இழத்தல், இழிவு, இழவு, இழி, இழிப்பு, இழிதல், இழுத்தல் என்னும் சொற்கள் மிகப் பழையன. சங்க காலத்திற்கு முன்பிருந்தே வழக்கில் இருந்து வருவன. குப்பை, நாற்றம் என்னும் சொற்களைப் போலல்லாது பொருள் மாறா தொடர்ச்சியை உடையன. பேசா வரலாற்றைப் பேசுவன. ‘இழி’, ‘இழு’ என்னும் வேர்ச் சொற்களும் அதை அடியாகக் கொண்டு உருவான சொற்களின் புழங்கு தன்மையும் பேச வேண்டியன.

‘இழப்பு’ – உரியதை இழத்தல். ‘இழவு’ – உரியவரை இழத்தல். அதாவது ஒரு குறிப்பிட்ட தொகுதியில் இருந்து ஒன்று விலகுவதை ‘இழத்தல்’, ‘இழவு’ என்கிறோம். நாட்டுப்புறத்தில் மாட்டை வாழ்வாதாரமாகக் கொண்ட வீட்டில் மாடு இறந்துவிட்டால் மனித இழவு போன்றே துக்கிப்பர். உறவினர்கள் துக்கம் விசாரித்துப் போக வருவர். அதை ‘மாட்டிழவு’ என்பர். அதாவது மாடு உரியவர்களை விட்டு இல்லாமல் போவது அது. இவ்விடத்து ‘திரும்பக் கிடைக்காது’, ‘திரும்ப வராது’ என்கிற பொருளில் ‘இழவு’ சொல் புழங்கப்படுகிறது. ‘என்னெ கையெப்புடுச்சி இழுத்துட்டான்’ என்னும் தொடர் வன்புணர்வை இடக்கரடக்கலாகச் சுட்டுவது. இதில், ‘பேசி மணம் முடிக்கும் மரபுச் சட்டகத்தில் இருந்து என்னை வெளியை கொண்டு வந்து விட்டான்’ என்கிற விவரணை ‘இழுத்திட்டான்’ என்னும் ஒற்றைச் சொல்லில் அடக்கம். இவ்விடத்து ‘இழுத்தல்’ என்பது வெளியை கொண்டு வருதல் என்னும் பொருளைத் தருகிறது.

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர்த்திக் கொணர்வதற்கு ‘உள்ளே இழுத்துட்டு வா’, ‘வெளியே இழுத்துட்டு வா’ என்னும் தொடர்கள் பயன்கொள்ளப் பெறுகின்றன. பெரிய பண்ணை வீடுகளில் உழவுக்கும் இழுவைக்கும் தனித்தனி மாடுகள் இருக்கும். உழவு மாட்டை இழுவைக்கும், இழுவை மாட்டை உழவுக்கும் பயன்படுத்த மாட்டார்கள். இழுவை மாடுகள் வண்டி, கமலை இழுக்கும். ஆக ‘இழுவை’ என்ற சொல் இவ்விடத்து ‘பொருளை பெயர்த்துச் செல்லும்’, ‘கிணற்றின் உள்ளே உள்ள நீரை வெளியே கொண்டுவரும்’ வினையைக் குறித்து நிற்கிறது.

கல்இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் (நற்.107:5), கலைதொட இழுக்கிய பூநாறு பலவுக்கனி (குறுந்.90:4), வரையிழி அருவி உண்துறைத் தரூஉம் (குறுந். 90:5), வரையிலி அருவி (குறுந்.106:2), குன்றுஇழி அருவியின். (குறுந்.189:2), பூசல் ஆயம் புகன்று இழி அருவியின் (குறுந்.367:5), வரையிழி அருவியின் ஒளிறுகொடி (பதிற்.25:11), பொருதிழி வார்புனல் பொற்ப (பரி.7:81), மலையின் இழியருவி (பரி.16:32), வாயிழி கடாத்த வான்மருப் பொருத்தலோ (கலி.46:3, ஆமிழி யணிமலை அலர் வேங்கை (கலி.48:1), வரையிலி மயிலின் ஒல்குவனள் (அகம். 158:5), இலங்குநீர் காவிரி இழிபுனல் வரித்த (அகம்.213:22), வரையிழி அருவி யாரந் தீண்டி (அகம்.228:2), நீரிழி மருங்கின் ஆரிடத் தமன்ற (அகம்.272:7), வரையிலி அருவிப் பாட்டோடு பிரசம் (அகம்.318:5), நீரிழி மருங்கில் கல்லளைக் கரந்த (அகம்.342:11), குன்றிழி களிற்றில் குவ்வுமணல் நீந்தி (அகம்.360:14), ஊர்ந்திழி கயிற்றில் செலவர வருந்தி (அகம்.372:8), கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன் (புறம்) என்னும் சங்க இலக்கியத் தொடர்களில் உள்ள ‘இழி’ என்னும் சொல் ‘இழிவான’ என்று பொருள் கொள்ளப்படவில்லை. மாறாக, ‘வெளிப்பட்ட’, ‘இறங்கிய’, ‘வழிந்த’ என்னும் பொருளில் பயன்கொள்ளப் பெற்றிருக்கிறது.

