மகாகவி பாரதி எழுதிய பல்வகைக் கடவுள் பாடல்களில் விநாயகர் நான்மணி மாலையும் ஒன்று. இந்நூலைப் பாரதி ஒரு பக்திப் பனுவலாகப் படைக்காமல் தமது ஆன்மீகக் கொள்கை விளக்கப் பனுவலாகப் படைத்துள்ளான். உலகத்தவர் போற்றும் கடவுளர்கள் அனைவரும் ஒன்றே எனும் பாரதியியச் சிந்தனையை இந்நூலில் காணும்போது, பாரதியின் பக்திப்பாடல்கள், ஞானப் பாடல்களை விஞ்சிய முதிர்ச்சி விநாயகர் நான்மணி மாலையில் உண்டு என உணரமுடிகிறது.

சிவபெருமான், முருகன், லட்சுமி, சரஸ்வதி ஆகிய இந்து சமயத் தெய்வங்கள் பலவற்றின் மீதும் பாரதியார் பக்திப் பாடல்கள் புனைந்துள்ளார். அவையனைத்தும் தனித்தனிப் பாடல்களே. பாரதியார் படைத்த பக்தி நூல் விநாயகர் நான்மணிமாலை ஒன்றுதான். மதவாதிகளைப் போல் பாரதி விநாயக பக்தர். ஆனால் அவர் பார்வையிலுள்ள விநாயகர், தெய்வம் பல பேசும் சழக்கர் காணும் கணபதியல்லர். இவர் சமரச விநாயகர்! சர்வமத விநாயகர்! தேசிய விநாயகர்! ஆன்ம விடுதலைக்கேயன்றி தேச விடுதலைக்கும் வரங்கொடுக்கும் தேசபக்த விநாயகர் (பாரதியாரின் பாதையிலே, ம.பொ.சி., ப-ள்.80,94) என்று பாரதியின் விநாயகர், ஆன்ம விடுதலைக்கும் தேச விடுதலைக்கும் வரங்கொடுக்கும் விநாயகர் என்று குறிப்பிடும் ம.பொ.சி.யின் கருத்து கவனிக்கத்தக்கது.

bharathi12பாரதியின் புதுவை வாழ்க்கை மற்றும் அதன் பிந்தைய வாழ்க்கை முழுவதிலும் பாரதி எத்தகு தத்துவங்களைப் பாரதியியமாகக் கட்டமைத்தானோ அதற்கான முன்வரைவாக அவன் உருவாக்கிய தத்துவ இலக்கியம்தான் பாரதியின் விநாயகர் நான்மணி மாலை.

நான்மணி மாலை என்பது நான்குவகை யாப்புகளில் அமைந்த பாடல்களைக் கொண்டு பாடப்படும் சிற்றிலக்கியமாகும். அதாவது வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம், அகவல் ஆகிய நான்கு பா வடிவங்களில், ஒவ்வொரு பாவிலும் பத்துப் பத்துப் பாடல்களாக நாற்பது பாடல்களுடன் பாடப்படுவது. இந்த நாற்பது பாடல்களும் அந்தாதியாக அமைந்திருக்குமாறு பாடுவது மரபு. பட்டினத்தார் பாடிய கோயில் நான்மணி மாலை என்னும் நூலே நான்மணி மாலைச் சிற்றிலக்கிய வகையில் காலத்தால் முந்தையது என அறிகிறோம். பட்டினத்தாரின் நான்மணி மாலை நாயக நாயகி பாவம் என்னும் நிலையில் பாடப்பட்ட அகப்பொருள் பாடல்களைக் கொண்டது. பாரதியின் விநாயகர் நான்மணி மாலையோ பக்தியின் முதிர்ந்த நிலையில் பொதுமை நிலையில் இறைவனை முன்னிறுத்திப் பாடப்பட்டதாகும்.

3-8-1918 இல் பாரதியார் தம் தம்பி சி.விசுவநாத ஐயருக்கு எழுதிய ஒரு கடிதத்தில் திருப்பயணம் வி.ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் விநாயகர் ஸ்தோத்திரம் அச்சிட வாங்கிக்கொண்டு போனார். இன்னும் அச்சிட்டு அனுப்பவில்லை... விநாயகர் ஸ்தோத்திரம் வேலையை விரைவில் முடித்து புஸ்தகங்கள் அனுப்பும்படி சொல்லு என்று எழுதியிருக்கிறார். விநாயகர் ஸ்தோத்திரம் என்று பாரதி குறிப்பிடுவது இந்த விநாயகர் நான்மணி மாலையே எனக் கொண்டால் இது எழுதப்பட்டது 1918 ஆம் ஆண்டை ஒட்டியிருக்க வேண்டும். இது வேறு என்று கொண்டால், அச்சில் முதற்பதிப்பு வெளிவந்தது 1929 என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா! (வி.நா.மா.8) என்றும் விண்டுரை செய்குவன் கேளாய் புதுவை விநாயகனே! (வி.நா.மா.30) என்றும் பாரதி இந்நூலில் விநாயகரை விளிப்பதால் அகச்சான்றின் அடிப்படையில் அவர் புதுவையில் இருந்த காலத்தில் (1918க்கு முன்) புதுவை மணக்குள விநாயகரை நோக்கியே இந்நூலைப் பாடியிருக்க வேண்டும். எனவே பாரதி குறிப்பிடும் விநாயகர் ஸ்தோத்திரமும் இந்த விநாயகர் நான்மணி மாலையும் ஒன்றே என்று நாம் தெளிதல் வேண்டும்.

