ஆர்.எஸ்.எஸ், பிஜேபி வகையறாக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக முணுமுணுத்து, சிணுங்கி கொண்டு மங்கி போய் கிடந்த அரசியல் இன்று புதிய அவதாரம் எடுத்துள்ளது. திராவிடம் எதிர் தமிழ் தேசம் என்ற அரசியலாக சீமான், மணியரசன் வகையறாக்கள் இந்த அரசியலுக்கு தமிழ் இந்து போன்ற புதிய புதிய விளக்கங்கள் கொடுத்து விசிறி விடுகின்றனர். 

seeman and maniarasan copyஆர்.எஸ்.எஸ், பிஜேபி அரசியல் அடித்தளம் என்பது காங்கிரஸ், கம்யுனிஸ்டுகள், திராவிட கட்சிகள், தமிழ் தேசிய இயக்கங்கள், சமூக சீர்திருத்த இயக்கங்கள், மாநில கட்சிகளால் எங்கெங்கு மக்கள் திரள் பிரச்சனைகளை கவனிக்க முயவில்லையோ, எங்கெங்கு மக்கள் அதிருப்திகள் நிலவுகின்றதோ, சரியான மாற்று அணுகுமுறைகளை முன்நிறுத்த முடிய இல்லையோ அந்த பிரச்சனைகளை மட்டும் ஊதி பெரிதாக்கி அரசியல் இலாபமாக மாற்றுவதாகும். இந்த கவனிக்கப்படாத அல்லது சமரசம் செய்யப்பட்ட பிரச்சனைகளுக்கு மாற்றாக எதையும் முன்வைக்காமல் குயயுத்தியுடன் ஒரே தேசம், ஒரே பண்பாடு, ஒரே சந்தை, ஒரே மொழி என்ற பார்ப்பனீய பண்பாடான சாதிய, வர்ணாசிரம, வர்க்க வேறுபாடுகளை கொண்ட இந்திய பெரு முதலாளித்துவ, கார்ப்பரேட், பார்ப்பன - உயர்சாதி நலன்களை நடைமுறையாக, தீவிர அரசியலாக அவற்றை மடை மாற்றுவதாகும். 

காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் துரோக செய்த பாஜக - ஆர்.எஸ்.எஸ் இன்று பாஜக - ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இல்லாதவர்களை தங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களாக காட்ட முயல்கிறது. நாட்டின் வளங்களை, அரசு சொத்துக்களை முழுவதும் வளர்ச்சி - முன்னேற்றம் என்ற பெயரில் புளுகி அந்நிய நாடுகளின் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விற்றுக் கொண்டே தேசபக்தி நாடகத்தை ஓங்கி நடத்துவது இப்படி பல எழுதிக் கொண்டே போகலாம். இதில் ஒன்றுதான் குஜராத் மாடல் பிராடு பிரச்சாரம்!! 

மோடி ஆட்சியின் “குஜராத் மாடல்” என்பதை அனைத்திற்கும் மாற்றாக இந்திய அளவில் காங்கிரசுக்கு மாற்றாக, மே.வங்கம் - கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு மாற்றாக, தமிழ்நாட்டில் திராவிடத்திற்கும் மாற்றாக 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தது அனைவருக்கும் நினைவிருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு மிக தீவிரமாக பல ஆயிரம் மடங்கு வேகத்துடன் புதிதாக வளர்ச்சி அடைந்த இணைய தளங்களை இந்த குஜராத் மாடல், பயன்படுத்தி, பெருமுதலாளிகள் - கார்ப்பரேட்கள் ஆசியுடன் வளமான குஜராத் மாடல், ஒளிரும் குஜராத் (Vibrant Gujarat) என்ற பொய்களை உண்மைகள் போன்ற மயக்க தோற்றம் காட்டியது. இதனை அடிப்படையாக கொண்டு “ஓளிரும் இந்திய மாடல்” பாஜகவால் தூக்கி நிறுத்தப்பட்டது. இது சமூக வளர்ச்சிக்கோ, மக்கள் நலங்களுக்கோ கிடையாது. மாறாக இந்திய பெரு முதலாளித்துவ, கார்ப்பரேட், பார்ப்பன - உயர்சாதி நலன்களுக்கானது என்று இன்று மோடி ஆட்சி செய்த ஆறு ஆண்டுகளில் அம்மணமாக அம்பலமாக்கி கிடக்கிறது. 

