பேஷ் பேஷ் நன்றாக போட்டார்கள் தீர்மானத்தை, நறுக்கென்று. திரையுலக வெளிச்சத்தையும் புகழையும் கொண்டு என்னென்னவோ ஆக ஆசைப்படும் இக்காலக்கட்டத்தில், திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் துணிந்து இயற்றியுள்ள தீர்மானங்களை வரவேற்கத்தான் வேண்டும். ஆனால் முக்கிய கலைஞர்கள் ஏன் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை. அழைப்பே இல்லையென்றாலும் இதுபோன்ற நேரத்தில் தங்களின் ஆதரவினையாவது தெரிவிக்க வேண்டாமா?

G.K.Vasanபடித்த பண்பான தமிழக தமிழர்களே வீறுகொண்டு எழுங்கள். எப்பாடு பட்டாவது காங்கிரசை தோற்கடிப்பது ஒன்றே இன்றைய தமிழனின் தலையாய கடமையென்று எண்ணி வாக்களியுங்கள். அப்படியே செயலலிதா போன்றோர் வெற்றி பெற்றாலும் அது காங்கிரசுக்கு எதிரான வாக்கேயன்றி செயலலிதாவுக்கு ஆதரவான வாக்கில்லை என்பதையும் மறக்காமல் பரப்புரை செய்யுங்கள். இலங்கை அரசை இவர்கள் கண்டிக்கும் இலட்சணத்தையும் மக்களுக்கு தெரிவியுங்கள்.

கடிவாளம் என்றதும் வாயை மூடிக்கொள்ளும் குதிரை கொள்ளு என்ற உடன் வாயைத்திறக்குமாம். அதுபோல காங்கிரசுக்காரர்களும், சோனியா பிள்ளைகளும் ஈழத்தமிழர் படும் அல்லல்களைப் பற்றி நாம் எவ்வளவு அரற்றினாலும் வாயையும் மற்றதையும் மூடிக்கொண்டிருப்பவர்கள் புலிகளைப்பற்றி ஏதாவது ஒரு கருத்தென்றால் பொத்துக்கொண்டு வாயைத்திறந்து வியாக்கியானங்கள் வழங்குவார்கள். இவர்கள் அப்பன்தான் அப்பன். மற்றவர்கள் எல்லாம் சுப்பன் என்று நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அங்கு ஈழத்தில் எத்தனை மழலைகள் தாய் தந்தை உறவின்றி அனாதையாக திரிகின்றதோ தெரியவில்லை. அதையெல்லாம் நினைத்துப் பார்க்க இவர்களுக்கு நேரமுமில்லை, மனசுமில்லை. பணமும் அதிகாரமும் உள்ள இவர்கள் சோகம் மட்டும் வருடக்கணக்கில் அடங்காது போலிருக்கிறது, அனைத்து தமிழரும் அழிந்து போகும் வரை. ஆனாலும் அன்னைக்கு மட்டும் இன்னும் கோபம் தணியவில்லை போலிருக்கிறது. வாயே திறக்காமல் இன்னமும் ஈழ விவகாரத்தில் கள்ள மவுனம் சாதிக்கும் இவரை, தாயே என்றழைக்கிறார் நம் முத்தமிழ் வித்தகர்.

இராசீவ்காந்தியின் இறப்பிற்கு முன்னரே பல அப்பன்கள் ஈழத்தில் இந்திய இராணுவத் துணையோடு மடிந்தது இவர்களுக்கு தெரியாதா? இவர்கள் செய்யும் பாவங்களுக்கு, இந்த தேர்தலுக்கு பிறகு காங்கிரசு என்றொரு கட்சி தமிழகத்தில் இல்லாது செய்ய வேண்டும். அதற்காக என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் நோகாமல் நோம்பு கும்பிடும் இந்த தமிழக காங்கிரசாரை இனியும் தேர்தலில் விட்டு வைக்கக்கூடாது. தமிழக மக்களை நம்புவதும் சற்று கடினம் என்பதை மறுபடியும் நிரூபித்து விடாதீர்கள்.