இயற்கைத் தெய்வம்:

பாரதி தான் பாடிய உயிர் பெற்ற தமிழர் என்ற பாடலில் பரம் பொருள் என்பதற்கு விளக்கம் தரும் போது ஓயுதல் இன்றிச் சுழலும் பலகோடிச் சூரியன்களைக் கொண்ட எல்லையில்லாத அண்டவெளியே, அதாவது இயற்கையே பரம்பொருள் என்று ஆராய்ந்து கூறுகின்றான். எனவேதான் பாரதியின் கவியுள்ளத்தை நன்கு கற்றறிந்த இலக்கியப் பேராசான் ஜீவா அவர்களும், பாரதி, இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்த, இந்தப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பொருள் உண்டு என்பதை ஒப்புக் கொள்ளவில்லை என்று தெளிவு படுத்துகிறார். (பாரதி வழி, ப.ஜீவானந்தம், ப.79.)

பாரதியியத்தின் இந்தத் தத்துவத் தெளிவைப் பாரதி தன் விநாயகர் நான்மணி மாலையிலேயே விளக்கிக் காட்டுகின்றான்.

தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

உள்ளொளி யாகி உலகெலாம் திகழும்

பரம்பொரு ளேயோ! பரம்பொரு ளேயோ!

ஆதி மூலமே அனைத்தையும் காக்கும்

தேவ தேவா! சிவனே! கண்ணா!

வேலா! சாத்தா! விநாயகா! மாடா!

இருளா! சூரியா! இந்துவே! சக்தியே!

ஆணாய்ப் பெண்ணாய் அலியாய், உள்ளது

யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே!     (வி.நா.மா.,பா.20.)

மேலே குறிப்பிட்ட பாடலில் பரம்பொருளுக்கு, யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வம் என்று பாரதி குறிப்பிடும் விளக்கத்தையும், பெருமரபு தெய்வங்களுக்கு இணையாகச் சிறுமரபுத் தெய்வங்களாம் சாத்தன், மாடன், இருளன் போன்ற நாட்டுப்புறத் தெய்வங்களையும் குறிப்பிடும் புதுமையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உள்ளொளியாகி அகத்தில் நின்ற இறையும் உலகெலாம் திகழும் அண்டமாய் நின்ற இறையும் இணைத்துக் குறிப்பிடப் பெற்றிருப்பதும் நோக்கத் தக்கது.

தெய்வம் ஒன்று:

இந்தியத் தெய்வங்கள் ஒன்றா? இரண்டா? ஆயிரக்கணக்கில் உண்டு. பாரதி கேட்கிறான், ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவற்ற மாந்தர்களே! பலப்பலவான தெய்வங்களைச் சொல்லி மனிதர்களிடத்தே பகைத் தீயை வளர்க்கின்ற மூடர்களே! தெய்வம் ஒன்று என்பதை அறிவீர்களா?. இதுதான் பாரதியியம்.

பாரதி விநாயகர் நான்மணி மாலையில் வழிபடு கடவுளாம் விநாயகனை ஒரு பாடலில் அல்ல பல பாடல்களில் எல்லாத் தெய்வங்களின் பேராலும் அழைத்து வழிபடுகின்றான். இந்தியக் கடவுள்கள் மட்டுமல்ல பிறநாட்டிருப்போர் குறிப்பிடும் அல்லா, யேசு என்ற பெயர்களாலும் விநாயகனைத் துதித்து உலகத்திற்கொரு புதிய வழியைக் காட்டுகின்றான்.

விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்

நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்

பிறநாட்டிருப்போர் பெயர்பல கூறி

அல்லா, யேஹோவா எனத்தொழுது அன்புறும்

தேவருந் தானாய்த் திருமகள் பாரதி

உமையெனும் தேவியர் உகந்தவான் பொருளாய்

உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்         (வி.நா.மா.,பா.8.)