இந்த பிஜேபி அரசியலை எதிர்கொள்ள திராவிட மாடல், தமிழ்நாடு மாடல் என்பது அரசியலாக படிப்படியாக முன் கொண்டு வரப்பட்டது. திராவிட மாடல், தமிழ்நாடு மாடல் என்பது ஒரே பொருளில், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் பயன்படுத்தப்பட்டது. இதை திமுகவை சேர்ந்த, ஆதரவான அறிஞர்கள், இடதுசாரி அறிஞர்கள், தமிழ் தேசிய அறிஞர்கள், ஓடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த அறிஞர்கள் குழாம் முன்முயற்சி எடுத்தது என்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் கட்டுரைகள், புத்தகங்கள், தொலைக்காட்சி விவாதங்களை கூர்மையாக கவனிப்பவர்களுக்கு புரியும். சில சமயங்களில் ஜெயலலிதா அதிமுக (எடப்பாடி அதிமுக அல்ல) கூட திராவிட மாடல் அரசியலை பாஜகவுக்கு எதிரான தனது அரசியல் வெற்றிக்காக கையாண்டார். இதை தெளிவாக புரிந்து கொண்டு திமுக கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எதிராக முன்நிறுத்தி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததுள்ளது. 

ஆரம்பத்தில் திராவிட அரசியலை உயர்த்தி பிடித்த சீமான் பின்பு ஈழப் படுகொலையை முன் நிறுத்திய அரசியல் களத்தில் பயணித்தார். பின்பு சிவசேனா, வாட்டல் நாகராஜ் பாணியிலான அரசியலை தமது நாம் தமிழர் கட்சி அரசியலாக முன் நகர்த்தி வருகிறார். தொடர்ந்து தேர்தல்களில் கடந்து 10 ஆண்டுகளாக தோல்விகளும், இயல்பாக மோடி ஆட்சியின் மக்கள் விரோத சட்டங்களுக்கும், மக்கள் நலன்களுக்கு எதிரான தமிழ்நாடு மக்கள் மனப்பான்மையை திமுக ஆட்சிக்கு எதிரான அரசியல் மடைமாற்றும் உத்தியாக பயன்படுத்தும் சீமான் கட்சியை வளர்க்க, தனது தொண்டர்களை தக்கவைக்க முயல்கிறார். இந்திய ஒன்றிய அரசின் தோல்விகளை, மக்கள் நலன் விரோத அரசியலை திராவிட அரசியல் எதிர்ப்பாக திசை மாற்றம் செய்ய சதியுத்தியாக அவரது இந்த செயல்பாடு உள்ளது. 

இதற்கு இசைவாக முன்னாள் தோழர் மணியரசனும், அவர் மகன் செந்தமிழனும் ஒத்து ஊதுகின்றனர். தேசம், நாடு, தேசியம் என்ற நவீன கருத்தாக்கத்திற்கும் அதற்கு முன்னர் நிலவிய பழையதான கருத்தோட்டங்களையும் முற்றிலுமாக இணைத்து குழப்புகின்றனர். 

தேசம், நாடு, தேசியம் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பேசப்பட்டும், எழுதப்பட்டும் வருகிறது. வர்க்க பிரிவுகள் உருவாகி, அவைகள் இணைக்க காண முடியதால் அரசு என்பது தோன்றியது. இந்த அரசு என்ற தோற்றத்துடன் தொடர்புடையது தேசங்கள், நாடுகள் என்பன. சேர. சோழ, பாண்டிய, குப்த, மவுரியா, இஸ்லாமிய, விஜயநகர பேரரசுகள், நாடுகள், தேசங்கள் என்பன! இன்றும் கூட தென் தமிழகத்தில் சில ஊர்கள் ‘நாடுகள்’ என்ற பெயரில் (ஆப்பநாடு, ஒரத்தநாடு தென்னமநாடு) வழங்கப்படுகிறது. தேசங்கள், நாடுகள் என்பவைகள், என்ற பெயர்கள் தொல்குடி, அடிமை, நிலப்பிரபுத்துவ, முதலாளிய, ஏகாதிபத்திய கால கட்டங்களிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முதலாளித்துவ நவீன சமூகத்தில் தேசம், நாடு என்பதற்கும் இந்த பழைய சொற்களுக்கு பின் உள்ள பொருள் வேறு, நவீன காலத்திற்கு பழைய காலத்திற்கும் தேசங்கள், நாடுகள் என்று அழைப்பதில் பல வேறுபாடுகள், அர்த்தங்கள் உள்ளது என்கிறது சமூக அறிவியல்! 

