ராஜராஜன் இந்து மன்னனா? அல்லது இன்றைய இந்து மதப் பாதுகாப்பாளர்கள் அவனுக்கு இந்து சாயம் பூசுகின்றனரா? ராஜராஜனுக்கு இந்து மத சாயம் பூச வேண்டாம் என இயக்குனர் வெற்றி மாறன் பேசியதில் தவறுண்டா? இது குறித்து பெரியாரிஸ்டுகளுக்கு இருக்க வேண்டிய பார்வை என்ன?

சங்க காலத்தில் அதாவது கிபி 200 வரை சைவம், வைணவம் என நிறுவனமயப்பட்ட மதங்கள் தமிழ்நிலத்தில் இல்லை. மேயோன், திருமால் போன்ற சொற்கள் தொல்காப்பியம் உட்பட பல சங்க கால இலக்கியங்களில் இருந்தாலும் அவை நாம் இன்று அறியும் இந்து, சிவன், விஷ்ணு என்ற பொருளில் இல்லை. ஆதித் தமிழர்கள் அல்லது திராவிடர்கள், அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பை இயற்கை அமைப்பிற்கு ஏற்றவாறு, அப்பகுதிகளின் சூழலை ஒட்டிய கடவுள்களையும் வழிபட்டனர்.

raja raja cholanபெருந்தெய்வ வழிபாடு, வேத, வைதீக, பார்ப்பனிய தத்துவம் எதையும் சங்க காலம் கொண்டிருக்கவில்லை என்பது ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சங்க கால ஆய்வாளர்களின் கருத்து. எனது புரிதலில் தவறு இருந்தால், ஆதாரங்களை தந்தால், அதை மறுவாசிப்பு செய்து, திருத்திக் கொள்கிறேன்.

இதன்பின்னர், அதாவது சங்க காலத்திற்குப் பிந்தைய காலத்தில், புத்தர் வீழ்ச்சி, ஆரியப் பண்பாட்டு படை எடுப்பு, வேத எதிர்ப்பு பண்பாடுகளான புத்தம்,  சமணம், ஆசிவகம் போன்ற மரபுகளின் வீழ்ச்சி, குப்தர்கள், மௌரியர்கள் உள்ளிட்ட பல மன்னர் வம்சங்களின் ஆதரவு உள்ளிட்ட பல காரணங்களின் பின்னணியில் வைணவ, சைவ மதங்கள் வடக்கிலும் தெற்கிலும் வளர்ந்தன.

உயிர்பலியை எதிர்த்தல், மாமிச உணவை மறுத்து, மரக்கறி உணவுக்கு (சைவ உணவு) மாறுதல் உள்ளிட்ட பல மாறுதல்களை சைவ, வைணவ மதங்கள் ஏற்றுக் கொண்டன. அதன் விளைவாக வளர்ந்தன. நீண்ட கால வேத எதிர்ப்பின் விளைவு இவை. ஆனால் சைவ, வைணவ மதத்திற்குள் வேத கருத்துக்கள் புகுத்தப்பட்டன. அதாவது ஆரிய, வேத மதங்கள் என்ற பதங்கள் வழக்கொழிந்து போய்,  வேத - ஆரிய - பார்ப்பனியக் கருத்துக்கள் சைவம் - வைணவம் என்ற பெயர்களாக மாற்றம் பெற்றன.

பல்லவர்கள், பாண்டியர்கள், சோழர்கள் போன்ற மன்னர்கள் சைவத்தை சிறப்பாக வளர்த்தனர். ஏழாம் நூற்றாண்டில் சைவ நெறிக்கு ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டது எனக் கூறலாம்.  காரணம், இந்தக் காலத்தில்தான்  திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்றவர்கள் சைவத்தை வளர்த்தனர்.

வைணவர்களும் இந்த காலகட்டத்தில் சும்மா இருக்கவில்லை. மன்னர்களை தங்கள் வலையில் வீழ்த்துவது, அதன் மூலம் மதத்தை வளர்ப்பது, தங்கள் அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்வது என்பதில் குறியாய் இருந்தனர்.

இந்த காலகட்டத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற எண்ணற்ற சைவ நூல்களும், ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் உள்ளிட்ட எண்ணற்ற வைணவ நூல்களும் எழுதப்பட்டன. அதாவது, கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல், பிற்காலச் சோழர் ஆட்சி தொடங்கிய பத்தாம் நூற்றாண்டு வரையுள்ள அக்காலக் கட்டத்தை, சைவ-வைணவ மறுமலர்ச்சிக் காலம் எனலாம்.

மறுமலர்ச்சி என்றால் சண்டை இல்லாமல் இருக்குமா?