விடுதலைப்புலிகளால் அழிந்தவர்கள் ஆயிரம் பேரென்றால், இலங்கை அரசாலும் இந்திய அரசாலும் அழிந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காதே. ஆரம்பத்திலிருந்தே போர் நிறுத்தத்தை கோரும் விடுதலைப்புலிகளை மீண்டும் மீண்டும் இவர்கள் நம்மை வெறுப்பேற்றுவது போல், புலிகளும் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறிவருவது சகிக்கவில்லை. மேலும் போர்நிறுத்தம் அமலில் இருந்த போது அதை தன்னிச்சையாக முதலில் மீறியது யார் என்பதை உலகறியும். ஆனால் இந்த உத்தமர்கள் இவ்வளவும் தெரிந்திருந்தும் எப்போதும் இலங்கை அரசின் தவறைச் சுட்டிக்காட்டும் சாக்கில் புலிகள் மீதுதான் பழி போட எத்தனிக்கிறார்கள் எத்தர்கள். எப்படியாவது தங்கள் கருத்தினை மக்கள் மனதில் திணிக்கும் முயற்சியை மட்டும் கைவிடாதிருப்பார்கள். இவர்கள் திருந்தவே மாட்டார்கள். போர் நிறுத்தமே ஏற்பட்டாலும் தப்பித் தவறி காங்கிரசு மேல் அனுதாபப்பட்டு வாக்கு மட்டும் போட்டுவிடக்கூடாது நம் தமிழர்கள்.

புலிகள் செய்தது தவறாகவே இருக்கட்டும். அதையெல்லாம் விமர்சிப்பதற்கான நேரம் இதுவல்ல என்று எத்தனையோ முறை கூவியாகிவிட்டது. ஆனால் நம் அறிவுஜீவிக்கள் விடமாட்டார்கள். புலம்பி புலம்பியே நம் தரப்பை நாமே பலவீனப்படுத்த காரணமாயிருப்பார்கள். ஐயகோ, தமிழினம் அழிகிறதேயென்று நாளும் நாம் புலம்புவது புத்திகெட்ட அரசியல்வாதிகளுக்கு புரியப்போவதில்லை. அமைப்புசாரா பொதுமக்கள் தானாக வீதிக்கு வந்து போராடினால் மட்டுமே விடிவு பிறக்கும். அரசியல்வாதிகளாவது வாக்கு வேண்டுமே என்பதற்காகவாவது ஈழப்பிரச்சினைப்பற்றி பேசுகின்றனர். ஆனால் பெரும்பாலான இன்றைய இளைஞர்களுக்கு ஈழப்பிரச்சினையின் தீவிரம் புரியவில்லை. அவர்கள் புரிந்து கொள்ளவும் தயாராயில்லை. தங்களின் அன்றாட கொண்டாட்டங்களை விடவும் தயாராயில்லை.

இன்னமும் நம் இளைஞர்கள் பலர் இலங்கைத்தமிழர்களை வந்தேறிகளாகத்தான் நினைக்கின்றார்கள். அவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை. கேட்டுத் தெரிந்து கொள்ள ஆர்வமும் இல்லை. பொறுமையுமில்லை. இலங்கைத்தமிழர்கள் இலங்கையின் பூர்வக்குடிகள் என்ற வரலாறை ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும் அதனை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இன்றைய தமிழக தொலைக்காட்சி ஊடகங்களும் நாளிதழ்களும் அரசியல் கட்சி சார்புடையவையாக இருப்பதே இவற்றிற்கெல்லாம் காரணமாயிருக்கிறது. இதனால் இவ்வகையான ஊடகத்தினால் மூளைச்சலவை செய்யப்பட்டு தன் சொந்த கருத்துக் கொண்டு சீர்தூக்கி பார்க்கும் பார்வையும் பெற்றிருக்கவில்லை.

இலங்கையில் நடக்கும் பிரச்சினைக்கும் இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கும் யாதொரு தொடர்பும் இல்லையென்று நினைக்காதீர்கள். இந்திய தமிழர்களின் வேண்டுகோள்களையும் கோரிக்கைகளையும் இந்திய அரசு ஒரு பொருட்டாகவே இதுநாள் வரை எடுத்துக்கொள்ளவில்லை என்பதற்கும் பல முன்னுதாரணங்கள் உள்ளன. காவிரி, முல்லைப்பெரியாறு, ஒகேனேக்கல் என பற்பல தமிழர் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு இதுநாள் வரை தீர்வு கண்டதில்லை என்பதையும் தமிழர்களான நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தேர்தல் விழாக்களில் நம் உணர்வுகளை தொலைத்து விடாமல் நாம் அனுபவிக்கும் பல வலிகளை நினைவில் கொண்டு வாக்குச்சாவடிக்கு செல்லுங்கள். பரிகாரத்தை தேடிக்கொள்ளுங்கள். 

- த.வெ.சு.அருள் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)