வரலாற்று ரீதியில் உருவான மொழி, பிரதேசம், பொருளாதார வாழ்வு ஆகியவற்றை உடைய ஒரு நிலையான சமூகம்; இது ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை வெளிப்படுத்தும் மனோபாவம் உடையது. இப்பண்புகள் அனைத்தும் கொண்டிருக்கும்போதுதான் அது தேசமாகும் (A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life and psychological make - up manifested in a common culture). இதை இன்றைய நவீன காலத்தில் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறையாக சமூக அறிவியல் அங்கீகரித்துள்ளது. 

தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல தேசிய இனங்களுக்கும் இந்த சமூக அறிவியல் வரையறை பொருந்தும். தொல்குடி, சாதி நிலப்பிரபுத்துவ காலத்தில் உருவான தேசங்களும் இதுவும் ஒன்றல்ல! மொழி, பண்பாட்டில், மரபின தொடர்ச்சியில், பெயரில் சில தொடர்ச்சிகள் இருந்த பொழுதும் இன்றைய தமிழ் தேசமும், சில நூற்றாண்டுகளுக்கு முன்னாள் இருந்த தமிழ் கூறும் நல்லுலகில் இருந்த பாண்டிய, சோழ, சேர, நாயக்கர், பாளைய தேசங்களும் ஒன்றல்ல!! 18, 19, 20 நூற்றாண்டுகளில் நவீன தமிழ் தேசம், நவீன தேசம் அதாவது தமிழ் தேசிய இனம் உருவாகி நிலைபெறத் தொடங்குகிறது! பண்பு ரீதியாக இவை மாறுபட்டவைகள் என்ற அரசியல் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும்! 

பிரிட்டன் ஏகாதிபத்திய நலன்களில் இருந்தும் கட்டியமைக்கப்பட்டது இந்தியா என்ற நாடு. இதற்கு முன்னர் பல நூறு தேசங்களாக, நாடுகளாகவும் தொடர்ந்து இது பிரிந்துதான் கிடந்தது. இந்திய கண்டம் என்பது 2000 ஆண்டுகளாக ஒரு சாதி சமூகமாக இருந்தது. பலவேறு சட்டங்களும், பண்பாடுகளும் நிலவிய இங்கு தனது சந்தை நலன்களுக்காகவே ஒரே சட்டத்தின் கீழ் கொண்ட வர கிழக்கிந்திய கம்பெனியினர் முயன்றனர். சாதிகளும், வர்ணங்களும்தான் இங்கு பல்வேறு வகைகளில் இருந்தாலும், பல்வேறு பிரதேசங்களுக்கு வெவ்வேறு விதங்களில் அந்தந்த பிரதேசங்களுக்கு ஏற்ப சட்டங்கள் நிலவியது. தெற்காசியாவில் இருந்த ஆளும் வகுப்பினருக்கு சாதியமும், வர்ணமும் இதன் அடிப்படையாக இருந்த பார்ப்பனீய கோட்பாடும் அவசிய தேவையாக இருந்தது. இந்த கோட்பாடுதான் மக்களை பிரித்து அவர்களிடம் இருந்து உழைப்பின் உபரியை பறிக்கவும், அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழாமல் இருக்கும் ஒரு நியாயத்தை மக்களுக்கு வழங்கியது. அதனால்தான் அனைத்து பழைய தேசங்களின் அரசுகளும், அதன் மன்னர்களும், ஆளும் வகுப்பினரும் இதை ஏதோ ஒருவிதத்தில் ஏற்பவர்களாக, பரப்புவர்களாக இருந்தனர்.

