளர்க்கும் தகுதியும் இருக்கிறது என்ற நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில்தான் நான் தலைமை ஆசிரியருக்கு வாக்கு கொடுத்தேன்.

அவர் அழுதுவிட்டார். “என்னால உன் ஒருத்திக்குத்தான் புத்தி சொல்ல முடிஞ்சது. என் பேச்சை கேக்கறதால உனக்கு விருப்பப்பட்ட வாழ்க்கை கை நழுவிப் போகுது. ஒரு மாத்து குறைஞ்ச வாழ்க்கை நீ வாழப்போறே. ஆனா, எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தா உத்தியோகத்தில இருக்கிறவங்க உத்தியோகத்தில இல்லாதவங்களதான் டூ அது ஆணா இருந்தாலும் சரி பொண்ணா இருந்தாலும் சரி டூ கல்யாணம் பண்ணிக்கணுன்னு சட்டம் போடுவேன்” என்றார். தலைமை ஆசிரியர்தான் இதற்கு காரணம் என்று என் காதலனுக்கு நான் எடுத்துச் சொன்னேன்.

“கடவுளே... அவன் கல்யாணம் ஆகாத கிழவன். அவன் குடும்பத்தை கலைக்கத்தான் பாப்பான். காதல்னா அந்த சாகிற மனுசனுக்கு என்னன்னு தெரியுமா? அவன் மறை கழன்டு கிறுக்கனாட்டம் சொல்லறதை நீ வேத வாக்கா எடுத்துக்காதே. அடுத்தவனுக்கு உபதேசம் செய்யறானே... அவன் ஒரு பிச்சைக்காரிய கல்யாணம் பண்ணியிருந்தா நாட்டுல ஒரு பிச்சைக்காரி வசதியான குடும்பப்; பெண் ஆயிருப்பாளே... செஞ்சானா அவன்? உன்னை ஏமாத்தறான். உனக்கும் அவனுக்கும் எதுனா முன் பகை இருக்கா?” மீண்டும் கடகடவென போறிகிறான். அதே சமயம் அறியாமல் பேசுகிறான்.

தலைமை ஆசிரியர் கல்யாணம் செய்துகொள்ளவில்லைதான். ஒரு பிச்சைக்காரிக்கு வழ்வளிக்கவில்லைதான். ஆனால் தன் மொத்த சம்பளத்தையும் வசதியற்ற பிள்ளைகளுக்கு என்று செலவு செய்துவிட்டு மாதக் கடைசியில் ஒற்றைப் பைசா இல்லாமல் அல்லல் படுவது எதனால். கல்யாணம் செய்துகொண்டால் படிக்கிற ஏழைப் பிள்ளைகளுக்கு உதவ முடியாது என்று தனியாளாய் காலந் தள்ளுவது எதனால்? மறை கழன்ற கிறுக்கன் குடும்பத்தைப் பிரிப்பான், சரிதான், ஆனால் இரண்டு பிள்ளைகளை தத்தெடுத்து வளர்ப்பானா? என் ஆசான் வளர்க்கிறாரே எதற்காக, அவருக்கு இருப்பது மனிதாபிமானம்,

நான் பெருத்த யோசனையோடு இருப்பதைப் பார்த்து, “இப்ப உனக்கு புத்தி தெளிஞ்சிருக்கும். உண்மைய சொல்லு இது விளையாட்டுதானே” என்று இன்னமும் நம்பிக்கையோடு கேட்டான்.

நான் என் தலைமீது கை வைத்து “உம் மேல சத்தியமா வெளையாடல. உண்மையாதான் பேசறேன்.” என்றேன்.

“கடைசியா என்ன சொல்லறே” அருண் கேட்கிறான்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கப் போற மைத்ரேயனுக்கு நீ மாப்பிள்ளைத் தோழனா இருக்கணும். என் தங்கச்சிய நீ கல்யாணம் கட்டிக்கும் போது மைத்ரேயன் உனக்கு மாப்பிள்ளைத் தோழனா வருவான். அப்ப நானு வாசல்ல நின்னு உன் கல்யாணத்துக்கு வரவங்கள வா வான்னு கூப்பிடுவேன்.”

நான் சொன்னதும் நடு ரோடு என்ற கூட பார்க்காமல் என்னை அறைந்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான். அத்தனை வெறி என்மேல் அவனுக்கு.

நான் செய்யறது தப்பில்லை என்று எப்படி புரியவைப்பேன் அவனுக்கு? இது அவனுக்கு கொஞ்ச நாள் ரணம்தான். அதை சரியாக்கிக்கொள்ள அவனுக்குத் தெரியும். என் சம்பாத்தியத்தால் என் மனசுக்குப் பிடித்தவனை வாழ்க்கையில் இழப்பதைவிட நன் என் உத்யோகத்தை இழந்து மனசுக்குப் பிடித்தவனை கல்யாணம் செய்து கொள்ளலாமே என்பதும் நல்ல யோசனைதான். ஆனால் என் உத்தியோகத்தைப் பெறப்போகும் இன்னொரு பெண் மைத்ரேயனை கட்டிக்கொள்வாளா? உத்ரவாதம் உண்டா இந்த தேசத்தில்?

நான் எடுத்த முடிவில் அவனைவிட எனக்குத்தான் அதிக நரகம். அவன்தானே ஒருநாள் சொன்னான், “ஒரே வீட்டுல இருக்கிறது மட்டும் காதல் ஆயிடாது. தேசம்விட்டு தேசம் போனாலும் காதல் செத்துப்போகதுடீ” என்று. ஒருத்தனைக் கட்டிக்கொண்டு இன்னொரு பழைய காதலனை மனசில் நினைத்திருப்பது அருவருப்பான பெண்ணின் அடையாளம் என்று யாராவது சொல்லக்கூடும். கல்யாணமான ஆண்கள் பெண்கள் மனசிலிருந்து கவரும் நடிகர் நடிகைகளை கணக்கில் வைக்காமல் பொதுவாகவே பேசுகிறேன், கல்யாணம் ஆனபிறகு இவனைவிட இவளைவிட இவனோ இவளோ தனக்கு கிடைத்திருந்தால் நன்றாய் இருந்திருக்குமென்று அடுத்த ஆள் நினைப்பு யாருக்கும் இதுவரை வந்ததேயில்லை என்று யாராவது ஒருத்தராவது சொல்வார்களா?

என்னை அறைந்துவிட்டு தானே வலியை சுமந்து சென்ற அவன் வெகுகாலம் ரணமான மனசோடு, இன்னும் அழுக்குப் பையனாய் தலை கலைந்து பரிதாபப்படும்படி சுற்றிக்கொண்டிருப்பான். அவன் புண்ணுக்கான மருந்து இப்பொழுது என்னிடம் இல்லை. அவன் என் தங்கையை நிச்சயமாக கல்யாணம் செய்துகொள்ளமாட்டான் என்பதால் அவளிடமும் இல்லை. ஆனால், நன்றாக சமைக்கத் தெரிந்த, படித்த அல்லது படிக்காத, வேலைக்குப் போகாத கன்னிப் பெண்களிடம் அந்த மருந்து உண்டு. அவர்கள்தான் அவனுக்கு ரணமாற்றி ஆறுதல் தரவேண்டும். அப்படி யாராவது உங்களில் இருந்தால் ஆறுதல் வார்த்தையால் அவன் புண்ணுக்கு ஒத்தடம் தருவீர்களா கன்னிப் பெண்களே...?

- எழில் வரதன்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It