தீவிர தேசியவாத இயக்கத்தில் இருந்து, இந்து சமயத் தேசியத்துக்குத் தானும் உடன்பட்டுப் பணியாற்றிய பாரதி, இந்து சமய எழுச்சிக்கு, இந்திய தேசிய எழுச்சிக்குத் திலகரால் முன் மொழியப்பட்ட விநாயகர் வழிபாடுகளின் வழியொற்றி வந்த பாரதி, இன்று அதற்கெல்லாம் மாறுபட்டு வள்ளலாரைப் போல சர்வ சமய சமரசத்தில் மூழ்கி எழுகிறான். பொருள் ஒன்று வடிவங்கள் பல என்ற அத்வைதம் ஓரிறைக் கொள்கையாக முழுமை பெற்றுப் பொலியும் பாரதியியத் தத்துவம் இப்பாடலில் வெளிப்பட்டிருப்பது இந் நான்மணி மாலையின் தனிச்சிறப்பு. பாரதி தீவிர இந்து சமயத் தேசியம் போற்றியவன் என்ற சிலரின் ஆராவாரப் பேச்சு வெறும் பழிப்புரையே என்பது இதிலிருந்து விளங்கும்.

அன்பு செய்தல்:

வையகத்தில் அன்பிற் சிறந்த தவமில்லை. அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு (வி.நா.மா.,பா.37.) என்று உயிர்களிடத்துச் செலுத்தும் அன்பையே தவமாகக் காண்கிறான் பாரதி. எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலை வலியுறுத்தும் பாரதியியச் சிந்தனை எங்கிருந்து முகிழ்த்தது?.

     உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை

     ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்

     பயிலுமுயிர் வகைமட்டும் அன்றி யிங்குப்

பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்

     இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்

     எழுதுகொல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் (பாரதி அறுபத்தாறு)

என்று உலகத்து உயிர் உள்ளன, உயிர் அற்றன அனைத்தையும் கடவுளாகப் பார்க்கும் சிந்தனை அத்வைதத் தத்துவம் அல்லவா? உலகத்து மக்களெல்லாம் ஒரே சாதி, உலகத்து உயிர்களெல்லாம் ஒரே குடும்பம், உலகத்து உயிர்களெல்லாம் கடவுளின் அம்சம் என்ற பாரதியியச் சிந்தனையை பாரதி எப்படி வளர்த்தெடுக்கின்றான் என்று பாருங்கள்.

நான் ஜாதி பேதத்திற்கு நண்பன் அல்லேன். உலகத்து மனிதர்கள் எல்லோரும் ஒரே ஜாதி என்ற பர்த்ருஹரியின் கொள்கையைத் தழுவியுள்ளேன். மனித ஜாதியும் மற்ற ஜந்து சமூகங்களும் ஒரே குடும்பம் என்ற ஆங்கில விஞ்ஞானி டார்வின் கருத்தைப் பின்பற்றுகிறேன். எல்லா உயிர்களும் கடவுளுடைய அம்சம் என்ற பகவத் கீதையின் பரமோபதேசத்தைக் கடைபிடித்து நிற்கிறேன். (பாரதி வழி, ப.ஜீவானந்தம், ப.68.)

பாரதி தன் இறுதிக் காலத்தில் 1921 இல் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி இது. பாரதி பேசும் அத்வைதமும் பகவத் கீதையும் பிறர் பேசுவனபோல் வறட்டு வேதாந்தமல்ல. ஆன்மீகமும் அறிவியலும், பழமையும் புதுமையும் கலந்து பிறந்த வாழ்வியல் தத்துவம். இவ்வாழ்வியல் தத்துவமே பாரதியத்தின் உயிர்நாடி.

விநாயகர் நான்மணி மாலையில் அன்பும் இறையும்:

விநாயகர் நான்மணி மாலையில் மனிதர்களுக்குரிய நான்கு வகைக் கடமைகளைக் குறிப்பிடும் பாரதி, இறைவழிபாட்டினை விட மேலான கடமைகள் என்று குறிப்பிடுவன இரண்டு, அவை: பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல்.(வி.நா.மா., பா.8) பாரதியின் அன்பு எவ்வாறு எல்லையற்றிருக்கிறது என்பதற்கு மேலே குறிப்பிட்ட இரண்டு மனிதக் கடமைகளுமே சாட்சி. இங்கே பாரதி குறிப்பிடும் பிறர் என்பதைப் பிற மனிதர்கள் என்பதோடு பிற உயிர்களும் என்று விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

நான்மணி மாலையில் இறைவனிடம் பாரதி கேட்கும் வரம் இதுவே,

பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்.
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே 5
இன்பமுற் றன்புட நிணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும், தேவ தேவா!