பார்ப்பனர் - உயர் சாதியினர் துணையுடன் இப்படிப்பட்ட சாதிக்கும், வர்ணங்களுக்கும் மூலகாரணமான மனுஸ்மிருதியை இந்தியா முழுமைக்குமான சட்டமாக்கினார். இந்தியா முழுக்க ஒரே சட்டம், ஒரே பண்பாடு, ஒரே சந்தைக்கு மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்ட பார்ப்பனீயம் இன்றியமையாததாக ஆங்கிலேயருக்கு இருந்தது. 1857க்கு பின் நேரடி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வரும் பொழுது மனுஸ்மிருதியும், பிரிட்டிஷ் சட்டமும் முரண்களாக வெளிப்படுகிறது. ஆனால் பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கவாதிகள் இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு கருத்தியல் நியாயம், சமரசம், ஒற்றுமை அளிக்க மனுஸ்மிருதியும், சாதியமும், இந்து மதமும் சிறந்தது என்று சிற்சில மாற்றங்களுடன் அதையே தொடர்கின்றனர். தமிழ்நாட்டில் இதன் பின்னணியில் பார்ப்பனரும், வெள்ளாரும் கூட்டாக குறிப்பாக பார்ப்பன சாதியினர் ஆங்கிலேயனுக்கும் சேவை செய்து அதனால் காலனி ஆட்சி பலன்களை சாதிரீதியாக பெற்று கொண்டு ஆதிக்கம் செலுத்தினர் என்பது 18 ஆம் நூற்றாண்டு வரலாறு! 

அதனால்தான் சமூக நீதியும், அரசியல் சுதந்திரமும் இந்தியாவில், தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தின் முக்கியமான அங்கங்களாக மாறின. துன்பியலாக இந்தியாவில் இவை ஒன்றிணையாமல் தனித்தனியான இரு நீரோட்டங்களாக பிரிந்து வளர்ந்ததற்கு பார்ப்பனீயம் காரணமாக இருந்தது. சமூக நீதியை - சனநாயகத்தை, அரசியல் சுதந்திரத்தை ஒருங்கிணைந்த கோட்பாடக வளர்க்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் தலைவர்களும் தவறின. பார்ப்பனீய கோட்பாட்டை புரிந்து கொள்ள முடியாமல் தவறிழத்தனர்.

இந்த பின்னணியில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அயோத்திதாச பண்டிதர், தாத்தா இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்றோர் பட்டியல் சாதியினர் ஒடுக்குமுறையை திராவிட மகா சபை, ஆதிதிராவிடன் என்ற பார்ப்பனர் அல்லாதோர் அரசியல் இயக்கமாக திராவிடர்/தமிழர் என்ற அடையாளங்களுடன் முன் எடுத்தனர். பார்ப்பனருக்கு மட்டும் அரசாங்கத்தில், கல்வியில், வேலைவாய்ப்பில் ஆதிக்கம் என்பதற்கு மாறாக வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் பெரியாருக்கு முன்பே தமிழ்நாட்டில் அரசியல் முழக்கமாக வைக்கப்பட்டது. நீதி கட்சியும், பெரியார் சுயமரியாதை இயக்கமும் பார்ப்பனர் அல்லாதோருக்கான சமூக நீதி அரசியலாக இவைகளை மேலும் வளர்த்தெடுத்தனர். இந்த பார்ப்பனர் அல்லாதோர் இயக்கம் பின்னர் திராவிட கழகமாக மாற்றம் அடைந்தது.

பார்ப்பனீயத்தை, மனுஸ்மிருதியை, வர்ணாசிரமத்தை, சாதி ஆதிக்கத்தை, வட இந்தியர் ஆதிக்கத்தை, சமஸ்கிருத - இந்தி திணிப்பை எதிர்ப்பதை தனது கொள்கைகளாக, நடைமுறையாக கொண்டு இது செயல்பட்டது. அதிலிருந்து பிரிந்த அண்ணாவின் அரசியல் கட்சியான திமுக சில சமரசங்களுடன் இந்த கொள்கைகளை தொடர்ந்தன.

திராவிடம் - தமிழ்நாடு என்பதை சில நேரங்களில் ஒன்றை போலவும், சில நேரங்களில் அம்மா - பிள்ளை போலவும் இரட்டையாக இவைகள் பயன்படுத்தின என்பது கடந்த கால, நிகழ்கால வரலாறு! 