பெரிய புராணத்தில் சிவபெருமானின் கண்ணிலிருந்து வெளிப்பட்ட குருதியைச் சுட்ட சேக்கிழார் ‘குறைபடா திழியக் கண்டே’ (கண்ணப்ப நாயனார் புராணம்) என்கிறார். ‘நாட்டம் பொழிநீர் வழிந்திழிய வெழுந்து நடுக்க மிகவெய்தி’ (கழறிற்றிவார் நாயனார் புராணம்) என்னும் இடத்தும் ‘இழி’ என்ற சொல்லை ‘வெளிப்பட்ட’ என்னும் பொருளில் பயன்படுத்தியுள்ளார். போற்றித் திருஅகவலில் நக்கீரர் ‘இழிய’ என்னும் சொல்லை ‘இறங்கிய’ என்னும் பொருளில் பயன்படுத்தி இருக்கிறார். (காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது - பாடல் எண் 5).

‘இழி’ என்பதை வேராகக் கொண்ட ‘இழிசின(ன்)’ என்னும் சொல்லுக்கு ‘புலையன்’ என்றே உரையாசிரியர்கள் பொருள் கொண்டிருக்கிறார்கள். ‘துடியெறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின’ (புறம்.287:1-2). ‘இழிபிறப்பினோன்’ (புறம்.363.14), இழிபிறப்பாளர் (புறம்.170:5) என்னும் சொற்களுக்கும் ‘புலையன்’ என்றே பொருள் கொண்டிருக்கிறார்கள்.

‘வெளிப்பட்ட’, ‘இறங்கிய’, ‘வழிந்த’ என்னும் பொருளில் பயன்கொள்ளப் பெற்ற ‘இழி’ என்னும் வேர்ச்சொல்லில் இருந்து உருவான ‘இழிசின’, ‘இழிபிறப்பாளர்’ என்னும் சொற்களுக்கு ‘வெளிப்பட்டவன்’, ‘இறங்கியவன்’, ‘வழிந்தவன்’ என்றே நேரடிப் பொருள் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படியல்லாமல் உரையாசிரியர் பலரும் ‘புலையன்’, ‘பறையன்’ எனப் பொருள் கொண்டிருக்கிறார்கள். உரைகோடல் மரபுப்படி அது சரியான விளக்கம் தான். அதாவது உரையாசிரியர்கள் புலையன், பறையன் என்பவர்களை  ‘வெளிப்பட்டவன்’, ‘இறங்கியவன்’, ‘வழிந்தவன்’ எனச் சுட்டியிருக்கிறார்கள்.

இவ்விடத்து புலையன் அல்லது பறையன் எதிலிருந்து வெளிப்பட்டவன்?, இறங்கியவன்?, வழிந்தவன்? என்ற கேள்வி உருவாகிறது.  ஒன்றிய இந்தியாவின் சமூக அமைப்பில் நிலவும் நால்வருண அமைப்பில் இருந்து ‘வெளியேறியவன்’, ‘இறங்கியவன்’, ‘வழிந்தவன்’ என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. மாறாக, இழிசினன், இழிபிறப்பாளன் என்பதை கீழானவன், தாழ்ந்தவன் எனப் புரிந்து கொள்வது பார்ப்பனிய வன்மத்தின் தொடர்ச்சியே ஆகும்.

ஞா.குருசாமி