ஞானாகா சத்து நடுவே நின்று நான்
பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக, துன்பமு மிடிமையு நோவுஞ் 10
சாவு நீக்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க என்பேன்! இதனை நீ
திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
'அங்ஙனே யாகுக' என்பாய், ஐயனே! (வி.நா.மா., பா.32)

தனக்கு வேண்டும் வரம், யாரும் கேட்காத வரம் என்று பாரதி கேட்கும் வரம் மண்மீதுள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்வதற்கான வரம். டார்வினும் பகவத் கீதையும் கைகோர்க்கும் பாரதியியச் சிந்தனை இதுவே. எல்லா உயிர்களும் மரணமிலாப் பெருவாழ்வு வாழ இறைவனிடம் மன்றாடும் பாரதியியத்தின் அன்புக்கு எல்லை ஏது?.

விநாயகர் நான்மணி மாலையில் பல பாடல்களில் பாரதி இத்தகைய புதுமையைச் செய்கின்றான்.

செய்யும் தொழிலே தெய்வம்               (வி.நா.மா., பா.3)

கவலைப் படுதலே கரு நரகம்மா           (வி.நா.மா., பா.36)

கவலையற்று இருத்தலே முக்தி            (வி.நா.மா., பா.36)

அன்பிற் சிறந்த தவமில்லை                (வி.நா.மா., பா.37)

பாரதி, மேலே குறிப்பிப்பட்டுள்ள பாடல் அடிகளில் தெய்வம், நரகம், முக்தி, தவம் போன்ற சொற்களுக்குத் தரும் புதிய விளக்கங்கள் இந்தக் கவிதைகளை சோதி மிக்க நவ கவிதைகளாக மாற்றியிருப்பது உண்மை.

நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்கு உழைத்தல்

இமைப்பொழுதும் சோரா திருத்தல்              (வி.நா.மா., பா.3)

இந்த மூன்றும்தாம் என் வாழ்க்கையின் நோக்கம் என்று பாரதி பிரகடனப் படுத்தும் இந்நான்மணி மாலைப் பாடலிலும் பாரதி, நமக்குத் தொழில் கவிதை என்று குறிப்பிடுவதன் மூலம் தொழில் என்ற சொல்லுக்குப் புதிய பரிமாணங்களைக் கொடுக்கின்றான்.

மற்றுமொரு பாடலில் பாரதி பக்தி என்பதற்குத் தரும் விளக்கம் ஆழமானது. காரியத்தில் பதறாமல், வித்து முளைக்கும் தன்மை போல் மெல்லச் செய்து பயனடைபவரே பக்தியுடையார் என்கிற (வி.நா.மா., பா.27) இந்தப் பாடலில் வரும் வித்து முளைக்கும் தன்மை போல் என்றும் மெல்லச் செய்து பயனடைவார் என்றும் பாரதி தரும் விளக்கம் நினைத்து நினைத்து இன்புறுதற்குரியது.

பாரதி புதுவையில்தான் பகவத் கீதைக்கு உரை எழுதினான். எல்லாம் கடவுள் மயம் என்ற கீதை வெளிச்சத்தில், புறத்தே உள்ள பிரபஞ்சத்தையும் அதன் அங்கமான அனைத்து உயிர்இனங்களையும் மனிதனையும் மனிதனின் அக உலகத்தையும் பிரம்மத்தின் வெளிப்பாடாகக் கருதினான் பாரதி. இந்த பிரம்மத்தின் முழுமையையும் பகுதிகளையுமே கடவுளாகப் பார்த்தான்; இயற்கையே, மானுடமே, சக்தியே, அறிவே, அன்பே கடவுள் என்பது பாரதியின் முடிபு. அனைத்துயிர்களும் பிரம்மத்தின் வெளிப்பாடு என்ற தெளிவோடு எவ்வுயிரிடத்தும், எம்மனிதரிடத்தும் எவ்வித வேற்றுமையும் பாராதிருப்பதே விடுதலைக்குரிய ஞானம் என்கிறான் பாரதி. இதுவே பாரதியியம்.

இல்லறத்தில் இருந்து எளியவர்களுக்கு உணவளித்து மனைவி மக்களோடு இறைவனைப் போற்றி வாழும் வாழ்வே மிகப் பெரிய தவம், இது இல்லறத்தைத் துறந்து வாழும் துறவிகளின் தவத்தை விட மேலானது (வி.நா.மா., பா.10) என்கிறான் பாரதி. பாரதியின் ஆன்மீகம் துறவை மறுக்கிற, குடும்ப வாழ்க்கையை நேசிக்கிற ஆன்மீகம், எளிய உயிர்களுக்கும் அன்பு காட்டும் ஆன்மீகம்.

முனைவர் நா.இளங்கோ