இந்த நிலையில்தான் 21 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சிக்கான மாடல்களாக - முன்மாதிரிகளாக உலகம் முழுவதும், இந்தியாவிலும் பல மாடல்கள் முன் நிறுத்தப்பட்டு விவாதிக்கப்படுகின்றன. நடைமுறைப்படுத்தப்படுகின்றன. சோவியத்து மாடல், அமெரிக்கா மாடல், சீனா மாடல், ஜப்பான் மாடல் என்று உலகில் பல மாடல்கள் முன் நிறுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது. நேரு மாடல், கேரளா மாடல், குஜராத் - மராட்டிய மாடல், மோடியின் குஜராத் மாடல், திராவிட/தமிழ்நாடு மாடல் என்ற முன்மாதிரி மாடல்கள் பல இந்தியாவில் இருக்கின்றன. கேரளா மாடல் சமூக வள பகிர்வையும், குஜராத் - மராட்டிய மாடல், மோடியின் குஜராத் மாடல் பொருளாதார வளர்ச்சியை குறிப்பாக பெருமுதலாளிகள் வளர்ச்சியை குறியீடுகளாக கொண்டது. தமிழ்நாடு/திராவிட மாடல் என்பது சமூக வள பகிர்வு, பொருளாதார வளர்ச்சியையும் இரண்டும் இணைந்தது! இவற்றில் எது நமது தேர்வாக இருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய அடிப்படை கேள்வி! அந்த தேர்வை எப்படி வருங்கால சமத்துவ சமூகம் படைக்க முன் கொண்டு செல்ல போகிறோம் என்பதும் இதோடு இணைக்கப்பட்ட முதன்மையான கேள்வி!

இங்குதான் சீமான் – மணியரசன் – அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அரசியல் களத்திற்கு வருகின்றனர். தமிழ் சாதிகள், தமிழ் இந்து ஒற்றுமை - பிற மொழி பேசும் சாதிகள், ஆரிய இந்து புறக்கணித்தல், தமிழ்நாட்டில் சாதிகள் - வர்ண வேறுபாடுகள் பிறமொழி சாதிகள் படையெடுப்பால் மட்டும் வந்ததாக வரலாற்றை மடைமாற்றுதல் என்பதாக இந்த அரசியல் சித்து விளையாட்டுகள் தொடக்கப்பட்டு அரசியல் விவாத களங்களாக்கப்பட்டு விரிகிறது. 

நவீன தமிழ்நாடு, தமிழ் தேசிய இனம், தமிழ் தேசம், தமிழ் தேசியம் என்பது வரலாற்று ரீதியில் உருவான தமிழ் மொழி, குறிப்பிட்ட எல்லைகள் கொண்ட பகுதி, பொருளாதார வாழ்வு, பண்பாட்டு ஒருங்கிணைவு ஆகியவைகளை உடைய ஒரு நிலையான சமூக அரசியல் களமாகும்; இது ஒரு குறிப்பிட்ட பண்பாட்டை வெளிப்படுத்தும் மனோபாவம் உடையது. இப்பண்புகள் அனைத்தும் கொண்டிருக்கும் போதுதான் அது புதிய தமிழ் தேசமாக, சுதந்திர தமிழ்நாடாக, இறையாண்மை கொண்ட தேசமாக உருவாகும். இதற்கு முன் நிபந்தனை சாதிகளாக பிரிந்துள்ள தமிழ் நிலப்பகுதியில் உள்ள சாதிகளை ஒழித்து தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை என்ற சிந்தனை போக்கை வளப்படுத்துவதாகும். அப்பொழுதுதான் தமிழ்தேசப் பண்பாடு என்பது உருவாகும். இந்த கடந்த ஒரிரு நூற்றாண்டுகளாக உருவாகி வருகிறது என்பது வரலாறு.! இதை இன்று சிதைக்க பாஜக ஒன்றிய ஆட்சியும், ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனீய சித்தாந்தமும் முயல்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சியும் இதை செய்தது. ஆனால், பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பல் காங்கிரஸ் செய்ததை பல ஆயிரம் மடங்கு அதிகார பயங்கர வேகத்துடன் பாஜக செய்கிறது என்பது இன்றைய யதார்த்தம்! 

