கையூட்டு வாங்கும் அரசு ஊழியர்களைப் பிடிக்க முன்பெல்லாம் ரூபாய் நோட்டுக்களில் வேதிப்பொருட்களை தடவி கொடுக்கச் சொல்வார்கள். அதை அந்த ஊழியர் வாங்கியவுடன் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடிப்பார்கள். மாட்டிய அரசு ஊழியர் தலையில் துண்டை போட்டுக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு செல்வார்.

ஆனால் இப்பொழுதெல்லாம் அந்தப் பிரச்சினை இல்லை. அனைத்தும் டிஜிட்டல் மயமாகி விட்டதால் லஞ்சம் கூட டிஜிட்டல் மயமாகி விட்டது. அக்கவுண்ட் நெம்பரைக் கொடுத்து நேரடியாக தனது வங்கிக் கணக்கிலோ அல்லது பினாமி வங்கிக் கணக்கிலோ பணத்தை செலுத்தச் சொல்லி விடுகின்றார்கள்.

எப்படி அரசு ஊழியர் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக, மக்களுக்குப் பணியாற்றாமல் அவர்களிடமே செய்யும் வேலைக்கு கையூட்டு வாங்குகின்றார்களோ, அதே போல அரசியல்வாதிகளும் நாட்டை கூறுபோட்டு பன்னாட்டு முதலாளிகளுக்கு விற்பதற்கான கையூட்டை அரசு ஊழியர்களைவிட ஒருபடி முன்னேறி அதை சட்டப்படியே பெறுகின்றார்கள்.modi with mukesh ambaniதேர்தலின்போது அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் தனிப்பட்ட ஒருவரிடமிருந்து நிதி பெற்றிருந்தால், அப்படி நிதி வழங்கியவர்களின் பெயர் மற்றும் தொகையின் தரவுகளை நிதி ஆண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று Representation of People Act சட்டத்தில் இடம் பெற்றிருந்தது. இதனை Electoral Bond Scheme 2018 மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது.

கார்ப்ரேட்டுகள் சட்டவிரோதமாக அடிக்கும் கொள்ளையில் தங்களுக்கான பங்கை சட்டப்படியே பெற்றுக் கொள்ள கார்பரேட் கொள்ளைக்கு விளக்கு பிடிக்கும் அரசியல்வாதிகள் வழி ஏற்படுத்திக் கொண்டார்கள்.

இதன் மூலம் கணக்கு வழக்கற்ற கருப்புப் பணம் தேர்தல் நிதியாக அரசியல் கட்சிகளின் கஜானாவில் குவிந்தன. ஒவ்வொரு கட்சியின் கார்ப்ரேட் சேவையைப் பொறுத்து கார்ப்ரேட்கள் வீசும் எலும்புத் துண்டுகளின் விகிதமும் வித்தியாசப்பட்டது.

மோடி பதவியேற்றதில் இருந்து ஒட்டுமொத்த கார்ப்ரேட்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, சிறந்த புரோக்கராக செயல்படுவதால் கார்ப்ரேட்களால் அதிகம் நிதி கொடுக்கப்படும் கட்சியாக பிஜேபியே இருந்து வருகின்றது.

மார்ச் 2018 மற்றும் 2022 க்கு இடைப்பட்ட காலத்தில் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நிதியில் பாஜகவிற்கு பாதி அளவு சென்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெறப்பட்ட மொத்தம் ரூ.9,208 கோடியில் ரூ. 5,270 கோடி பிஜேபியே பெற்றுள்ளது. 2022 வரை விற்கப்பட்ட மொத்த தேர்தல் பத்திரங்களில் 57 சதவீதம் பாஜக பெற்றுள்ளது.

காங்கிரசு கட்சி, அதே காலகட்டத்தில் ரூ.964 கோடி அதாவது 10 சதவீதத்தைப் பெற்று இரண்டாவது இடத்திலும், மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடி அதாவது 8 சதவீதம் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளது.

இந்த கடன்பத்திரங்கள் அனைத்தும் எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. ரூ1,000 முதல் ரூ1,00,00,000 வரையிலான மதிப்புகளில் தேர்தல் பத்திரங்களானது விற்கப்படுகின்றன. இதன் மூலம் தனி நபர், பெரு நிறுவனங்கள் என அனைவரும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நிதி அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரம் பெறலாம் போன்ற எந்த அளவு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதால் கார்ப்ரேட் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய கமிசனை சட்டப்படியே கார்ப்ரேட்களால் கொடுக்க முடிகின்றது

இப்படி கார்ப்ரேட் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாக பிஜேபிக்கு கார்ப்ரேட்கள் அள்ளி அள்ளி கொடுத்ததற்குப் பயனாக உலக அளவில் பெரும் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடாக இந்தியாவை மோடி மாற்றியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 70 கோடி மக்கள் வைத்திருக்கும் சொத்துக்களை விட வெறும் 21 பேர் அதிக அளவு சொத்துக்களை வைத்திருப்பதாக ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்குப் பின்னர் இந்திய பணக்காரர்களின் எண்ணிக்கை மற்றும் இந்தியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய பொருளாதார மாற்றங்கள் குறித்து 'ஆக்ஸ்பாம் இந்தியா' Survival of the Richest: The India story எனும் ஆய்வை சமீபத்தில் நடத்தி முடித்தது.

இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், கொரோனா காலகட்டத்திலிருந்து தற்போது வரை இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் சொத்து மதிப்பு 121% அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. மறுபுறம் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த செல்வங்களில் வெறும் 3 சதவிகிதத்தை 50 சதவிகிதத்தினருக்கும் அதிகமானோர் வைத்திருக்கின்றனர்.