சைவம், வைணவம் என்பன பெருமதங்களாக வளர்ச்சியடைந்த இக்கால கட்டத்தில் சைவ - வைணவ சண்டைகளும் நடந்தேறின. இருபக்கமும் தமிழ் நாட்டு மன்னர்கள் நின்றனர். எவன் வெற்றி பெறுகிறானோ, அவன் சார்ந்த மதம் அந்த காலத்தில் ஆதிக்கம் பெறும்.

வைணவ - சைவச் சண்டை தீவிரமாக தொடர்ந்து இந்த காலகட்டத்தில் நடைபெற்றது. இந்த சண்டைகளில் சைவ மதம் தற்காலிகமாக பெரிய வெற்றியை ராஜராஜன் - ராஜேந்திர சோழன் காலத்தில் பெற்றது. அதன் அடையாளமே தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில்.

அது மட்டுமின்றி, சைவ - வைணவ சண்டையை நிறுத்தும் பொருட்டு, சைவத்துக்குள் வைணவத்தை உள்ளடக்கும் முயற்சி ராஜராஜன் - ராஜேந்திர சோழன் காலத்தில் நடைபெற்றது. அதன் இன்றைய அடையாளமே கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கோவில்.

சைவ அடையாளமாக இன்று கருதப்படுகிற லிங்கம் "சைவ-வைணவ-பிரம்ம" அடையாளங்களை உள்ளடக்கியதாகும். அதாவது, சிவலிங்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது. லிங்கத்தின் அடிப்பகுதியில் உள்ள சதுர வடிவம் பிரம்மாவையும், எண்ம கோண வடிவத்தில் உள்ள நடுப்பகுதி விஷ்ணுவையும்,வட்ட வடிவத்தில் உள்ள மேற்பகுதி சிவனையும் குறிக்கிறது. லிங்க புராண ஆய்வாளர்கள் இதை மறுத்தால், நம் கருத்தை மாற்றிக் கொள்ளலாம்.

அதாவது லிங்க வடிவமைப்பே இன்றைய நவீன இந்து மதத்தின தொடக்கம். சிவனையும் திருமாலையும், பிரம்மனையும் இணைத்து, இந்து மதமாக்கி, பார்ப்பனர்களை அதன் காவலர்களாக்கி, அதை நிறுவனப்படுத்திய பெருமை ராஜராஜ - ராஜேந்திர சோழனை சாரும்.

இதை வேறு வார்த்தைகளில், இன்று நாம் வழங்கும் "இந்து" என்ற பெயரை வெள்ளைக்காரர்கள் தந்திருக்கலாம். ஆனால் அதற்கான தத்துவ அடையாளத்தை தந்தவர்கள் ராஜராஜனும், ராஜேந்திர சோழனும். அதற்கு துணை நின்றவர்கள் அவர்களே.

எனவே ராஜராஜன் இந்து மன்னன் தான். அதில் சந்தேகமில்லை. எனவே புதிதாக ராஜராஜனுக்கு இந்து மதச் சாயம் பூச வேண்டியதில்லை. இந்து மதத்தின் முதல் மன்னன் என்ற பட்டத்தைக் கூட ராஜராஜனுக்குத் தரலாம். அந்தளவிற்கு இந்து மதத்திற்கு சேவைகள் புரிந்துள்ளான். அதை நிறுவனப்படுத்தியுள்ளான். ஆட்சியில், அதிகாரத்தில் பங்களித்துள்ளான். சதுர்வேதி மங்கலம், உத்தமதானபுரம், அக்ரஹாரம், பிரம்மதேயம் உருவானவை இக்கால கட்டத்தில் தான். சமஸ்கிருத மயமாக்கமும் பார்ப்பனியமும் நிறுவனமயமானதும் இக்காலத்தில் தான்.

அதாவது, வைணவத்தை சைவத்தோடு உள்ளடக்கிய இந்து மதத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாமல், தமிழ் விரோத, தமிழ் மக்களின் உரிமைகளை சுருக்கி, பார்ப்பனர்களை வளர்த்து, அவர்களுக்கு அதிகாரமளித்தது உள்ளிட்ட பல தமிழ் விரோத செயல்களை பெரிய அளவில் செய்தவன் ராஜராஜன். எனவே ராஜராஜனை இந்து மன்னன் எனச் சொல்வதில் தவறேதும் இல்லை.

சரியாகச் சொல்ல வேண்டுமானால், சைவம் - வைணவம் - பிரம்மத்தை உள்ளடக்கி, இந்து மதம் எனும் தத்துவத்தை உருவாக்கி, அதன் அடையாளமாக லிங்கத்தை வடிவமைத்து, அதற்கு கோயில் உருவாக்கி நிறுவனமயமாக்கியவர்கள் அப்பனும், மகனும்.