இந்தியா முழுவதும் உள்ள மொழிவழி மாநிலங்களை சிதைத்து வெறும் நிர்வாக அலகுகளாக மாற்றி ஒற்றை பண்பாட்டை, ஒற்றை மொழியை திணிக்க பாஜக முயல்கிறது. காஷ்மீரில் அதை செய்து பார்த்தது. தமிழ்நாட்டில் கொங்கு நாடு, வட தமிழகம் என்று பிரிக்க போவதாக நச்சு கருத்துகளை விதைத்து பரப்ப முயல்கிறது. ஜிஎஸ்டி ஒற்றை வரி விதிப்பு, நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, சமஸ்கிருத - இந்தி திணிப்பு, 3 வேளாண் சட்டங்கள், சாகர்மாலா திட்டம் போன்றவைகள் இதற்கானதாகவே நடைமுறைப் படுத்தப்படுகின்றன. 

பெரியாரின் 60 ஆண்டுகால சமூக இயக்கத்தை, திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகள் ஆட்சியின் சாதக பாதகங்களை விமர்சனங்கள் செய்வது என்பது வேறு! நிறைகளும், குறைகளும் கொண்டவை. ஆனால், திராவிட அரசியலுக்கு மாற்றாக பாஜக - ஆர்.எஸ்.எஸ் கும்பலின் பார்ப்பனீய கோட்பாட்டிற்கு இசைவான அரசியலை தமிழ் தேச அரசியல் என்பதாக வர்ணிப்பது, மடைமாற்றம் செய்வது என்பது முற்றிலும் வேறு!! குஜராத் மாடல், இந்திய மாடல், வங்காள மாடல் என்பதை திராவிட மாடல்/தமிழ்நாடு மாடல் என்பதுடன் ஒப்பு நோக்கு கையில் எது சிறந்தது என்பதை இன்றைய சமூக - பொருளாதார - மனிதவள குறியீடுகளில் இருந்தும், புள்ளி விவரங்களில் எளிதில் முடிவு செய்ய முடியும். திராவிட மாடல்/தமிழ்நாடு மாடல் என்பதுதான் சிறந்தது.

இந்த மாடலுக்கு எதிராக நிறுத்தப்படும் மாடல் இதனினும் மேம்பட்டதான் கோட்பாட்டு, அரசியல், சமூக, வரலாற்று தெளிவுடன் இருக்க வேண்டும்.

மாறாக, நோகாமல் நோன்பு கும்பிடுவது போல் மேலோட்டமாக திராவிடம் எதிர் தமிழ்தேசம் அரசியலாக மலினமான ஓட்டு வங்கி அரசியல் நோக்கத்தில், முதல்வர் பதவி நாற்காலிக்காக செய்வது போகாத ஊருக்கு வழி சொல்வது போலாகி விடும். இன்னும், இருக்கும் வழிகளை அடைத்து விட்டு, பாதைகளை மூடி விட்டு முட்டுச் சந்தில் தமிழ்நாட்டை, தமிழ் தேச விடுதலையை நிறுத்தி விடும்! பின்னோக்கி காலத்தின் சக்கரங்களை நகர்த்தும் வேண்டாத வீண் அரசியல்

பார்ப்பனீய கோட்பாட்டுக்கு, “ஒரே தேசம், ஒரே சட்டம், ஒரே பண்பாடு, ஒரே மொழி, ஒரே சந்தை, ஒரே வரலாறு” என்பதற்கு மாறான பல தேசியங்களை கொண்ட இந்தியா என்ற பன்முக புரிதலில் வரலாற்றை புரிந்து சாதி ஒழிந்த சுதந்திர தமிழ்நாட்டை படைப்பதை முன் நிறுத்த வேண்டும்!! சாதி, மத அடிப்படையில் தமிழ்நாடு அரசியலை மடை மாற்றுவது, வரலாற்றை திரிப்பது பாஜக - ஆர்.எஸ்.எஸ் அஜண்டா விற்கு துணை போவதாகவே முடியும்.

- கி.நடராசன்