இந்தியாவில் 2020ம் ஆண்டு 102 ஆக இருந்த பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 2022ம் ஆண்டு 166 ஆக அதிகரித்திருக்கிறது. இவர்களின் சொத்து மதிப்பானது ஒரு நாளைக்கு ரூ.3,608 கோடி என்கிற அளவில் உயர்ந்து வந்திருக்கின்றது.

2021ம் ஆண்டு கணக்குப்படி இந்தியாவின் வெறும் 5 சதவிகிதம் பேர் நாட்டில் உள்ள சொத்துக்களில் 62%க்கும் அதிகமானதைக் கொண்டிருக்கிறார்கள்.

கடந்த 2012 முதல் 2021 வரை என 11 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் 40சதவீதத்தை 1 சதவீத பெரும் பணக்காரர்களும், வெறும் 3 சதவீத செல்வத்தை 50 சதவீத சாமானிய மக்களும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்ரேட்களுக்கு லட்சக்கணக்கான கோடிகள் வரிச்சலுகையை கொடுப்பதன் மூலமும் ஏழை மக்களின் மீது கடுமையான வரிச்சுமையை ஏற்றுவதன் மூலமும் இந்த வளர்ச்சியை மோடி அரசு சாத்தியப்படுத்தி இருக்கின்றது.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்களின் மீது 5 சதவீத வரி விதிக்கப்பட்டால் இந்தியாவில் பள்ளிக்குச் செல்ல முடியாமல் இருக்கும் பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க முடியும் எனவும், இந்தியாவில் உள்ள பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்துக்கும் 2 சதவீதம் வரி விதிக்கப்பட்டால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நாட்டில் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களின் ஊட்டச்சத்து மேம்பாட்டுக்கான நிதியை திரட்ட முடியும் எனவும் ஆக்ஸ்பாம் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

ஆனால் இது எல்லாம் தெரியாத அளவிற்கான முட்டாள்களாக நாம் சங்கிக் கும்பலை பார்க்கவில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும், கார்ப்ரேட்களுக்கு எவ்வளவு வரி விதித்தால் எவ்வளவு தொகை வசூலாகும் என்று.

ஆனால் அதை எல்லாம் செய்து சாமானிய மக்களை வறுமையின் பிடியில் இருந்து காப்பாற்றிவிட்டால் தங்களின் கஜானாவிற்கும் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும் யார் நிதி உதவி செய்வார்கள் என்ற சுயநலமும் ஆளும் வர்க்கத்துக்கு தரகு வேலை பார்ப்பதையே நீதி என போதிக்கும் அவர்களின் சித்தாந்தமும்தான் அதைத் தடுக்கின்றது.

அதனால்தான் 121 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட உலக பட்டினிக் குறியீடு (GHI) கணக்கெடுப்பில், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை விட பின்தங்கி இந்திய 107ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதில், சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் குறியீட்டில் முன்னணியில் உள்ளனர். அயர்லாந்து நாட்டின் 'Concern World wide' மற்றும் ஜெர்மன் நாட்டின் 'Welt Hunger Hilfe' இந்த அறிக்கையை தயாரித்துள்ளன. மேலும் இந்த அறிக்கை இந்தியாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்தாண்டு 116 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா 101ஆவது இடத்தைப் பிடித்திருந்தது. உலக பட்டினி குறியீட்டில், 2000ஆம் ஆண்டில் 38.8 புள்ளிகளுடன் இருந்த இந்தியா, 2014-2022ஆம் ஆண்டு காலகட்டங்களில் 28.2-29.1 புள்ளிகளாக குறைந்துள்ளது.

இது எல்லாம் மோடி ஆட்சியின் சாதனைகளாகும். ஒரு பக்கம் மக்கள் வேலையில்லா திண்டாட்டத்தாலும், விலைவாசி உயர்வாலும் பட்டினி கிடக்க மற்றொரு பக்கம் இந்தியாவில் சாமானிய மக்களால் உற்பத்தி செய்யப்படும் வளங்களின் பெரும்பங்கு அதானி, அம்பானி போன்ற பெரும் கார்ப்ரேட்களால் முழுவதுமாக சுரண்டப்படுகின்றன.

அப்படியான சுரண்டலுக்கு பக்க பலமாக தோளோடு தோள்நின்று அவர்களுக்கு மாமா வேலை பார்க்கும் மோடி அரசு தொடர்ந்து அவர்களிடம் இருந்து அதிகம் தேர்தல்நிதி பெரும் கட்சியாக உள்ளது.

இந்தியாவை சட்டப்படியே கொள்ளையடிக்கலாம், அப்படி கொள்ளையடித்த பணத்தை நீங்கள் சட்டப்படியே கார்ப்ரேட் கட்சிகளுடன் பங்கிட்டுக் கொள்ளலாம் என்பதுதான் மோடி அரசு இந்திய ஜனநாயகத்தில் கொண்டு வந்திருக்கும் மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றம்தான் இராமராஜ்ஜியத்துக்கான சங்கிகளின் பயணத்தில் மிக முக்கியமானது.

காரணம் இந்தப் பயணத்தில் அவர்களோடு எதிர்க்கட்சிகளும் சேர்ந்து பயணித்துக் கொண்டு இருக்கின்றார்கள். கட்சிகளின் பெயர்கள் வேண்டுமானால் வேறுபடலாம், ஆனால் கார்ப்ரேட் சேவை வேறுபடுவதில்லை.

- செ.கார்கி