ஆனால், மதமற்ற பெரியாரிஸ்டுகளுக்கு என்ன பார்வை வேண்டும்?

ராஜராஜனுக்கும் இந்து மதத்திற்கும் தொடர்பு இல்லை. அவன் சைவன், சோழன், தமிழன், பேரரசன், வீரன், கடாரம் என்று தமிழ்ப்புலவர்கள், பைத்தியங்கள் உளறலாம். வெற்றிமாறன் கூட அதை ஏற்றுக் கொள்ளலாம். பெரியாரிஸ்டுகளுக்கு அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய என்ன தேவை இருக்கிறது?

கோயில் கட்டியது சரி, அது அவன் நம்பிக்கை. தன் ஆட்சியைப் பாதுகாக்க பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்தான் ராஜராஜன் என்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவனுடைய ஆட்சிக்காலத்தில் தமிழ் மக்களுக்கு என்ன செய்தான் என்ற கேள்வியை பெரியாரிஸ்டுகள் கேட்க வேண்டும். தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்து கிழிக்கவில்லை என்பது மட்டுமல்ல, அன்றைய காலத்தில் தமிழ்நிலத்தில் வாழ்ந்த மக்களின் நிலங்களைப் பிடுங்கி பார்ப்பனர்களுக்குத் தந்தான்.

வானளாவிய கோயிலைக் கட்டிய ராஜராஜன், மக்களை வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற ஒரு இன்ச் அளவு பள்ளிக் கூடத்தை கூட கட்டவில்லை. பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்த ராஜராஜன், பெரும்பான்மையான மக்களுக்கு கிள்ளிக் கூடத் தரவில்லை. மாறாக, பெரும்பான்மையான மக்களிடம் பிடுங்கி, பார்ப்பனர்களுக்கு அள்ளிக் கொடுத்தான்.

பார்ப்பனர்களுக்கு அதிகாரப் பெருக்கம் - தமிழர்களுக்கு அதிகாரச் சுருக்கம். இதுவே ராஜராஜனின் ஒற்றை வரி வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்.

தமிழர்களிடம் வரி வசூலித்தான், பெரும்படை கட்டினான், கப்பற்படை உருவாக்கினான், கடல் கடந்தான், தமிழர்களை படைவீர்ர்களாகக் கொண்டு, ஆட்சியைப் பெருக்கினான். பரந்த நிலப்பரப்பை வென்றான். ராஜராஜனின் வெற்றியின் பலனை பார்ப்பனர்கள் அனுபவித்தனர். ராஜராஜன் வெற்றிபெற  தமிழர்களை பலிகொடுத்தான்.  அதாவது, பார்ப்பனர்களுக்காக தமிழர்களை பலிகொடுத்தான் எனவும் சொல்லலாம்.

இப்படிப்பட்ட ராஜராஜனை இந்து மதத்தில் இருந்து பிரித்தெடுக்க வேண்டிய அவசியம் தமிழ்த் தேசிய, சைவ, தமிழ்ப் புலவர்களுக்கு இருக்கலாம், வெற்றிமாறனுக்கும் இருக்கலாம். எதையும் பகுத்தறியும் பெரியாரிஸ்டுகளுக்கு எந்த அவசியமும் இல்லை. 

தமிழனாய் பிறந்தான் ராஜராஜன் என்பதற்காக அவனை ஆதரிக்க வேண்டிய தேவையும், தமிழர் படை கொண்டு பல நாடுகளை வென்றான் என்பதற்காக பெருமை கொள்ள வேண்டிய தேவையும் பெரியாரிஸ்டுகளுக்கு இல்லை.

கோயிலை கட்டித்தொலை. அது உன் விருப்பம். ஆனால், மக்களுக்கு என்ன செய்தாய் என்பதே நம் கேள்வியாக இருக்கும். இருக்க வேண்டும்.

மொழி, மதம், கோவில், அறிவியல், படை, போர், வெற்றி, தமிழர் - இவை எவற்றின்பாலும் பெரியாருக்கு பிடிப்போ பெருமிதமோ பற்றோ இருந்ததில்லை. இவற்றினால் பெரும்பான்மை மக்களுக்கு என்ன பயன் என்றே பெரியார் கேள்வி கேட்டார். அந்தப் பார்வையே நமக்கும் வேண்டும்.

கலை – இலக்கியம் – ஆட்சி – மதம் – மொழி – அறிவியல் என எதுவாக இருந்தாலும் மக்களுக்காக நன்மை பயக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே பெரியாரிஸ்டுகளும், முற்போக்காளர்களும் வைத்திருக்க வேண்டிய பார்வை.

- சு.விஜயபாஸ்கர்